நிஸ்சிம் எஸக்கியல் : பெயர்தலும் அலைதலும்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

யமுனா ராஜேந்திரன்


அரைநுாற்றாண்டு கால இலக்கியக் கருப்பொருட்களில் இடப்பெயர்வும் அலைதலும் போல அதி முக்கியத்தவம் கொண்டவொறு பிரச்சினையைப் பார்ப்பது அரிது. இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தின் யூத இனப்படுகொலையை அடுத்து நடந்த இடப்பெயர்வு, தேசவிடுதலைப் போரட்டங்களால் வெகுமக்கள் கொலையிலிருந்து தப்பிய மனிதர்களின் இடப்பெயர்வு போன்றன வரலாற்றில் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வுகள் எனலாம். காலனியாதிக்கத்தின் விளைவாகவும் கூலியடிமைத்தனத்தின் விளைவாகவும் இருவகையிலான மக்கள் இடம் பெயர்ந்தனர். விவசாயக் கூலி மக்களும் படித்த வரக்கத்தினரும் என இரு வேறு வர்க்கப் பகுதியினர் வேறு வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்தார்கள்.

சென்ற நுாற்றாண்டில் இடப்பெயர்வும் மனிதர்களின் அலைதலும்தான் மிகமுக்கியமான படைப்பாளிகளையும் படைப்புகளையும் சிந்தனையாளர்களையும் தோற்றுவித்திருக்கிறது. மைக்கேல் ஒனடாஜி வி.எஸ். நைபால், ஜூல்பிகார் கோஷ், பாப்சி சித்வா, எட்வரட் ஸைத், மொஹமத் தார்வீஸ் போன்றவர்களின் படைப்புக்கள் இயங்கும் தளம் இதுதான். தமிழகத்தில் தாயகம் திரும்பியோர் என அழைக்கப்பெறும், இலங்கை மலையகத்திலிருந்து திரும்பிய தமிழர்களின் அனுபவம் சஞ்சரிக்கும் தளமும் இதுதான்.

பிழைப்புக்கெனச் சென்ற நாட்டிலும் சரி, மீண்டு வந்து சேர்ந்த சொந்த நாட்டிலும் சரி, அடையாளம் நிலைபெறாத, வேர்கொள்ள முடியாத தீராத துயர் இவர்களுடையது. விட்டு விலகுதலும் ஒட்டி உறவாடுதலும் அந்நியமாதலும் அடையாள மீட்பும் என இயங்கும் சாரபற்ற இந்தத் தளம்தான் 2004 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி பம்பாயில் மரணமுற்ற பெனி இஸ்ரேலியரும், நவீன இந்தியக் கவியுமான நிஸ்சிம் எஸக்கியலின்; கவிதைகள் சஞ்சரிக்கும் தளம் என்று வரையறுக்கலாம்.

எஸக்கியலின் மூதாதைகளான பெனி இஸ்ரேலியர்கள், இஸ்ரேலின் மைந்தர்கள் என அழைக்கப்பட்டவர்கள். கிறித்துவுக்கு முன்பாக இரண்டாம் நுாற்றாண்டில் கலிலியில் நிகழ்ந்த படுகொலையில தப்பியவர்கள் அவர்கள். பெனி மக்கள் தோற்றதத்தில் யூதரல்லாத மராத்தியர் போலவே இருப்பர். இந்தியர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் கலப்பு மணம் நடந்தாலும் யூதமரபுகளை அவர்கள் பேணி வந்தனர். அவர்கள் எண்ெணைய் வியாபாரிகள். அவர்கள் பயணம் செய்த கப்பலொன்று இந்தியக் கரையில் மோதிக் கவிழ்ந்ததால் இந்தியாவில் வாழ நேர்ந்தவர்கள் அவர்கள். கப்பல் உடைவிலிருந்து தப்பியவர்கள் நவ்கோன் எனும் இடத்தில் தமது இறந்தவர்களின் உடல்களைப் புதைத்தனர். ஏஞ்சியவர்களின் வழித்தோன்றல்களே தற்போது இந்தியாவில் வாழ்ந்து வருபவர்கள்.

