கட்டியம் – உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ்

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

கோபால் ராஜாராம்


கட்டியம் : தொடர்பு முகவரிகள் :

V Arasu, No7 Dev apts, 24 Urur Olcott Kuppam Road, Besnat Nagar, Chennai 600 090 India email kattiyam @yahoo.com

Anton Ponrajah, Emmenmattstasse 15, Emmenburcke, Swizerland e-mail : aztt@blumail.ch

நாடகத்திற்காக ‘வெளி ‘ இதழ் பிரசுரிக்கப் பட்டு வந்தது. இப்போது, ‘கட்டியம் ‘ இதழ் வெளி வந்துள்ளது. முதல் இதழே மிக முக்கியமான பதிவுகளையும் விவாதங்களையும் தெளிவான திசையையும் கொண்டு வெளிவந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும். வெளி பத்திரிகை முக்கியமாக தமிழில் நாடக்ப் பிரதிகளை முன்னிறுத்தி செயல்பட்டது. நாடகம் பற்றிய பல கட்டுரைகள் வெளிவந்திருந்தாலும் சிறப்பான அம்சம் ‘வெளி ‘யின் நாடகப் பிரதிகளே. அசலாகவும் மொழிபெயர்ப்பாகவும் பல நாடகங்கள் ‘வெளி ‘யில் இடம் பெற்றன. ‘கட்டியம் ‘ ஆய்விற்கும், விமர்சனக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. மிகச் சிறப்பான வடிவமைப்பில் கவனம் செலுத்தியிருக்கும் ‘கட்டியம் ‘ குழுவினர் , கறுப்பு வெள்ளைப் படங்களை இன்னமும் நன்றாய்ப் பதிவு செய்திருக்கலாம்.

இதன் தலையங்கம் மிகப் பொறுப்புடன் எழுதப் பட்டுள்ளது. பல பாரிய கருத்துகளுக்குக் களமாகவும் அமைந்துள்ளது.

ஆய்வுக் கட்டுரைகளில் கா. சிவத்தம்பி ‘கூத்தும் நடனமும் ‘ என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கா சிவத்தம்பியின் வரலாற்றாய்வின் சிறப்புக்கு இன்னொரு உதாரணம் இந்தக் கட்டுரை. நடனத்தின் கூத்து ஆதிவடிவமாகக் காண்பது இன்னமும் விவாதிக்கப்பட வேண்டும். நடனமும், கூத்தும் கொண்டுள்ள ஒற்றுமைகள் பற்றி உடலசைவுகள் மற்றும் சிலபபதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் உரை இவற்றையும், பகுப்பு முறைகளின் அடிப்படையையும் கொண்டு சிவத்தம்பி விளக்குகிறார்.

இன்னொரு வரலாற்றுப் பதிவாக, கூத்து நடனத்தின் முன்வடிவம் என்பது போலவே , ‘ கம்பெனி நாடகமும் தமிழ் சினிமாவும் ‘ பற்றி தியோடர் பாஸ்கரன் எழுதியுள்ளார். இந்தத் தொடர்பு வெளிப்படையாய்த் தெரிகிற ஒன்று தான். மேடையிலிருந்து திரைப்படத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட மரபுகள் , தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்துள்ளன என்ற பாஸ்கரனின் விமர்சனம் கருதத்தக்கது. சொல்லப்போனால், மேடை நாடகங்களின் பலவீனங்களைச் சுவீகரித்துக் கொண்ட தமிழ் சினிமாவின் பலவீனங்களின் வேர்களைத் தேட வேண்டுமென்றால், மேடை நாடகங்கள் எப்படி உருவாயின என்பதும் பார்க்கப் படவேண்டும். மேடை நாடகங்களுக்கு ஒரு புறம் பாரம்பரிய கூத்து வடிவங்களும் , இன்னொரு புறம் நவீன உரைநடை மற்றும் பத்திரிகையியல் வெளிப்பாடுகளும் உந்துதலாய் அமைந்தன. அசலான வெளி நாட்டு நாடக முயற்சிகள் பின்பற்றப்படவில்லை. ஆனால் அவை வளர்ந்து நகரத்துப் பார்வையாளர்களின் பெருக்கத்திற்கு இணக்கமாய் ஆனபோது, பாரம்பரிய கூத்து வடிவங்கள் கைவிடப்பட்டு, உரையாடல் வெறும் வசன் அஒப்புவிப்பாய் மாறியதும் கருதப் படவேண்டும்.

சி மெளனகுரு ‘பின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப் புரிந்து கொள்ளல் – ஓர் ஆரம்ப முயற்சி ‘ என்ற ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். தெளிவான அணுகல். குழப்பம் ஏதும் இன்றி சிக்கலான பின்-நவீனத்துவ சிந்தனைகளை முன்வைத்தது மட்டுமின்றி இவை எப்படி கூத்தில் வெளிப்படுகின்றன என்பதையும் பதிவு செய்துள்ளார். மிக முகியமான கட்டுரை இது. ஆனால் பின் நவீனத்துவத்தின் ஐரோப்பிய வளர்ச்சியை , கீழை மண்ணில் பொருத்தும் போது சில இடறல்கள் வெளிப்படுகின்றன. உதாரணமாக நவீனத்துவம் என்ற ஐரோப்பியக் கருத்தாக்கமு, கீழை நவீனத்துவமும் எப்படி ஒன்று படுகின்றன, வேறுபடுகின்றன ? பெருங்கதையாடல், சிறுகதையாடல் பற்றிய ஐரோப்பியப் பிரிவு தமிழ்/ஈழ/இந்தியச் சூழல்களுக்குப் பயன்படாது. இந்தப் பிரிவினை நம் நாட்டில் வெகுவாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

செ ரவீந்திரனுடன் ஒளி அமைப்பு பற்றிய ஒரு நீண்ட உரையாடல் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஒளி அமைப்பு எப்படி நாடகத்தின் எழுதப்பட்ட பிரதிக்கு இணையாக செயல்படுகிறது என்பதை பல உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். இது போன்றே ஒப்பனை, ஒலி அமைப்பு, உடைகள் இவற்றின் முக்கியத்துவம் பற்றி எதிர்காலத்து இதழ்களில் கட்டியம் வெளியிட வேண்டும்.

‘கடலம்மா ‘ நாடகத்தின் பிரதியும் கட்டியத்தில் பிரசுரம் செய்யப் பட்டுள்ளது. ‘கடலம்மா ‘ மேடையேற்றம் சுவிஸ்ஸில் எழுப்பிய எதிர்வினை அலைகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன. நாடகத்தின் பிரதி, மேடையெற்றத்தில் தான் முழுமை பெறுகிறது என்றாலும் பல நாடகப் பிரதிகள் அவற்றிலேயே முழுமை பெற்று தனித்த இலக்கியச் சிறப்பும் கொண்டவையாய் விளங்குவதுண்டு. ‘சாகுந்தலம் ‘, டென்னசி வில்லியம்ஸ், ஆண்டன் செகாவ் ஆகியோரின் நாடகங்கள் தமிழில் சுஜாதாவின் நாடகங்கள் போன்றவை தன்னளவில் இலக்கியப் பிரதியாகவும் விளங்கத் தக்கவை. இது போன்ற பிரதிகளையும் கட்டியம் பதிவு செய்ய வேண்டும்.

மீடியா , மணிமேகலை, ராவணன் கூத்து நிகழ்வுகள் பற்றிய விமர்சனங்களும் இடம் பெற்றுள்ளன. நாடக ஆய்விற்கு மிக முக்கியமான வருகை இந்த இதழ். நாடகத்திலும் ஆய்விலும் அக்கறை கொண்ட அனைவரும் ஆதரிக்க வேண்டிய இதழ்.

*****

gorajaram@yahoo.com

***

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்