மெய்மையின் மயக்கம்-30

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

வாழ்க்கையின் கேள்விகள் : அதிகாரம்-15

வேகமாக நீங்கள் நடந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் முன்னால் இரண்டு கரங்கள் நீள்கின்றன. ஏறிட்டுப் பார்க்கிறீர்கள். கையில் ஒரு சிறுமியை ஏந்திய வண்ணம் பிட்சைக் காரி ஒருத்தி உங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கிறாள்.

பரிதாபமான இரண்டு முகங்கள்! அவர்களைக் கண்ட உடன் உங்கள் மனத்தில் ஏதோ ஓர் எரிச்சல் ஏற்படுகிறது. எனினும், நீங்கள் இரக்கப் படுகிறீர்கள். ஐந்து காசு நாணயத்தை அவளிடம் வீசி எறிந்து விட்டு நீங்கள் செல்கிறீர்கள்.

அவள் யாரோ, நீங்கள் யாரோ! அவளைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. எனினும், அவளுக்காக நீங்கள் இரக்கப் படுகிறீர்கள். ஏன் ? அவளைப் பார்த்து உங்களுக்கு ஏன் எரிச்சல் அல்லது இரக்கம் ஏற்பட வேண்டும் ?

பழனி மலையின் படிகளிலே நீங்கள் ஏறிக் கொண்டு இருக்கிறீர்கள். பழனி ஆண்டவரைத் தெரிசிப்பதற்காக அங்கே நீங்கள் செல்ல வில்லை. இயற்கையின் வனப்பில் இதயத்தைச் சற்றே பறி கொடுத்து விட்டு வரலாம் என்னும் நினைப்பில் படிகளின் மேல் நீங்கள் நடக்கிறீர்கள்.

எங்கு எங்கோ நோக்கியவாறே நடந்து கொண்டு இருந்த உங்கள் முன்னே திடிர் என்று மயில் தோகை ஒன்று தோன்றி உங்கள் தலையில் சாய்கிறது. தோகையை விலக்கியவாறு ஏறெடுத்து நீங்கள் பார்க்கிறீர்கள். உங்கள் நெஞ்சம் திடுக்கிடுகிறது. கொடுரமான ஒன்றைக் கண்டு விட்ட பதற்றம் மேலெழ, உங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கின்ற மனித உருவத்தை மீண்டும் ஒரு முறை நீங்கள் நோக்குகிறீர்கள்.

ஒரு கன்னத்தைத் துளைத்து மறு கன்னத்தின் வழியாக வெளியே நீட்டிக் கொண்டு இருக்கின்ற கத்தியோடு அந்த மனிதன் நின்று கொண்டு இருக்கிறான். கன்னங்களைத் துளைத்த கத்தி, நாக்கை அழுத்தி வாயை அசைய விடாமல் நிறைத்து இருக்கிறது. ஒரு கையில் மயில் தோகை; மறு கையில் பிட்சைப் பாத்திரம்!

நீங்கள் பயந்து போய் விட்டதைக் கண்ட அவன், ‘சென்று வாருங்கள் ‘ எனத் தோகையைக் காட்டிப் பரிதாபத்தோடு உங்களுக்கு வழி காட்டுகிறான். மெல்ல நீங்கள் நகர்கிறீர்கள்!

திகைப்பு இன்னமும் மாற வில்லை; திடுக்கிட்ட உணர்ச்சியும் உங்களை விட்டு நீங்க வில்லை. மன உளைச்சலோடு மேலே நீங்கள் நடக்கிறீர்கள்.

அவன் யாரோ, நீங்கள் யாரோ! எனினும், உங்கள் உள்ளத்தில் ஒரு கலக்கம்! ஏன் ? அவனுக்காக உங்கள் உள்ளம் ஏன் கலங்க வேண்டும் ? ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி உங்களை வந்து சூழ்ந்து கொள்கிறதே, எதற்காக ?

பேருந்தில் பயணம் போய்க் கொண்டு இருக்கிறீர்கள். உள்ளே எத்தனையோ பெண்கள் அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும், ஒரே ஒரு பெண்ணை மட்டும் அடிக்கடி நீங்கள் ‘முறைத்து ‘ப் பார்க்கிறீர்கள். அவள் நாணுகிறாள்; உங்களுக்கு உள்ளேயே நீங்கள் சிரித்துக் கொள்ளுகிறீர்கள். உங்களின் கள்ளப் புன்னகையால் அவளது கன்னங்கள் சிவக்கின்றன.

நீங்கள் யாரோ, அவள் யாரோ! எனினும் ‘செம்புலப் பெயல் நீர் போல, அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே ‘ என்கிறார்களே, அப்படி, உங்கள் நோக்கங்கள் இணைகின்றன. அவள் மீது மையல் கொண்டு நீங்கள் நிற்பதும் உங்கள் மீது மையல் கொண்டு அவள் மயங்குவதும், உங்கள் இருவருக்கும் புரிகின்றன.

அவளோடு அளவளாவிட வேண்டும் என உங்கள் இதயம் துடிக்கிறது. உங்களோடு அளவளாவிட வேண்டும் என அவள் நெஞ்சம் கசிகிறது. எனினும், நீங்கள் தயங்குகிறீர்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்னரும் கூட, தயங்கி, மயங்கி, பயந்து, குழம்பித் தவிக்கிறீர்கள்.

இறுதியில், நினைவுகளைக் கனவுகள் ஆக்கிக் கனவுகளில் அவள் நினைவுகளை ஏற்றித் தனிமையில் நீங்கள் வாடுகிறீர்கள். உங்கள் ‘ஆண்மை ‘யை ஒரு கணம் நசுக்கிப் பிழிந்து விட்ட அந்தத் திறல் ஏது ? ‘ஆண் சிங்கம் ‘ ஆன நீங்கள் கோழை ஆகிப் போனதற்குக் காரணம் என்ன ? உங்களுக்கு ஏன் இத் துணைத் தயக்கம் ?

திரைப் படத்திற்குச் சென்று விட்டு நீங்கள் வீடு திரும்புகிறீர்கள். உங்கள் கண்களை விட்டுப் படத்தின் நிகழ்ச்சிகள் அகல வில்லை. உங்களைக் கவர்ந்து விட்ட ஒரு படம் அது. ‘கலைப் படம் ‘ என்று அதனை நீங்கள் வருணிக்கிறீர்கள்! ‘மெய்மையிசம் ‘ என வாதிக்கிறீர்கள்! அந்தப் படத்தைப் போய்ப் பாருங்கள் என உங்கள் நண்பர்களிடம் எல்லாம் நீங்கள் வேண்டுகோள் விடுக்கிறீர்கள்.

யாரோ தயாரித்த படம் அது! நூறு நாள் அது ஓடுவதால் உங்களுக்கு எந்த ஆதாயமும் வந்து விடப் போவது இல்லை. எனினும், ஆதாயம் எல்லாம் உங்களுக்குத்தான் கிடைத்திடப் போகிறது என்பது போல, போகும் இடம் எல்லாம் அந்தப் படத்தை நீங்கள் விளம்பரப் படுத்துகிறீர்கள். ஏன் ? அந்தப் படத்தின் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை ?

கதை நாயகன் கண்ணீர் வடித்தால் மன நிறைவோடு அதனை நீங்கள் சுவனித்து விடுகிறீர்களே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வடிக்கின்ற கண்ணீர் அல்லவா, அது!

