நீங்க வெட்கப் படுவீங்களா ?

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

மதியழகன் சுப்பையா


வெட்கப்படுவது பற்றி யாராவது எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா ? வெட்கப் படுவதினால் உண்டாகும் நன்மை தீமை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப் படுவதுண்டா ? சரி, எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெட்கப்பட்டதாவது உண்டா ? போதும் இன்னும் கேள்விகளை அடுக்கினால் ஒன்று பதில் கிடைத்துவிடும். இல்லையேல் கேள்விகள் முடிந்துவிடும் . முதல் இரண்டு வினாக்களுக்கான விடை அவியமில்லாதது. இரண்டாவது கேள்விக்கான விடையை நீங்கள் சொல்ல நான் திருப்தி படாமல் போகலாம். நான் சொல்லி விட்டால் நீங்கள் திருப்தி படாமல் போகலாம். அடுத்ததாக மூன்றாவதும் இறுதியுமான கேள்வி. இதற்கு விடை தெரிந்ததேதான் கேள்வியையே எழுப்பினேன். இந்தக் கேள்வி மட்டுமல்ல இது போல இன்னும் பல கேள்விகள் உண்டு. அவற்றிற்கான பதிலை நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும் கேள்வி எழுப்ப தவறுவதில்லை. கேள்விகளை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள் உதாரணமாக ஒன்று ‘ உனக்கு மூளையிருக்கா ?…. ‘

வெட்கம் என்ற வார்த்தைக்கு அகராதியில் பொருள் தேடிப் பார்க்கலாம். ஆனால் இன்று அகராதிகள் கொஞ்சம் அகராதிப் பிடித்தவைகள். ‘நாய் ‘ என்ற சொல்லுக்கு பொருள் பாருங்கள் ஒருவகை நான்கு கால் விலங்கு என்று பொருள் விளக்கப் பட்டிருக்கும் . இது போதுமா ? நாயைப் பற்றி நாம் அறிய அல்லது பிறருக்கு அறிவிக்க . இதனால் இனி நாமே பல வார்த்தைகளுக்கு பொருள் புரிந்து கொள்ளலாம். வெட்கத்திருக்கும் கூட.

‘ஏய்! உனக்கு கொஞ்சமாவது வெட்கமிருக்கா ? ‘ இக்கேள்வியை உற்று கவனியுங்கள் வெட்கம் அளவு குறித்து கேட்கப் பட்டிருக்கிறது. இந்தக் ‘கொஞ்சம் ‘ ‘ரொம்ப ‘ என்ற வார்த்தைகள் குறிக்கும் அளவுகளை அளவைகளால் அளக்கவோ எண்ணிக்கையால் எண்ணவோ முடியாது. யூகமாக வைத்துக்கொள்ளலாம். அப்படியானால் வெட்கம் மதிப்பிடக்கூடிய ஒன்று என்பது உறுதியாகிறது.

‘ ‘நீயெல்லாம் வெட்கங்கெட்டவன்! ‘ ‘ ‘ ‘தூ…. வெட்கங்கெட்ட நாயே! ‘ ‘ ( மனிதர்கள் மிருகாபிமானவர்கள் அன்பு மிகுதியிலும் கோப மிகுதியிலும் மனிதனை மிருகம் என்றுதான் விளிப்பர்) சரி, இங்கு பாருங்கள் வெட்கம் கெட்டுப் போயிருக்கிறது. அப்படி கெட்டுப் போனது ஏற்கக் கூடியதாக இல்லை. அப்படியானால் வெட்கம் கெடாமலும் பாதுகாக்க முடியும் . காக்க வேண்டும் . இக்கேள்விக்கான இறுதித் தீர்வு வெட்கம் கெடத்தக்கது ஆகும் என்பது.

இப்படி அளவிடக் கூடியதும் கெடத்தக்கதுமான வெட்கத்தை நாம் பெற்றிருக்கிறோமா ? புதுக் கேள்வி. ஆமாம் என்பவர்கள் மேற்கொண்டு வாசிக்க வேண்டாம். இல்லை என்பவர்கள் மட்டும் தொடருங்கள்.

மிகையான சுத்தத்துடன் கண்ணாடிக் கதவுகள் மாட்டப் பட்டு உயர்ரகப் பொருட்கள் விற்கும் அங்காடியில் ஏதேனும் பொருள் வாங்கும் அளவு போதிய பணமிருந்தாலும் போகத் தயங்குகிறீர்களா ? அப்படியானால் உங்களிடம் வெட்கம் அணு ஒவ்வொன்றிலும் ஊறிப் போயுள்ளது என அறிக. தயக்கத்தின் ஊக்கிதான் வெட்கம். வெட்கப் படுதல் எனறால் தயக்கப் படுதல். தயக்கப் படுதல் தடைபடுதல். தடைபடுதல் என்றால் நின்ற இடத்திலேயே நாற்புற சுவரெழுப்பி அடைபடுதல் போன்றதாகும்.

இயல்பாய் வரும் வாயுவை கட்டுப் படுத்த முயல்கிறீர்களா ? அப்படியே அடங்காவிட்டாலும் அடக்கமாய் நசுக்கி விட்டபடி கூட்டத்தோடு சேர்ந்து நாகரீகமாய் திட்டிக் கொண்டு மூக்கைப் பொத்திக் கொள்கிறீர்களா ? நீங்கள் வெட்கப் படுகிறீர்கள்.

சாலையோரக் கடையில் ஏதாவது சாப்பிட வேண்டுமென்ற ஆசையில் அல்லது சிற்றுண்டி தருவார்கள் என்று எதிர்பார்த்த இலக்கியக் கூட்டத்தில் தேனீர் கொடுத்து சமாளித்தால் கடும் பசிக்குள்ளாகி சாப்பிட நினைத்து, என எப்படியாயினும் சாலையோரக் கடைகளில் சாப்பிடுவது முடிவாகி விட்டது. ஆனால் ஆள் இல்லாத கடையைத் தேர்ந்து போக நினைக்கிறீர்களா ? ( விலை ஒரே மாதிரியாக இருந்தாலும் ) பலமுறை அப்படி நினைத்தபடியே சாலைக் கடைகள் முடிந்து வெறும் சாக்கடைகள் தொடர்கையில் திரும்ப வந்து சாப்பிட எண்ணமிருந்தாலும் பசியோடு பயணத்தை தொடர்கிறீர்களா ? நீங்கள் வெட்கப் படுகிறீர்கள். மிக அவசரமாய் மூத்திரம் கழிக்கவோ மலம் கழிக்கவோ உடம்பு ஊந்துகையில் சுற்றம் நட்பு என பலதை நினைத்து அடக்கி அவஸ்த்தைப் படுகிறீர்களா ? நண்பர் வீட்டில் குறிப்பாய் பெண் நண்பர்களிடம் கழிப்பறை காட்டும் படி கேட்கத் தயங்குகிறீர்களா ? பெண்களாயின் ஆண்களிடம் கேட்கத் தயங்குகிறீர்களா ? நீங்கள் வெட்கப் படுகிறீர்கள்.

விலாசம் வைத்து வீட்டையோ அலுவலகத்தையோ தேடுகையில் அனுமானித்து வெகுதூரம் செல்வதும் ஏதாவது தேனீர்க் கடையில் தேனீர் குடித்தபடி விசாரிக்க ‘ ‘ அய்யோ, ரொம்ப தூரம் வந்துட்டாங்களே ‘ ‘ என்று அனுதாபப் படும்படி நடந்து கொள்கிறீர்களா ? நீங்கள் வெட்கப் படுகிறீர்கள்.

மிக நெருங்கிய நண்பரிடம் கடன் கேட்கப் போய் நீண்ட நேரம் பேச்சைத் தொடர்ந்து குறிப்பாய் நண்பனை பேசவிட்டு கேட்டு இடையிடையே பாராட்டி வழிகிறீகளா ? நீங்கள் வெட்கப் படுகிறீர்கள்.

புத்தாடை மாட்டிக் கொண்டு இல்லையேல் இதுவரை அணியாத புது வகை ஆடை அல்லது அணிந்திடாத வண்ணத்திலோ வகையிலோ ஏதாவது மாட்டிக் கொண்டு நண்பர்கள் மத்தியில் போக தயங்குகிறீர்களா ? நீ வெட்கப் படுகிறீர்கள்.

ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் படித்தவர்கள் வளமாய் ஆங்கில வார்த்தைகள இருந்தும் மற்றவர் பேச்சில் எழுத்தில் குறைகள் காணும் நீங்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் ஆப்படியானால் நீங்கள் வெட்கப்படுகிறீர்கள்.

நிறைந்த சபையில் முன் வரிசை இறுக்கையில் வெற்றிடங்கள் இருப்பினும் உட்காராமல் பின்னால் நின்று கொள்கிறீர்களா ? கல்யாண வீடுகளில் புகைப்படங்களுக்கும் ஒளிநாடாப் பதிவுகளுக்கும் அஞ்சி ஓடுகிறீர்களா ? தனியாய் பந்திக்குப் போகாமல் துணைக்கு ஆளைத் தேடுகிறீர்களா ? யாரும் கிடைக்காத பட்சத்தில் சாப்பிடாமலேயே திரும்புகிறீர்களா ? நீங்கள் வெட்கப் படுகிறீர்கள். பணியிடத்தில் யாரும் உணவு கொண்டுவராத பட்சத்தில் , கொண்டு வந்தாலும் ரொட்டி பழங்கள் என சிறிய பாத்திரங்களில் கொண்டு வந்து கொரித்துக் கொண்ருப்பவர்கள் மத்தியில் அடுக்குப் பாத்திரங்களில் கொண்டு போனால் மட்டுமே திருப்தி படும் நீங்கள் உணவு கொண்டு போகாமல் விடுதிகளில் சாப்பிட்டு சமாளிக்கிறீர்களா ?

