நெரூதா அனுபவம்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

சுகுமாரன்


(பாப்லோ நெரூதாவின் 100 கவிதைகள் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக

வந்துள்ளது. நூலுக்கு எழுதிய முன்னுரையை திண்ணை வாசகர்களின்

பார்வைக்கு முன்வைக்க விரும்புகிறேன்.

இதன் ஆரம்ப வடிவம் திண்ணையில்தான் ஒழுங்குபெற்றது என்பதையும்

நினைவு கூர்கிறேன். – சுகுமாரன்)

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனக்குள் தொடர்ந்துகொண்டிருந்த

கனவின் நிறைவேற்றம் இந்த மொழியாக்கம். யார் இந்தக் கனவின் காரணமும்

பொருளுமாக இருந்தாரோ அந்தக் கவிஞரின் நூற்றாண்டில் இந்த

நூல் வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. கவிஞனாக எனது ஆதார அக்கறை

களைப் பக்குவப்படுத்தியதிலும் மனிதனாக எனது தார்மீக உணர்வுகளை

கூர்மைப்படுத்தியதிலும் செல்வாக்குச் செலுத்திய வெவ்வேறு ஆளுமைகளில்

நெரூதாவும் ஒருவர் என்பது இந்த மகிழ்ச்சியை அர்த்தமுள்ளதாக்குகிறது.

இலக்கியவாசிப்பின் ஆரம்ப நாட்களில் என்னைப் பாதித்த கவிஞர்கள்

வரிசையில் பாப்லோ நெரூதா இருக்கவில்லை. அன்றைய வாழ்வனுபவத்துக்கும்

மனநிலைக்கும் இணக்கமாகவிருந்தவர்- மற்றொரு ஸ்பானியக் கவிஞரான

செஸார் வயெஹோ. தனி அனுபவத்தின் இருளும் துயரும் இழைந்த

வயெஹோவின் கவிதையுலகம் என் இயல்புக்குப் பொருத்தமானதாக இருந்தது.

உலகக் கவிதைத் திரட்டுகளில் வாசித்த வயெஹொ கவிதைகளின்

பின்னணி விவரங்களில் நெரூதாவின் பெயரும் உடன்நிகழ்வாகத் தொடர்ந்திருந்தது.

நெரூதாவை நெருங்க எனக்கு வழிகாட்டியவர் வயெஹோ.

பாப்லோ நெரூதா என்ற பெயரை தமிழில் நான் பார்த்தது என் பதினாறாவது

வயதில். ‘கண்ணதாசன் ‘இதழொன்றில்.1973 நவம்பர் அல்லது டிசம்பர் இதழில்

தி.க.சிவசங்கரன் மொழிபெயர்ப்பில் நெரூதாவின் அரசியல் கவிதையொன்று

வெளியாகியிருந்தது. அப்போதைய அதிபரான நிக்சனையும் சால்வடெர் அலெண்டே

தலைமையில் சிலியில் உருவாகியிருந்த ஜனநாயக அரசை அமெரிக்க ஆதரவுடன்

கவிழ்த்த பினோஷேவையும் ‘ஓநாய்கள் ‘ என்று சீற்றமான வார்த்தைகளில்

குற்றம்சாட்டியது கவிதை.அதே ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி அமெரிக்க

ஒத்துழைப்புடன் நடந்த உள்நாட்டுக் கலவரத்தில் அலெண்டே கொல்லப்பட்டார்.

அலெண்டெ மறைந்த பதின்மூன்றாம் நாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை

யிலிருந்த நெரூதாவும் மரணமடைந்தார்.மரணத்தின் காரணம் முற்றிய நோய்

மட்டுமல்ல;சிலிக்கு நேர்ந்த அரசியல் விபத்தும்தான்.

கவிதையை வாசித்த முதல் வாய்ப்பில் இந்தப் பின்னணி எதையும்

அறிந்துவைத்திருக்கவில்லை. ஆனால் அந்த வரிகளிலிருந்த மின்சாரம் சிந்தனையில்

வெளிச்சமாகப் படர்ந்து இன்றும் நீடிக்கிறது.

முதல் அறிமுகத்துக்குப் பின்னர் சில ஆண்டுகள் கழித்துத்தான் நெரூதா

கவிதைகள் மீதான காதல் தீவிரமடைந்தது. அந்தக் காலப்பகுதியில் எனது தாய்

மொழியான மலையாளத்தைக் கற்றுக்கொண்டிருந்தேன். பிற இந்திய மொழிகளைவிட

மலையாளத்தில் பாப்லோ நெரூதாவின் செல்வாக்கு அதிகம்.இடதுசாரிச் சிந்தனையை

பொது இயல்பாக ஏற்றுக்கொண்டிருந்த கலாச்சாரச் சூழலில் இது வியப்புக்குரிய

ஒன்றல்ல. எழுபதுகளில் புதிய கவிதையுணர்வின் அடையாளங்களில் ஒன்றாக

நெரூதா கவிதைகள் அங்கீகாரம் பெறுவதற்கு மிக முன்பு, ஐம்பதுகளிலேயே

கே.பி.ஜி.நம்பூதிரி நெரூதாவின் அரசியல் கவிதையொன்றை மொழிபெயர்த்திருந்தார்.

