வையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

பி.கே. சிவகுமார்


சென்ற வார திண்ணையில் ஜெயமோகன் எழுதிய வையாபுரிப் பிள்ளையின் மரணமின்மை என்னும் கட்டுரையை வாசித்தேன். அக்கட்டுரை, வையாபுரிப் பிள்ளையைப் பற்றி நானறியாத தகவல்களை அறிந்து கொள்ள உதவியது. அதற்கான ஜெயமோகனுக்கு நன்றிகள்.

வையாபுரிப் பிள்ளையை நான் திண்ணையின் வழியாகவே முதலில் அறிந்தேன். வையாபுரிப் பிள்ளை நினைவையொட்டி வெங்கட் சாமிநாதன் ஆற்றிய உரையைத் திண்ணை பிரசுரித்திருந்தது. அதுதான் அவர் பெயரை நான் பார்த்த முதல் முறை. பின்னர், நண்பர் தஞ்சை சாமிநாதன் தஞ்சை பிரகாஷ் எழுதிய புத்தகம் ஒன்றைக் கொடுத்தார். அதில் பாரதிதாசன் வையாபுரிப் பிள்ளையை வைது எழுதிய வரியும் தமிழின் மறுமலர்ச்சி என்ற நூலின் பெயரும் இடம்பெற்றிருந்தது. வையாபுரிப் பிள்ளையின் மீதான என் ஆர்வத்தை இது மேலும் தூண்டியது. இணையக் குழுக்களிலே இதைப் பற்றி விசாரித்தேன். டாக்டர் நாக. கணேசன் அந்தப் புத்தகம் அவரிடம் இருப்பதாகவும் தேட வேண்டும் என்றும் பதில் சொன்ன ஞாபகம். பின்னர், எழுத்தாள நண்பர் ஒருவரின் உதவியால் தமிழின் மறுமலர்ச்சி என்ற நூல் கிடைக்காமல், அதன் காப்பி மட்டும் கிடைத்தது.

இடையில், வையாபுரிப் பிள்ளை பதிப்பாசிரியராக இருந்த சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் பேரகராதி தொகுப்பை வாங்கினேன். அகராதியின் தொகுதிகளைப் பார்த்துப் பிரமித்துப் போனேன்.

அதன் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: ‘Etymology is another salient feature of lexicography; but, of this, Tolkaapiyar only says that the origin of words is beyond ascertainment. Indeed, with the exception of Dr.Caldwell ‘s attemps, etymologizing in Tamil has been for the most part speculative and fanciful. ‘ தமிழில் தற்போது வேர்ச்சொல் ஆராய்ச்சி (Etymology) இன்னும் வளர்ந்திருக்கலாம். குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மொழியியல் ரீதியான வளர்ச்சியை அறிய உதவிட வேண்டிய வேர்ச்சொல் ஆராய்ச்சித் துறை தமிழிலே அரசியலையும், அரசியல் கருத்துகளையும் வளர்க்க உதவியது தமிழுக்கே உரிய வினோதம் தான். அந்த அரசியலை மறுத்துத் தமிழை ஆய்வு பூர்வமாக மட்டுமே அணுகியவர் போலும் வையாபுரிப் பிள்ளை என்று தோன்றியது.

இச்சூழ்நிலையில் தமிழின் மறுமலர்ச்சி என்ற நூலும் வையாபுரிப் பிள்ளையும் எனக்கு முக்கியமாகப் பட்டனர். நான் தமிழ்ச் சூழலில் அதிகம் கேட்டறியாத விஷயங்கள் இருக்கும் என்கிற நம்பிக்கையில் நூலை வாசிக்க ஆரம்பித்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. அச்சில் இல்லாத அல்லது கடைகளில் எனக்குக் கிடைக்காத இந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ரஸமாகவும் ஆழமாகவும் இருந்தன. படிக்கப் படிக்க வையாபுரிப் பிள்ளை மீது மதிப்பும் அவர் காலத்துக்கு அவர் எவ்வளவு முற்போக்காக இருந்திருக்கிறார் என்ற வியப்பும் ஏற்பட்டன. இதை மற்றவர்களுடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. முழுப் புத்தகத்தையும் தட்டச்சு இடுவதற்கான நேரமோ வசதியோ என்னிடம் இல்லாததால், கட்டுரைகளின் சாரத்தையாவது முடிந்தபோதெல்லாம் தொகுத்துத் தர வேண்டுமென்று முடிவு செய்தேன்.

வையாபுரிப் பிள்ளையைப் பற்றிய அறிமுகத்துடன் முதல் கட்டுரையை என் வலைப்பதிவில் ஆரம்பித்தேன். வலைப்பதிவு நண்பர் காசி தொடருமாறு சொன்னார். குடும்ப நண்பரும் எழுத்தாளருமான வே. சபாநாயகம் தனிப்பட்ட மடலில் வெகுவாகப் பாராட்டினார். என் மீதுள்ள அன்பினால் வே. சபாநாயகம் அப்படி எழுதியிருக்கிறார் என்று நான் உணர்ந்த போதிலும், அப்பாராட்டுகளுக்கு முழுப் பெருமையும் வையாபுரிப் பிள்ளையையே சாரும் என்பதை அறிந்திருந்தேன். மேலும், இணையக் குழுமங்களில் ‘எனது களஞ்சியத்திலிருந்து ‘, ‘ரான் ரசித்த உவமைகள்/வர்ணனைகள் ‘ போன்ற அரிய தொடர்களை எழுதும் முதுபெரும் எழுத்தாளர் சபாநாயகம் அவர்களுக்கே வையாபுரிப் பிள்ளையின் நூலைப் பார்க்கிற வாய்ப்பு இருந்திருக்கவில்லை என்றால், பிறருக்கும் அந்த வாய்ப்பு சுலபமாக இராது; எனவே, தொடர்ந்து எழுத வேண்டும் என்று தோன்றியது. ஒரு கட்டுரையின் சாரத்தைச் சுருக்கித் தருவது மற்றவர்களுக்கு எவ்வளவு பிடிக்குமோ என்கிற என் மனப்பிராந்தியையும் இது உடைத்தது. தொடர்ந்து ராஜாராம், வே.சபாநாயகம் மூலமாக சுப்ரபாரதி மணியன், இப்போது ஜெயமோகன் உள்ளிட்டோர் மூலமாக நல்ல எதிர்வினைகளை அறிந்த போது, தொடர்ந்து செயல்படுகிற உற்சாகம் வருகிறது. இந்தக் கட்டுரைகளில் நான் எதுவும் செய்யவில்லை. சுருக்கி, தட்டச்சு செய்து போடுவது மட்டுமே என் பணி. எனவே, எல்லாப் பாராட்டும் வையாபுரிப் பிள்ளைக்கே.

ஆனால் நான் மதிக்கிற இணைய நண்பர் இராம.கி. மட்டும் பின்வருமாறு என் வலைப்பதிவில் சொன்னார்:

(இராம.கி.யின் முழுக் கருத்தையும் http://pksivakumar.blogspot.com/2004/09/2.html#comments என்ற முகவரியில் காணலாம். கீழே முக்கிய பகுதிகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.)

‘அன்பிற்குரிய சிவக்குமார்,

வையாபுரியாரின் பங்களிப்பு ஒரு சில ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் அவர் சொல்லியது எல்லாமே ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. நமக்கு முன்னர் மிகப் பலர் வையாபுரியாரைப் புரட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் தமிழறிஞர் பலரும் உண்டு. அதை எல்லாம் படித்திருப்பிர்களா என்று தெரியாது. வையாபுரியாரின் ஒவ்வொரு பத்தாம் பசலிக் கருத்தையும் இப்பொழுது மீண்டும் எடுத்துத் திருப்பிப் போட்டு இன்னொரு சுற்று தேவையில்லாத வாக்கு வாதத்தை நீங்கள் எழுப்புவது ஏனென்று தெரியவில்லை. (ஆறுமுக நாவலருக்கும், இராமலிங்க வள்ளலாருக்கும் இடையே நடந்த வாக்குவாதங்களை இப்பொழுது படித்துவிட்டு மீண்டும் இன்னொரு சுற்று வரவிட்டால் எப்படி இருக்கும், அது போலத்தான் இது.)

இந்தப் புலனத்தில் நீங்கள் வைக்கும் பல கருத்துக்களையும் மறுத்து எழுத முடியும் தான். (ஓரையும் நாளும் எதைக் குறிக்கின்றன என்று அறிவீர்களா ? ஓரை கிரேக்கத்தில் இருந்து வந்தது என்பதற்கோ, அது தமிழ் இல்லை என்பதற்கோ நீங்கள் அறிந்து ஒரு விளக்கம் சொல்லுங்களேன் ? காப்பியம், நாடகம் என்பவை தமிழ் அல்ல என்பதற்கும் வையாபுரியாரின் சொல்லை வைத்துக் கொண்டு நொண்டி வழக்காடாமல் உங்கள் விளக்கம் சொல்லுங்களேன்.) ஆனாலும் மறுத்து எழுத முற்பட்டால் எனக்குச் சலித்துப் போகிறது. இது போன்ற உருப்படி இல்லாத வல்வழக்குகளில் கருத்தியல் காரணமாய் ஈடுபடும் நேரத்தில், பயன்தரும் படியாய், சில தமிழாக்கங்களில் ஈடுபடலாம், வரலாற்றில், பொருளியலில், அறிவியலில், நுட்பியலில் புதிதாய்த் தமிழில் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம் என்ற மனம் தெளிவுறுத்துகிறது. எனவே உங்களோடு வாக்குவாதத்தைத் தவிர்க்கிறேன். ‘

இராம.கி.க்கு நான் பதிலும் அளித்தேன். வையாபுரிப் பிள்ளையைப் ‘புரட்டியவர்களின் ‘ விவரம் அறியவும், அவர்கள் கருத்துகளைப் படிக்கவும் ஆவலாக இருக்கிறேன் என்றும் சொன்னேன். இவ்விஷயத்தில் என் கோணம் ஒரு மாணவனை ஒத்தது. எனவே, எதையும் அறிந்து கொள்வதில் அதன்பின் முடிவெடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பதை வெளிப்படுத்தினேன். ஆனால், இரா.ம.கியின் கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியாது என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இராம.கி. போன்றவர்கூட அவர் சொல்கிற ‘கருத்தியல் காரணமாகவே ‘ வையாபுரிப் பிள்ளையின் மீது விமர்சனமும், பாவாணரின் மீது பரிவும் காட்டுகிறார்களோ என்ற கேள்வியும் எனக்கு இருக்கிறது. ‘கருத்தியல் ‘ எதுவாக இருந்தாலும், சமூகத்தில் ஒருவரின் பங்களிப்பை, ‘கருத்தியலுக்கு ‘ அப்பாற்பட்டும் அவர்களின் செயல்பாடுகள், அவர்கள் சொன்னவற்றின் உண்மைநிலை, செயல்பாடுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும் என்பது என் நம்பிக்கை.

இதையெல்லாம் இவ்வளவு தூரம் சொல்வதற்குக் காரணம். தமிழ்நாட்டில் இல்லாத, ஒரு சராசரி வாசகனான எனக்கு, வையாபுரிப் பிள்ளையைக் கண்டறிவதில் இருந்த சிரமங்களைச் சொல்லவே. தமிழ்நாட்டிலேயே 70 வருடங்கள் இருக்கும் முதுபெரும் எழுத்தாளரும் ஆழ்ந்த வாசகருமான வே. சபாநாயகம் அவர்களுக்கும் வையாபுரிப் பிள்ளையின் நூலும் கருத்துகளும் புதியனவாக இருந்தபோது, தமிழ்ச் சூழலில் வையாபுரிப் பிள்ளை எவ்வளவு திட்டமிடப்பட்டு ஓரம் கட்டப்பட்டிருக்கிறார் என்பதை உணரவும் முடிந்தது. நேரமும் சிரமமும் எடுத்தபின் வையாபுரிப் பிள்ளையைச் சென்றடைந்திருத்தாலும், அவர் நூல்களின் கருத்துகளை நான் எழுதியபோது அவை ‘அஜெண்டா ‘ எதுவுமில்லாத சராசரி தமிழ் வாசகர்களால் விரும்பியே வாசிக்கப்படுகின்றன என்று சொல்லவுமே இவ்வளவு விவரமாக எழுத வேண்டியதாயிற்று.