சங்கடங்களுக்குள் கதைப் பாத்திரங்கள் மாட்டிக் கொண்டால், அதைப் பார்த்து விழுந்து விழுந்து நீங்கள் சிரிக்கிறீர்களே, அந்தச் சங்கடங்கள் உங்கள் வாழ்க்கையின் சங்கடங்கள் இல்லையா ?

பின்னர் ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள் ? உங்கள் துயரங்களை வாழ்க்கையில் சுவனித்திட முடியாத நீங்கள், கலை வடிவத்தில் மட்டும் சுவனித்து மனம் நிறைந்து விடுகிறீர்களே, ஏன் ? உங்களூக்கு என்ன, பைத்தியமா ?

ஆத்திரப் பட முயல்கிறீர்கள்—-கேள்வியின் விதத்தைக் கண்டு! ஆனால், ஆழமாக நாம் ஆய்ந்து பார்ப்போம் என்றால், நாம் நடத்துகின்ற வாழ்க்கையும் அதைப் பற்றி நாம் கொண்டு இருக்கின்ற கருத்துகளும் பைத்தியக் காரத் தனத்தில் இருந்து பெரிதும் வேறு பட்டவை அல்ல என்பது நமக்குத் தெரிய வரும்.

சமுதாயமாகத்தான் எப் பொழுதும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆனால், கூட்டம் கூட்டமாக வாழ்கிறார்கள் என்பதால் மட்டும் மனித வாழ்க்கையைச் சமுதாய வாழ்க்கை என்று நாம் வரையறுத்து விடுவது இல்லை.

சுய-உணர்மை பெற்ற தனி மனிதர்கள்தாம் சமுதாய மனிதர்கள் என்பதாலும் இந்தத் தனி மனிதர்களின் உறவுகளாகத்தாம் கூடி வாழ்கின்ற வாழ்க்கை நிலவுகிறது என்பதாலும், மேலும், இந்த உறவுகளை இயக்குகின்ற சாதனமாகத் தனி ஆட்களின் நோக்கங்கள்தாம் நிலவுகின்றன என்பதாலும் மட்டும்தான், மனித வாழ்க்கையைச் சமுதாய வாழ்க்கை என்று நாம் அழைக்கிறோம்.

அப்படி என்றால், பிற மனிதர்களின் நோக்கங்களோடு தனது நோக்கத்தை ஒரு மனிதன் ஒப்ப வைக்கின்ற, அல்லது, பிற மனிதர்களில் தன்னை ஒருவன் மெய்மைப் படுத்திக் கொள்ளுகின்ற, ஒரு நடவடிக்கையின் வெளிப்பாடுதான் உறவு என்பது தெளிவு. எனவே, வேறு ஒரு மனிதனில் தன்னை ஒரு மனிதன் மெய்மைப் படுத்திக் கொள்ளுகின்ற—-அந்தப் பிறிது ஒரு மனிதன் அந்த மெய்மைப் பாட்டிற்கு வெளிப்பாடு நல்குகின்ற—-நடவடிக்கை இந்த உறவுக்கு அடியில் ஒளிந்து கிடக்கிறது என்று பொருள்.

உடல் ஆற்றல் படைத்தவன் மட்டும் அல்லன் மனிதன்; சிந்தனை ஆற்றலும் கொண்டவன்; அதாவது, சுய-உணர்மை கொண்டவன்! மனிதனின் நோக்கம், நடவடிக்கை, இவற்றின் சூழ் நிலைகள், ஆகியவை பற்றிய அறிவின் ஒரு வெளிப் பாடாக இந்தச் சுய-உணர்மை என்பது விளங்குகிறது.

ஆக, விடுதலையான உணர்மையும் விடுதலையான நடவடிக்கையும் மனிதனின் இயல்புகள், அல்லது, சாரமான ஆற்றல்கள்! உற்பத்தி என்னும் பொதுவான நோக்கத்தினை நிறைவேற்றிடும் பணியில் இந்த ஆற்றல்களை மனிதன் ஈடு படுத்துகிறான்.

அப்படி என்றால், எந்த நோக்கத்தினாலும் உணர்மையினாலும் எனது சுயமை ஆக்கப் பட்டு இருக்கிறதோ, அதே நோக்கத்தினாலும் உணர்மையினாலும்தாம் பிற மனிதர்களின் சுயமையும் ஆக்கப் பட்டு இருக்கிறது என்று பொருள். ஏனென்றால், மனிதர்களின் பொதுவான தனிச் சிறந்த நோக்கம்தான் உற்பத்தி நோக்கம்!

இப்படி, எல்லா மனிதர்களினது சுயமையும் ஒரே தன்மை வாய்ந்ததாக நிலவிடுவதால், ஒருவரின் சுயமையினை மற்றவர்களின் சுயமையில்—-யாரும் தமது சுயமையினை விட்டுக் கொடுத்திட வேண்டிய அவசியம் இல்லாமல்—-மெய்மைப் படுத்திக் கொள்ள முடிகிறது.

ஆக, மனிதர்களின் சமுதாய உறவுகள் அனைத்தும் சுயமைகளின் மெய்மைப்பாடுகளாக நிலவுகின்றன என்பது தெளிவு. இந்த மெய்மைப்பாடுகளின் வெளிப்பாடுகள்தாம் மனிதர்களின் சமுதாய நடவடிக்கைகள்! மேலும், எங்கு எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ, அங்கு எல்லாம் தமது சுயமையினை மெய்மைப் படுத்திட மனிதர்கள் முயல்வதும் மனித இயல்பிற்குத் தவிர்த்திட முடியாதது.

இயற்கையோடு தொடுக்கப் படுகின்ற இடை விடாத ஒரு போராட்டமாகத்தான் மனித வாழ்க்கை நிலவுகிறது என்பதாலும் எந்த ஒரு தனி மனிதனுக்கும் இத் தகையது ஒரு திறல் இல்லை என்பதாலும், சமுதாய உறவுகளை மனிதன் விழைகிறான். இந்த உறவுகளில், தனக்கு மற்றவர்கள் வழங்குகின்ற ஒப்பளிப்பினை ஒவ்வொரு மனிதனும் காண்கிறான்; அதாவது, சமுதாய உறவுகளில், தன்னைப் பற்றிய ஓர் ஒப்புறுதியினை, மற்றவர்களிடம் மனிதன் காண்கிறான். தனது சமுதாய நிலைநிற்பினைப் பற்றிய நம்பிக்கையையும் வாழ்க்கையினையும் மனிதனுக்கு இந்த ஒப்பளிப்பும் ஒப்புறுதியும் வழங்குகின்றன.

அப்படி என்றால், மற்றவர்களில் தனது சுயமையினை மனிதன் மெய்மைப் படுத்திக் கொள்வதும், அதன் மூலம், மற்றவர்களில் தன்னைப் பற்றிய ஒப்பளிப்பினையும் ஒப்புறுதியினையும் வாழ்க்கை நடவடிக்கைகளின் மூலமாகப் பெற்றுக் கொள்வதும், மனிதனின் சமுதாய இயல்புகள் என்பது தெளிவு. நோக்கங்கள் ஒத்து இருக்கும் என்றால், உறவுகளில் முரண்பாடுகள், அல்லது பிணக்கங்கள் எதுவும் இன்றி மனிதனின் சமுதாய வாழ்க்கை நடைபெற்றிடவும் முடிகிறது. பொதுப் படையான மனித இயல்பின் குணவரைகள் இவை.

ஆனால், நாம் வாழ்ந்து கொண்டு வருகின்ற இந்த முதலாண்மைச் சமுதாயத்திலோ, மனிதர்கள் இடையே வெளிப் படையான ஒரு பொதுவான நோக்கம் எதுவும் இல்லை. மனிதர்களுக்கு எல்லாம் பொதுவான உற்பத்தி நோக்கம் என்பது, முதலின் இயக்கத்தினுள் அமிழ்ந்து உள்ளடங்கிப் போய், ஆதாய நோக்கம், கூலி நோக்கம், என்கின்ற நோக்கங்களாகத் திண்மை நிலையில் இன்று வெளிப் பட்டுக் கொண்டு வருவதால், உண்மமான திண்மைத் தன்மையில், மனித இயல்பான ஒரு வாழ்க்கையாக இல்லாமல், பண இயல்பான ஓர் உடனடி வாழ்க்கையாக—-ஓர் அவசர வாழ்க்கையாக

—-மனித வாழ்க்கை இன்று மாறிப் போய்க் கிடக்கிறது.

அதாவது, பண முறையான ஒரு சுயமையாக, மனிதனின் உணர்மை முறையான சுயமை இன்று அயன்மைப் பட்டுக் கிடப்பதால், மனிதர்களில் அல்லாமல் பணத்தில்—-பணம் படைத்தவர்கள் இடத்தில்—-தன்னை இன்று மனிதன் மெய்மைப் படுத்திக் கொள்கிறான்; ஒப்பளிப்பினையும் ஒப்புறுதியினையும் பெறுகிறான்.

இப்படி, பண நோக்கத்தில் மட்டும்—-கை மாற்று நடவடிக்கையில் மட்டும்—-கைமாறு கருதுகின்ற கடப்பாட்டில் மட்டும்—-உங்களை மெய்மைப் படுத்திக் கொள்கின்ற நீங்கள், இந்த நிலவரங்களை எல்லாம் சற்றும் பொருட் படுத்தாமல் கை நீட்டி நிற்கின்ற பிட்சைக் காரனைக் கண்டு எரிச்சல் அடைவதில் வியப்பு என்ன ?

மனிதர்களின் சமன்மை உறவினைக் கைமாற்று உறவில் மட்டும் காண்கின்ற இந்தச் சமுதாயத்தில், இலவசம் வேண்டிக் கை நீட்டுவது இழிவு என்றால், அந்த இழிவான நோக்கத்திற்கு ஒப்பளித்துப் பிட்சை வழங்குவதும் இழிவான செயல்தான் ஆகும். இரப்பது இழிவு என்றால், ஈவது மட்டும் எப்படிப் பெருமை ஆகி விடும் ?

ஆனால், இரப்பதை இழிவு என்று எண்ணிப் பிட்சைக் காரர்களைத் தங்களில் மெய்மைப் படுத்திட விடாத பிடிவாதக் காரர்கள், தனிமைப் பட்டுப் போகின்ற வறட்டுக் கவுரவம் கொண்டவர்கள் ஆகிறார்கள்; துறவுப் பான்மை வாய்ந்தவர்களாக நிலவுகிறார்கள். ஏனென்றால், எந்த முதல் மயச் சமுதாயத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ, அந்தச் சமுதாயத்தின் அங்கம்தான் இரக்கின்ற இழி செயல் என்னும் உண்மையினை வறட்டுத் தனமாக மூடி மறைத்திட அவர்கள் முயல்கிறார்கள்.

பிட்சைப் போட்டுக் கருணையைக் காட்டி விடுவதாகக் கருதுகின்ற நீங்களோ, இழிந்த ஒரு சமுதாயம்தான் இந்தச் சமுதாயம் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். எனவே, இழிவான செயலைக் கூட, உங்களில் மற்றவர்கள் மெய்மைப் படுத்திட நீங்கள் அனுமதிக்கிறீர்கள்; உங்கள் சமுதாயத்தின் அங்கமாக அவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்கள்.

திருடர்களைப் பற்றி இங்கு நாம் பேச வேண்டியதே இல்லை. ஏனென்றால், உங்கள் ஒப்பளிப்பிற்காகக் காத்துக் கொண்டு அவர்கள் இருப்பது இல்லை. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களில் தங்களைப் பலவந்தமாக அவர்கள் மெய்மைப் படுத்திக் கொள்ளுகிறார்கள், அவ்வளவுதான்!

ஆனால், பிட்சை போடுகின்ற கருணை வள்ளலாக நீங்கள் இருந்தாலும் சரி, அல்லது பிட்சை போடுவதை எதிர்த்துச் சொற் பொழிவு ஆற்றிக் கொண்டு வருகின்ற வறட்டுப் போதகராக நீங்கள் இருந்தாலும் சரி, முதலின் இரும்புப் பிடியினுள் நீங்கள் மாட்டிக் கொண்டு இருக்கின்ற வரை—-அதனை அழித்து ஒழிக்கின்ற பணிகளில் இறங்காத வரை—-இரண்டும் ஒன்றுதான்!

ஏனென்றால், மனித இயல்பு அயன்மைப் பட்டுக் கிடக்கின்ற ஒரு பண இயல்பான வாழ்க்கையினை எந்தக் கவலையும் இல்லாமல் அவசரமாக நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்!

பழனி மலைப் பக்தனின் கொடுரத் தோற்றத்தைக் கண்டு நீங்கள் திடுக்கிட்டார்களே, அந்த மனிதன் இடத்தில் நீங்கள் கண்ட கொடுரத்தால் உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அல்ல அது! உங்கள் உள்ளத்திற்கு நீங்கள் சார்த்தி இருந்த பண்பு என்னும் திரையை, அவனது கன்னம் துளைத்த கத்தியினால் கீறி எறிந்து, உங்கள் உள்ளத்தின் கொடுரத்தை உங்களுக்கே அவன் அம்பலப் படுத்திக் காட்டி விட்டதால் உங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிதான் அது! உங்கள் நெஞ்சத்தின் கொடுரத் தன்மையினைக் கண்டு நீங்களே கதி கலங்கிப் போன பயம்தான், அந்தப் பயம்!

தனது கன்னத்தைக் கத்தியால் துளைத்து அவன் சிதைத்த பொழுது, அகம் காட்டும் கண்ணாடியான முகத்தை அவன் அலங்கோலப் படுத்திய பொழுது, தான் நம்பிய பகவன் இடத்தில் மட்டும் அல்ல, உங்கள் இடத்திலும் அவன் கூறினான்:

‘ஏ! இதயம் அற்ற பிறவிகளே, உங்களைப் போல் நானும் ஒரு மனிதன்; உங்கள் சமுதாயத்தில் நானும் ஒரு குடி மகன். உங்களைப் போல் என்னால் படித்துப் பட்டம் பெற்றிட முடிய வில்லை என்றால், உங்களைப் போன்ற பண்புகளை என்னால் வளர்த்துக் கொள்ள முடிய வில்லை என்றால், வளமைக்கு இடையே வறுமையையும் தாண்டவம் ஆட விட்ட உங்கள் சமுதாய நிலவரங்கள்தாம் அதற்குக் காரணம்! உங்களைப் போல் என்னால் வாழ்ந்திட முடிய வில்லை என்றால், அதற்கு நீங்கள்தாம் காரணம்!

எனது அலங்கோலம், உங்கள் சமுதாயத்தின் அலங்கோலம்; எனது வறுமை, எனக்கு நீங்கள் இழைத்த கொடுமை; கத்தி துளைத்த எனது முகத்தின் பயங்கரம், உங்கள் நெஞ்சத்தின் பயங்கரம்!

பண்பு தெரிந்தவர்களே, பாசம் பேசுகிறவர்களே, யாரிடம் நாடகம் ஆடுகிறீர்கள் ? நீங்கள் யார் தெரியுமா ? உங்கள் குணம் என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா ? இதோ, என்னைப் பாருங்கள்! என் முகத்தைப் பாருங்கள்! சிதைந்து போன என் முகத்தின் கொடுரத்தைப் பாருங்கள்! இந்தக் கொடுரம், உங்கள் இதயத்தின் கொடுரம்!

இதோ! உங்கள் கோலத்தை நான் அம்பலப் படுத்துகிறேன். என்னைப் பாருங்கள்! உங்கள் கொடுரத்தை என்னில் நீங்கள் காணுங்கள்! ‘ என்று உங்களை நோக்கி அவன் கதறினான். உங்கள் பண்புத் திரைகளைக் கிழித்து எறிந்து உங்கள் இதயத்தின் ஆழங்களில் அந்தக் கூக்குரல் எதிர் ஒலித்தது. உங்கள் கொடுரத்தை அவனில் நீங்கள் கண்டார்கள். உங்கள் கொடுரத்தை உணர்ந்த நீங்களே நடு-நடுங்கிப் போய் விட்டார்கள். அவ்வளவு கொடுரமானவரா, நீங்கள்!

ஆனால், பேருந்துப் பயணத்தில் நீங்கள் தத்தளித்த காதலின் கதையோ சற்று மாறு பட்டது. அந்தக் கதையின் ஏடுகளைச் சற்றே நாம் புரட்டுவோமா ?

தன்னியல்பான உழைப்புப் பகுப்பின் காரணமாக, முதலாண்மைச் சமுதாயத்தில், நாம் விரும்புகின்ற விலைக்கு எந்த ஒரு சரக்கினையும் எந்த உற்பத்தியாளரும் விற்று விடுவது இல்லை. இதே போல், தாங்கள் விரும்புகின்ற விலைகளில் சரக்குகளை நுகர்வோர் யாரும் வாங்கி விடுவதும் இல்லை. ஏனென்றால், விருப்பங்கள் அல்லது உணர்மையின் அடிப்படையில் வாங்குவினை, விற்பனை, ஆகிய நடவடிக்கைகள் இங்கே நடைபெறுவது இல்லை. இப்படி, மனிதனின் விருப்பங்களையும் உணர்மையான திட்டங்களையும் மடத் தனம் ஆக்கி விட்டு, இரும்புத் தனமாக முதலின் விதி இங்கு இயங்கிக் கொண்டு இருக்கிறது.

எனவே, கருத்து வயமான விலை ஒன்று என்றால், உண்மமான மெய்மை விலை பிறிது ஒன்றாக இருப்பது, முதலாண்மையின் இயல்பு. நாம் கொள்ள விரும்புகின்ற சமுதாய உறவின் கருத்து வயமான நிலவரம் ஒன்று என்றால், உண்மமான மெய்மை நிலவரம் பிறிது ஒன்றாக இருக்கிறது என்று இதற்குப் பொருள்.

ஆக, உற்பத்தி மற்றும் மறு உற்பத்தி ஆகிய உறவுகளில், மனிதனின் கருத்து வயத் தன்மைக்கும் மெய்மைத் தன்மைக்கும்—-உள்ளுறைந்த தன்மைக்கும் உண்மத் தன்மைக்கும்—-இடையே ஒரு முரண்பாடு நிலவுவதை நாம் காண்கிறோம். மனிதர்களின் அனைத்துச் சமுதாய உறவுகளிலும் இந்த முரண்பாடு செல்வாக்குச் செலுத்துவதால், கருத்து வயமான வாழ்க்கை ஒன்று, மெய்மையான வாழ்க்கை பிறிது ஒன்று, என இரட்டை வாழ்க்கை வாழ்பவனாக மனிதன் இன்று பிளவுண்டு கிடக்கிறான்.

மேலும், உணர்மை முறையாக அன்றி, பணத்தின் மூலமாக மட்டும்தான், சமுதாய உறவுகள் இன்று நிலைநிறுத்தப் பட்டு வருவதால், பணத்தை இன்று மனிதர்கள் நம்புகிறார்களே ஒழிய, மனிதர்களை நம்புவது இல்லை. இப்படி, பருப் பொருள்கள் மூலமாக மட்டும் உறவுகள் இன்று நிலைநிறுத்தப் பட்டு வருவதால், பருமை வயமான—-பருப் பொருள் இயல்பான—-உணர்மை மட்டும்தான், சமுதாய உறவுகளில் இன்று கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. எனவே, உள்ளடங்கிப் போன ஒரு நுண்மைத் தன்மையினைப் பெற்று, மனித இயல்பான உணர்மை இன்று நசிந்து போய்க் கிடக்கிறது.

இப்படி, மனித இயல்பான உணர்மை மரத்துப் போய் விடுவதால்தான், கபடத் தனம் கொண்டவனாகவும் வஞ்சம், பொய், நிறைந்தவனாகவும் மனிதனால் இன்று வாழ்ந்திட முடிகிறது. உறவுகளை நிலைநிறுத்துகின்ற பருப் பொருள்கள், மனிதனின் இத் தகைய குணங்களை வெளிப் படுத்திட முடியாதவை என்பதால், நமது கபடங்களை மூடி மறைத்திடவும் நம்மால் முடிகிறது.

எடுத்துக் காட்டாக, உங்கள் மனைவிக்கு நீங்கள் ஒரு சேலை வாங்கித் தருவதாக நாம் வைத்துக் கொள்வோம். சேலையின் மூலம் உங்கள் அன்பு வெளிப் படுத்தப் படுவதாக எண்ணி உங்கள் மனைவி மையல் கொள்ளுகிறார். ஆனால், உங்கள் வெறுப்பினை மூடி மறைக்கின்ற ஒரு சாதனமாக அதனை நீங்கள் பயன் படுத்தி இருக்கலாம். யாரோ இன்னொருத்தி மீது நீங்கள் வைத்து இருக்கின்ற காதல் அம்பலம் ஆகி விடக் கூடாது என்பதற்காக உங்கள் மனைவிக்கு அந்தப் பரிசினை நீங்கள் வழங்கியும் இருக்கலாம்.

ஆக, யாரையும் யாரும் இன்று நம்பிட முடிவது இல்லை. உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமான வாழ்க்கை நமக்குப் பழகிப் போய் விட்டது. இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து வைத்து இருந்த காரணத்தினால்தான், பேருந்தில் அந்தப் பெண்ணைக் கண்டு நீங்கள் பயந்து நடுங்கினீர்கள்.

உங்கள் சுயமையினை அவளில் நீங்கள் மெய்மைப் படுத்திடவும் அவளின் சுயமையினை உங்களில் அவள் மெய்மைப் படுத்திடவும், நீங்கள் இருவரும் தயாராகத்தான் இருந்தீர்கள் என்ற போதிலும், வெறும் காதலால் மட்டும் காதல் வெளிப் படுத்தப் பட்டு உண்மம் பெறுவது இல்லை என்பதால், பணம் முதலியன மட்டும்தாம் தீர்மானமான பாதிப்பினை இதில் ஏற்படுத்துகின்றன என்பதால், ‘ஆண் சிங்கம் ‘ ஆன நீங்கள் அஞ்சினீர்கள்.

ஏனென்றால், வாழ்க்கை உறவுகள் பற்றிய கருத்து வயமான நோக்கங்கள் மற்றும் கணிப்புகளும் வாழ்க்கையின் உண்மமான மெய்மைகளும், அடிக்கடி முரண் பட்டு மோதிக் கொள்ளுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். அதோடு, உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக, ஒரு வஞ்சக வாழ்க்கையினை மனிதர்கள் நடத்துகின்ற ஒரு சமுதாயம் இது என்பதும் உங்களுக்குத் தெரியும்.

அதாவது, உங்கள் வாழ்க்கை நிலவரங்களுக்கு ஈடு கட்டிடக் கூடியதாக அவளுடைய வாழ்க்கை நிலவரங்கள் இருக்குமா, உங்கள் நிலைமைகளால் அவள் நிலைமைகளுக்கு ஈடு கொடுத்திட முடியுமா, இத் தகு நிலைமைப் பிறழ்ச்சனைகள் பற்றிய அவளது கருத்து என்னவாக இருக்கும், இம் மாதிரியான பிறழ்ச்சனைகளுக்கு நடுவே உங்கள் காதல் நிறைவேறிடற்கு வாய்ப்பு ஏதேனும் கிட்டிடுமா, நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்க நிலையில் அவள் இருப்பாளா, அல்லது அவள்தான் உங்களை ஏற்றுக் கொள்வாளா, அவளது கள்ளப் புன்னகையில் ஒரு வேளை கபடத் தனம் ஏதேனும் ஒளிந்து கிடந்திடலாமா, என்று எல்லாம், காதலை மட்டும் நீங்கள் சிந்திக்காமல், வேறு எதை எதையோ கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டுக் கொண்டு இருந்தீர்கள்.

எனவேதான், அவளிடம் உங்களால் பேசிடக் கூட முடிய வில்லை. உங்களைப் போல்தான் அவளும் தடுமாறிக் கொண்டு இருந்தாள் என்பதனால்தான், அவளாலும் உங்களிடம் நெருங்கி வந்திட முடிய வில்லை.

மனித உணர்மை மரத்துப் போய் விட்ட ஒப்புக்கான ஒரு வாழ்க்கையில் காதல் என்ன வேண்டிக் கிடக்கிறது! முதலின் பிடியில் சமுதாய உறவுகள் அனைத்தும் சிக்குண்டு கிடக்கின்ற ஒரு சூழ் நிலையில், காதலை மட்டும் நம்பி உங்கள் அவசர வாழ்க்கையினை எப்படி நீங்கள் நடத்திட முடியும் ?

அன்பே, ஆருயிரே, என்று எல்லாம் வாய் குழைத்து, அரவணைத்து நீங்கள் உவக்கின்ற உங்கள் மனைவியை, அடித்துக் கொன்று விடுவது போன்ற ஆத்திரத்தில் சில சமயங்களில் நீங்கள் நடு-நடுங்க வைத்து விடுகிறீர்கள் என்றால், அவரிடத்து உங்கள் சுயமையினை நீங்கள் மெய்மைப் படுத்திக் கொள்கின்ற வகையில் அவர் நடந்து கொள்ள வில்லை என்பதுதானே அதற்குக் காரணம்! அணைக்கின்ற கரம், காதல் கரம் என்றால், அடிக்கின்ற கரம் எப்படிக் காதல் கரம் ஆகிட முடியும் ?

உங்கள் இடத்துத் தமது சுயமையினை மெய்மைப் படுத்திக் கொள்ள முடியாத போது, உங்கள் மனைவி கண்ணீர் வடிக்கிறாரே, அதற்குப் பெயர் பரிதவிப்பு அல்ல! மாறாக, ஆத்திரம்; வெறுப்பு! இந்த வெறுப்பின் பலவீனமான வெளிப்பாடுகள்தாம் அவர் வடிக்கின்ற கண்ணீரும் வைக்கின்ற ஒப்பாரியும்!

உங்கள் வெறுப்பினை வெளிப் படையாக நீங்கள் காட்டி விடுவது போல, தமது உணர்ச்சிகளை வெளிப் படையாக உங்கள் மனைவியால் காட்டி விட முடிவது இல்லை.

ஏனென்றால், ஆண் ஆதிக்கத்தின் கீழ்ப் பெண்கள் அடிமைப் பட்டுக் கிடக்கின்ற ஒரு சமுதாயம் இது. எனவே, உங்கள் மீது அவர் கொண்டு இருக்கின்ற வெறுப்பினைச் சமையலில் அவர் காட்டுகிறார்; அல்லது, பிற ‘பணி விடை ‘களில் குறை வைத்து வெளிப் படுத்துகிறார். உங்கள் மீது அவர் கொண்டு இருக்கின்ற அன்பின் திசையினைச் சற்றே திருப்பி விடுவதன் மூலம், தமது ஆத்திரத்தினை அவரால் தீர்த்துக் கொள்ளவும் முடிகிறது.

முதலின் காலடியில் மனிதன் அடிமைப் பட்டுக் கிடக்கின்ற ஒரு வாழ்க்கையில், காதலும் கூட அயன்மைப் பட்டு, அடிமைப் பட்டு விடுகிறது என்னும் உண்மையினைத்தான், இம் மாதிரியான எத்தனையோ நிகழ்ச்சிகள் தினமும் நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டு வருகின்றன.

இத் தகு நிலவரங்களினுள் நீங்கள் நசுங்கிக் கிடக்கின்ற காரணத்தினால்தான், உங்களுக்கு மதமும் கலையும் அறிவியலும் தேவைப் படுகின்றன.

உங்கள் கருத்து வயமான நோக்கங்கள் செயல் முறையில் நிறைவேறாமல் போகின்ற பொழுது, கையறு நிலையில் கவல் கொண்டு நீங்கள் தவிக்கிறீர்கள். எதையோ இழந்து விட்ட ஏக்கம் உங்கள் தொண்டையில் விம்மிப் புடைக்க, இனம் தெரியாத எதையோ தேடித் திரிவது போல நீங்கள் அலைகிறீர்கள். உங்களுக்காகவே காத்துக் கிடந்த ஒரு பாவனையில், இரு கரம் நீட்டி உங்களை மதம் வரவேற்கிறது.

மறு புறத்திலோ, உங்கள் விருப்பம் இல்லாமலே உங்கள் மீது திணிக்கப் படுகின்ற இந்த வாழ்க்கையினையும், எப்படியேனும் விரும்பி ஏற்றுக் கொண்டு வாழ்ந்து காட்டிடத்தான் நீங்கள் முயல்கிறீர்கள். பல் வேறு வகையான உணர்ச்சிகளை உங்கள் நெஞ்சத்தில் இந்த வாழ்க்கை அனுபவங்கள் உருவாக்கி விடுகின்றன. உங்களுக்கு எனப் பல் வேறு குணங்களையும் நீங்கள் வகுத்துக் கொள்கிறீர்கள். இத் தகைய அயன்மையான உணர்ச்சிகளையும் குணங்களையும் சுமந்து திரிகின்ற நீங்கள், களைத்துச் சோர்ந்து கலங்குகின்ற பொழுது, ஆறுதலாக உங்களைக் கலை வரவேற்கிறது.

அதாவது, அயன்மைப் பாட்டினுள் அமிழ்ந்து போன மனித இயல்பினைக் கடவுளில் கண்டு நீங்கள் ஆறுதல் பெறுவதற்கும் சுய ஏமாற்று மன நிறைவில் நீங்கள் திளைப்பதற்கும், உங்களுக்கு மதம் உதவுகிறது என்றால், உங்களின் மரத்துப் போன உணர்மையினை—-நீங்கள் இழந்தது போக உங்களிடம் எஞ்சி நிற்கின்ற அயன்மையான உங்கள் அனுபவங்களை—-இவ் வனுபவங்களினால் உங்களிடம் உருவாகின்ற உணர்ச்சிகள் மற்றும் குணங்களை—-சமுதாயம் அனைத்திற்கும் பொதுவானவை என்று காட்டி, அதன் மூலம், உங்களது தனிமையான தடுமாற்றங்களைத் தணித்து, நிலவி வருகின்ற சூழ் நிலைகளினோடு நீங்கள் இணங்கி வாழ்வதற்குதான் உங்களுக்குக் கலையும் உதவுகிறது.

நீங்கள் இழந்து விட்ட உங்கள் இயல்புகளுக்காக ஏங்கித் தவிக்கின்ற உங்களுக்கு, செத்த பின்னர் பரலோகத்திலாவது அந்த இயல்புகளை—-ஒருமையான நடவடிக்கை, விடுதலையான உறவு, சுயமையில் அயன்மை நிகழ்ந்திடாத வாழ்க்கை, ஆகியவற்றை—-நீங்கள் பெறுவீர்கள் என்னும் நம்பிக்கையினை ஊட்டி உங்களுக்கு மதம் ஆறுதல் தருகிறது.

துன்பம் நிறைந்ததுதான் மண்ணுலக வாழ்க்கை என்றும் இறைவனின் மீது பாரத்தைப் போட்டு விட்டு மனமார இதனை வாழ்ந்து கழித்து விடுவதுதான் ஞானம் என்றும், இணக்கமான போதனைகளை உங்களுக்கு மதம் நல்குகிறது. இந்த ஞானத்தை நீங்கள் பெற்றிட வேண்டும் என்றால், இந்த உலகத்தை வேறு விதமாக நோக்கி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று, உங்கள் ‘ஊனக் கண் ‘ணுக்குப் பதிலாக ஒரு ‘ஞானக் கண் ‘ணை வேறு உங்கள் மேல் அது பொருத்தி விட்டு விடுகிறது.

எனவே, நீங்கள் இழந்து தவிக்கின்ற உங்களது மனித இயல்புகளைப் பற்றி, நீங்கள் கொண்டு இருக்கின்ற தலை-கீழான, எனவே, மாயமான ஓர் உணர்மைதான் மத உணர்மை என்பது! எனினும், சமுதாய முறையான ஓர் உணர்மைதான் இது.

ஆனால், உங்கள் ‘ஊனக் கண் ‘ணோடு சேர்த்து இன்னொரு ‘கலைக் கண் ‘ணையும் உங்களிடம் பொருத்தி விட்டு விடுகின்ற கலையோ, உங்களது அயன்மையான உணர்ச்சிகள் மற்றும் குணங்களின் நேரடியான மறுபலிப்பினை உள்ளடக்கமாகக் கொண்டு விளங்குவது.

எனவே, உங்கள் தனிப் பட்ட வாழ்க்கை அனுபவங்களின் உணர்ச்சிகளைப் பற்றி, சமுதாய முறையாக நீங்கள் கொண்டு இருக்கின்ற ஒரு ‘குவியாடி மறுபலிப்பு ‘ உணர்மைதான், கலை உணர்மை என்பது ஆகும், உங்கள் உணர்ச்சிகளை நேராக மறுபலித்து நிற்கின்ற உணர்ச்சி கரமான ஓர் உணர்மை இது!

முதலின் இரும்புத் தனமான இயக்கத்தினுள் தன் இயல்புகளை இழந்து, முதலின் இயல்புகளைப் பெற்று வாழுகின்ற மனிதர்களுக்கு, வெவ்வேறு வகையான திண்மையான நோக்கங்கள்! ஏனென்றால், மனித இனத்தின் பொதுவான ஒருமை நோக்கம், முதலின் நோக்கங்களாகப் பன்மையில் இன்று அயன்மைப் பட்டுக் கிடக்கிறது.

இப்படி, வெவ்வேறு வகையான நோக்கங்களைக் கொண்டு, வெவ்வேறு வகையான கனவுகளைச் சுமந்து, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வருகின்ற மனிதர்களுக்கு, வெவ்வேறு வகையான அனுபவங்களை முதல் நல்குகிறது.

மகிழ்ச்சி, ஆரவாரம், துயரம், வெறுப்பு, கோபம், பயம், போன்ற உணர்ச்சிகளை உருவாக்கி விடுகின்ற இந்த அனுபவங்கள், மனித இயல்பான—-விடுதலையான—-அனுபவங்களைத் தேடுகின்ற ஏக்கத்தினையும் மனிதனின் மனத்தில் உருவாக்குவது மட்டும் இன்றி, பொறாமை, கபடம், வயிற்றெரிச்சல், திருட்டு, சதி, போன்ற குணங்களையும் கூடவே உருவாக்கி விடுகின்றன.

அயன்மையான அனுபவங்களைக் கூட தனது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களாக மனிதன் ஏற்றுக் கொள்ளுகிறானே, அந்த அனுபவங்களின் பாற்பட்ட உணர்ச்சிகள் மற்றும் குணங்கள் இவை! இழந்து போன இயல்புகளைப் பற்றிய ஏக்கங்கள் அல்ல!

நீங்கள் ஆரவாரம் கொள்ளுகின்ற பொழுது, மற்றவர்கள் அமைதி கொள்வதை நீங்கள் காண்கிறீர்கள்; உங்களிடம் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விட்டதோ என்று உங்களுக்கு ஐயம் ஏற்படுகிறது. துயரத்தால் நீங்கள் கண்ணீர் உகுக்கின்ற பொழுது, மகிழ்ச்சியால் மற்றவர்கள் பூரிப்பதை நீங்கள் காண்கிறீர்கள்; உங்களுக்கு ஆத்திரமும் அவமானமும் ஏற்படுகின்றன.

நீங்கள் பொய் சொல்லுகின்ற பொழுது, மற்றவர்கள் பொய் சொல்லுவது இல்லையோ என்கின்ற அச்சம் உங்களுக்கு! நீங்கள் கொடுமை புரிகின்ற பொழுது, கொடுமைக் காரர்களாக மற்றவர்கள் இல்லாமல் போய் விடுவார்களோ என்று உங்களுக்கு ஒரு நடுக்கம்!

எனினும், அயன்மை உற்று மரத்துப் போன உங்களது சுயமையினைக் கூட, மற்றவர்கள் இடத்தில் மெய்மைப் படுத்திட நீங்கள் முனைகிறீர்கள். உங்கள் வயிற்றெரிச்சல்கள், கபடங்கள், சதிகள், போன்ற குணங்களையும் துயரங்கள், அச்சங்கள், போன்ற உணர்ச்சிகளையும், பற்றிய ஒப்பளிப்பினையும் ஒப்புறுதியினையும், மற்ற மனிதர்களிடம் இருந்து பெற்றிட நீங்கள் முயல்கிறீர்கள்!

ஆனால், பருப் பொருள் வயப் பட்டுக் கபடம் அடைந்து விட்ட மனிதர்களில், வெளிப் படையாகத் தமது சுயமையினைத் திறந்து காட்டி, உங்களுக்கு மெய்மைப்பாடு நல்கிட யார்தான் முன் வருவர் ?