புதிதாக காலணி, இடுப்புவார், குளிர் கண்ணாடி என எதாவது சேர்த்துக் கொள்கையில் மற்றவர் அபிப்ராயங்களை நினைத்துப் பயப் படுகிறீர்களா ? நீங்கள் வெட்கப் படுகிறீர்கள். கதை, கவிதை எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டல் என்று சிறப்பார்வம் இருந்தாலும் காட்டிக் கொள்ளாமலிருந்து, தெரிந்த நண்பர்கள் யாரிடமாவது உங்கள் திறமையை சுட்டி அறிமுகப் படுத்தப் படுகையில் முகம் சிவந்து போகிறீர்களா ? நீங்கள் வெட்கப் படுகிறீர்கள். காதலர்களையும் , தம்பதியரையும் ஏக்கமாய் பார்த்துத் திரிந்தாலும் திருமணம் வேண்டாமென்கிறீர்களா ? நீங்கள் வெட்கப் படுகிறீர்கள். செல் போன்கள் வாங்கிக் கொண்டு கையில் எடுத்துத்திரிய மாட்டார்கள் அல்லது கால்ச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்கிறீர்களா நீங்கள் வெட்கப் படுகிறீர்கள். உடற்பயிற்சி நிலையங்களுக்குப் போக, காலை மாலை ஓட்டம் , நடை என பயில நினைக்கிறீர்கள் ஆனால் செய்வதில்லையா ? நீங்கள் வெட்கப் படுகிறீர்கள்.

நல்ல நடன அசைவுகள் தெரிந்திருந்தாலும் மற்றவர் நடனத்தை கிண்டலடித்தபடி ஒதுங்கி நிற்கிறீர்கள். ஆட அடிமனதின் வேர்வரை ஆசையிருந்தாலும் கால்களை கட்டிப் போட்டுக் கொண்டுள்ளீர்களா ? நீங்கள் வெட்கப் படுகிறீர்கள். இப்படி நீங்கள் வெட்கப் படும் விஷயங்களை சூழ்நிலைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

மேற்சொன்ன எல்லாச் சம்பவங்களிலும் நான் அதற்கு நேர்மாறாகத்தான் நடந்து கொண்டுள்ளேன். அப்படியானால் நான் வெட்கப் படுவதில்லைதானே என்று மகிழ வேண்டாம் . நீங்கள் ‘ ஆம் ‘ என்றாலும் ‘இல்லை ‘ என்றாலும் நீங்கள் வெட்கப் படுகிறீர்கள். இல்லவே இல்லை நான் எப்பொழுதும் எதற்கும் வெட்கப் பட்டதில்லை என்கிறீர்களா அப்படியானால் நீங்கள் எந்தத் துறையில் முன்னேற வேண்டுமென தற்சமயம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அத்துறையில் இன்னும் பதினைந்து நாட்களில் உலகப் புகழ் அடைவீர்கள் இல்லையெனில் நீங்கள் வெட்கப்படுகிறீர்கள் என்பது முத்திரையிட்டுப் பதிந்த பத்திரமாகி விடும்.

எனக்கு ஆடத் தெரியும் , பாடத் தெரியும் , நடிக்கத் தெரியும் , எழுதத் தெரியும் , பேசத் தெரியும் …. இன்னும் இப்படி பல தெரியும்களை தெரியும் செய்து காட்டுகிறேன் என்றவர்கள்தான் இன்று நம்முடைய செய்தி நாயகர்களாய் இருக்கிறார்கள். இங்கு உதாரணங்கள் எழுதிவிட்டால் தன்னம்பிக்கை கட்டுரையாகி விடும் அதனால் தவிர்த்து விட்டேன்.

வெட்கம் என்பது தயக்கம் , பயம் , நம்பிக்கையின்மை, தளர்வு, தாழ்வு மனப்பான்மை எனப் பல குட்டிகளைப் போட்டு உங்கள் வளர்ச்சிக்கு தடையாய் இருக்கலாம். வெட்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே இருப்பது இல்லையேல் முத்தம் கேட்கும் போதும் கொடுக்கும் போதும் தோன்றுவது என்று நீங்களாகவே கற்பனை செய்து கொண்டால் அப்படி உறுதியாகத் தெரிந்தாலும் அதை எனக்கு தெரியப் படுத்த தயங்கினாலும் நீங்கள் வெட்கப் படுகிறீர்கள். என்ன இது கூமுட்ட விஷயம் என்று கோபப்படுகிறீர்களா ? ‘ ‘சீ! சீ! … வெட்கப் படுறேங்க ! உங்க நிலையைப் பார்த்து. ‘ ‘

—-

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா