விருதுகள், பரிசுகள் – சில கேள்விகளும், குறிப்புகளும்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது பல எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

அது நாவலே இல்லை, அது தொடர்கதையாக எழுதப்பட்டது என்பதலாயே அது நாவலே இல்லை எனப்

பல வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதில் ஜெயமோகன் எழுதி தீம்தரிகிட,திண்ணையில் வெளியான

விமர்சனம் இத்தகைய விமர்சகர்களின் விமர்சனம் எத்தனை அபத்தமாக உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

சிறு பத்திரிகை இலக்கிய வாதிகள் வைரமுத்து மீது கடுமையான விமர்சனம் வைக்கின்றனர். அவர் பெரு முயற்சி

எடுத்து இதைப் பெற்றார் என்று. ஒட்டு மொத்தமாக இந்தப் பரிசு கொடுத்தது குறித்து கூக்குரலிடுகின்றனர்.

அதே சமயம் ஒரு தெளிவான ஆழமான பிரதி வாசிப்பின் அடிப்படையிலான அந்த நாவல குறித்த ஒரு விமர்சனத்தை இதுவரை நான் படிக்கவில்லை. இந்தளவு சர்ச்சிக்கப்படும் நாவலைக் குறித்து வெறும்

அபிப்பிராய உதிர்ப்புகளைத் தாண்டி ஒரு காத்திரமான விமர்சனம் ஏன் வரவில்லை ? ஒரு காத்திரமான, பொருட்படுத்தக்க்கூடிய விமர்சனம் எழுத முயற்சிப்பதை விட வெறும் அபிபிராயங்கள் மூலம் நிராகரிப்பதையே

விமர்சனம் என்று கருதும் போக்கும் இங்கு உள்ளது. சமீபத்தில் ஒரு விமர்சகர் வைரமுத்து, சுந்தர ராமசாமி,

யூமா வாஸுகி எழுதிய படைப்புகள் பரீசிலிக்கபட்டாலும், மூன்று பேர் குழுவில் இருவர் வைரமுத்து எழுதியதை

தெரிவு செய்ததால் அவருக்கு கிடைத்தது என்று தனக்கு கிடைத்த தகவல்களைக் கூறினார். கள்ளிக்காட்டு

இதிகாசம், ரத்த உறவுகள், ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் – இம்மூன்றையும் ஒப்பிட்டு இப்பரிசு எந்த நூலிற்கு

வழங்கப்படிருக்க வேண்டும் என்பதை விரிவாக தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிடப்படும் போதுதான்

விவாதம் வேறொரு கட்டத்திற்கு செல்லும்.

சாகித்ய அகாதமி பரிசுகள் சர்ச்சைக்குள்ளாகின்றன. இன்னாருக்கு ஏன் தரப்பட்டது/தரப்படவில்லை

என்று கேள்விகள் எழுகின்றன.ஆனால் பிற பரிசுகள் இவ்வளவு கடுமையான விமர்சனத்திற்குள்ளாவதில்லை.

சாகித்ய அகாதமியின் போக்குகளில், நடைமுறைகளில் மாற்றம் வேண்டும். ஆனால் பிற பரிசுகள் குறித்து

ஏன் கேள்விகள் எழுப்படுவதில்லை ? யார் யார் பெயர் பரீசலைனையில் இருந்தது, எந்த அடிப்படையில்

யார் தேர்ந்தெடுத்தது போன்ற தகவல்கள் ஏன் வெளியிடப்படுவதில்லை. சாகித்ய அகாதமியை விமர்சிக்கும்

சிறு பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் கீழ்க்கணட விதிகளை பரிசு(கள்)/விருது(கள்) வழங்கும் அனைத்து

அமைப்புகளும் பின்பற்ற வேண்டும் என்று கோருவார்களா ?. அவ்வாறு பின்பற்றாத அமைப்புகளின் விருதுகளை

ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பார்களா ?

1,பரிசு/விருதிற்கு பரீசிலிக்கப்பட்டவர்கள் பட்டியல், பரிந்துரையாளர்கள் பெயர்களுடன்

வெளியிடப்பட வேண்டும்.இறுதிச் சுற்றில் பரீசிலிக்கப்பட்ட நூல்களின் பட்டியலும்

வெளியிடபடவேண்டும்.

2, எந்த அடிப்படையில் யார் யார் தேர்ந்தெடுத்தனர் என்பதையும் வெளியிட வேண்டும்

3, பரிந்துரை செய்தவர்கள் பரிந்துரையாளர்களுடன் தொடர்புடையவர்கள் எனில் எந்த விதத்தில்

என்பதை தெரிவிக்க வேண்டும் (உ-ம் நூலாசிரியர் அவரது நூலை வெளியிட்ட பதிப்பகத்தை நிறுவியவர்

அல்லது அதில் பங்குதாரரை பரிந்துரை செய்தால் இதை தெரிவிக்க வேண்டும்). இது பரிசு/விருது

வழங்கும் அமைப்பிற்கும் பொருந்தும்.

4, பரிசு/விருது தரும் அமைப்பினைப் பற்றிய முழு விபரங்கள் – அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு, அதில்

யார் உறுப்பினர்கள், அதன் சட்ட பூர்வ நிலை என்ன (அறக்கட்டளையா, பதிவு செய்யப்படாத அமைப்பா ?

குழுவா ?), விருது/பரிசுத் தொகை அமைப்பின் நிதிகளிலிருந்து தரப்படுகிறதா அல்லது வேறு அமைப்புகள்

தரும் திட்டத் தொகை/நிதி உதவியிலிருந்து தரப்படுகிறதா- அப்படியாயின் முழு விபரங்கள்.

சாகித்ய அகாதமியை விமர்சிப்போரில் எத்தனை பேர் இது போன்ற விதிகளை ஏற்க தயாரக

உள்ளார்கள். பரிசு/விருது வழங்கும் பெரும்பாலான அமைப்புகள் இது போன்ற விதிகளை

பின்பற்றுவதில்லை என்று அவர்கள் பதில் தரலாம். சாகித்ய அகாதமியை விமர்சிக்கும் நீங்கள்

ஏன் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கக் கூடாது என்பதே என் கேள்வி. சாகித்ய அகாதமியின்

பரிசுத் தெரிவுக் குழுவில்ல்லூள்ளோரை விமர்சிக்கும் நீங்கள் உங்களை சிபாரிசு செய்த்து யார் ?

அவர்களின் தகுதிகள் என்பதையும் உலகிற்கு அறிவிக்கலாமே ? அத்துடன் உங்களுடன் வேறு யார்

யார் பெயர்கள் பரிசீலைனையில் இருந்தன என்பதையும் அந்த அமைப்பு குறிப்பிட வேண்டும் என்று

கோரலாமே ?

இது போன்ற கடுமையான விதிகளை யாரும் பின்பற்றுவதில்லை, பின்பற்றவும் முடியாது என்று சிலர்

கூறலாம். எது எப்படியாயினும் சாகித்ய அகாதமியை விமர்சிப்போர் குறைந்த பட்சம் தாங்கள் பரிசுகள்/

விருதுகள் விஷயத்தில் கடைப்பிடிக்கும்/கடைப்பிடிக்கயுள்ள நெறிமுறைகள/வழிகாட்டுதல்கள் இவை என்று

சிலவற்றை அறிவிக்கலாமே ? இப்போதாவது அதைச் செய்து முன்மாதிரிகளாகத் திகழலாமே. இத்தனை

ஆண்டு காலம் சாகித்ய அகாதமியின் பரிசைச் சர்சித்தவர்கள். பல ஆண்டுகளில் பரிசு பெற்றவர்கள் அதற்கு

தகுதியில்லை என்றவர்கள் இந்தக் கோணத்தில் ஏன் செயல்படவில்லை.

வைரமுத்து இப்பசிரினைப் பெற பெரு முயற்சிகள் எடுத்ததாகவும், அதன் பின்னரே இதைப் பெற முடிந்தது

என்றும் எழுதப்பட்டுள்ளது.தன் நூல்கள் சில முந்தைய ஆண்டுகளில் இப்பரிசிற்காக பரீசிலிக்கப்பட்டதாக

அறிகிறேன் என்று வைரமுத்து தீராநதி பேட்டியில் கூறியுள்ளார். வைரமுத்து முயற்சி செய்தார் என்கிறார்கள்,

அது ஒரு குற்றம் போலவும் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் எந்த சிறுபத்திரிகையாளரும் எந்த விருதுக்கும்/ பரிசுக்கும் முயலவேவில்லை, அவர்கள் முயற்சிக்காமல் அவற்றைப் பெற்றார்கள் என்பதை யாராலும் உறுதிபடச்

சொல்ல முடியுமா. மின்னஞ்சலில்,நேர்ப் பேச்சில் பெயர் தர இயலாது, வெளியே சொல்ல வேண்டாம் என்ற

ந்பந்தனைகளுடன் தரப்படும் தகவல்கள் சிறுபத்திரிகைகளைச் சேர்ந்தவர்களும் பரிசுகளைப் பெற சகவ

வழிகளையும் மேற்கொள்கிறார்கள் என்றே கருத வழிவகுக்கின்றன. இதை ஏன் எழுதுவதில்லை, வைரமுத்து

மட்டும் ஏன் விமர்சிக்கப்படுகிறார் என்றால் தரப்படும் பதில்கள் சுவார்ஸ்யமானவை.

சிறுபத்திரிகையுலகில் புரவலர்-அண்டி நிற்போர் (patron-client) உறவு நிலவுகிறது, கவனிக்க இந்த உறவு

மட்டுமே நிலவுவதாக நான் குறிப்பிடவில்லை, சிறு பத்திரிகையுலகில் மட்டுமே நிலவுகிறது என்றும் குறிப்பிடவில்லை.புரவலர் மனம் கோணாமல் நடந்து கொண்டால் பல நன்மைகள் உண்டு. அண்டி நிற்போர் அங்கீகாரம், நூல் வெளியீடு உட்பட பலவற்றிற்கு புரவலரை ஏதேனும் ஒரு விதத்தில் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.புரவலர் என்பது ஒரு குழ/அமைப்பாகவும் இருக்கலாம். (சில சமயங்களில் புரவலர்களுக்கே புரவலர்களை அறிமுகப்படுத்த, நிதி உதவி பெற்றுத் தர சில திறமைகள், தகுதிகள் தேவையாகின்றன. எனவே ஒருவருக்கு புரவலராக இருப்பவர் இன்னொருவரை/ அமைப்பை அண்டி நிற்பவராகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த புரவலர்- அண்டி நிற்பவர் உறவை பல கோணங்களில் விரிவாக அணுக முடியும்.).

அதே சமயம் விமர்சனமிருப்பினும் அதை வெளியிட்டு உறவைக் கெடுத்துக்கொள்வானேன், நாளைக்கே விம்ரசிக்கப்படுவவரின் உதவி எதற்காவது தேவைப்படும் என்கிற முன் ஜாக்கிரதை காரணமாக தனிப்பட்ட பேச்சுகளில் இடம் பெறும் கருத்துக்கள் அச்சில் வருவதில்லை. இது தவிர ஒரு சிறு பத்திரிகை எழுத்தாளர் பரிசு/விருது பெற முயற்சி மேற்கொண்டால், அதை விமர்சிக்க மாட்டார்கள் ஆனால் வைரமுத்துவை மட்டும் விமர்சிப்பது ஏன் என்று கேட்டதற்கு, ஒரு எழுத்தாளர் சொன்ன பதில் அந்த சிறுபத்திரிகை எழுத்தாளர் மீது எனக்கு மதிப்பிருந்தால் அவரை விமர்சித்து எழுத மாட்டேன், ஏனெனில் அவர் பரிசு பெற்றால் , சிறுபத்திரிகைச் சூழலைச் சேர்ந்த ஒருவர் பின்பு பரிசு பெற சாத்தியக்கூறு ஏற்படுகிறது, ஆனால் அகாதமி வைரமுத்து போன்றவர்களுக்கு பரிசு கொடுப்பது சிறுபத்திரிகை இலக்கியவாதிகளுக்கு நம்பிக்கையளிப்பதாக இல்லை. எனவே அதை விமர்சிப்பது தவிர்க்க இயலாதது என்றார். ஒரு இலக்கியவாதி ஒரு விருது தொடர்புடைய சிலருக்கு விருந்தளித்த செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்ட ஒருவர் இதை பொதுவில் எழுதி, அவரை விமர்சிக்க மாட்டேன் என்றார். ஏனென்று கேட்டதற்கு இதில் ஏதும் புதுமை இல்லை, இப்போதெல்லாம் இவை சாதாரணமாகிவிட்டன என்றார். ஆனால் அவர் சொல்லாத இன்னொரு காரணம் பின்னர் தெரிய வந்தது – அந்த விருது கிடைத்துவிட்டால் அந்த எழுத்தாளர் , பல விருதுகள்/பரிசுகளுக்கு பரிந்துரைக்க தகுதியானவராகிவிடுவார். எனவே இப்போது விமர்சிக்கப் போய் நாளை ஏதேனும் விருது/பரிசிற்கு பரிந்துரைக்கப்படும் வாய்ப்பை இழப்பானேன் என்ற காரிய வாதக் கண்ணோட்டம்தான் முக்கியமான காரணம்.

எனக்கு இன்னொரு விஷயமும் தெரிய வந்தது- விருதுகள்/பரிசுகளுக்கு பெயர் பரிந்துரைக்கப்பட

வேண்டுமெனில் அவ்வாறு பரிந்துரைப்போருடன் நட்பாக இல்லாவிட்டாலும் எதிரியாக/எதிர் முகாமில் இல்லாமல்

இருப்பது முக்கியம். அல்லது அவர்கள் மீது கடும் விமர்சனம் வைத்திருக்கக் கூடாது. இது போல் சில ‘நெறிமுறைகளை ‘ கடைப்பிடித்து அனவருக்கும் இனியனாக இருப்பது நல்லது என்றார் நண்பர் ஒருவர். அவர்

கூறினார், எனக்கு விமர்சனமிருந்தாலும் அதை எழுதுவதில்லை, ஏனெனில் இங்கு ஈகோ அடிப்படையிலான

மோதல்களுக்கு இலக்கிய சாயம் பூசப்படுகிறது, பல சமயங்களில் இரு தரப்பாரையும் விமர்சிக்க வேண்டி வரும்,

இதனால் இரு தரப்பினரும் உங்களை விரும்ப மாட்டார்கள், பேசாமல் நானுன்டு, என் எழுத்துண்டு என்று இருப்பதே நல்லது என்றார். இப்படி பல தகவல்கள் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின்

பேரில் தரப்படுகின்றன. இவை அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை. அதே சமயம் ஏதோ

வைரமுத்து மட்டும் முயற்சி செய்வதாகக் கூறுவதும் பொருத்தமாயிராது என்றே தோன்றுகிறது. அதைவிட

அதிக மதிப்புடைய விருதிற்கு இன்னொருவர் லாபி செய்வது எந்த விதத்தில் சரியாக இருக்க முடியும்.

எனவே விழுமியங்களின் அடிப்படையில் பார்த்தால் ஒரு சாரார் மட்டுமே சரியாகச் செயல்படுவதில்லை என்று

கூறுவது சரியென்று தோன்றவில்லை. குழு மனப்பான்மை உட்பட பல காரணங்களால் சார்ந்திருக்கும்

குழ மீதான விமர்சனங்கள் எழுதப்படுவதில்லை. அதே சமயம் வைரமுத்துவை கூட்டாக நிராகரிப்பது பலவிதங்களில் சிறுபத்திரிகை இலக்கியவாதிகளுக்கு உதவுகிறது. அகாதமிக்கு எதிராக ஒரணியில் பலர் இருப்பது போன்ற தோற்றத்தை அது தருகிறது. இங்கு இலக்கிய அக்கறையைவிட குழு அக்கறையே முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் ஒரு நூல் பரிசுக்கு தகுதியுடையதா என்பதை விட நூலாசிரியர் எந்தப் பக்கம் உள்ளார் என்பதே அதிக கவனிப்புள்ளாகிறது.

சுந்தர ராமசாமிக்கு பரிசு கிடைத்தால் இனி வரும் ஆண்டுகளில் சிறுபத்திரிகைகள் சார்ந்தவர்கள் பரிசு

பெற வாய்ப்பினை இது அதிகரிக்கும், வைரமுத்துவிற்கு தரப்பட்டது ஏமாற்றமளிக்கிறது, இந்தக் கடுமையான

விமர்சனங்கள் இனி வரும் ஆண்டுகளிலாவது இது போன்று நிகழ்வதை தவிர்க்க உதவும் என்ற நம்பிக்கைக்

காரணமாகவே இத்தகைய ஒரு கடும் கண்டனம் முன்னிறுத்தப்படுகிறது என்றார் சிறுபத்திரிகை இலக்கியவாதி

ஒருவர்.

எனவே சாகித்ய அகாதமி பரிசை தமிழ் இலக்கியச்சூழலின் அரசியல் பின்புலத்தில் வைத்து நோக்கப்பட்டால்

அதன் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளின் பின்புலம் தெளிவாகும். இந்த இலக்கிய அரசியலை மறைக்கவே வேறு

சில வார்த்தைகள் முன்வைக்கப்படுகின்றன என்று கூறுவது மிகையல்ல என்றே கருதுகிறேன். ஆனால் இந்தச் சொல்லாடல் பரிசு-விருது குறித்த சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புவதில்லை.தெரிதா கூறியதை பயன்படுத்தி இதைக் கூறினால் எது இல்லை என்று காட்டப்படுகிறதோ அதுவே அச்சொல்லாடலின் அடித்தளமாக உள்ளது

(In other words what is claimed to be excluded or irrelvant often forms the very base of the discourse). இங்கு விவாதம் வெறும் இலக்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் மட்டும் நடக்கிறது என்ற தோற்றத்தை தர முயன்றாலும் அது அவ்வாறில்லை.மாறாக பிறவே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தக் கோணத்தில் வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசம் குறித்த சர்ச்சையை அணுகினால் அது வேறு

சிலவற்றை புலப்படுத்தும். சிறுபத்திரிகை இலக்கிய அரசியலை சரியாகப் புரிந்து கொள்ள இது உதவும்.

ஆனால் அத்தகைய ஒரு பார்வை சிறுபத்திரிகைகளில் வெளிவந்தால்தான் ஆச்சரியமடைய வேண்டும்.

—-ravisrinivas@rediffmail.com

Series Navigation