நவ்கோன் கிராமத்தில் தங்கியவர்கள் விவசாயத்திலும் எண்ணெய் உற்பத்தியிலும் ஈடுபட்டனர். அங்கிருந்து நகர்ந்து கொங்கனிப் பிரதேசத்துக் கிராமங்களில் அவர்கள் பரவினர். கிராமத்துப் பெயர்களைத் தம்மோடு பிற்பாடு இணைத்துக் கொணடடனர். பதினேழாம் நுாற்றாண்டில் கொச்சியில் இருந்த யூதர்களோடு தொடர்பு கொண்டனர். அதன் பின்பு பெனி இஸ்ரேலியர்கள் 18 ஆம் நுாற்றாண்டின் ஆரமபத்தில் பம்பாய்க்குக் குடிபெயர்ந்தனர். 1948 ஆம் ஆண்டு அவர்களின் தொகை 30,000 ஆக இருந்தது. தற்போது இவர்களில் பெரும்பாலுமானோர் இஸ்ரேலுக்கும் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவிற்கும்; குடிபெயர்ந்து விட்டனர். 5000 பெனி இஸ்ரேலியரகள் மட்டுமே பம்பாய் நகரத்தில் வாழ்கின்றனர்.

அரசு உத்தியேகங்களில் பணிபுரிகிறார்கள். அவர்களின் வழிவந்தவரே நிஸ்சிம் எஸக்கியல். மிகத் துயரமான விசயம் என்னவெனில், இஸ்ரேலுக்குச் சென்ற பெனி இஸ்ரேலியர்களை அசலான இஸ்ரேலியர்கள் என இஸரேலிய அரசு அங்கீகரிக்க மறுத்தததுதான். மிகப் பெரிய மறியல் போராட்டத்தின் பின்பே அவர்கள் குடாயுரிமை பெற அங்கீகரிக்கபபட்டார்கள். அவர்கள் இன்றளவும் விவசாயிகளாகவே சமூகத்தின் விளிம்புநிலையில் இஸரேலில் வாழ்ந்து வருகிறார்கள். மூத்த தலைமுறையினர்க்கு ஹீப்ரு மொழி தெரியாது. இளைய தலைமுறைக்கு இந்தி, மராத்தி மொழிகள் தெரியாது. இவர்களுக்கடையில் மொழியினால் தாண்டமுடியாத தலைமுறை இடைவெளி அதிகரித்து வருவதாக இஸ்ரேலின் சமகால வரலாறு தெரிவிக்கிறது.

பாசிஸ்ட்டுகளின் யூத இன அழிப்பினையடுத்து, இரண்டாம் உலகப் போர் முடிவற்றதின் பின்னணியில், 1948 ஆம் ஆண்டு நஸிம் எஸக்கியல் இளைஞுராக இருந்துவேளையில் உலகமெங்கும் இருந்த யூதர்கள் இஸ்ரேலுக்குச் சென்று குடியேறிக் கொண்டிருந்தார்கள். கோவா, கொச்சி, பம்பாய் போன்ற பகுதிகளில் இருந்த யூர்களில் பெரும்பாலுமானவர்கள் இஸ்ரேலுக்குச் சென்றனர். கொச்சி கோவா பகுதியைச் சேர்ந்த யூதர்கள் மெல்ல மெல்ல இந்திய வாழ்வுடன் தம்மைக் கரைத்துக் கொண்டிருந்த வேளையில், பம்பாயில் வாழ்ந்த யூதர்கள் மட்டுமே தமது; ஆச்சாரத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்தவர்களாக இருந்தார்கள்.

மராத்தியும் ஆங்கிலமும் பேசக் கூடிய பெனி இஸ்ரேலிய இனத்தில் பிறந்த எஸக்கியலின் தந்தை மதச்சார்பற்றதொரு மனிதர். விலங்கியலும்; தாவரவியலும் படிப்பித்த பேராசிரியர். எஸக்கியலின் தாயார் மராத்தி மொழிப் பள்ளிக்கூடமொன்றைத் தலைமையேற்று நடத்தி வந்தவர். பாலுறவு சார்ந்து ஆச்சாரமான மதிப்பீடுகள் கொண்ட இருபாலுறவுக் குடும்பம் எஸக்கியலுடையது.. பால்ய வயதிலான மிஸினரிக் கல்வி, பம்பாயில் வில்சன்; கல்லுாரியிலும் லண்டனில் பிர்பிக் கல்லுாரியிலும் (1948-1952) படித்தபோது சேர்த்துக்கொண்ட கத்தோலிக்க முறையிலான கல்வி, மேற்கத்தியு படித்த வர்க்கத்தின் உலகப் பார்வையை எஸக்கியலுக்கு வழங்கியது.

