எம் எஸ் :அஞ்சலி

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

ஞாநி


சரணாகதி

தமிழகம் மறக்க முடியாத ஒரு இசை மேதை எம்.எஸ்.

எம்.எஸ்சின் இனிமையான குரல் எல்லா தமிழர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விதத்தில் பங்களித்து வந்திருக்கிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் பின்பற்றிய எளிமையும் வசதியற்றவர்களிடம் அவர் காட்டி வந்த கருணையும் அன்பும் னிச்சயம் பாராட்டுக்குரியவைதான்.

சமூக இயல் பார்வையில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை எல்லா சமூக இயலாளர்களுக்கும் மிகவும் முக்கியமான ஆய்வுக்குரிய வாழ்க்கை. இசை வேளாளர் சாதியில் பிறந்து மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்று பெயரின் முதலெழுத்து க்களில் தாயின் பெயரையே கடைசி வரை கொண்டிருந்த எம்.எஸ். அன்றாட வாழ்க்கையில் ஒரு அய்யர் மாமியாகவே வாழ்ந்துவந்தவர். அபூர்வமாகவும் இப்போது மரணக் குறிப்புகளிலும் மட்டுமே சொல்லப்படுகிற அவருடைய தந்தை பெயர் சுப்பிரமணிய அய்யர் என்றாலும் எம்.எஸ்சை அய்யராக்கியவர் அவர் அல்ல.

பேராசிரியர் எம்.என்.சீனிவாஸ் முன்வைத்த சமஸ்கிருதமயமாகல் ( sanksritisation) கோட்பாட்டின் மிக முக்கியமான எடுத்துக்காட்டு எம்.எஸ். இன்னும் சொல்லப்போனால் சமஸ்கிருதமயமாக்கலின் முழு வெற்றியின் அடையாளம் அவர். (அந்த முயற்சியின் தோல்வியின் அடையாளமாக இளையராஜாவைக் கருதலாம். எவ்வளவு ஈடுபாட்டுடன் முயன்றும் இளையராஜாவால் ராஜப்பைய்யர் ஆக முடியவில்லை.)

தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்த விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு தொண்டுகள் செய்யும் லட்சியவாத இளைஞராகத் தொடங்கிய சதாசிவம் பின்னர் எஸ்.எஸ். வாசன், கல்கி ஆகியோரின் மார்க்கெட்டிங் நிர்வாகியாக மாறியதும், அடுத்த கட்டத்தில் எம்.எஸ் சுப்புலட்சுமியின் கணவர் / மார்க்கெட்டிங் நிர்வாகியாக மாறியதும் கூட சமூக இயல் ஆய்வுக்குரியவைதான்.

ஆழ்ந்த கடவுள் பக்தி, தீவிர தொழில் ஈடுபாடு, எளிய வாழ்க்கை, நலிந்தவர்கள் மீது கருணை, சமூக சேவை என்ற (இன்று காலாவதியாகிக் கொண்டிருக்கிற ஒரு) வாழ்க்கை முறையின் சிறந்த பிரதி நிதிகளாக சதாசிவம்- எம்.எஸ் தம்பதிகள் விளங்கினார்கள். இந்தியா டுடேவுக்கு சில ஆண்டுகள் முன்பு எம்.எஸ் அளித்த ஒரு பேட்டியில் சுற்றிலும் துன்பங்களில் சாதாரண மனிதர்கள் அல்லற்படுவதைப் பற்றிய தன் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்று புரியாத நிலையில் முடியக்கூடியதெல்லாம் நம்மைச் சுற்றியிருக்கக்கூடிய அப்படிப் பட்டவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவி செய்வதுதான் என்று அப்போது எம்.எஸ். கூறியிருந்தார்.

இசைப் புலமை , இசை சார்ந்த கற்றல் என்பவை தவிர மீதி அனைத்திலும் தனக்கென்று சொந்தக் கருத்தோ பார்வையோ தேவையில்லை என்ற அடிப்படையில் வாழ்ந்தவர் எம்.எஸ். வாழ்க்கையின் மீதி அனைத்து விஷயங்களையும் சதாசிவத்திடம் ஒப்படைத்துவிட்ட அவரை வழி நடத்தியிருப்பது வைணவத்தின் சரணாகதிக் கோட்பாடுதான். ‘ மொத்தமாக உன்னை நீ சரணாகதி செய்துவிட்டால் பிறகு எந்தத் துன்பமும் இல்லை” என்று அவர் சொன்னதாக அவருக்கு நெருக்கமானவரும் உறவினருமான இளம் கலைஞர்/ பத்திரிகையாளர் கெளரி ராம்நாராயனன் எழுதியிருக்கிறார்.

அப்படித் தன்னை சதாசிவத்திடம் சரணாகதி செய்ததில்தான் இசை வேளாளரான சுப்புலட்சுமி முழுமையான பிராமணப்பெண்ணாக மாற்றம் கண்டார். இசையுலக வாய்ப்புகள் சாதனைகள் எல்லாமே அவருக்கு இந்த சரணாகதியின் விளைவாகக் கிடைத்த லாபங்கள். நஷ்டங்கள் என்ன என்பதை ஒரு சமூக இயல் பார்வையிலான ஆழமான ஆய்வுதான் சொல்லமுடியும். தன் மேதமையை ஒரு பார்ப்பன கருத்தியல் கலை வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் விரித்திருந்தால் அவர் இன்னும் என்னவெல்லாம் ஆகியிருக்கக் கூடும் என்பது இப்போதைக்கு ஒரு சுவையான கற்பனை மட்டும்தான்.

நமக்கு எஞ்சியிருப்பதெல்லாம் காற்றினிலே வரும் அவர் கீதம்.

தீம்தரிகிட டிசம்பர் 16-31 2004

dheemtharikida @hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி