நிழல் யுத்தம் பற்றி

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

அஜீவன்


இலங்கைத் தமிழ் வசனங்கள் புரியவில்லை , நிழல் யுத்தம்….

நிழல் யுத்தம் என்று அஜீவன் இயக்கத்தில் ஒரு படம் திரையிடப்பட்டது. அற்புதமான ஒளிப்பதிவு..பல காட்சிகளில் ‘லைட்டிங் ‘ பிரமாதமாய் இருந்தது. ஆனால் படத்தொகுப்பு சுமாராய்த் தான் இருந்தது. இலங்கைத் தமிழ் வசனங்கள் படம் முழுதும் நிரம்பியிருந்ததால்..ஒன்றுமே புரியவில்லை ( ?!) அதற்கான சப்டைட்டில்களும் சுவிஸ் மொழியில் போட்டதால், போச்ச்ச்ச்! எனினும், இவரின் முயற்சி பாராட்டப் பட வேண்டியது. வேகமானப் படத்தொகுப்பு மற்றும் கதையில் கவனம் இன்னும் செலுத்த வேண்டும்.

‘There are signs of great talent ‘!

http://arunviews.blogspot.com/

____

அன்புள்ள அஜீவன்,

வணக்கம். தங்கள் மடலுக்கு நன்றிகள். தங்களின் Shadow Fight பார்த்தேன்.

ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, லைட்டிங், எடிட்டிங் எல்லாம் அருமை.

Professional Touch இருந்தது. வந்திருந்த குறும்படங்களிலேயே

தொழில்நுட்பத்தில் சிறந்த படமாகத் தங்கள் படம் இருந்தது என்பேன்.

Shadow Fight படத்தின் கதையும் நல்ல கரு. இலங்கைத் தமிழுக்கு நான்

புதியவன் என்பதால் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. ஆனாலும், ஜெர்மன்

ஓரளவு தெரிந்த நண்பர் ஒருவர் ஜெர்மன் சப்-டைட்டில்களைப் பார்த்துப் புரிந்து

கொண்டு பார்வையாளர்களுக்கு படத்தை அறிமுகம் செய்யும்போது படம் குறித்து

விவரித்தார். அது மிக உதவிகரமாக இருந்தது. உங்களிடம் நிறைய திறமை

இருப்பது தெரிகிறது. தொடர்ந்து நிறைய படங்கள் எடுங்கள்.

அன்புடன்,

பி.கே.சிவகுமார்

pksivakumar@yahoo.com

____

அன்புடயீர்,

தங்கள் மடலுக்கும், வாழ்த்துக்கும், மனம் திறந்து கூறியிருக்கும் விமர்சனத்துக்கும் நன்றிகள்.

இலங்கைத் தமிழர்களது பேச்சுகளை, இந்திய தமிழர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும்,இலங்கைத் தமிழை, குறும்படத்தில் இடப்பட்டிருந்த ஜேர்மன் மொழி உப தலைப்பின் வழி, இன்னுமொரு தமிழர் மொழி பெயர்க்க வேண்டி வந்தது வியப்பாக இருந்தாலும், சுவிஸ் போன்ற ஒரு நாட்டுக்குள், புலம் பெயர்ந்து வாழும் போது, இது எனக்கு வியப்பாக இல்லை.

ஏனைய மொழிகளிலும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன.

இருந்தாலும் இது ஒரு முக்கிய விடயமாகப்பட்டதால் இதுபற்றி எழுதுவதும், கருத்துகளை பகிர்ந்து கொள்வதும், பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

எனவே நான் வாழும் நாட்டிலிருந்து இவ்விடயத்தை அலச முயல்வது எனக்கு இலகுவாக இருக்கிறது.

சுவிசின் முக்கிய மொழிகளாக ஜேர்மன்,(German) பிரென்ஜ்,(Franch) இத்தாலி (Italy), ரொமானிஸ்(Romanish), ஆகிய மொழிகள் பேசப்படுவதோடு, அரசு ஆளும் முக்கிய பகுதிகளாக, ஜேர்மன் – பிரென்ஜ் – இத்தாலி பகுதிகள் என ஆட்சியாளர்களால் பிரித்தாளப்படுகின்றன.

சுவிசில் ஜேர்மன் மொழி, ஒரு பகுதியின் மிக முக்கிய ஆட்சி மொழியாகும்.

அது போலவே அண்டை நாடுகளான, ஜேர்மன்(Germany) ஒஸ்ரியா (osterreich) ஆகிய நாடுகளில் ஜேர்மன் மொழி, ஆட்சி மொழியாகும்.

இருப்பினும், சுவிஸ்-ஜேர்மன் மொழி திரைப்படங்களை, ஜேர்மனியிலுள்ள அல்லது ஒஸ்ரிய மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

சுவிசில் தயாராகும் சுவிஸ்-ஜேர்மன் திரைப்படங்கள், எழுத்து மொழியிலான ஜேர்மன் உப தலைப்புகளுடன்தான், (சப்டைட்டில்) அவர்களுக்கு, திரையிடப்படுகின்றன.

ஆனால் ஜேர்மன் திரைப்படங்களை, சுவிஸ் ஜேர்மன் மக்களால் இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு முக்கிய காரணம், பேச்சு தமிழ் போல, பேச்சு ஜேர்மன் ஒயில்கள் மாறுபட்டாலும், பாடசாலைகளில் கற்பிக்கும் எழுத்து ஜேர்மன் மொழி ஒன்றாக இருப்பதேயாகும்.

ஆனால் இவை எமது விடயத்தில் முழுமமையாக ஒத்துவருவதில்லை.

இந்திய தமிழுக்கும் இலங்கைத் தமிழுக்குமிடையே, பெரியதொரு புரிந்து கொள்ள முடியாத தன்மையிருக்கிறது.

இந்தியத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள், ஆங்கிலம் கலந்த தமிழையே பேசுகிறார்கள். இலங்கைத் தமிழர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் தவிர்த்து, பெரும்பாலனவர்கள் பேசும் தமிழில் ஆங்கலத்தைக் கலப்பதில்லை.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கூட, இலங்கையின் மற்றுமொரு பிரதேசத்தில் வாழும் தமிழர்களது பேச்சுத் தமிழையே முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

தென்னிந்தியாவிலும் இந்நிலை இருக்கிறது. இருப்பினும் தமிழ் சினிமாவின் தாக்கத்தால் அது பெரிதாகப் புலப்படுவதில்லை.

இந்திய தமிழர்களைப் போலவே இலங்கைத் தமிழர்களுக்கும் இருந்த ஒரு முக்கிய பொழுது போக்கு சினிமாதான். ஆரம்பம் தொட்டே இந்திய தமிழ் சினிமா இலங்கைத் தமிழர்களை ஆக்கிரமித்துக் கொண்டதால் இந்தியத் தமிழை இலங்கைத் தமிழர்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இலங்கை தமிழ் சினிமா , இலங்கையிலேயே தோல்வியடைந்ததாலும், பெரும்பாலான இலங்கை தமிழ் சினிமாக்கள், இந்திய தமிழ் சினிமா தமிழையே பேசியதாலும், வேறு நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்குக் கூட இலங்கைத் தமிழ் சென்றடையவில்லை அல்லது இலங்கை தமிழ் கடல் கடந்து செல்லவில்லை.

இலங்கைத் தமிழர்கள் கடல் கடந்தாலும், இலங்கையில் இருந்த நிலையே தொடர்கதையாகியது. இலங்கை மற்றும் புலம் பெயர் தமிழ் வானோலி-தொலைக் காட்சிகளில் கூட நாடகத் தமிழ் அல்லது மேடைத் தமிழ் வசனங்களை இவர்கள் பேசத் தலைப்பட்டனரே தவிர அதை மாற்றிக் கொள்ள எவரும் முன் வரவில்லை.

பெரும் பாலான புலம் பெயர் திரைப்படங்கள் கூட, சினிமா தமிழையே உச்சரித்தன. அத் திரைப்படங்கள் கூட ஒரு வரையறைக்குள் எம்மவரால் முடக்கப்பட்டன. இலங்கையிலோ புலம் பெயர் நாடுகளிலோ இலங்கை தமிழர்களால் தயாரிக்கப்பட்ட எத்தனையோ படைப்புகள் அவரவர் பெட்டிகளுக்குள் பிணமாகிக் கிடப்பதற்கு அது சம்பந்தப்பட்டவர்களும், ஊடகங்களும், வியாபாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

அண்மையில் நான் எழுதி-இயக்கி-ஒளிப்பதிவு செய்த குறும்படத்தை திரைப்பட விழாக்களுக்குக் கூட அனுப்ப முடியாமல் ஆக்கியதற்கு தமிழ் சினிமா ஒன்றை உருவாக்குவதாக மேடைகளில் முழங்கும் தயாரிப்பாளர் காரணமாயிருப்பது வேதனை தருகிறது. ஆதி முதல் இலங்கை தமிழ் சினிமா வளராமல் இருப்பதற்கு மட்டுமல்ல ஒருவருக்கும் போய் சேராமல் போனதற்கும் இப்படியானவர்களே காரணம். . . . . . . .

இலங்கை தமிழர்களது பிரச்சனைகளை இந்திய தமிழ் இயக்குனர்கள் கொண்டு வர முயன்றாலும், சினிமா என்ற வகையில் இந்திய தமிழர்களிடையே வெற்றி பெற்றாலும், இலங்கை தமிழர்களால் அத்திரைப்படங்கள் தங்களைப் பற்றிச் சொல்கின்றன என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அக்கதாபாத்திரங்கள் கூடப் பேசிய தமிழ், இலங்கைத் தமிழோ அல்லது சிங்களமோ அல்ல. மலையாளத் தமிழும் மலையாளம்-தெலுங்கு-கன்னடம் கலந்த சிங்களமுமேயாகும். இதைச்சொல்லக் கூட பலரால் முடியாததற்கு காரணம் அந்த மொழிகள் பற்றிய தெளிவில்லாமையேயாகும்.

இலங்கை தமிழ் பிரச்சனையை மையமாக்கிய ஒரு படத்தில், பிரகாஷ்ராஜ் பேசும் ஒரு வசனம் என்னை உலுக்கியதற்கு காரணம், அது ‘ஒரு குழந்தையை படுக்கை அறைக்கு அழைப்பதாக…. ‘ பேசப்பட்டிருந்ததேயாகும்.

அதை மொழி பெயர்த்தவரோ இயக்குனரோ அதை உணர வாய்ப்பில்லை.

ஓரு வார்த்தையை மொழி பெயர்க்கும் போது அது சரியாகத் தோன்றினாலும் அந்த (சிங்கள) வார்த்தை பாவிக்கப்படும் இடம்-தொனி காரணமாக படுக்கைக்கு அழைப்பதான கருத்தைத் தருகிறது.

இது போன்ற விடயங்கள் தெரிவதற்கு, மேடைகள் தேவை…. விமர்சனங்கள் தேவை….

அதற்கான தளத்தை நியுஜெர்சியில் நடைபெற்ற, சிந்தனை வட்டம் குறும்பட விழா வழி செய்திருப்பது மகிழ்வைத் தருகிறது.

இலங்கை தமிழர்களதும், புலம் பெயர் தமிழர்களதும் பிரச்சனைகள் வெளிவர ஒன்றிரண்டு குறும்படங்கள் மட்டும் போதாது. முழு நீளப்படங்களும், அத்துடன் கூடிய உப தமிழ் தலைப்புகளும் இருந்தாலன்றி இவை உலக அரங்குக்கல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சமூகத்துக்குக்கே கூட, போய் சேர வாய்ப்பில்லை. . . . . . . .

ஒரு சமூகத்தின் மொழி-கலை-பண்பாடுகள் பரவ கலைகள் அதுவும் சினிமாக்கலை எவ்வகையான பங்கை வகிக்கிறது என்பது இப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழ் ஊடகங்களுக்கும் புரியுமா ?

பணிவன்புடன்

அஜீவன்

முக்கிய குறிப்பு:-

நிழல் யுத்தம்,

குறும்படத்தையும் இலங்கைத் தமிழையும் புலம் பெயர் நாடுகளின் அவலங்களையும் (இது ஒரு சிறு துளி மட்டுமே. .) விளங்கிக் கொள்ள முடியாத – புரியாத பார்வையாளர்களுக்கு கீழ் வரும் விமர்சனங்கள் சில வேளை உதவினால் மகிழ்வேன்.

இதோ அவை உங்கள் பார்வைக்கு:-

நிழல் யுத்தம்

-அஜீவனின் குறும்படம் மீதான ஒரு பார்வை

அரசியலில் ஒரே கட்சியில் உள்ளவர்களுக்குள் நிழல் யுத்தம் நடைபெறுவதுண்டு. அஜீவன் தந்திருப்பதோ குடும்பத்திற்குள் நடைபெறும் நிழல் யுத்தம்

புலம்பெயர் வாழ்வில்தான் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் அஜீவன்.

ஒரே வீட்டில் வாழும் திருமணம் செய்யப்போகும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் தங்களுக்குள் புரியும் ஒரு யுத்தம்.

நாயகியாக வரும் ராதிகாவின் பார்வையும், முகபாவமும்; விரக்தியைக் காட்டுவதால் கதைக்கு நன்றாக ஒத்துப் போகின்றது. ஆனால் இதைத் தவிர வேறு பாவங்கள் இந்த முகத்தில் பார்க்க முடியாது என்ற தோரணையில் நிழல் யுத்தத்தில் அவர் வலம் வருவது ஒரு குறையே. பிறந்தநாளுக்குத்தான் அந்தப்பரிசு என்று வாங்கி வைத்திருக்கும் அந்தப் பரிசை பாலகிருஸ்ணன் எடுத்து எறிந்து உண்மை நிலையை விளக்கும்போது குறைந்த பட்சம் ஒரு புன்னகையையாவது அவர் தந்திருக்க வேண்டாமோ ? கோயிலுக்குப் போவதற்காக தன்னை அலங்கரிக்கும் போதும் முகத்தில் விரக்தியைக் காட்டவேண்டிய கட்டாயம்தான் என்ன ?

வெள்ளிக்கிழமை கோயிலுக்குக் கூட்டிச் செல்லாததற்கு “சாமி என்னப்பா ஓடவே போகுது ? ‘

(கடவுள் என்ன ஓடியா போய் விடுவார். ? ) என்று சமாளிப்பதும், ராதிகா பிரச்சனையைத் தொடங்கும் போது நாட்காட்டியில் பெளர்ணமியா, அமாவாசையா என்று பாலகிருஸ்ணன் பார்ப்பதும் அருமையான காட்சிகளாக வந்திருக்கின்றன.

வேலைத் தளத்தில் நடக்கும் பிரச்சினைகள், அல்லது பாலகிருஸ்ணனின் வேலையிடத்தில் உள்ள அவருக்கான வேலை அழுத்தங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. அடுத்தகாட்சியில் வேலை செய்யிற இடத்திலைதான் “வெள்ளைக்கார நாய் குலைக்குதெண்டு பாத்தால்….இஞ்சை வந்தால் நீ.. ஷ (வெள்ளைக்கார நாய் குரைக்கிறது என்று பார்த்தால்,. . . . . . இங்கு வந்தால் நீ . . .) என்ற வாசகங்களாலேயே முதற்காட்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கதவு திறக்கும் ஓசை, பாத்திரத்தோடு பருப்பு கருகும் ஓசைஇ குழாயால் தண்ணீர் ஓடும் ஓசை என்று இயற்கையான சத்தங்களோடு நிழல் யுத்தத்தில் ஒன்றிப்போனால் திடாரென பின்னணி இசை பெரிய சத்தத்தோடு வந்து யதார்த்தத்தை விலக்கி வைக்கின்றது.

பாத்திரங்களை இயற்கையாகவே உரையாடவிட்டிருக்கின்றார் பாலகிருஸ்ணன். பாராட்டுக்கள்.

கமரா, படத்தொகுப்பு என்பன அஜீவனுக்கு அருமையாக வந்திருக்கின்றன. இந்தத் துறையில் அவருக்கான அனுபவங்களை அவை கட்டியம் கூறுகின்றன.

மொத்தத்தில் புலம் பெயர் வாழ்வில் எங்களவர்களின் குடும்பச் சண்டையை அழகாகப் படம்பிடித்துத் தந்திருக்கின்றார்கள் அஜீவன் குழுவினர். இவர்களிடமிருந்து மேலும் பல படைப்புக்கள் வரவேண்டும். நாம் அதைப் பார்த்து மகிழ வேண்டும்.

இறுதியாக ஒரு கேள்வி – இந்தக் குறும்படத்தின் மூலம், கணவன் பிழை செய்தாலும், உங்களைக் குறை சொன்னாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் பெண்களே அவர்களை அனுசரித்துப்போங்கள் என்றா சொல்ல வருகிறீர்கள் ? உங்களுக்கு அசாத்தியத் துணிச்சல்.

நேற்று எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. எதிர் முனையில் எனது நண்பன். “இண்டைக்கு எங்கடை வீட்டிலை பருப்பு சட்டியோடை கருகிப் போச்சுதுஷ

( இன்று எங்கள் வீட்டில் பருப்பு, (சட்டி) பானையோடு கருகிப் போயிடுச்சு) என்றான். அவன் வீட்டிலும் நிழல் யுத்தம்.

யேர்மனியிலிருந்து

முல்லை

அஜீவனின் நிழல்யுத்தம் குறும்படம் எனது பார்வையில்…

சூரிய உதயத்தையோ அல்லது அஸ்தமனத்தையோ காண முடியாமல் பல புலம் பெயர் தமிழர்களின் வாழ்வு தொழிற்சாலைகளுக்குள்ளும் உணவு விடுதிகளுக்குள்ளும் கரைந்து கொண்டிருப்பது மனதைப் பிசையும் உண்மை. நிழல்யுத்தம் குறும்படம் தொடங்கிய போது எந்த வித ரம்மியமான சூழ்நிலையும் இல்லாத இயந்திரங்களின் நடுவே வேலை செய்யும் எம்மவர் ஒருவரைப் பார்த்ததும் மெல்லிய சோகத்தனம்மனத்தில் தோன்றத்தான் செய்தது.

ஆனால் எதிர்பார்த்த மாதிரி இல்லாமல் கதை சற்று வேறு கோணத்தில் திரும்பியது.

ராதிகா வானொலியில் பாட்டைப் போட்டு விட்டுச் சமைக்கும் விதமும் கறியை கையில் ஊற்றி சுவை பார்க்கும் விதமும் மிகவும் யதார்த்தமாகவும் ராதிகாவின் முகம் ஏதோ ஒன்றை இழந்த அதிருப்தியான தன்மையைக் காட்டுவதாகவும் அமைந்திருந்தன.

குடும்பத்தில் வரும் குழப்பங்களுக்கு சிறு பொறியொன்றே போதும். இங்கு அது நண்பனின் வடிவில் பஞ்சாபியாக வந்திருந்தது.

ஆனாலும் ஒரே ஒருநாள் வரும் பஞ்சாபி மட்டும் மனதை அந்தகாரத்துக்குள் தொலைத்து விட்டுக் குமுறி, கறியை எரிய விடுமளவுக்கு பாரதூரமானதாக இருக்காது. அந்த ஒரு சம்பவம் ஏற்கெனவே அங்கு சந்தேகம் வெறும் பொறியாக இல்லாமல் தீப்பிடிக்கவே தொடங்கியிருப்பதற்கு ஆதாரமாக அமைந்திருந்தது.

புரிந்துணர்வு என்ற ஒன்றுக்கு வருவதற்கான புரிதல் நிலைக்கே அவகாசம் இல்லாமல் அவர்களையும் தாண்டிய குடும்பச் சூழ்நிலைகளால் பணம் என்ற ஒன்றைத் தேடி வேலை வேலை என்று ஆண் திரியும் போதுஇ ராஜவாழ்க்கை, காதல் கணவன்… என்ற கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வந்து தனிமையே துணையாகி அதனால் ஏற்படும் விரக்தியில் பெண் வாடிக் கொண்டிருப்பது.. புலத்தில் இன்று நேற்றல்ல. இது தொடர்கதையாய்.. தொடர்கிறது. அதன் ஒரு பதிவுதான் நிழல்யுத்தம்.

இயந்திரங்களின் நடுவே இயந்திரமாகிப் போனவர்தான் பாலகிருஸ்ணன். அவரை மணம் செய்து கொள்ள என்று தாய்நிலத்திலிருந்து வந்து அவரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா.

இவர்களுக்கிடையேயான நிழல்யுத்தம் எமது புலம் பெயர் சமூகத்தின் ஒரு பிரதிபிம்பம்.

இந்தப் படம் பார்த்து ரசிப்பதற்கான வெறும் குறும்படமாக மட்டுமாக இல்லாமல் புலம்பெயர்ந்த குடும்பங்களில் தொடர்கதையாகும்

நிழல்யுத்தங்களின் காரணங்களைக் கண்டு திருந்திக் கொள்ள ஏதுவான கருவியாகவும் இருக்குமென நம்புகிறேன்.

தம்மைத்தாமே புரிந்து கொள்ளாத.. திருத்திக் கொள்ளக் கூட முயலாத நிலையில் உள்ள தன்மைகள் கொண்ட பாத்திரங்களை இப்படத்தில் கண்டு கொள்ள முடிந்தது. இது பார்ப்பவர்கள் மனதில் சிந்தனையைத் தூண்டி அவர்தம் பிழைகளை உணர வைக்குமென்றே நம்புகிறேன்.

உதாரணமாக பாலகிருஸ்ணன் களைத்துத்தான் வீடு திரும்புகிறார். இல்லை என்று சொல்வதற்கில்லை. அவருக்கு இந்த வாழ்க்கை சில வருடப் பழக்கமாகி விட்டது. ஆனால் அவர் மனைவி ராதிகாவோ சுற்றம் சூழலை விட்டு இப்போதான் வந்திருக்கிறாள். கணவனில் இருந்து தனிமை வரை அத்தனையும் புதிது. அவள் மனநிலையை உணர்ந்து கொள்ளும் தன்மையில் பாலகிருஸ்ணன் இல்லை.

தனியே பஞ்சாபி விடயத்தைப் பார்த்து விட்டு அவளைத் திட்ட முடியாது.

நான் மேலே குறிப்பிட்டது போல ஒரே ஒருநாள் வரும் பஞ்சாபி மட்டும் மனதை அந்தகாரத்துக்குள் விட்டுக் குமுறி கறியை எரிய விடுமளவுக்கு பாரதூரமானதாக ஒரு போதும் இருக்காது. அந்த ஒரு

சம்பவம் ஏற்கெனவே அங்கு சந்தேகம் வெறும் பொறியாக இல்லாமல் தீப்பிடிக்கவே தொடங்கியிருப்பதற்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது.

அதற்கான காரணம் எங்கே என்று தெரிய வேண்டும். அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய வேறு சம்பவங்கள் அங்கு நடந்திருக்க வேண்டும்.

பாலகிருஸ்ணன் அதற்கான சரியான விளக்கங்களை அங்கு அவளுக்குக் கொடுக்காதிருந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் ‘கள்ளம் பிடிபட்டுப் போச்செண்டு.. … . ‘ ( உங்கள் திருட்டுத்தனம் பிடிபட்டுவிட்டது ) என்ற வார்த்தைகளை அவள் கொட்டியிருக்கத் தேவையில்லை.

‘வேலையிடத்தில் அவன் நாய் மாதிரி… இங்கை வந்தால் நீ வெறி பிடிச்ச நாய் மாதிரிக் கத்திறாய்… ‘ (வேலை செய்யும் இடத்தில் அவன் நாய் போல் எரிந்து விழுகிறான். நீ இங்கு வெறிபிடித்த நாய் போல் எரிந்துவிழுகிறாய்.)

இவை பல ஆண்களின் வாயில் இருந்து வரும் அநாகரிகமான வார்த்தைகள்தான். ஆனால் அந்த வார்த்தைகள் எந்தளவு தூரத்துக்கு ஒரு மனைவியைப் பாதிக்கும் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.

நண்பன் வீடு மாற உதவி செய்தவன் மனைவி காத்திருப்பாள் என்பதை எண்ணியிருந்தால் ஒரு தடவை தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது நிலையை அவளுக்கு விளக்கியிருக்கலாம்.

நான்கு சுவர்களுக்குள்ளான தன்னந்தனியான அந்தக் காத்திருப்பு என்பது அந்தப் படத்தில் காட்டியதையும் விட- மனதில் அதி விரக்தியையும் வேதனையையும் வெறுப்பையும் கொடுக்கக் கூடிய ஒன்றாகும்.

போகும் போதாவது இன்று நண்பனுக்கு உதவி செய்ய வேண்டிய பிரச்சனை ஒன்று உள்ளது. நான் வரத் தாமதமாகலாம் என்ற முன்னறிவிப்பைக் கொடுத்துச் சென்றிருக்கலாம். எனக்கு மட்டுந்தான் பிரச்சனை. நீ இவைகளை அனுசரி என்பது போலல்லவா பாலகிருஸ்ணனின் செயல்கள் அமைந்துள்ளன.

இப் படத்தின் மூலம் ஆண்கள் இப்படியான தவறுகள் பலதைத் தாம் செய்கிறோம் என்பதை உணர்ந்து தம்மைத் தாமே திருத்திக் கொள்வார்களேயானால் அதற்கான நன்றி அஜீவனையே சென்றடையும்.

வேலை முடிந்து வீட்டுக்கு பாலகிருஸ்ணன் வந்த போது கறி எரிந்து சட்டியும் கரியாகத் தொடங்கியிருந்தது.

பாலகிருஸ்ணனின் தலையாட்டல் இது இன்றைக்கு மட்டுமல்ல அடிக்கடி நடந்து அவனை வெறுப்பூட்டியிருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறது.

அந்த சந்தர்ப்பத்திலும் சரி, காத்திருந்து காத்திருந்து அலுப்பாகிஇ வெறுப்பாகி,… வெளிச் செல்லும் உடையுடனேயே படுக்கையில் கோபமாகப் படுத்திருந்த மனைவியிடம் சாட்டுச் சொல்லும் போதும் சரி பாலகிருஸ்ணனின் நடிப்பு யதார்த்தமாக அமைந்திருந்தது.

ஆனால் கட்டிலில் சாட்டுச் சொல்லும் போது கூட அவர்களுக்கிடையேயான உறவு சற்று எட்ட நிற்பது போலவே தோன்றுகிறது.

அந்தச் சந்தர்ப்பத்தில் பாலகிருஸ்ணன் இன்னும் சற்று ஆதரவாக ராதிகாவை நெருங்கியிருக்கலாம்.

காலை அவள் கண்ணாடி கழுவிக் கொண்டிருந்த நேரத்திலிருந்து இந்த நிமிடப் பொழுது வரை அவள் தன்னந்தனியாகத்தான் அந்த வீட்டில் இருந்திருக்கிறாள்.

தொலைபேசி கூட இயங்கவில்லை. அவளுக்கு இப்போ வேண்டியது பாலகிருஸ்ணனுக்குக் கிடைக்க வேண்டிய உடல் ஆறுதலை விடப் பன் மடங்கு அதிகமான மன ஆறுதலும் அன்பான அரவணைப்பும். இப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இதை ஒவ்வொரு பார்வையாளனாலும் புரிந்து கொள்ள முடியும்.

ஒருவரின் தவறை மீண்டும் மீண்டும் ஒரு குற்றச்சாட்டுப் போல சுட்டிக் காட்டுவதை விட ஒரு கதை மூலமோஇ படம் மூலமோ எடுத்துக் காட்டிப் புரிய வைப்பது மிகவும் ஆரோக்கியமானதும் பயனானதும். அந்தப் புரிவில் அவர்களுக்குத் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிட்சயம் தோன்றும். அந்த வகையில் அஜீவனின் இந்தப் படைப்பு புலம் பெயர் சமூகத்துக்குக் கிடைத்த ஒரு அரிய படைப்பு. இன்றைய காலத்தின் ஒரு பதிவும் கூட. இதில் ஒரு பெரிய பிரச்சனை சில நிமிடங்களுக்குள் மிகவும் யதார்த்தமாக முன் வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் மற்றைய விடயங்களை ஆராய்ந்தால் இயக்கம், தொழில் நுடபம் போன்ற விடயங்களில் மிகுந்த அவதானம் செலுத்தப் பட்டிருப்பது தெரிகிறது. தேவையற்ற விரிசல்களோ, ஒடிசல்களோ ஏற்படாதவாறு கன கச்சிதமாக வெட்டல்களும், ஒட்டல்களும் செய்யப் பட்டுள்ளது. இது இந்தத் துறையில் அஜீவனுக்குள்ள அனுபவத்தையும் திறமையையும் காட்டுகிறது. கண்டிப்பாக அவரைப் பாராட்ட வேண்டும் என்றே தோன்றுகிறது. உரை வடிவமும் எந்த வித செயற்கையும் கலக்காமல் மிகவும் யதார்த்தமாகவே அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.

காரிலே போகும் போது இப்படிச் சண்டை போடுகிறார்களே..! ராதிகா இந்தக் கட்டத்தில் பொறுமை காக்காலாமே..! ஒரு பெரிய விபத்துக்கு இது வழியாகலாமே..! என மனசு அந்தரப் படுகையில் விபத்து நடப்பதாகக் கனவு- நன்றாகவே அமைந்துள்ளது.

இன்னும் இப்படத்துக்குள் நிறையவே தேடலாம். புரியலாம். படத்தின் வெற்றிக்குப் பாத்திரமான ஒவ்வொரு படைப்பாளிக்கும் சமூகத்தின் சார்பாக நிறைந்த பாராட்டுக்கள்.

அஜீவனிடமிருந்து சமூகப்பிரக்ஞை நிறைந்த இப்படியான படங்கள் இன்னும் வரும் என எதிர்பார்க்கிறேன்.

சந்திரவதனா செல்வகுமாரன்

யேர்மனி.

30.7.2003

Thanks: http://www.yarl.com/forum/viewtopic.php ?t=553

Series Navigation

அஜீவன்

அஜீவன்