நெருக்கடி நிலைக் காலத்தில் எதேச்சாதிகாரத்துக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைக்கு

ஆதரவாகவும் ஒலித்த குரல்களில் நெரூதாவின் கவிதைகளுமிருந்தன. சச்சிதானந்தன்

நெரூதா கவிதைகளின் முதல் மலையாள மொழியாக்கத் தொகுப்பைக் கொண்டு

வந்திருந்தார். இத்தாலிய நாடகாசிரியரான மாரிகோ ஃப்ராட்டியின் ‘பாப்லோ நெரூதாவை

கொன்றது யார் ? ‘ என்ற நாடகத்தின் மொழிபெயர்ப்பு ‘மாத்ருபூமி ‘ வார இதழில்

வெளியாகியிருந்தது. பின் நாட்களில் நெரூதா கவிதைகள் மீது கவனம் செலுத்த

இவையெல்லாம் முகாந்திரங்களாக இருந்தன. தமிழிலும் ஆங்கிலத்திலும் உதிரியாகவும்

உலகக் கவிதைத் திரட்டுகளிலும் வாசிக்கக் கிடைத்த கவிதைகள் நெரூதாவுக்கென்று

மனதில் ஓர் அறையைத் திறந்துவைத்தன.வாசக ஆர்வத்துடனும் எனது கவிதை

மொழியைச் செப்பனிட்டுக்கொள்ளும் நோக்கிலும் அவ்வப்போது மேற்கொண்ட

மொழிபெயர்ப்பு முயற்சிகளில் அதிகம்கைகொடுத்தவர் பாப்லோ நெரூதா.கவிதைக்கு

மட்டுமல்ல; காதலுக்கும்.

நெரூதாவின் மிகப் பிரபலமான காதல் கவிதையான ‘இன்றிரவு என்னால் எழுத

முடியும், மிகவும் துக்கம் நிரம்பிய வரிகளை ‘ மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கக்

காரணம், காதலைச் சொல்ல எனக்கிருந்த சங்கோஜம். எனது முதலாவது காதல்

கவிதையை எழுதும் தைரியமே அந்த மொழிபெயர்ப்பு அச்சேறிய பிறகுதான் வந்தது.

ஆரம்ப உற்சாகத்தில் மொழிபெயர்த்த நான்கு கவிதைகள்- ‘இன்றிரவு

என்னால் எழுத முடியும் ‘, ‘ஞாபகம் ‘ ‘சுற்றியலைதல் ‘ ‘பூமியே, எனக்காகக் காத்திரு ‘

ஆகியவை- ‘கொல்லிப்பாவை ‘ இதழ்களில் அடுத்தடுத்து வெளிவந்தது ஒரு சாதனை

உணர்வைத் தந்தது. இவை வெளியான சந்தர்ப்பத்தில் நண்பரும் சிறுகதையாளருமான

விமலாதித்த மாமல்லன் செய்த இலக்கியக் குறும்பு இப்போதும் கலையாமல்

நினைவிலிருக்கிறது. மேற்சொன்ன மொழிபெயர்ப்புகள் வெளிவந்த இதழொன்றில்

வேறொரு கவிதையும் இடம்பெற்றிருந்தது.சங்கர்ராமன் என்ற நண்பரிடம்(இவர் ‘மீட்சி ‘

சிற்றேட்டின் முதல் இதழில் ‘மாற்றம் ‘ என்ற நேர்த்தியான சிறுகதையை எழுதியவர்)

பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்ட கவிதையை வாசித்துக் காட்டினார். வாசித்து

முடித்ததும் சங்கர்ராமன் கேட்டது ‘பாப்லோ நெரூதாவின் கவிதையா ? ‘. அது

நானெழுதிய ‘பயணியின் சங்கீதங்கள் ‘ என்ற கவிதை. நெரூதாவின் நிழல்கூடஅீண்டாத கவிதை. அதில் உள்ளோடிய பாதிப்பு பைபிளையும் மகாபாரத

சுலோகத்தையும் சார்ந்தது. நெரூதாவின் சாயலை நுட்பமான வாசகர் ஒருவரால் அதில்

காணமுடிந்ததை ஒரு கண்டுபிடிப்பின் பரவசமாக உணர்ந்தேன். எந்த மொழியில்

எழுதப்பட்டதானாலும் கவிதைக்கு ஒரு பொதுமொழி உண்டு. இடம் காலம் கடந்து

மனதில் விரியும் இந்த வார்த்தைவெளியில்தான் ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனின்

காலடித் தடங்களையும் வாசகன் கவிதையின் வழிகளையும் கண்டடைகிறார்கள் என்ற

ஆதாரமான கவிதையியல் கருத்தை இது வலுப்படுத்தியது. கறாரான விளக்கத்துக்கு

உட்படுத்தவியலாத இந்தப் பொதுமொழிதான் நெரூதாபோன்ற அந்நியமான

கவிஞர்களையும் நமக்கு நெருக்கமானவர்களாக்குகிறது என்று கருதுகிறேன்.

ஒரு சில கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டதில் கிடைத்த இலக்கிய

கவனமும் அந்த சவால் முன்வைத்த வசீகரமும் பாப்லோ நெரூதா கவிதைகளுடன்

தொடர்ந்து மொழியாக்க உறவைப் பேணுவதற்கான தூண்டுதல்களாக இருந்தன.

எண்பதுகளின் நடுப்பகுதியோடு ஏறத்தாழ முப்பத்தைந்து கவிதைகள் தமிழாக்கம்

பெற்றன. அன்று அந்த மொழியாக்கங்களை பரிசோதித்து செம்மைப்படுத்த எனக்கு

உதவியவர்கள் இருவர். அமரர் எம்.எஸ்.ராமசுவாமியும் ஆர்.சிவகுமாரும். அவர்கள்

வழங்கிய ஆலோசனையில் உருவாக்கிக்கொண்ட கருவிகள்தாம் மொழிபெயர்ப்பின்

சிடுக்குகளை இழைபிரித்து உணர இன்றும் பயன்படும் ஆயுதங்கள்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் செப்பனிட்டு மெருகேற்றிய அறுபத்தொன்பது

கவிதைகள் என் வசமிருந்தன. பாப்லோ நெரூதா என்ற மனிதன் இந்த உலகில்

வாழ்ந்த ஆண்டுகளைக் குறிப்பிடும்வகையில் அறுபத்தொன்பது கவிதைகள் என்று

காரணமும் கற்பித்திருந்தேன். நெரூதாக் கவிதைகளின் மீதான விமர்சனம் தீண்டாத

ஆர்வத்தின் விளைவாக அவரது முக்கியமான நூல்களில் பெரும்பான்மையானவற்றை

வாங்கிச் சேர்த்திருந்தேன். உலகக் கவிதைத் திரட்டுகளில் இடம்பெற்றிருந்த பல

கவிதைகளைப் படியெடுத்துப் பாதுகாத்துக்கொண்டிருந்தேன். அவற்றில் நெரூதாக்

கவிதைகளின் நாடியைத் தொட்டுணர உதவிய இரண்டு தொகுப்புகளின் மொழி

பெயர்ப்பாளர்களை இப்போதும் நினைவு கூர்கிறேன். நெரூதாவின் சுயசரிதைக்

கவிதைகளடங்கிய ‘ஐலா நீக்ரா ‘வின் மொழிபெயர்ப்பாளர் அலாஸ்டெய்ர் ரீய்ட்

( Alastair Reid). ‘ஐரோப்பியக் கவிதைகள் ‘ தொகுப்பின் ஆசிரியர் றெஜி

சிறீவர்த்தன ஆகியவரே அந்த இருவர்.

ஏறத்தாழ ஒரு பித்துநிலையில், மனவெளியின் தொடுவானத்திலிருந்து,

பாப்லோ நெரூதா அவரது கவிதைகளை மொழிபெயர்க்க எனக்கு சிறப்புச் சலுகை

வழங்கியிருப்பதாகவும் அதைத் துல்லியமும் திருத்தமுமான அசரீரிக் குரலில்

என்னிடம் தெரிவித்திருப்பதாகவும் அவ்வப்போது கற்பனை படர்ந்தது. அப்போது

சென்னையில் வாழ்ந்துகொண்டிருந்தேன். எனது நெரூதா மொழிபெயர்ப்புப் பற்றி

கலந்தாலோசிக்க விற்பன்னர் யாராவது அகப்படுவார்களா என்று தேடிக்கொண்டு

இருந்தேன். சாந்தோம் பகுதியில் ரோசரி சர்ச் சாலையில் ஸ்பெயின் நாட்டின்

தூதரக அலுவலகம் இருந்தது. லத்தீன் அமெரிக்கக் கவிஞர்கள் ஸ்பானிய மொழியில்

தானே எழுதுகிறார்கள். தவிர, நெரூதா, ஆக்டேவியோ பாஸ் எல்லோரும்

தூதரகப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் கூட. எனவே எவராவது துணைபுரியக்

கூடுமென்று நம்பினேன். அந்த அலுவலகத்தின் பொறுப்பிலிருந்த கிளாரிபெல்

என்ற பெண்மணி தனக்குக் கவிதையில் ஈடுபாடு கிடையாது என்றார். குறிப்பாக

பாப்லோவின் கவிதையை வாசித்ததில்லை, ஆனால் கேட்டிருப்பதாகச் சொன்னார்.

பிடிபடாமல் விழித்தவனிடம் ஓர் ஒலிநாடாவைக் கேட்கச் செய்தார். அது பாப்லோ

நெரூதா கவிதை வாசிக்கும் குரல். அந்தக் குரல் மயக்கம்தான் எனக்குள் அசரீரியாக

எதிரொலித்திருந்தது. ( அன்று கிளாரிபெல் தன் பெயரில் ஒரு கவிஞர் ஸ்பெயினில்

வசிப்பதாகச் சொன்ன வெறும் தகவலைப் பல ஆண்டுகளுக்குப் பின் இலக்கியக்

கண்டுபிடிப்பாக உணர்ந்தேன். அவர் குறிப்பிட்டது எல் சால்வடார் நாட்டைச்

சேர்ந்த கிளாரிபெல் அலெக்ரியா [ பிறப்பு 1924] என்ற கவிஞரை.)

நெரூதா மொழிபெயர்ப்பில் எழுந்த சந்தேகங்களைக் குறிப்பிட்டு மேற்சொன்ன

இரண்டு மொழிபெயர்ப்பாளர்களுக்கும் பதிப்பாளர்களின் மேற்பார்வை முகவரியிட்டு

துணிந்து கடிதங்களெழுதி அனுப்பினேன். ரீய்டிடமிருந்து பதில் வந்தது. எட்டு புள்ளி

எழுத்தில் மின்னச்சு செய்யப்பட்ட சிலவரிக் கடிதம். தன்னுடைய கவிதைகளை

மொழிபெயர்க்கும்போது பின்பற்ற வேண்டிய இலக்கணமாக நெரூதா ரீய்டுக்குச்

சொன்னதை ரீய்ட் எனக்கு அறிவுறுத்தியிருந்தார். நெரூதாவின் கவிதையுலக

ரகசியங்களைக் கண்டுபிடிக்க உதவும் வரைபடமாக அந்தக் கடிதத்தைக் கருதினேன்.

என் சேகரிப்பிலிருந்த ‘ஐலா நீக்ரா ‘ பிரதியில் பிரத்தியேகப் பக்கங்களாகச் செருகி

நீண்ட காலமாக வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதம் காணாமற்போனது இன்றும்

தேற்றிக்கொள்ள முடியாத இலக்கிய துக்கம்.

எண்பதுகளின் மத்தியில் தொடங்கி தொண்ணூறுகளின் பாதிவரை ஈடுபட்டுச்

செய்து வைத்த மொழிபெயர்ப்புகள் கணிசமான எண்ணிக்கையை எட்டியிருந்தன.

ஆனால் அவற்றைத் தொகுத்து வெளியிடுவதில் தயக்கமும் கொண்டிருந்தேன்.

கருமி தனது நாணயச் சேமிப்பை அவ்வப்போது எடுத்துப் பார்த்து மினுக்கி பத்திரப்

படுத்திக்கொள்வதுபோல, கையெழுத்துப் பிரதிகளை வாசித்து திருத்திச் சீரமைத்து

புதிய படிகளைத் தயாரிப்பதோடு நிறுத்திகொண்டிருந்தேன். பலமுறை திருத்தி

வடிவமைக்கப்பட்ட மொழியாக்கங்களும் நிறைவின்மையையே தந்தன. இந்த

நிறைவின்மையை நான் தோற்கடித்த கணங்களின் விளைவாகச் சில கவிதைகள்

சிற்றேடுகளில் வெளியாயின. எனினும் நான் தோல்வியடைந்த சமயங்களே அதிகம்.

இந்தக் கால அளவிலெல்லாம் பாப்லோ நெரூதா என்ற கவிஞர் குறிப்பிடப்பட்டதும்

மொழிபெயர்க்கப்பட்டதும் விவாதிக்கப்பட்டதுமான தமிழ்ச் சூழல்களையும் கவனத்தில்

பதித்துக் கொண்டுமிருந்தேன்.

எழுபதுகளின் தொடக்கத்தில் அனைத்து இந்திய மொழிகளிலும் எழுந்த

இடதுசாரிச் சிந்தனைப் போக்கின் உடன்நிகழ்வாக அறிமுகமான ஆளுமைகளில்

நெரூதாவும் ஒருவர். தமிழிலும் இதே நோக்கில்தான் நெரூதா முன்வைக்கப் பட்டார்.

கட்சி சார்ந்தவர்களும் சாராதவர்களுமான மார்க்சியர்கள் டி.எஸ்.எலியட்டுக்கும்

எஸ்ரா பவுண்டுக்கும் மாற்றான நவீன கவிதையின் பிரதிநிதியாக நெரூதாவை

முன்னிலைப்படுத்தினர். மானுட உறவுகளின் மாளாக் காதலர், இயற்கையின் தீவிர

ஆராதகர், அயராத போராளி – இந்த மூன்று நிலைகளின் படைப்பியல் விரிவே

அவரது கவிதை. ஆனால் தமிழில் அவர் அடையாளப்படுத்தப்பட்டது சித்தாந்தச்

சார்புடைய போராட்டக்காரராகவும் அரசியல் கவிதையாளராகவும்தான்.அந்தக் காலத்தின் தேவை அதுவாக இருந்தது. தவிர, புரட்சிகர அரசியல் என்ற கனவைப்

பராமரிக்க நெரூதாவின் கற்பனைவாத ஆவேசம் உகந்ததாகவுமிருந்தது.நெரூதாவின்

கற்பனைவாதம் அவரது வாழ்க்கையின் எதார்த்தத்திலிருந்து உருவானது எனற

அடிப்படைக் குணம் விவாதிக்கப்படாமலேயே நகலெடுப்புகள் நிகழ்ந்தன. இன்னொரு

எல்லையில் அவரது காதல் கவிதைகள் முதன்மைப்படுத்தப்பட்டன.

தமிழில் நெரூதாவின் செல்வாக்கு ஆழமானதல்ல; ஓரளவுக்குப் பரவலானது

என்று கருதுகிறேன். நெரூதா மொழிபெயர்க்கப்பட்ட, குறிப்பிடப்பட்ட சில

சந்தர்ப்பங்கள் கவனத்தில் படர்ந்திருக்கின்றன. தி.க. சிவசங்கரன், என்.ஆர்.தாசன்

ஆகியோரது மொழிபெயர்ப்பு, கட்டுரைக் குறிப்புகள், மீரா, தமிழன்பன் ஆகியோரது

மொழிபெயர்ப்பில் சில கவிதைகள், பொதியவெற்பன் தொகுத்து வெளியிட்ட ‘சிலிக்

குயிலுக்கு ஒரு செங்கவிதாஞ்சலி ‘ ஆகியவை ஆரம்ப அக்கறையில் ஈர்த்தவை.