வையாபுரிப் பிள்ளையின் நூலைத் தட்டச்சு செய்தல், அல்லது அவர் கட்டுரைகளைச் சுருக்கித் தருதல் ஆகிய எளிய காரியங்களே என்னால் இயல்பவை. அவரைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கிற அளவுக்கு எனக்கு அக்கால சரித்திரம் தெரியாது, தமிழ் ஞானமும் போதாது. தமிழ்நாட்டுக்கு அப்பால் இருக்கிற காரணத்தால், தேவையான ஒரு தகவலையோ, ஆவணத்தையோ, நூலையோ பெறுவதற்குக்கூட நேரமும் சிரமமும் எடுக்கிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, வையாபுரிப் பிள்ளையின் கட்டுரை சுருக்கங்களையே ரசிக்கிற தமிழ் வாசகர்கள் அவரைப் பற்றிய ஓர் விரிவான நூல் வந்தால் அவசியம் வரவேற்பார்கள் என்று தோன்றுகிறது. மேலும், தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் வையாபுரிப் பிள்ளையை ஒதுக்கித் தள்ளிய உணர்ச்சிகள் இப்போதும் ஆங்காங்கே இருந்து வருகின்றன என்றும் தெரிகிறது. உதாரணமாக, இணையத்தில் வையாபுரிப் பிள்ளையைப் பற்றிய தகவலை நான் வேண்டிய போது பெரிய அளவில் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், வையாபுரிப் பிள்ளையைப் பற்றி எழுத ஆரம்பித்ததும் இராம.கி அவர்களிடமிருந்து ஓர் உணர்வுபூர்வமான எதிர்ப்பு வந்ததைக் காணலாம். தமிழில் பரவலாக தேவநேயப் பாவாணரை முன்வைக்கும் முயற்சிகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. மொழி ஞாயிறு என்று பாவாணரை முன்னிறுத்தித் தனித்தமிழ் கலாசாரத்தை வளர்க்கிற முயற்சிகள் வெளிநாட்டுத் தமிழர்களிடையே தென்பட்டே வருகின்றன. இச்சூழ்நிலையில் வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுகள் குறித்த ஒரு விவரமான பார்வையும், தேவநேயப் பாவாணர் – வையாபுரிப் பிள்ளையைப் பற்றிய ஒரு கருத்தியல் ரீதியான ஒப்பாய்வும், அவசியம் தேவைப்படுகின்றன. முக்கியமாக, தேவநேயப் பாவாணரின் கருத்துகளுடன் வையாபுரிப் பிள்ளையின் கருத்துகளை ஒப்பிட்டு, தமிழர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கருத்துகளை திட்டவட்டமாக வரையறுக்க வேண்டிய தெளிவான கடமை இருக்கிறது. திராவிட அரசியல் தங்களை அண்டவிடாமல் எட்டி நிற்பவர்களும், மொழியை உணர்வுபூர்வமாக அணுகாதவர்களுமே இந்த நூலைச் சிறப்பாகச் செய்ய முடியும். திரு.இராம.கி. போன்றவர்களின் கேள்விகளுக்கும் கூட பதில் சொல்கிற அளவுக்கு அத்தகைய நூல் அமைய முடியும்.

வையாபுரிப் பிள்ளை வாழ்க்கை குறிப்புகள், அவரின் பங்களிப்புகள், அவருக்கு வந்த விமர்சனங்கள், விமர்சனங்களுக்கான பதில்கள், இந்தச் சூழ்நிலையில் வையாபுரிப் பிள்ளையின் எக்கருத்துகள் சரி, எக்கருத்துகள் தவறு, பாவாணருக்கும் வையாபுரிப் பிள்ளைக்குமான விரிவான கருத்தியல் ரீதியான ஒப்பீடு, தமிழர்கள் ‘**பெரிதும்** ‘ முன்னெடுத்துச் செல்ல வேண்டியது பாவாணரையா வையாபுரிப் பிள்ளையையா என்ற கேள்விக்கான பதில், வையாபுரிப் பிள்ளையைப் பற்றி பிறர் சொல்லியுள்ள கருத்துகள் என்று அந்த நூல் அறிவுபூர்வமானதாக இருந்து, வையாபுரிப் பிள்ளையை மீட்டெடுக்க உதவும். இந்த மீட்டெடுத்தல் தமிழுக்கு அவசியமானதும் ஆரோக்கியமானதுமாகும் என்று நான் நம்புகிறேன். வையாபுரிப் பிள்ளையைப் பற்றி இத்தகைய ஓர் நூல் முன்னரே வந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி வந்திருந்தாலும், இன்றைய நவீன வாழ்வின் கூறுகள், போக்குகளின் துணையோடு வையாபுரிப் பிள்ளையை இவ்வாறு மீள்பார்வை பார்க்கிற இன்னொரு நூல் வருவது சரியே.

என் எண்ணம், கடினமான விஷயங்கள் கூட எளிமையாக சொல்லப்பட வேண்டும் என்று விரும்புகிற என் வாசக மனம், என் ரசனை சார்ந்த தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இதை ஜெயமோகன், சுஜாதா ஆகியோர் சிறப்பாகச் செய்ய முடியும். இந்த இருவரும் எழுத்தாளர்களில் நிஜமான அறிவுஜீவிகள் என்று அறியப்படுபவர்கள். ஆனால், சுஜாதா இத்தகைய பணிகளில் ஆர்வம் காட்டுவாரா என்று தெரியாது. மேலும், அவர் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கும் ஓர் எளிய உரை எழுத வேண்டும் என்கிற வேண்டுகோளை பலர் வைத்தது போல நானும் அவரிடம் வைத்து விட்டேன். எனவே, வையாபுரிப் பிள்ளையைப் பற்றிய இத்தகைய ஓர் ஆய்வு நூலை ஜெயமோகன் எழுத வேண்டும் என்ற வேண்டுகோளை இங்கே வைக்கிறேன்.

ஜெயமோகனின் எந்தக் கட்டுரையைப் படிக்கும்போதும் – அதன் கருத்தாக்கத்தில் உடன்பட்டாலும் மாறுபட்டாலும் – அவருடைய நுண்ணிய பார்வை, அவரின் பரந்துபட்ட அறிவு, கட்டுரை எழுதுவதற்கு முன் ஓர் ஆய்வாளன் போல் அவர் சேகரித்து வைத்துப் பயன்படுத்துகிற தகவல்கள், விரிவான களங்களில் பிரச்னையை அணுகும் தன்மை, ஆதாரங்களுடனேயே முடிவெடுக்கும் திறமை, கட்டுரையைக் கட்டமைக்கும் விதம் ஆகியவற்றைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஒவ்வொரு எழுத்தாளரும் வியப்புடன் அல்லது ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையுடன் பார்க்கிற எழுத்துத் திறமையும் அறிவும் ஜெயமோகனுக்கு இருக்கிறது என்றால் மிகையில்லை. மேலும் தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் எழுத்துகள் குறித்த விரிவான, இதுவரை வந்திருக்கிறவற்றில் ஒப்பிடும்போது முழுமையான விமர்சனத்தை ஜெயமோகன் எழுதியிருக்கிறார். எனவே, வையாபுரிப் பிள்ளையைப் பற்றி அத்தகைய ஒரு நூல் எழுதுவது அவருக்கு சாத்தியமே. இந்த மாதிரியான புத்தகம் ஒன்றை ‘உடனடியாக ‘ எழுதத் தேவையான எல்லாத் தகுதியும் ஜெயமோகனுக்கு இருக்கிறது என்பதை அவர் எழுத்துகளைத் தொடர்ந்து படிப்போர் அறிவர். வையாபுரிப் பிள்ளையின் மரணமின்மை என்று ஜெயமோகன் சென்றவார திண்ணையில் எழுதியிருந்த கட்டுரையும் என் நம்பிக்கையை அதிகரிக்கிறது. எனவே, ஜெயமோகன் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் வாசகனாகவும், வையாபுரிப் பிள்ளையின் வாசகனாகவும் வேண்டுகிறேன். மேலும், கல்வியாளர்கள் இத்தகைய நூல்களை எழுதுவதைவிட எழுத்தாளர்கள் இத்தகைய நூல்களை எளிமையான நடையில் ஆழமாகவும், விருப்பு வெறுப்பின்றியும் எழுத முடியும். உதாரணமாக, ஜெயமோகனின் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், சுஜாதாவின் ஆழ்வார்கள் – ஓர் எளிய அறிமுகம் ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம்.

வையாபுரிப் பிள்ளையின் நூல்கள் அரசுடைமை ஆக்கப்பட்டனவா என்று தெரியவில்லை. இல்லையென்றால், அவர் நூல்கள் உடனடியாக நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும். அறிவியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொண்ட, தமிழுக்காக அயராது உழைத்த ஒருவருக்கு நாம் செய்கிற மரியாதையாக இது இருக்கும். வையாபுரிப் பிள்ளையின் நூல்கள் மீது மதிப்பும் ஈடுபாடும் கொண்டுள்ள அன்பர்கள் இதற்கு முயற்சிகள் செய்ய முன்வர வேண்டும். என்னால் ஆனதெல்லாம் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் வைப்பது தான். எனவே, வையாபுரிப் பிள்ளையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டிருக்காத பட்சத்தில், அவை உடனடியாக நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கும் தமிழக முதவ்வருக்கும் இதன்மூலம் இங்கே வேண்டுகோளும் கோரிக்கையும் வைக்கிறேன். தமிழின் மீது உண்மையான ஆர்வம் உள்ள நண்பர்கள் அனைவரும் இந்தக் கோரிக்கையைத் தங்கள் கோரிக்கையாக தமிழக அரசுக்கு முன்வைக்க வேண்டும் என்றும் அன்புடன் வேண்டுகிறேன்.

http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்