மதச்சார்பற்ற பகுத்தறிவுவாதியான தந்தையின் பார்வையையொட்டிய, அன்றைய தவிரக்கவியலாத தேசியக் கண்ணோட்டத்தின் அங்கமாகவிருந்த இந்து முஸ்லீம் மதப் பார்வைகளிலிருந்து விலகிய எஸக்கியலின் கலாச்சாரக் கண்ணோட்டம், அவருடைய கவிதைகளை இந்திய தேசிய வழிபாடு என்பதற்கு அப்பால் நகர்த்தி, நகரம், பாலுறவு, மணவாழ்வின் பிரச்சனைகள், அந்நியமாதலைக் கடந்துபோதல் போன்றவை குறித்து விரிவாகப் பேசவைத்தன. ஆங்கிலம் படித்த, மேற்கத்தியக் கண்ணோட்டம் கொண்ட நகரப்புற மனிதனைப் பிரதிநிதித்துவப் படுத்தியதாக எஸக்கியலின் உலகக் கண்ணோட்டம் அமைந்திருந்தது.

விவசாயிகள், இந்தியத் தொன்மங்கள், தேசபக்த, இந்துமத மறுமலர்ச்சி போன்றவற்றை முன்வைத்த சரோஜினிநாயுடு, அரவிந்தர் தாகூர் போன்றவர்களின் இந்திய தேசியக்; கண்ணோட்டத்திலிருந்து விலகிய நவீனத்துவப் பார்வை கொண்டதாக எஸக்கியலின் படைப்புகள் அமைந்தன. இந்தவகையில்தான் எஸ்ஸக்கியலை இந்திய நவீனத்துவத்தின் முதல் பிரதிநிதியாகவும் பின்காலனிய இலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளியாகவும் மேற்கத்திய அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன.

1948 ஆம் அண்டு எஸக்கியலின் நண்பரும் நாடக இயக்குனருமான இப்ராகிம் அல்காசி எஸக்கியலுக்கு லண்டன் செல்வதற்கான ஒருவழிப் பயணச் சீட்டு ஒன்றினை ஏற்பாடு செய்ததையடுத்து, எஸக்கியல் லண்டன் சென்றார் தத்துவமும், கவிதையும் வறுமையும் கொண்டு, ஒரு கட்டிடத்தின் கீழ்தளத்தில் வாழ்ந்த வாழ்வ அது என பிற்பாடு அதனைக் குறிப்பிடுகிறார் எஸக்கியல். கப்பல் தளத்தைக் கழுவுதல், விடுதிகளில் துப்புரவாளராக இருத்தல் போன்றவற்றோடு, கப்பலில் பொருட்களை ஏற்றியிறக்;குகிற பணியிலும் ஈடுபட்டுச் சேர்த்த பணத்தில், 1952 ஆம் அண்டு மறுபடியும் பம்பாய் வந்து சேர்நதார் எஸக்கியல்.

பும்பாயில் அவர் இல்லஸ்ரேடட் வீக்லி பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இம்பிரின்ட், க்வெஸ்ட் போன்ற பத்திரிக்கைளில் பணியாற்றினார். மனித உரிமைக்கும் படைப்புச் சுதந்திரத்திற்கும் ஆன சர்வதேசியப் பேனா அமைப்பின் பொறுப்பாளராகவிருந்து, அதன் ஆண்டுத் தொகுப்பை அவர் பதிப்பித்தார். லண்டன் மேகஸின், ஸ்பெக்டேட்டர் போன்ற சர்வதேசியப் பத்திரிக்கைகளில் அவரது கவிதைகள் வெளியாகின. 1952 ஆம் அண்டு அவருடைய எ டைம் டு சேன்ஞ்ச் கவிதைத் தொகுப்பு இங்கிலாந்திலிருந்து வெளியாகியது. 1989 ஆம் ஆண்டு எட்டு கவிதைத் தொகுப்புகளின் பின், அவருடைய முழுக் கவிதைகளும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தினால் தொகுத்து வெளிடப்பட்டது.

சிறுபான்மையின மக்களில் ஒருவராக இருந்த ஒருவர், தேசியவாத சித்தாந்தத்தினால் ஆகர்சிக்கப்படாத அவர் எம். என். ராயின் மார்க்கியத்தினால் ஆகர்சிக்கப்பட்டார். ஏம்.என்.ராய் பாசிசத்தின் அபாயம் குறித்து மிகத் தெளிவாக எழுதியும் பேசியும் வந்தவர். எஸக்கியலின் அரசியல், இந்திய மதத் தேசியவாத்திலிருந்து விலகியதாக இருந்த அதே போதில, இந்தியாதான் தனது தாய்வீடு, தனது நாடு என்பதில் அவர் உறுதியாக இருந்தார், கயமையும் வேசைத்தனமும் வறுமையம் அழகும் நிறைந்த இந்தியாவை அவர் நேசித்தார்.

பின்காலனித்துவ நவீனத்துவவாதி எனச் சொல்லப்பட்ட வி.எஸ்.நைபாலுடன் எஸக்கியல் கடுமையாக முரண்பட்டது மட்டுமல்ல, அவரது இந்திய வெறுப்பையும், கடுமையாகச் சாடினார் எஸக்கியல். என்னுடையதும் நைபாலினதும் இந்தியா என இதற்கெனவே ஒரு கட்டுரையையும் எழுதினார். நைபாலின் இந்திய வெறுப்பும், இஸ்லாமிய மக்களின் மீதான் அவரது விரோதமும் உலகப் பிரச்சித்தமானது. நைபால் இந்தியா சென்றபோது பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று இந்துத்தவ அரசியலுக்குத் தனது ஆதரவைத் தெரவித்தார் என்பது பிரச்சித்தாமான அவமானகரமான செய்தி. குஷ்வந்த சிங்குடன் நைபால் நடத்திய உரையாடல் அவரது இந்துத்துவத்திற்கு சாட்சியமாக இருக்கிறது.

எஸக்கியல் அழுக்கும் வறுமையும் நிறைந்த இந்தியாவை தனது தாயகமாகவும் இருப்பிடமாகவும் தேர்வாகவும் ஏற்றுக் கொண்டிருந்தார். அவரது கவிதைப்பார்வை டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட், ஆடன், ரில்க் போன்றவர்களின் அடியொற்றியதாகவும், கவிதைக்கு ஒரு சமூகச் செயல்படும் சுயதேடலும் தேவை என்பதை வலியுறுத்துவதாகவும் இருந்தது.

உலகத்திலுள்ள எல்லா யூத அறிவாளிகளுக்கும் இருக்கும் ஒரு சிக்கலான மனநிலை நிஸ்சிம் எஸக்கிலுக்கும் இருந்தது. இனக்கொலைக்கு ஆளான தமது மக்களின் துயரத்தையே யூதர்கள் தமது மனங்களில் தீராத வேதனையாக என்றென்றும் சுமந்து திரிகிறார்கள். யூதமக்களுக்கு ஏற்படும் எந்தச் சிரமங்களையும் வரலாற்று ரீதியில் நிதானமாகப் பார்க்கிற மனோநிலை அவர்களுக்கு இதனால் இல்லாமல் போய்விடுகிறது. இட்லரால் இலட்சக்கணக்கில் உயிரோடு கொல்லப்பட்ட அம்மக்கள் நாடற்றவர்களாகத் திரிந்த கொடுமைகள் அவர்களது மனதைவிட்டு அகல்வதென்பதும் சிரமம்தான். அவ்வகையில் பாலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலது இனவாத நிலைபாடு குறித்து எப்போதும் இவர்கள் கருத்துச் சொல்வதேயில்லை. பூக்கோ, அல்துாஸர், ஸார்த்தர் போன்ற யூத அறிவுஜீவிகள் எவருமே இஸ்ரேலை ஒருபோதும் கடுமையாக விமரசித்தது இல்லை. எஸக்கியலும். பாலஸ்தீன மக்களின் துயர் குறித்துக் கருத்துச் சொன்னதேயில்லை. காரணமாக ஸல்மான் ருஸ்டி பிரச்சினையில் அவர் மேற்கொண்ட நிலைபாட்டைச் சுட்டிக் காட்டலாம். ஸல்மான் ருஸ்டிக்கு ஆதரவாக அவர் அறிக்கை விட மறுத்துவிட்டார். தனது சமூகத்தை ஒரு எழுத்தாளன் ஆத்திரப்படுத்தக் கூடாது என்று அதற்குக் காரணம் சொன்னார் எஸக்கியல். அந்த வகையிலேயே அவரது யூத சமூகத்தையும் அவர் ஆத்திரமூட்ட விரும்பாததாலேயே பாலஸ்தீனம் தொடர்பாக மெளனம் சாதித்தார் என்று கொள்ளலாம்.

1924 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி பம்பாயில் நஸ்சிம் எஸக்கியல் பிறந்தார். 2004 ஆம் ஆண்டு ஜனவரி 10 திகதி அதே பம்பாயில் மரணமுற்றார். அவரது உடல் 2004 ஆம் ஆண்டு 12 ஆம் திகதி ஞுாயிற்றுக்கிழமை பம்பாய் ஹெயின்ஸ் சாலையிலுள்ள யூதக் கல்லறையில், ஆச்சாரமான யூதமதச் சடங்குகளின்படி, ஹீப்ரு மொழி வழிபாட்டுடன், யூதமதகுரு ஒருவரின் வழிகாட்டதலில், யுதர்களின் புனித நகரமான ஜெருசலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கைப்பிடி மண்துாவப்பட அடக்கம் செய்யப்பட்டது. குடும்பம் குழந்தைகள் என வாழ்ந்த, தனது சமூகத்கை ஆத்திரமூட்ட விரும்பாத ஆச்சாரமான யூதப் பேராசிரியராகவும் ஆங்கில இலக்கியம் கற்பித்த ஆசானாகவும், இந்திய தேசியம் தவிர்ந்த, விட்டுவிலகிய நவீனத் தன்மையை தனது படைப்புகளில் முன்வைத்து அலைந்தவராகவும் வாழந்து மறைந்தார் நஸ்சிம் எஸக்கியல். அவர் மரணமுறும்போது அவருக்கு 79 வயது நிறைவடைந்திருந்தது.

ஆறு ஆண்டுகளாக மனப்பிறழ்வினால் துன்புற்றிருந்த அவருக்கு மரணம் அமைதியைத் தந்திருக்கிறது என்றார் அவரது வரலாற்றை எழுதிய நாவலாசிரியர் ராஜாராவ். அவரது அந்திம காலத்தில், எஸக்கியல் அவரது வளர்ந்த குழந்தைகளால் கைவிடப்பட்டவராக வாழ்ந்து மறைந்தார் என்பதற்கு ஒரு வகை சாட்சியமாக அவரது பேராசிரியர் எனும் கவிதை இருக்கிறது. பெண்ணோ பறவையோ அந்நியமனிதனோ எதனைக் குறித்து எழுதினாலும் அவர் வாரத்தைகளுக்காவும் புரிந்துகொள்தலுக்காவும் அவர் பொறுமையாகக் காத்திருக்கிறார்.

அவரது கவிதைகளின் முக்கியமான அம்சம், மனிதர்கள் பூச்சிகள் பூக்கள் பறவைகள் தாவரங்களின்பாலான அவரது நட்பும் தோழமையுணர்வும் நீக்கமற என்றும் பொங்கிப் பிரவாகிப்பதுதான் என்பதற்கு சாட்சியமாக இருக்கின்றன சிறுபான்மையினக் கவிதையும், தேசபக்தன் கவிதையும் எனில் மிகையில்லை.

எஸக்கியலின் ஆறு கவிதைகள்

பேராசிரியர்

என்னை ஞுாபகமிருக்கிறதா ? நான்தான் பேராசிரியர் சேத்.

நான் உனக்கு பூகோளம் படிப்பித்தேன்.

இப்போது நான் ஓய்வு பெற்றுவிட்டேன்,

உடல்நிலை ஆரோக்யமாகத்தான் இருக்கிறது என்றாலும்.

சில வருடங்கள் முன்பு எனது மனைவி இறந்து போனாள்.

கடவுளின் அனுக்கிரகத்தில், எனது எல்லாப் பிள்ளைகளும்

சுபிட்சமாக வாழ்கிறார்கள்.

ஓருவன் விற்பனைப் பிரிவு மேலாளன்

ஓருவன் வங்கி மேலாளன்

இருவரும் வாகனம் வைத்திருக்கிறார்கள்.

பிறரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்,

ஆனால் சொல்லிக் கொள்ளும்படிதான் இல்லை.

வீட்டுக்கு வீடு கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

சரளாவுக்கும் தரளாவுக்கும் கல்யாணமாகி விட்டது,

அவர்களது கணவர்கள் நல்ல பையன்கள்.

நீ நம்ப மாட்டாய், எனக்கு பதினோரு பேரக் குழந்தைகள்.

உனக்கு எத்தனை உருப்படி ? மூன்று ?

நல்லது.

இந்தக் காலத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கிறார்கள்.

நான் அதற்கு எதிரி இல்லை.

காலத்திற்கேற்ப நாமும் மாறத்தான் வேண்டும்.

உலகமே மாறிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் நாமும் அதற்கேற்ற மாதிரி முன்னேறத்தான்; வேண்டும்.

நமது முன்னேற்றம்

வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.

பழைய மதிப்பீடுகள் போகிறது, புதிய மதிப்பீடுகள் வருகிறது.

எல்லாமும் பாயச்சல் வேகத்திலும்; இறுக்கமாகவும்; நடக்கிறது.

இருந்தபடி எப்போதாவதுதான் நான் வெளியே போவேன்,

அவ்வப்போது மட்டும்,

வயசான காலத்தில் வருகிற வெகுமதி இது.

ஆனால் எனக்கு உடம்பு பிரச்சினையில்லை,

வழக்கமான நோவும் வலியும் மட்டும்தான்.

நீரிழிவு நோய் இல்லை, இரத்தக் கொதிப்பு இல்லை,

மாரடைப்பும் இல்லை.

வாலிப வயதிலிருந்த நல்ல பழக்கங்கள்தான் காரணம்.

உனக்கு உடம்பு எப்பிடி இருக்கிறது ?

ஆரோக்கியமாக இருக்கிறது ? சந்தோஷம்.

இந்த வருடம் எனக்கு அறுபத்தி ஒன்பது வயது.

நுாறாண்டு வாழ்வேன் என நினைக்கிறேன்.

அப்போதெல்லாம் நீ மிகவும் மெலிதாக இருப்பாய்,

நீள் குச்சியைப் போல,

இப்போது குண்டாகி பெரிய ஆளாகிவிட்டாய்

நல்ல பகடிதான்

மறுபடி இந்தப் பக்கம் வர உனக்கு வாய்ப்புக் கிடைத்தால்,

என்னுடைய எளிய வீட்டுக்கும் நீ வரவேண்டும்.

எதிர்ப்பக்கமிருக்கிற வீட்டுக்குப் பின்புறம்தான் நான் இருக்கிறேன்.

காற்றை அடையாளப்படுத்த ஒரு சொல்

காற்றுக்கு ஓரு சொல்லை

என்னால் கண்டடைய முடியவில்லை,

மற்றொரு சொல், கடற்பயணம் போல பூரணமடைந்ததொரு சொல்,

பாடல்கள்; புல்லின் மீது மேவிச் செல்லும் காற்றுப்போல்

மிருதுவாகச் செல்கிறது,

மரங்களினிடையில் அர்த்த இலைகளின் வழியிறங்கிச் செல்கிறது,

சப்தம் உருவாக்கும் அர்த்தம், திடாரென அதி வெடிப்புறும் கனி,

பிற்பாடு நீண்ட மெளனம்;

காற்றின் மேலும் கீழுமான வெளியில்.

காற்றை அடையாளப்படுத்த ஒரு சொல்லை

என்னால் கண்டடைய முடியவில்லை:

ஹோமரைப் போல அந்தகத்துடன்,

திராட்சைரச இருட்கடலி;ல் அடைகாத்தது போல

காற்றில் நான் அடைகாத்திருக்கிறேன, வெண்ணெய்தாழி

பிறவாத பற்பல பாடல்களின நீருற்றுக்கள் என்னில்

நிலைத்த ஜூவாலை ஒரு மின்னலில் தெரிகிறது

காற்றின் இதயத்தில் நெருப்பு

காற்றுக்கு ஒரு சொல்லை

என்னால் கண்டடைய முடியவில்லை

தேள் வந்த இரவு

எனது தாயை தேள்கொட்டிய அந்த இரவு எனக்கு ஞுாபகமிருக்கிறது. விடாத பெய்த பத்துமணி நேர மழை தேளை அரிசிச் சாக்கின் கீழ சுருண்டு கொள்ளச் செய்திருந்தது. விஷத்தைக் கொஞ்சம் விடுத்து, இருண்ட அறையில் பிரமாண்டமான வாலின் மின்னல், மறுபடி மழைக்கு தேள் பயப்படாது வெளிவந்தது. பிசாசைச் செயலிழக்க வைக்க ஆயிரம் தடவை கடவுளின் நாமத்தை உச்சரித்து தேனீக்களின் கூட்டமென விவசாயிகள் வந்தனர். சூரியன் எரித்த சுவற்றில் கவிந்த தேளின் பிரம்மாண்டமான நிழலின் மீது மெழுகுவர்த்திகளையும் லாந்தர் விளக்கினையும் எறிந்தனர். அதனைக் காணமுடியவில்லை. விவசாயிகள் தமது நாக்கைச் சுழற்றி கெக்கலியிட்டனர். ஒவ்வொரு அசைவிலும் எனது அன்னையின் இரத்தத்தில் தேள் தனது விஷத்தைச் செலுத்திக் கொண்டிருந்தது என்றனர் அவர்கள். தேள் நிலையாக அமர்ந்து விட்டிருக்கலாம் என்றனர் அவர்கள். வலியினால் அருகிப்போன நன்மையின் தொகுதிக்கு எதிரென அதனைச் சமனப்படுத்தும் தீதின் தொகுதியாய் இது இருக்கலாம், யதார்த்தமற்ற உலகில் என்றனர். வேட்கைச் தசையினை விஷம் சிலவேளை துாய்மைப்படுத்தலாம், ஆசைகளின் ஆத்மாவை என்றனர், எனது தாய் மையத்திலிருக்க அவளைச் சுற்றித் தரையிலமர்ந்தனர் அவர்கள். புரிந்து கொண்டதன் அமைதி ஒவ்வொருவர் முகத்திலும். மேலதிகமாக மெழுகுவர்த்திகள், மேலதிகமாக லாந்தர் விளக்குகள், மேலதிகமாக உறவினர்கள், அதிகமான பூச்சிகள், அப்புறம் முடிவற்ற மழை. ஏனது அன்னை முனகியபடி பாயில் புரண்டபடி நெளிந்தாள். எனது தந்தை, சந்தேகவாதி;, பகுத்தறிவுவாதி, ஒவ்வொரு சாபத்தையும் வழிபாட்டையும் முயற்சித்துப் பார்த்தார், சாந்து, மருந்துக் கலவைகள், மருத்துவ வேர்கள், ஒட்டுச் செடிகள். தேள்கொட்டிய கால்விரலில் மெழுகைக் கொட்டி அங்கு தீக்குச்சியும் கொழுத்திப் பார்த்தார். எனது அன்னையின் மீது தீ மூட்டப்பட்டதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். வுிஷத்தை அடக்க மந்திரம் கொண்டு சடங்குகள் செய்த பூசாரியை நான் பாரத்துக் கொண்டிருந்தேன். இருபது மணி நேரங்களின் பின் தேள் தன் கொடுக்கை இழந்தது.

என் அன்னை இதை மட்டும்தான் சொன்னாள் :

நன்றி கடவுளே.

தேள் என்னைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறது, என் குழந்தைகளை விட்டுவிட்டது.

கவிஞன் தனது இயலாமை குறித்துச் சிந்திக்கிறான்

பிழையான இடம்

பிழையான நேரம்

பிழையான அர்த்தத்திலான புனைவுகள்

அதனைச் சரி செய்வதற்காக

என்ன செய்திருக்க வேண்டுமோ அதனைச் செய்துவிடு

நீயே முன்கையெடுத்து விடு

வாக்குபு;போடு அல்லது

ஆதரவைத் திரும்பப் பெற்றுவிடு

ஓவ்வொரு முறையும் வெளிப்படையாகப் பேசு

இதனைப் பெறுவதற்காக வாழ்வை இழந்துவிடு

உனது பாலங்களை எரிப்பதைத் தவிர

உனக்கு வேறு வழியில்லை,

உனது இறப்புகளை நீ புதைப்பது தவிர

போதையேறியு சொற்களால் அல்ல

தேவையான தீ ஜூவாலைகளால்

புாதி விழித்த நிலையில்

மறுபடி அவன் பார்க்கிறான் தனது பிழையான நேரத்தை

பிழையான இடத்தை :

மனித விவகாரங்களில் இன்னொரு அலை

வேகமாக மறைந்து போகிறது

சிறுபான்மையினக் கவிதை

எனது அறையில், கண்ணுக்குத் தெரியாத என் விருந்தாளிகளுடன்

நான் பேசிக்கொண்டிருப்பேன்;,

அவர்கள் என்னோடு விவாதம் செய்ய மாட்டார்கள், காத்திருப்பர்.

நான் சோர்ந்து போகும்வரை இருந்துவிட்டு, பிற்பாடு அவர்கள்

குழம்பிய முகங்களுடன் நழுவிப் போய்விடுவர்

அவர்களது அன்பான நோக்கை மாற்ற வழியறியாது தவிக்கிறேன்

அவர்தம் கடவுளை நான் விரும்பவும் செய்கிறேன் எனினும்

நிஜத்தில் மொழிதான் பிரிவினையைக் கொணர்கிறது

பிற எவைதான் அதனுாடு பகிர்ந்து கொள்ளப்பட்டாலும்.

இன்னொரு திசையில்,

அன்னை தெரஸாவை அனைவரும் புரிந்து கொள்கிறார்கள்,

அவரது விருந்;தாளிகள்

கண்ணெதிரில் அவர்; கைகளில் மரணமுறுகிறார்கள்

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மாயக்கதைகளையல்ல

அல்லது கல்யாணச் சடங்குகளையல்ல,

சுயமறதி நோக்கிச் செல்லும்

ஊசியின் காதுக்குள் நுழைந்து வெளியேறும் திடமனம் வேண்டும்

விருந்தாளிகள் பிரிந்து செல்வர், அதிருப்தியுடன்,

பழையதோ புதியதோ,

அவர்களது மந்திரத்தை ஒருபோதும் அவர்கள் விட்டுத்தரார்,

நீ, அவர்களது இனநினைவுகளில் அசெளகரியமான அனாதை,

நிஜத்தில்

அறிதலின் அந்நியநுட்பத்தைத் தீட்டிக்கொள்,

நகரம் எரிந்து கொண்டிருக்கும் வேளை.