எனவேதான், கதைப் பாத்திரங்களைத் தேடி நீங்கள் ஓடுகிறீர்கள். உங்கள் அனுபவங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளத் தக்க வகையில், வெளிப் படையாகத் தங்கள் சுயமையினைத் திறந்து காட்டுகின்ற சாதனங்களாக, மனிதர் நிறைந்த இந்தச் சமுதாயத்தில் உங்களுக்குக் கிடைப்பவை, பாவம், கதைப் பாத்திரங்கள்தாம்!

நீங்கள் பார்த்த திரைக் கதையில், கதை நாயகன் கண்ணீர் வடித்த பொழுது, நீங்கள் மட்டும் கண்ணீர் வடிக்க வில்லை; பிற மனிதர்களும் கண்ணீர் வடித்தார்கள். ஏனென்றால், உங்கள் அனைவருக்கும் ஏற்பட்டு இருந்த அனுபவங்கள்தாம் அந்தக் கதை நாயகனின் அனுபவங்கள்!

இப்படி, கதைப் பாத்திரங்களின் மூலமாக, யாருக்கும் தெரியாமல், கரசியமாக, உங்கள் அனுபவங்களை மற்றவர்களோடு நீங்கள் பகிர்ந்து கொண்டு விடுவதாக, நீங்கள் கற்பனை செய்து கொள்ளுகிறீர்கள். இதன் மூலம், வெளிப் படையாக நீங்கள் வெளிப் படுத்திட முடியாத உங்களது குணங்கள் மற்றும் உணர்ச்சிகளுக்கு, சமுதாயத்திடம் இருந்து கரசியமான ஒப்பளிப்பினையும் ஒப்புறுதியினையும் பெற்று விட்டதாக நீங்கள் மனம் நிறைந்து விடுகிறீர்கள். இதனால் உங்களுக்கு ஓர் ஆறுதல்!

ஏனென்றால், உங்களின் சுயமைக்கு மட்டும் இன்றி, மற்றவர்களின் சுயமைக்கும் கூட, மெய்மைப் பாட்டினைக் கதைப் பாத்திரங்கள் நல்கி விடுகின்றன—-கரசியமாக, ஆனால், வெளிப் படையான முறையில்! மாய்மையான இந்தச் சித்து விளையாட்டில், வெளிப் படையாக உங்கள் சுயமை மெய்மைப் படுத்தப் பட்டு விட்டதாக நீங்கள் ஆறுதல் அடைந்து கொள்கிறீர்கள். ஆனால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளுகின்ற ஓர் ஆறுதல்தான் இந்த ஆறுதல் ஆகும்.

சதிகாரப் பாத்திரங்களைக் கூட சுவனித்திட உங்களால் முடிகிறது என்றால், கரசியமான உங்கள் சதிகளை எல்லாம் அவற்றில் நீங்கள் மெய்மைப் படுத்திதான் கொள்கிறீர்கள் என்பது உண்மைதான். ஆனால், அவற்றை வெறுப்பது போன்ற வெளிப் படையான ஒரு பாவனை காட்டி, கரசியமாகத்தான் அவற்றை உங்களால் சுவனித்திட முடிகிறது என்கின்ற பொழுது, வெளிப் படையான ஒரு சமுதாய ஒப்பளிப்பினை, அந்தக் கதைப் பாத்திரங்கள் உங்களுக்கு நல்கி விட்டதாக நீங்கள் கருதிக் கொள்வது ஒரு சுய ஏமாற்று இல்லையா ?

எனினும், கலையை நீங்கள் நாடுகிறீர்கள். ஏனென்றால், அனைவரும் அனுபவிக்கின்ற துயரங்களாக உங்களுடைய துயரங்கள் இருப்பதில், அனைவருக்கும் பொதுவான சங்கடங்களாக உங்கள் சங்கடங்கள் இருப்பதில், உங்கள் வீராவேசங்கள், அவமானங்கள், ஆரவாரங்கள், கபடங்கள், அனைத்தும், மற்றவர்களுக்கும் உரியவைதாம் என்பதில், உங்களுக்கு ஓர் ஆறுதல்!

ஏனென்றால், இவற்றில் எல்லாம் உங்கள் சுயமைக்கு மெய்மைப்பாடு கிடைத்து விட்டதாக நீங்கள் பெருமிதம் அடைகிறீர்கள்; சமுதாய வீதிகளிலே உங்கள் மனச் சுமைகளை இறக்கி வைத்து விட்டது போன்ற ஓர் அமைதியினை நீங்கள் உறுகிறீர்கள்!

ஆனால், மனித இயல்பிற்கு அயன்மையான உங்கள் சுயமையினை—-உங்களின் அயன்மையான உணர்ச்சிகள் மற்றும் குணங்களை—-மற்ற மனிதர்களில் வெளிப் படையாகவே உங்களால் மெய்மைப் படுத்திட முடிந்து இருக்கும் என்றால், கதைப் பாத்திரங்களின்—-கலையின்—-துணையே உங்களுக்குத் தேவைப் பட்டு இருந்து இருக்காது.

ஆக, அயன்மையான உங்கள் சுயமையினையும், மற்றவர்கள் இடத்தில் மெய்மைப் படுத்திட வேண்டும் என்கின்ற உங்கள் தேவைதான், கலையை நோக்கி உங்களை உந்தித் தள்ளுகிறது என்பது தெளிவு.

இந் நிலையில், உங்களுக்கு மட்டும் உரியதாகத் தோன்றுகின்ற ஏதேனும் ஒரு குணம் அல்லது உணர்ச்சி, ஏதேனும் திரைப் பட நாயகனின் அனுபவமாக வெளிப் படுத்தப் படும் என்றால், உடனே நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள். அனைவரும் ஏற்றுக் கொள்ளுகின்ற பொதுவான ஓர் அனுபவமாக அந்த அனுபவத்தை ஆக்கிட வேண்டும் என்னும் ஆவேசத்தில், அந்தத் திரைப் படத்தை விளம்பரப் படுத்திட நீங்கள் முயல்கிறீர்கள்.

ஆனால், அயன்மையான உங்களது சுயமைக்கு மெய்மைப்பாடு நல்குகின்ற வகையில், கதைப் பாத்திரங்களை எந்தக் கதைஞனும் புனைந்திடாமல் இருந்து விடுவான் என்றால், உங்கள் அனுபவங்களின் புதுமையான மாறுதல்களுக்கு ஏற்ற வகையில், புதுமையாகக் கதை எழுதுகின்ற கதைஞர்கள் யாரும் தோன்றாமல் போய் விடுவார்கள் என்றால், உடனே நீங்கள் ஆத்திரப் படுகிறீர்கள்; ஆவேசம் கொள்ளுகிறீர்கள்; கதைஞர்களைக் காட்டமாக விள்ளனிக்கவும் தொடங்கி விடுகிறீர்கள்.

எனினும், நீங்கள் விரும்புவது போன்ற பாத்திரங்களை எந்தக் கதைஞனும் படைத்து விட வில்லை என்பதற்காக, உங்கள் சுயமைக்கு மெய்மைப்பாடு நல்குகின்ற முயற்சிகளை நீங்கள் கைவிட்டு விடுவது இல்லை.

உங்கள் கற்பனைக் கதவுகள் தாமாகத் திறந்து கொள்கின்றன. உங்களை அறியாமலே கனவு உலகினுள் நீங்கள் கால் எடுத்து வைக்கிறீர்கள். இந்தக் கனவுகளில், ஒரு கதைப் பாத்திரமாக உங்களை நீங்களே மாற்றிக் கொள்கிறீர்கள்.

எனினும், உங்கள் கபடத் தனங்களுக்கு எல்லாம் உங்களிடத்தே ஒப்பளித்துக் கொள்ள நீங்கள் விரும்புவது இல்லை என்பதால், நீங்கள் சந்தித்த மனிதர்களின் வடிவில் பல் வேறு வகையான பாத்திரங்களை நீங்கள் படைத்து, பல பாத்திரங்களின் ஒரு தொகுப்பில் உங்கள் சுயமைக்கு ஒரு மெய்மைப் பாட்டினை நீங்கள் நல்கிக் கொள்கிறீர்கள்.

இத் தகு கனவுகளில், நீங்கள்தாம் கதை நாயகர்! உங்களைக் கவர்ந்த மனிதர்களின் குணங்களை எல்லாம் இந்தக் கதை நாயகனுக்கு நீங்கள் சூட்டுகிறீர்கள். வெளியில் சொல்வதற்கு நீங்கள் வெட்கப் படுகின்ற உங்கள் குணங்களை எல்லாம் இந்தப் பாத்திரத்திடம் இருந்து பிரித்து எடுத்து, உங்களுக்குப் பிடிக்காத மனிதர்களின் மீது நீங்கள் சூட்டி விடுகிறீர்கள். இப்படி, ஒரு கதை நாயகனாக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுகிறீர்கள். இதில் உங்களுக்கு ஓர் ஆறுதல்!

ஒரு கலைஞராகவோ அல்லது காட்டமான ஒரு கலை விள்ளனராகவோ நீங்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று இதற்குப் பொருள். குறைந்தது, உங்கள் நண்பர்கள் இடையே ஒரு நகைச் சுவை நாயகராகவாவது நீங்கள் திகழலாம்.

ஆக, அனைவருக்கும் பொதுவான அனுபவங்களாக, உங்கள் சொந்த அனுபவங்களை, உங்களுக்கு அடையாளம் காட்டி விடுவதன் மூலம், இந்த நிலவரங்களோடு நீங்கள் இணங்கி வாழ்வதற்கு, உங்களுக்குக் கலை உதவுகிறது என்பது தெளிவு.

எனவே, நிலவி வருகின்ற நிலவரங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அல்ல, எதிர்ப்பு உணர்ச்சியைக் கூட கரசியமாகப் பொதுவானதாக்கி ஆறுதல் தந்து, இந் நிலவரங்களோடு உங்களை ஒத்துப் போகச் செய்வதுதான் கலை என்பது ஆகும். இதனால்தான், ஒரு செயல் வடிவத்தினை உங்களிடம் இந்த எதிர்ப்பு உணர்ச்சி எடுக்கின்ற பொழுது, கலையை நீங்கள் நாடுவது இல்லை; மாறாக, அறிவியலை நாடுகிறீர்கள்!

ஆக, இந்த நிலவரங்களோடு நீங்கள் இணங்கிச் சென்றிட வேண்டி, வானத்தில் இருந்து உங்களுக்கு எப்படி மதம் ஆறுதல் தருகிறதோ, அப்படித்தான், கலையும் உங்களுக்கு ஆறுதல் தருகிறது என்பது தெளிவு. ஆனால், பூமியில் இருந்த வாறே இந்த ஆறுதலை உங்களுக்குக் கலை நல்கி விடுகிறது. எனவேதான், கலையாலும் மதத்தாலும் இணங்கிச் சென்றிட முடிகின்ற பொழுது, அறிவியலாலும் மதத்தாலும் இணங்கிச் சென்றிட முடிவது இல்லை.

ஆனால், நீங்கள் இழந்து விட்ட உங்கள் மனித இயல்புகளை மீண்டும் நீங்கள் பெற்றிட வேண்டும் என்னும் இனம் புரியாத உங்கள் ஏக்கத்திற்கு மதம் ஆறுதல் தருகிறது என்றால், அயன்மையான உங்கள் வாழ்க்கை அனுபவங்களின் உணர்ச்சிகளுக்கு மட்டும்தான் கலை ஆறுதல் தந்து அவற்றைத் தணிய வைக்கிறது.

அப்படி என்றால், மதம் செய்கின்ற வேலையைத்தான் கலையும் செய்கிறது; ஆனால், ஆழமாக மதம் செய்கின்ற வேலையை, மிகவும் மேற்போக்காக—-மிகவும் இங்கிதமாக

—-கலை செய்து முடித்து விடுகிறது, அவ்வளவுதான்!

ஆனால் ஒன்று, பக்தியிலும் சரி அல்லது சுவனத்திலும் சரி, மற்ற மனிதர்களில் உங்கள் சுயமையினை நீங்கள் மெய்மைப் படுத்திக் கொள்வதாக நீங்கள் உணர்வது, ஒரு சுய-ஏமாற்று உணர்வுதான் ஆகும். ஏனென்றால், கடவுளோடும் மற்ற மனிதர்களோடும் நீங்கள் கொள்ளுகின்ற உறவுகள் அல்ல பக்தியும் சுவனமும்! மாறாக, கடவுளின் மூலமாகவும் கதைப் பாத்திரங்களின் மூலமாகவும், உங்களோடு நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுகின்ற வெறும் தனிமை உறவுகள்தாம் அவை!

சமுதாயமாக வாழ்கின்ற ஒரு மனிதன், மற்ற மனிதர்கள் இடத்தில் அல்லாமல், தன்னோடு தானே தனது சமுதாயச் சுயமையினை மெய்மைப் படுத்திக் கொள்வதும், எனினும், அதன் மூலம், சமுதாய முறையான ஓர் ஆறுதலைப் பெற்று விடுவதும், சுய-ஏமாற்று உத்திகளாகத்தாமே, இருந்திடவும் முடியும்!

ஆக, நமது வாழ்க்கையின் அனைத்துப் பிறழ்ச்சனைகளுக்கும்—-மனித மாண்பு சிதைக்கப் படுகின்ற அனைத்துக் கொடுமைகளுக்கும்—-முதல்தான் காரணம் என்றால், முதலினோடு நாம் இணங்கிச் செல்வதற்குதான், நமக்குக் கலையும் மதமும் உதவுகின்றன என்பது தெளிவு. ஆனால், இவை அனைத்தையும் விளக்கிக் காட்டி, அறிவியல் அறிவோ, சமுதாய மாற்றத்திற்கான ஒரு தெளிவினை நமக்கு நல்குகிறது.

ஏனென்றால், இன்றைய நிலவரங்களில் நமது சுயமையினை நாம் மெய்மைப் படுத்திக் கொண்டு விட முடியும் என்கின்ற வகையில் அமைகின்ற ஓர் உணர்மை அல்ல, அறிவியல் உணர்மை! மாறாக, நமது சுயமையினை நாம் மெய்மைப் படுத்திக் கொள்ளத் தக்க வகையில், புதியது ஒரு சமுதாயத்தினை நாம் படைத்தே ஆக வேண்டும் என்கின்ற தணியாத—-தணித்திட முடியாத—-செயல் முறையான ஓர் ஆர்வத்தை நம்மிடம் உருவாக்கி விடுகின்ற ஓர் உணர்மை அது!

ஆக, மெய்மையை மயங்கக் காட்டி—-கற்பனையான ஓர் ஆறுதலை நமக்குத் தருகின்ற —-ஒரு போதைப் பயன்தான் கதை-கவிதைகளின் வாசிப்பினால் நாம் பெறுகின்ற பயன் என்பது தெளிவு.

அப்படி என்றால், ‘புனைவுச் சுவனம் ‘ என்பது என்ன ? என்பது கேள்வி.

5-11-2004

(தொடரும்)

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்