பசி என்னும் அரக்கன் (எனக்குப் பிடித்த கதைகள் – 28 -கிஷன் சந்தரின் ‘நான் யாரையும் வெறுக்கவில்லை ‘)

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

பாவண்ணன்


பட்டப்படிப்பு முடித்த பிறகு போக்கிடமற்ற நானும் என் நண்பர்களும் சத்திரத்துக்குப் பக்கத்தில் உள்ள மகிழ மரத்தடியிலும் ஏரிக்கரையிலும் வேலங்காட்டிலும் திரிவதும் பேசிக்கொண்டிருப்பதுமாகக் காலத்தைக் கழிப்போம். மகிழமரம் என்பது சந்திப்புப் புள்ளி. தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்து சேர்ந்து விட்டால் ஒரு சுற்று முடிந்ததாகக் கணக்கு. ஏன் அப்படி சுற்றினோம், அப்போது என்ன பேசினோம் என்பதெல்லாம் பெரிய கதை. அநேகமாக யாரும் சாப்பிட்டிருக்க மாட்டோம். இருக்கும் பழைய சோற்றை எங்களுக்குப் போட்டுவிட எங்கள் பெற்றோர்கள் முயற்சி செய்வதும் இல்லாத காரணங்களையெல்லாம் சொல்லி அதைத் தட்டிக்கழித்து அதை அவர்களையே சாப்பிட வைத்து விட்டு ஏமாற்றும் ஏப்பத்துடன் நாங்கள் வெளியேறி விடுவதும் மிகப்பெரிய நாடகம். இவ்வளவு தொலைவு கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தவர்களுக்கு வயிறாரச் சோறு போட ஒரு வேலை கிடைக்கவில்லையே என்று உள்ளூர நொந்து கொள்வோம். யார் மீது கோபத்தைக் காட்டுவது ? இந்தியாவின் பிரதமர் தொடங்கி, தமிழக முதல்வரைத் தொட்டு, உலகில் இருக்கிற எல்லாரையுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கோபத்தைக் கொட்டுவோம்.

எங்கள் சொந்தக்காரர் ஒருவர் யாராவது அந்தப் பக்கம் வந்துவிட்டால் அவர்கள் பார்வையில் படுவதே அவமானமாக இருக்கும். அடிக்கடி தொலைந்துவிடும் மாட்டைத் தேடிக் கொண்டு திரியும் பெரியப்பா ஒருவர் மரத்தடியில் நாங்கள் நிற்பதை ஓரக்கண்ணால் பார்த்தபடியே பக்கத்தில் நிற்கிற ஆளிடம் ‘இந்த மாடுங்கள வளக்கறதும் போதும், அதுங்கள திரிய உட்டுட்டு பின்னால அலைய உடறதும் போதும்டா. தீனி தின்னற மாடுங்களுக்கு அறிவே இருக்கறதில்லடா ‘ என்பார். அவர் வார்த்தைகள் எங்களையே தைப்பதைப் போல இருக்கும். உள்ளே எரிந்து கொண்டிருக்கும் கோபம் மேலும் பொங்கும்.

மகிழமரத்துக்கு எதிரே கிராமணி ஓட்டல். வடைகறியின் மணமும் பூரி கிழங்கின் மணமும் தெருவரைக்கும் வீசும். அலைந்த களைப்புக்கும் வெற்று வயிற்றுக்கும் தணியாத கோபத்துக்கும் ஒரு தேநீர் குடித்தால் இதமாக இருக்கும் போலத் தோன்றும். ஒரு தேநீர் அப்போது இருபது பைசா. அவ்வளவு பெரிய தொகை யாரிடமும் இருக்காது. ஐந்து பைசா, பத்து பைசா இருந்தால் பெரிய விஷயம். எப்படியோ ஒரு தேநீருக்குச் சில்லறைகளைத் திரட்டி விடுவோம். நான்கு பேர் ஒன்றாகச் சென்று தேநீர் எப்படி கேட்பது என்பது அசிங்கப்பட்டுக் கொண்டு முதலில் யாரேனும் ஒருவர் சென்று சில்லறைகளைக் கொடுத்துத் தேநீர் வாங்கிப் பருகத் தொடங்குவது என்றும் நாலைந்து மிடறுகள் குடிப்பதற்குள் தற்செயலாகச் செல்வதைப் போல மற்றவர்களும் ஒவ்வொருவராகச் சென்று பார்ப்பதென்றும் விளையாட்டு போல ஒருவர் கையில் உள்ள தம்ளரைப் பிடுங்கி மற்றவர்கள் பருகிக் கொள்வதென்றும் திட்டமிட்டுச் செயல்படுத்துவோம்.