தேசபக்தன்

நான் சமாதானத்துக்காகவும் சாத்வீகத்திற்காகவும் நிற்கிறேன்.

ஏன் உலகம் இப்படி சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறது

ஏன் உலகத்திலிருக்கிற எல்லா மக்களும்

மகாத்மா காந்தியைப் பின்தொடராமல் இருக்கிறார்கள்,

எனக்குத் துப்புரவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

தொன்மையான இந்திய தரிசனம் 100 சதம் சரி,

200 சதம் சரி என்று நான் சொல்வேன்,

ஆனால் நவீன தலைமுறை அதனை நிராகரிக்கிறது-

அதிகமாக மோஸ்தரையும்

அன்னிய சமாச்சாரங்களையும் நோக்கி போக்கொண்டிருக்கிறார்கள்

அன்றொருநாள் நான் செய்தித்தாளில் வாசித்தேன்

(எனது ஆங்கிலத்தை அபிவிருத்தி செய்து கொள்வதற்காகத் தினமும் நான்

டைம்ஸ் ஆம் இந்தியா வாசிப்பேன்)

எவ்வாறு ஒரு சமூகவிரோதி இந்திராபெஹன் மீது கற்களை

வீசினான் என-

தொடர்ந்து மாணவர் கலவரம் தோன்றும் என நினைத்தேன்.

நண்பர்களே,ரோமானியர்களே, குடிமக்களே,

நான் சொல்கிறேன் ( எனக்கு நானே) கொஞ்சம் செவி கொடுங்கள்.

எல்லாம்தான் வந்துகொண்டிருக்கிறது-

மறுஉயிர்ப்பு, பொருளாதார வெகுமதி, கருத்தடுப்பு.

பொறுமையாயிருங்கள்,சகோதரர்களே சகோதரிகளே.

உங்களுக்குக் குளிர்தயிர்; ஒரு கிண்ணம் வேண்டுமா ?

ஜீரணத்துக்கு அது மிகவும் நல்லது.

கொஞ்சம் உப்புப் போட்டால், அபாரமான பானம்,

திராட்ச்சத்தை விடவும் மிக நல்லது.

நான் திாாட்சை ரசத்தை என்றும் சுவைத்ததில்லையென்றாலும் கூட

நான் முற்றமுழுக்கத் தேநீர்விரும்பி

ஆனாலும் கூட

திராட்சை ரசம் குடிகாரர்களுக்கு ஆனது என்பேன்.

உலக சமாதானத்துக்கான முயற்சிகள்

என்னவாக இருக்கவேண்டுமென நீ கருதுகிறாய் ?

புாகிஸ்தான் இந்த மாதிரி நடந்து கொள்கிறது

சீனா அந்த மாதிரி நடந்து கொள்கிறது

இப்படிச் சொல்வது என்னை உண்மையில் விசனமடையச் செய்கிறது,

நான் சொல்கிறேன், உண்மையில் இது என்னைச் சீண்டுகிறது.

ஏல்லா மனிதர்களும் சகோதரர்கள், இல்லையா ?

இந்தியாவிலும் கூட இதுதான்

குஜராத்தியர்கள், மஹாராஸ்டிரர்கள், ஹிந்திபேசுபவர்கள்

ஏல்லோரும் சகோதரர்கள்-

சிலர் நகைப்புக்குரிய பழக்க வழக்கங்கள் கொண்டிருந்தபோதிலும்.

இருந்தாலும், நீ என்னைச் சகித்துக் கொள்கிறாய்,

நான் உன்னைச் சகித்துக் கொள்கிறேன்,

ஒரு நாள் ராமராஜ்யம் நிச்சயமாக வந்தே தீரும்.

நீ போகிறாயா ?

மறுடி நீ வரவேண்டும்

எந்த நாளிலும், எந்த நேரத்திலும்,

சடங்குகளில் எனக்கு நம்பிக்கையில்லை

எப்போதும் உனது நட்பில் நான் சந்தோஷம் கொள்கிறேன்.


நன்றி : உயிர்மை : பிப்ரவரி 2004

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்