‘பிரக்ஞை ‘ இதழில் வெளியான சர்ச்சைக் கட்டுரையொன்றில் பிரமிளின் சில

கவிதைவரிகளும் படிமங்களும் நெரூதாவிடமிருந்து அபகரித்தவை என்ற தொனியில்

தமிழவன் எழுதியிருந்ததும் நினைவிலிருந்தது. ஆத்மாநாமின் ஆசிரியத்துவத்தில்

வெளிவந்த ‘ழ ‘ கவிதையேட்டில் நெரூதாவின் இரண்டு கவிதைகள்-

‘வைகறையின் நலிவோடு ‘ ‘கவிதை ‘- மயானஸ்வாமி (ஞானக்கூத்தன் என்பது என்

யூகம்) மொழியாக்கத்தில் அச்சேறியிருந்தன. ‘மீட்சி ‘ இதழில் பிரம்மராஜன் ‘நான் சில

விஷயங்களை விளக்குகிறேன் ‘ கவிதையைத் தமிழில் பெயர்த்திருந்தார். ‘ஞானரதம் ‘

பத்திரிகையில் சுந்தர ராமசாமி ‘புத்தகங்களுக்கு ஒரு பாடல் ‘ ‘நான் திரும்பி வருவேன் ‘

இரு கவிதைகளை றெஜி சிறீவர்த்தனவின் ஆங்கில வடிவத்திலிருந்து மொழிபெயர்த்து

வெளியிட்டிருந்தார். என் மொழிபெயர்ப்புகளைத் திருத்தம் செய்து திருப்பியனுப்பிய

படிகளுடன் எம்.எஸ்.ராமசுவாமி தனது மொழியாக்கங்கள் சிலவற்றையும்வைத்திருந்தார்.

என் வசமிருந்த தொகுப்புகளிில் இடம்பெற்றிராத கவிதைகள் அவை. என் கைவரிசை

சார்த்தி அனுப்பிய அந்தக் கவிதைகள் எங்காவது வெளியாயினவாவென்று அறிந்து

கொள்ள முடியவில்லை. இந்திரன் மொழிபெயர்த்துத் தொகுத்த ‘பசித்த தலைமுறை ‘

என்ற மூன்றாவது உலக இலக்கியத் திரட்டில் ‘கவிதையின் வருகை ‘ இடம்

பெற்றிருந்தது. அப்துல் ரகுமான் ‘முட்டைவாசிகள் ‘ நூலிலும் முருகு சுந்தரம் ‘புகழ்

பெற்ற புதுக்கவிஞர்கள் ‘ நூலிலும் பாப்லோ நெரூதாவைக் குறிப்பிட்டிருந்தனர்.

‘ழ ‘ இதழொன்றில் ‘சிறிய மற்றும் நீண்ட வரிகள் ‘ என்ற தலைப்பில் நெரூதாவின்

‘நினைவுக்குறிப்புகள் ‘ (Memoirs) நூலிலிருந்து ஒரு பகுதியை பிரம்மராஜன் தமிழாக்கி

வெளியிட்டிருந்தார். அதே நூலின் சில பகுதிகள் ‘நினைவலைகள் ‘ என்ற பெயரில்

ஒரு சிறு நூலாக சென்னை புக்ஸ் சார்பில் வெளியாகியிருந்தது.நெரூதாவின் நெடுங்கவிதை

‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘ (The Heights of Macchu Picchu) எம்.கண்ணன், வி.நடராஜ்

இருவரின் மொழிபெயர்ப்பில் ‘மச்சு பிச்சு ‘ என்ற தலைப்பில் தனி நூலாக விடியல்

பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. என் பார்வைக்குத் தப்பிய முயற்சிகளும்

இருக்கக்கூடும். இவையெல்லாம் தமிழிலக்கியப் பரப்பில் நெரூதா மொழிபெயர்ப்புடன்

ஊடுருவலாம் என்ற பேராசையைத் தோற்றுவித்தன. 1அட்

இந்தத் தொகுப்புக்கான கவிதைகள் பிரதானமாகவும் பதினாறு புத்தகங்களில்

வெளியாகியுள்ள ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளிலிருந்து

தேர்ந்தெடுக்கப்பட்டவை. ஒற்றை வாக்கியத்தில் இப்படிச் சொல்லமுடிவதுபோல

கவிதைத்தேர்வு எளிதாக இருக்கவில்லை. நெரூதா கவிதைகளின் நம்பமுடியாத

எண்ணிக்கை முதற்காரணம். ‘ஊமையான ஒரு கண்டத்தின் தொலைவிடங்களை

சொற்களால் நிரப்புவதைத் ‘ தனது செயல்பாடாகக் கருதியவர் நெரூதா என்பதால்

இந்தப் பெருக்கம் மிக இயற்கையானதும் கூட. மனித வாழ்க்கையின் சகல

அனுபவங்களுக்கும் தன்னை சாட்சியப்படுத்திக் கொண்ட கவிஞர் என்ற பார்வையை

ஆதாரமாக வைத்தே பெரும் எண்ணிக்கையிலிருந்து எனக்கான கவிதைகளைத்

தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்தப் பார்வையின் உட்கூறுகளை- ரசனை, அழகியல்,

கருத்து நிலைப்பாடு ஆகிய அம்சங்கள்- வாசிப்பு வேளையில் வாசகர்கள் பிரித்து

அறிய முடியும். வெவ்வேறு மொழிபெயர்ப்புகள் இரண்டாவது சிக்கலை முன்வைத்தன.

ஸ்பானிய மூல மொழியிலிருந்து பாப்லோ நெரூதாவின் கவிதைகளை ஐம்பதுக்கும்

அதிகமான வல்லுநர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். தனது

வாழ்நாளில் நெரூதாவே தன் கவிதைகளைப் பலர் மொழிபெயர்ப்பதற்கு அனுமதி

வழங்கியிருக்கிறார். பலவிதமான மொழியாக்கங்கள் வருவதை ஊக்குவித்திருக்கிறார்.

ஒன்றுக்கொன்று மாறுபட்ட மொழிபெயர்ப்புகளால் மூலத்தின் இயல்பைக் குறித்த

சந்தேகம் தமிழாக்க முயற்சியின் வெவ்வேறு நிலைகளில் குழப்பத்துக்குள்ளாக்கியது.

நெரூதாவின் பெரும்பான்மையான தொகுதிகளும் இருமொழிப் பதிப்புகளாக இருப்பது

மறைமுகமான உதவியாக அமைந்தது. ஸ்பானிய மொழிச் சொற்களை கவிஞர்

எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார் என்று கவனித்தும் தொடர்ந்து இடம்பெறும்

சொற்களின் பொருளை நினைவிலிருத்தியும் இந்தச் சிக்கலிலிருந்து விடுபட வழி

கண்டுபிடித்தேன். ஆழம் தெரியாத நீர்த் தடத்தில் கால்களால் ‘பார்த்து ‘ வழியைத்

தீர்மானிக்கிற உள்ளுணர்வின் உபாயந்தான் இது. கவிதையின் தொனியும் மொழியை

நிர்ணயிப்பதில் நம்பகமான துணையாக இருந்தது.

தொகுப்பில் இடம்பெறும் ‘கடற்கன்னியும் குடிகாரர்களும் ‘ கவிதையின்

தமிழாக்க சூத்திரத்தை இங்கே எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். நதானியேல் தார்ன்

தொகுத்த ‘நெரூதா – தேர்ந்தெடுத்த கவிதைகள் ‘ தொகுப்பிலும் மார்க் எய்ஸ்னர்

தொகுத்த ‘முக்கியமான நெரூதா ‘ தொகுப்பிலும் இக் கவிதை வெளியாகியுள்ளது.

அலாஸ்டெய்ர் ரீய்ட்தான் இரண்டு மொழியாக்கங்களையும் செய்திருப்பவர். ‘முழு

நிர்வாணமாக அவள் நுழைந்தபோது/ இந்தப் பயல்கள் எல்லாரும் உள்ளேயிருந்தார்கள் ‘

என்று முதல் வடிவத்திலும் ‘இந்த கனவான்கள் எல்லாரும் உள்ளேயிருந்தார்கள் ‘

என்று இரண்டாவது வடிவத்திலும் கையாண்டிருக்கிறார். ‘ஸெனொரஸ் ‘ என்ற மூலச்

சொல்லின் நேரடியான பொருள் ‘கனவான்கள் ‘தான். ஆனால், கவிதையின் தொனி

ரீய்டின் முதல்வடிவத்திலுள்ள பிரயோகமான ‘பயல்கள் ‘தான் கச்சிதமானது என்ற

உணர்வைத் தருகிறது. இன்னொரு உதாரணத்தையும் முன்வைக்க விரும்புகிறேன்.

‘சுற்றி அலைதல் ‘ கவிதையின் முதல்வரி ‘மனிதனாக இருப்பதில் களைத்துப்

போகிறேன் நான் ‘ என்று தொடங்குகிறது. நான் காண நேர்ந்த தமிழாக்கத்தில் இது

‘ஆணாக இருப்பதில் நான் களைத்துப் போகிறேன் ‘ என்று ஆக்கப்பட்டிருந்தது.

மூலத்திலுள்ள ‘ஹோம்ப்ரே ‘ (hombre) என்ற சொல் மனிதன் என்ற பால்வேற்றுமை

சுட்டாத பொதுப் பதமாகவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை நெரூதாவின்

பிற கவிதைகளை ஆதாரமாகக்கொண்டே உறுதிசெய்துகொள்ள வாய்த்தது. ‘மாச்சு

பிச்சு ‘ வரிசையில் பத்தாவது கவிதையின் முதல்வரி ‘கல்லுக்குள் கல், மனிதன்,

எங்கிருந்தான் அவன் ? ‘ .இதில் பயன்படுத்தப்படும் ‘ஹோம்ப்ரே ‘ ஆணல்ல; மனிதன்

மட்டுமே என்ற முடிவுக்கு வர இந்த உள்ளுணர்வுத் துளாவல் உதவியது. சுரங்கத்தின்

கோடியில் தெரியும் வெளிச்சத்தை நோக்கி இருட்டைப் பின்னுக்குத் தள்ளிகொண்டு

நடக்கும் அசாதாரண அனுபவம் இது.

மூன்றாவது சிக்கல் வரிசைபடுத்துவதில் காத்திருந்தது. பொருள் சார்ந்தா ?

காலம் சார்ந்தா ? இந்தப் பிரச்சனைக்கு இலான் ஸ்டாவன்ஸ் (ILAN STAVANS)

தொகுத்த ‘பாப்லோ நெரூதாவின் கவிதைகள் ‘ என்ற பெருந்திரட்டு தீர்வளித்தது.

அறுநூறு கவிதைகள் கொண்ட அந்தத் திரட்டு காலவரிசைப்படி தொகுக்கப்பட்டது.

அந்த அமைப்புமுறையையே இங்கு விசுவாசத்துடன் பின்பற்றியிருக்கிறேன்.