ஓட்டலுக்குள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சிலருடைய இலையின் மீது பதியும் கண்களைத் தவிர்க்க இயல்வதில்லை. பலகாரங்களின் வகைகளும் மணமும் மலைப்பூட்டும். திரும்பும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் உடை, முகம், சாப்பிடும் விதம் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்லித் திட்டத் தொடங்குவோம். திட்டு மெல்ல மெல்லத் தணிந்து கிண்டலாக மாறும். அந்தத் திட்டுக்கும் கிண்டலுக்கும் அடிப்படையில் எந்தக் காரணமும் இல்லை என்பதும் பசியே அப்படிப்பட்ட காரணமில்லாத கோபத்தைத் துாண்டியது என்பதும் இப்போது புரிகிறது. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்று சொல்வதுண்டு. பசியைத் தாங்க இயலாதவர்களால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும். ஏட்டில் எழுதப்படும் ஆயிரமாயிரம் பக்கங்களாலும் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள வைக்க முடியாது.

பசியின் கொடுமையை விவரிக்கும் கதைகள் ஏராளம். உலகக் கதைகளில் சரிபாதிக் கதைகள் இவ்வகையானவை என்னும் கூற்று மிகையாகாது. பசி தொடர்பான எவ்வளவோ கதைகள் மனத்தில் அலைமோதினாலும் பசி துாண்டக் கூடிய நுட்பமான ஓர் உணர்வைச் சித்தரிக்கும் கிஷன் சந்தர் என்னும் உருது எழுத்தாளரின் கதையை மறக்கவே முடியாது.

இக்கதையில் நெடுநாட்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பரைச் சந்திக்கச் செல்கிறார் ஒருவர். திரைப்படங்களுக்குக் கதை எழுதித் தந்து கொண்டிருப்பதாக நம்பி வந்தவர் சகல வியாதிகளையும் குணப்படுத்தும் தைல பாட்டில்களை விற்றுக் கொண்டிருப்பவனாகப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஆனால் நண்பர் மிகவும் நம்பிக்கையுடன் காட்சி அளிக்கிறார். விரைவாக தைலவியாபாரத்திலேயே லட்சாதிபதியாகி விட முடியும் என்று சொல்கிறார். ‘இதுவரை எவ்வளவு பாட்டில்கள் விற்றிருக்கின்றன ? ‘ என்கிற கேள்விக்கு மூன்று மாதங்களில் மூன்று பாட்டில்கள் விற்றுள்ளதாகச் சொல்கிறார்.

பேசிக் கொண்டிருக்கும் போதே மற்றொரு நண்பர் வருகிறார். அவர் ஒரு துணிக்கடையில் வேலை செய்பவர். சீக்கிரமாக லட்சாதிபதியாகும் கனவு அவருக்கும் இருக்கிறது. அவர் வேறொரு திட்டத்தை முன்வைக்கிறார். அப்போது மூன்றாவது நண்பர் வருகிறார். அவர் வேலை தேடும் இளைஞர். அவரிடமும் விரைவாகவே லட்சாதிபதியாகும் திட்டமுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக இயங்குவதுதான் வெற்றிக்கு வழியென்று சொல்கிறார். ஏற்கனவே குழுவாக இயங்கி வெற்றி கண்ட அப்பாஸை உதாரணத்துக்குச் சொல்கிறார். திடுமென அவர் வார்த் தைக் தடிக்கின்றன. அப்பாஸைக் கண்டபடி திட்டுகிறார். வெறியேறிய குரலில் தாழ்த்திப் பேசுகிறார்.

