மொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

பாவண்ணன்


இலக்கியப் பரிமாற்றம் என்பது தொன்றுதொட்டு வருகிற செயல்பாடாகும். ஒரு மொழியில் எழுதப்பட்ட படைப்பு மற்றொரு மொழியில் மறு ஆக்கம் செய்யப்படுவதும் அப்படைப்பு அம்மொழியின் சொந்தப் படைப்பைப் போலவே கருதப்படும் அளவுக்குச் சொந்தமாகி விடுவதும் மிக இயல்பாகவே எல்லாக் காலங்களிலும் நடந்து வந்திருக்கிறது. காலம் காலமாக வாய்மொழிக் கதையாக மக்கள் நடுவே புழக்கத்தில் இருந்த ராமனின் கதையே, அதன் செல்வாக்கு காரணமாக ஒவ்வொரு மொழியிலும் வரிவடிவம் பெற்றிருக்கிறது. வால்மீகி, துளசிதாசர், கம்பர், எழுத்தச்சன் ஆகியோர் அனைவரும் ஒரே மையக் கதையைக் காவியமாக வடித்தாலும் எழுதப்பட்ட காலம், சூழல், பண்பாடு, கலைக்கோட்பாடு சார்ந்து நுட்பமான வித்தியாசங்களைக் கொண்டவையாகவே மலர்ந்தன.

புலவர்கள் இயல்பாகவே தேங்கிக் கிடப்பவர்கள் அல்லர். படைப்பை வாழ்வின் ஒரு அறிதல் முறையாகக் கொண்டு இயங்கும் படைப்பாளிகள் பலவிதமான வாழ்க்கை முறைகளை நேரிடையாகக் காணவும் பலவிதமான மனிதர்களைக் கண்டு பேசவும் அலைதலைத் தன் வாழ்க்கை முறையாகவே கொண்டிருக்கலாம். ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ‘ என்று சொல்லிக் கொண்டதும் ‘குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ ‘ என்று சொல்லிக் கொண்டதும் அலைதல் வாழ்க்கையில் நேர் ந்த அனுபவத்தின் அடிப்படையிலானதாக இருக்கலாம். பல பிரதேசங்கள் தாண்டி, பல மனிதர்களைச் சந்தித்தபடி அலைந்து திரிந்த படைப்பாளிகளுக்கு நிச்சயமாக ஒரு மொழிக்கு மேற்பட்ட மொழி தெரிந்திருக்க வாய்ப்புண்டு. காஞ்சியில் ஒரு பல்கலைக் கழகமும் காசியில் ஒரு பல்கலைக் கழகமும் கொண்டு இயங்கிய இப்பரந்த தேசத்தில் புலவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கிப் பயணப்பட்டிருக்க வேண்டும். ஒருவர் புலமையை மற்றொருவர் அறியவும் ஒருவர் படைப்பை மற்றவர் அறிந்து கொள்ளவும் தன் மொழியைத் தவிர மற்றொரு மொழிப்புலமை பெற்றவர்களாகவே இருந்திருக்க வேண்டும் அவர்கள். இரண்டாவது மொழிப்புலமை என்பது அநேகமாக எல்லாப் புலவர்களுக்கும் இருந்திருக்க வேண்டும். தம் மனத்தைக் கவர்ந்த ஒரு மொழியின் படைப்பை மற்றொரு மொழியின் படைப்பாளிகள் மறுஆக்கம் செய்து கொள்வதும் இயல்பாகவே இருந்திருக்கிறது. சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து சமஸ்கிருதத்துக்கும் படைப்புகள் சென்று மறுஆக்கம் பெற்றிருக்கலாம். மறு ஆக்கம் என்பது அதே காலத்தில்தான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நுாற்றாண்டுக்கணக்கில் கால வேறுபாடு இருந்தாலும் கூட மறுஆக்கமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. நைஷதம் நளவெண்பாவாகவும் பிருஹத்கதா பெருங்கதையாகவும் இப்படித்தான் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு காலகட்டம். அதே சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் காவியத்தைப் பாரதிதாசன் கடந்த நுாற்றாண்டில் புரட்சிக்கவி என்கிற பெயரில் மறுஆக்கமாகப் படைத்திருக்கிறார். இரு படைப்புகளுக்கும் இடையேயான கால வேறுபாாடோ பல நுாற்றாண்டுகள். இத்தகு மறுஆக்கங்கள் தேவை என்பதையே இத்தகு முயற்சிகள் உறுதிப்படுத்துகின்றன. புத்தரின் சிந்தனைகள் இமயப் பகுதியிலிருந்து குமரி வரைக்கும் குமரியைத் தாண்டி இலங்கைக்கும் பரவ இத்தகு மொழிபெயர்ப்புகளே துணையாக இருந்திருக்க வேண்டும்.

இலக்கிய வரலாற்றின் ஒரு கட்டம் வரைக்கும் மறுஆக்கமாக உருவாகிக் கொண்டிருந்த வேற்றுமொழிப் படைப்புகள் நின்று போய் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு மொழிபெயர்ப்புப் படைப்புகளாக வெளிவரத் தொடங்கின. மிகப்பெரிய முயற்சியாக பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றளவும் பைபிளுக்கு ஒவ்வொரு மொழியிலும் பற்பல மொழிபெயர்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. சாக்ரடாஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, ரஸல், ஷா போன்ற சிந்தனையாளர்களின் சிந்தனைகளும் ஏங்கெல்ஸ், மார்க்ஸ் போன்ற தத்துவவாதிகளின் சிந்தனைகளும் எல்லா மொழிகளிடையேயும் பரவ மொழிபெயர்ப்பு முயற்சிகளே துணையாக இருந்தன. நம் மண்ணை அடிமைப்படுத்த வந்தவர்களின் ஆங்கில மொழியே நம் அறிவு வேட்கையைத் தணிக்கவும் உதவியது. தல்ஸ்தோய் முதல் ஹெமிங்வே வரைக்குமான உலகப்படைப்பாளிகளை அறிந்து கொள்ளவும் சிக்மன் பிராய்டு போன்றோரின் அணுகுமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆங்கில மொழி உதவியிருக்கிறது. இத்தகு படைப்புகளும் சிந்தனைகளும் தத்தம் தாய்மொழிக்கும் ஊக்கம் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில் உழைப்பில் ஆர்வம் மிகுந்த மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

தமிழைப் பொறுத்த அளவில் ஆங்கிலம் வழியாக மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளை விட, பிற இந்திய மொழிகள் வழியாகத் தமிழை அடைந்த படைப்புகள் அதிகம் என்றே சொல்ல வேண்டும். பரந்து விரிந்திருந்த சென்னை மாகாண எல்லையும் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் தேசிய இயக்கமான காங்கிரஸின் வளர்ச்சிக்கு நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் ஆர்வத்துடன் செய்த பயணங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிப்புலமைக்கு வழிவகுத்திருக்கலாம். பல தலைவர்களின் சுயசரிதைகளைப் படிக்கும் போது, அவர்கள் தம் சிறைவாசத்தின் போது சக கைதியாக இருந்த மற்றொரு மொழிக்காரர் வழியாகவே வேறொரு மொழியை அறிந்ததாகக் குறிப்பிடுவதைப் படிக்க நேர்ந்ததுண்டு. பாரதியார் மொழிபெயர்த்த தாகூரின் படைப்புகளை மிகச்சிறப்பான தொடக்ககால முயற்சி என்றே சொல்ல வேண்டும்.

தமிழில் இத்தகு மொழிபெயர்ப்பு முயற்சிகளால் பல நல்ல இலக்கிய நுால்கள் கிடைத்திருக்கின்றன. துரதிருஷ்டவசமாக படைப்பாளிகளின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப் படுவதைப் போல எப்போதும் மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப் படுவதில்லை. ஆனால் மொழிபெயர்ப்பாளர்கள் தாய்மொழியின் வளத்துக்கு உரம் சேர்ப்பவர்கள். ஒரு மொழியின் வழியாக நம்மை வந்தடையும் படைப்பு வெறும் கதையை மட்டும் நமக்குத் தருவதில்லை. அக்கதையின் வழியாக அம்மொழிக்காரர்களின் வாழ்க்கை முறை, பார்வை, பண்பாடு, நெருக்கடிகள், பழக்கவழக்கம் அனைத்தையும் அறிந்து கொள்கிறோம். ஷேக்ஸ்பியரின் பாத்திரங்களையும் தல்ஸ்தோயின் பாத்திரங்களையும் அவர்கள் வார்க்கப்பட்டிருக்கிற விதத்துக்காக மட்டுமன்றி அவர்களுடைய தனித்தன்மை மிகுந்த பார்வைகளுக்காகவும் நம் மனத்தில் நிறைந்திருக்கிறார்கள். அன்னா கரினாவை நினைவில் வைத்திருக்கும் சூழல் அந்நுாலைத் தமிழுக்குத் தந்த மொழிபெயர்பாளர்களை மறந்து போவது துரதிருஷ்டவசமாகும்.