பதினாறாவது வயதில் நெரூதா வெளியிட்ட ‘அந்தி வெளிச்சம் ‘ முதல் தொகுப்பில்

இடம்பெற்ற – ‘என் கவிதையில் கடவுள்… ‘ கவிதைக்கும் அவரது மறைவுக்குப்

பின் வெளியான ‘தேர்ந்தெடுத்த தோல்விகள் ‘ தொகுப்பிலுள்ள – ‘மாபெரும் மூத்திரக்

குடுக்கை ‘- கவிதைக்கும் இடையில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம்

படர்ந்திருக்கிறது. ஒவ்வொரு கவிதையும் அது எழுதப்பட்டதோ அல்லது அச்சியற்றப்

பட்டதோவான காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது. நெரூதாவின் முக்கியமான

எல்லா தொகுப்புகளிலிருந்தும் கவிதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. எல்லா

உணர்வுநிலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கவிதைகள் இடம்பெறவேண்டும்

என்ற கனவு ஓரளவுக்கேனும் நிறைவேற்றப்பட்டிருப்பதாக நம்புகிறேன்.

இந்த மொழிபெயர்ப்பில் பின்பற்றப்பட்டுள்ள நியதிகளைக் குறித்து இங்கே

பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

எளிமையான மொழிபெயர்ப்பாக அமையவேண்டும் என்பதை முதல் நிபந்தனை

யாகக் கருதினேன். பாப்லோ நெரூதா மக்களுக்காக எழுதியவர். மந்திரம் போலவோ

அனிச்சையான எதிர்வினைக்குரலாகவோ மக்களால் உச்சரிக்கப்பட்டவை அவரது

கவிதைகள். அவை புரிந்துகொள்ள முடியாதவையாக இருப்பது சாத்தியமில்லை.

எனவே மொழியாக்கமும் எளிமையாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

நெரூதாவின் பல கவிதைகள் பாடலின் தன்மைகொண்டவை. அவரே பல

கவிதைகளை இசைக்கருவிகளின் பக்கத்துணையோடு பாடியிருப்பதை ஒலிப்பதிவுகளில்

கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. வரிகளின் இட அமைப்பு பற்றிய தடுமாற்றங்களைக்

கைவிட இந்த ஒலிப்பதிவுகள் உதவியாக இருந்தன. பாடல்கள் என்று குறிப்பிட்டாலும்

அவை செறிவாகவும் சந்த ஒழுங்குடனும் தாளக்கட்டுடனும் கறாராக உருவாக்கப்

பட்டவையல்ல. காற்றின் இயல்பான ரீங்காரம்போலவோ நதியின் தொடர்ச்சியான

சலசலப்புப்போலவோ தன்னை மறந்து ஒருவன் பாடுவதுபோலவோ அமைந்தவை.

அவற்றுக்கு ஒலியின்பத்தையும் பின்னணி வலுவையும் தருவதாக இசைக்கருவிகள்

செயல்படுகின்றன. நீட்டி ஒலிக்கப்படும் உரைநடை என்பது பொருந்தும். எனவே

இந்த மொழிபெயர்ப்பில் கவிதையின் செறிவைவிட உரைநடையின் இலகுத்தன்மையே

முதன்மையாகிறது.

முன்னர் குறிப்பிட்ட அலாஸ்டெய்ர் ரீய்டின் கடித வாசகங்கள்தாம் இந்த

மொழிபெயர்ப்பின் மையமான கோட்பாடு. பாப்லோ நெரூதாவை பாரிஸ் உட்படப்

ப்ல இடங்களிலும் சந்தித்து ஆழமான நட்புக்கொண்டவர் ரீய்ட். நெரூதா கவிதைகளை

மொழிபெயர்க்கும் திட்டத்தை முன்வைத்தபோது ரீய்டுக்கு அவர் வழங்கிய

யோசனை, ‘ ‘ என் கவிதைகளை வெறுமனே மொழிபெயர்க்காதீர்கள். நீங்கள் அவற்றை

மேம்படுத்தவேண்டும் என்பதுதான் என் விருப்பம் ‘ ‘ என்பது. இதே வரிகளைத்தான்

ரீய்ட் எனக்கும் அறிவுரையாகக் குறிப்பிட்டிருந்தார். இது வரம்பற்ற சுதந்திரத்தையும்

அபரிமிதமான பொறுப்புணர்வையும் வலியுறுத்தியதை இந்த மொழிபெயர்ப்பில்

அனுபவித்திருக்கிறேன்.

கவிதைக்கலையின் எல்லாவிதமான கூறுகளாலும் நிறைவு செய்யப்பட்ட

படைப்பு மனம் நெரூதாவுடையது.படிமம், உவமை, உருவகம், தற்குறிப்பு, முழக்கம்,

கூறியது கூறல், சிறிய வரிகள், நீண்ட வரிகள்,அதர்க்கமான கற்பனைகள் என

கவிதைக்கான சகல அம்சங்களையும் அவர் தயக்கமின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் கலாச்சாரக் குறிப்பீடுகளையும், நாட்டார் கவிதை,

கலைவடிவங்களின் அடையாளங்களையும் தாராளமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

இவை கவிதை வாசகனுக்கு பரவசம்.மொழிபெயர்ப்பில் ஈடுபடுபவனுக்கு சங்கடம்.

இந்த சங்கட முனைகளில் மட்டும் மொழிபெயர்ப்பாளனின் சுதந்திரம் அல்லது

அத்துமீறலை மேற்கொண்டிருக்கிறேன். அது கவிதையை ‘மேம்படுத்துவதற்காக ‘.

ஒரு பொருளைச் சார்ந்து பல படிமங்களையும் பல அடுக்குகளையும் உருவாக்குவது

நெரூதாவின் பிரத்தியேக இயல்பு. கவிதையை மொத்தமாக வாசிக்கும்போது

இது நெருடலாக இருப்பதில்லை. ஆனால் வரிகள் சார்ந்து முன்னேறும்போது இது

தடையாக மாறுகிறது. இந்த இடங்களில் வரிகளைப் பிரித்தும் தெளிவுக்காக சொற்கள்

அல்லது வரிகளைச் சேர்த்தும் மொழிபெயர்ப்பை அமைத்திருக்கிறேன். எனினும்

இந்த மொழிபெயர்ப்பின் அடிப்படையில் மீறக்கூடாத விதிகளாகக் கருதியவை

ஒன்று: கவிஞனின் மனோதளத்திலிருந்து ஒருபோதும் விலகக்கூடாது. இரண்டு:

வாசிப்புத்தன்மையுள்ளதாக இருக்கவேண்டும். இரண்டு விதிகளுக்கும் கீழ்ப்படிந்திருப்-

பதாகவே தோன்றுகிறது. தமிழ் வாசிப்புக்கு உதவும் நோக்கில் சில தலைப்புகள்

மாற்றப்பட்டுள்ளன. ஒரு பொருளையோ நபரையோ முன்னிருத்திப் பாடப்படும்

புகழ்ப்பாடலான ‘ஓட் ‘ (Ode) பாடல் என்றே கையாளப்பட்டிருக்கிறது. இந்த

நூறு கவிதைகளில் ஒன்றுக்கு மட்டும் புதிய தலைப்பு இடப்பட்டிருக்கிறது. நெரூதாவின்

மறைவுக்குப் பின் வெளியான கவிதைகளில் ஒன்றான ‘தி கிரேட் யூரினேட்டர் ‘

(The Great Urinator) ‘மூத்திரக்குடுக்கை ‘யாகியிருக்கிறது. ஆத்திரக்குடுக்கை என்ற

பொதுவழக்கிலிருந்து உருவாக்கபட்ட சொற்சேர்க்கை அது.

இந்த மொழிபெயர்ப்புகளில் சில அவ்வப்போது சிற்றேடுகளில் வெளியாகி

உள்ளன.பாப்லோ நெரூதா நூற்றாண்டையொட்டி நண்பர் மனோன்மணி பதினான்கு

கவிதைகளை ‘புது எழுத்து ‘ சார்பில் தனி வெளியீடாகக் கொண்டுவந்தார்.அவருக்கு

நன்றி. நெரூதா கவிதைகளின் மொழிபெயர்ப்பைத் தொகுப்பாக வெளியிட முன்னரே

நண்பர்கள் சிலர் ஆர்வம் கொண்டிருந்தனர். அறுபத்தொன்பது கவிதைகள் என்ற

நிலையில் தயாரித்து வைத்திருந்த கைப்பிரதி வெவ்வேறு நண்பர்களிடம் வெவ்வேறு

சந்தர்ப்பங்களில் தங்கி இளைப்பாறியது. அந்தத் தருணங்களில் அவர்கள் காட்டிய

உற்சாகம் இந்தப் பெருந்திரட்டுக்காகப் பணியாற்ற உந்துதலாகவுமிருந்தது. இந்த

எண்ணிக்கையை நூறாக்கியதும் என் ஆசையைப் பேராசையாக்கியதும் தொடர்ந்து

ஊக்கமளித்து தொகுப்பைச் சாத்தியமாக்கியதும் நண்பர் மனுஷ்ய புத்திரன்தான்.

அவருக்கு நன்றி தெரிவிப்பது மரபு சார்ந்த மரியாதைக்கும் அப்பாற்பட்டது.

பாப்லோ நெரூதாவின் கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறும் பொருள்களில்

கடலும் ஒன்று. அவரது கவிதையாக்கங்களையும் கடலுடன் ஒப்பிடலாம். ஓயாத

அலைப் பெருக்கு. அறிந்தாலும் மிஞ்சியிருக்கும் மர்மங்கள். அபாரமாக விரிந்து

கிடக்கும் நீர் வெளி. ஒளியையும் இருளையும் அடக்கிக்கொள்ளும் சாதுரியம்.

ரெளத்திர முழக்கங்கள். ரகசிய இசை. தனிமை. ஆர்ப்பரிப்பு. காலத்தைப்

புறம் தள்ளும் நிரந்தரம். முடிவற்ற வசீகரம் – இந்தக் கடற் குணங்களையெல்லாம்

நெரூதாவின் கவிதைகளில் காணநேர்ந்தது என்று குறிப்பிட்டால் அது மிகையல்ல.

கண்குளிரக் கண்ட பிறகும் கடல் நமக்குள் மிச்சமாக்கும் ஏக்கத்தை இந்த மொழி-

யாக்கம் எனக்குள் அலையவிட்டிருக்கிறது. ‘இதற்குள் தண்ணீர் மிகப் பழையதாகி

விட்டது; அதனாலேயே புதிதாகி விட்டது ‘ என்பது நெரூதாவின் ‘குளிர்காலத்துடன்

சந்திப்பு ‘ கவிதையில் வரும் ஒரு வரி. இந்த மொழிபெயர்ப்புப் பற்றிச் சொல்ல

விரும்புவதும் இந்த வரிதான்.

திருவனந்தபுரம் சுகுமாரன்

14 டிசம்பர் 2004

(பாப்லோ நெரூதா கவிதைகள் – தமிழில்: சுகுமாரன்

வெளியீடு:

உயிர்மை பதிப்பகம்

11/29 சுப்ரமணியம் தெரு

அபிராமபுரம்

சென்னை 600 018

விலை.ரூ 120/-

மின்னஞ்சல்: uyirmmai@yahoo.co.in)

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்