எதிர்காலக் கனவுகள் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நண்பகலையும் தாண்டி மூன்றரை ஆகி விடுகிறது. மூன்று நண்பர்களையும் சாப்பிட அழைக்கிறார் வந்தவர். இருவர் தயாராக இருக்கும் சூழலில் ஒருவர் மறுத்து விடுகிறார். உடனே எல்லாரும் மறுத்துச் சொல்கிறார்கள். பசியே இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். ஆனாலும் நண்பர் விடவில்லை. வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார். எல்லாரும் அருகில் இருந்த உணவு விடுதிக்குச் சென்று சாப்பிடத் தொடங்குகிறார்கள். எல்லாரும் வேண்டும் மட்டும் கேட்டு வாங்கி வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

சாப்பாடு முடிந்ததும் இருவர் புறப்பட்டு விட எஞ்சியவருடன் காப்பி அருந்துகிறார் நண்பர். வேலையற்ற இளைஞர் அவர். சாப்பாடு வாங்கித் தந்தவரிடம் தணிந்த குரலில் மூன்று நாட்களுக்குப் பிறகு அப்போதுதான் சாப்பிட்டதாகக் கூறுகிறார் அந்த இளைஞர். நரம்புகள் வலுவேற புத்துணர்ச்சேயுடன் காணப்படுகிறார் அவர். அப்போது நண்பர் அவரிடம் ‘இப்போது சொல்லுங்கள். அப்பாஸின் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்புக்குக் காரணம் என்ன ? ‘ என்ற கேட்கிறார். இளைஞர் அமைதியான குரலில் நண்பரைப் பார்த்து ‘நான் யாரையுமே வெறுக்கவில்லை நண்பரே ‘ என்ற சொல்கிறார். இருவரும் புன்னகைத்தபடி எழுந்து கொள்கிறார்கள்.

இக்கதை நெடுக நண்பர்களின் கனவுகள் மிக விரிவான அளவில் விவரிக்கப்படுகின்றன. எல்லாமே எதிர்கால லட்சியக் கனவுகள். உள்ளூரப் பொங்கி எழும் பசியையே தம் கனவுகளால் மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள் அனைவரும். வெற்றி பெற்ற ஒருவர் மீது தோல்வி கண்டவன் கொள்கிற சாதாரண ஆதங்கமும் ஆற்றாமையும் பசியின் காரணமாகவே கோபமும் எரிச்சலுமாக மாறி விடுகின்றன. பசி தணிந்ததும் மனம் நிம்மதியான சமநிலைக்குத் திரும்புகிறது.

*

உருது மொழிப் படைப்பாளிகளில் முக்கியமானவர் கிஷன் சந்தர். இந்திய மொழிகளின் சிறுகதைத் தொகுப்பொன்றைத் தயாரிக்கும் எவராலும் விடப்பட முடியாத ஒரு பெயர் கிஷன் சந்தர். 21 உருது மொழிப் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களுடைய படைப்புகளை மொழிபெயர்த்துத் தொகுத்து ‘நம்பிக்கை நட்சத்திரம் ‘ என்கிற தலைப்பில் நுாலாக்கினார் முக்தார் என்னும் மொழிபெயர்ப்பாளர். அருணோதயம் பதிப்பகம் 1967ல் இந்த நுாலை வெளியிட்டது. ‘நான் யாரையும் வெறுக்கவில்லை ‘ என்னும் சிறுகதை இந்நுாலில் இடம்பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்