ஒரு சூழலின் ஏற்றுக் கொள்ளலையும் விலக்கலையும் அளவுகோலாகக் கொள்ளாமல் தம் மனஉணர்வின் துாண்டுதலுக்கு மட்டுமே இசைந்து இயங்கிய மொழிபெயர்பபாளர்கள் தமிழில் பலருண்டு. பாரதியார், புதுமைப்பித்தன், க.நா.சு., கு.ப.ரா. , எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு போன்ற படைப்பாளிகளும் அவ்வப்பொழுது மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். அவர்களை நினைவு கூரும் பலரும் அவர்களுடைய சொந்தப் படைப்புகளை நினைத்துக் கொள்ளும் அளவு மொழிபெயர்ப்புகளை நினைத்துக் கொள்வதில்லை. மறந்துவிட்ட மறுபக்கமாகவே படைப்பாளிகளின் மொழிபெயர்ப்பு முகம் அமைந்து போகிறது. உலக நாவல்களில் சிறந்தவற்றைப் பட்டியலிட்டும் சுருக்கங்கள் கொடுத்தும் பலவற்றை நேரிடையாகவே மொழிபெயர்த்தும் தந்த க.நா.சு.வை எப்படி மறக்க முடியும் ? துர்கனேவ் முதல் மாப்பஸான் வரை ஏறத்தாழ நுாறு கதைகளுக்கும் மேல் மொழிபெயர்த்த புதுமைப்பித்தனை எப்படி மறக்க முடியும் ? இந்தியச் சிந்தனையில் இருப்பனவும் அழிந்தனவும் என்கிற சிந்தனை நுாலை மொழிபெயர்த்த கரிச்சான் குஞ்சுவை எப்படி மறக்க முடியும் ? ஆர்.ஷண்முகசுந்தரத்தை நினைத்துக் கொள்ளும் போதெல்லாம் அவர் மொழியாக்கத்தில் உருவான நுாற்றுக்கணக்காக வங்காள, இந்தி மொழிபெயர்ப்புகளை நினைக்காமல் இருக்க முடியாது. தாராசங்கர் பானர்ஜியின் அபலையின் கண்ணீர், விபூதிபூஷன் பாந்தோபாத்யாய அவர்களின் பதேர் பாஞ்சாலி உள்ளிட்ட பல சிறப்பான மொழிபெயர்ப்புகளைத் தந்தவரல்லவா அவர் ?

தம்மை மறந்த ஈடுபாட்டால் தமிழுக்கு வளம் சேர் த்த மொழிபெயர்பாளர்கள் வரிசை மிக நீண்டது. காலம் காலமாக, ஒரு சங்கிலியின் கண்ணிகளாகச் செயலபட்டு, நம் பார்வைகளைக் கூர்மைப்படுத்தி வருபவர்கள் இவர்களே. ஒரு நாளிதழுக்கு ஆசிரியராக இருந்துகொண்டே தல்ஸ்தோயின் போரும் வாழ்வும் நாவலைத் (ஏறத்தாழ 3000 பக்கங்கள்)தமிழுக்குத் தந்த டி.எஸ்.சொக்கலிங்கம், அதே நாவலை இனிமை குன்றாத வகையில் மீண்டும் மொழிபெயர்த்த திரிகூடன், உலக இலக்கிய அறிமுகம் வளர வேண்டும் என்கிற நோக்கத்தில் பல செவ்வியல் இலக்கியச் சுருக்கங்களைத் தமிழுக்குத் தந்த முல்லை முத்தையா, ருஷ்யக் கதைகளைத் தமிழுக்குத் தந்த எஸ்.சங்கரன், நத்தோனியேல் ஹார்தோனின் அவமானச் சின்னம் நாவலைத் தமிழுக்குத் தந்த ஆறுமுகம், மற்றும் எண்ணிக்கையில் அடங்காத நுால்களைத் தமிழுக்கு அளித்த த.நா.குமாரசாமி, த.நா.சேநாபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ, சந்தானம், ஆர்வி, மாரிசாமி, மு.ஜகந்நாதராஜா என அடுக்கிக் கொண்டே செல்லலாம். வெளியே புலப்படாத வகையில் நம் பண்பாட்டின் செழுமைக்கு உரமாக அமைந்தவை இவர்களுடைய மொழிபெயர்ப்புகள். இச்சங்கிலியின் ஒரு கண்ணியாகத் தன்னைப் பொருத்திக் கொண்டவர் சரஸ்வதி ராம்நாத்.

சரஸ்வதி ராம்நாத் தொடக்க காலத்தில் படைப்பு முயற்சிகளோடு தம் இலக்கிய வாழ்வை மேற்கொண்ட போதிலும் வெகுவிரைவில் தம்மை ஒரு மொழிபெயர்ப்பாளராக மட்டுமே நிலைநிறுத்திக் கொண்டார். அவருக்குக் கிடைத்த இந்தி மொழியறிவும் அதன் வழியாக அவர் அறிய நேர்ந்த எழுத்துகளால் உருவான ஈர்ப்பும் காரணங்களாக இருக்கலாம். அவரது மொழிபெயர்ப்புகளில் மிக முக்கியமானவையாக ஜெய் சோம்நாத், தர்பாரி ராகம், ராதையுமில்லை ருக்மணியுமில்லை ஆகிய சில நாவல்களையும் பல சிறுகதைகளையும் நாடகங்களையும் சொல்லலாம். இந்தி வழியாக அசாமி, பஞ்சாபி, குஜராத்தி, வங்காளம், ராஜஸ்தானி, மணிப்புரி, ஒரிய மொழிகளின் இலக்கியங்களையும் தமிழுக்குத் தந்தார் அவர். இந்தி என்கிற கண்ணாடி வழியாக இந்திய மொழிகள் அனைத்திலும் உருவான இலக்கியங்களை அவரால் தரிசிக்க முடிந்தது.

இந்த ஆண்டு ஞானபீடப் பரிசு பெற்ற இந்திரா கோஸ்வாமி பற்றிய கட்டுரையையும் அவரது சுயசரிதையின் சில பக்கங்களையும் பத்து ஆண்டுகளுக்கு முன்னராகவே தமிழில் மொழிபெயர்த்தவர் அவர். சரஸ்வதி ராம்நாத் இன்று உயிருடன் இருந்திருந்தால் கோஸ்வாமிக்கு ஞானபீடப் பரிசு கிடைத்ததை நினைத்து மகிழ்ந்திருப்பார். அதே போல நிர்மல் வர்மா, அஜித் கெளர், அம்ரிதா ப்ரீதம், மோகன் ராகேஷ் போன்ற முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளையும் தமிழாக்கம் செய்ததையும் விரிவான அளவில் அறிமுகம் செய்ததையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். திரிசூரில் நடந்த ஓர் இலக்கியக் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட போது நிர்மல் வர்மாவும் நானும் அடுத்தடுத்த அறைகளில் தங்கியிருந்தோம். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கியதுமே அவர் திருமதி. சரஸ்வதி ராம்நாத் பற்றியும் அவரது சேவை முயற்சிகளைப் பற்றியும் பேச ஆரம்பித்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

இந்திய மொழிகளிலிருந்தெல்லாம் தேடித்தேடிப் படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்த சரஸ்வதி ராம்நாத் அவர்கள் தமிழிலிருந்தும் இந்திக்குப் பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அகிலன், நீல.பத்மநாபன், தி.ஜானகிராமன் என மூத்த எழுத்தாளர்கள் தொடங்கி, பாவண்ணன், ஜெயமோகன், சுப்ரபாரதிமணியன், சங்கர நாராயணன் உள்ளிட்ட இளைய எழுத்தாளர்கள் வரைக்கும் பலருடைய படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். கனிமொழி, ரவி.சுப்ரமணியன், மகுடேசுவரன் ஆகிய இளங்கவிஞர்களுடைய கவிதைகளையும் மொழிபெயர்த்தார். எழுதிப் பழகியவர் அல்லது புதுசாக எழுத வந்தவர் என்கிற எந்த வேறுபாடும் இல்லாமல் எழுத்தின் தன்மையையே அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்ப்பதற்கான தேர்வுகளை அவர் நிகழ்த்தியதைப் பல முறை கண்டிருக்கிறேன். அவருக்கு எப்போதும் முக்கியமாகப் பட்டது ஆள்அல்ல, படைப்பு மட்டுமே.

( பெங்களுரில் 4.8.02 அன்று தமிழ்ச்சங்கத்தில் மறைந்த மொழிபெயர்ப்பாளர் திருமதி.சரஸ்வதி ராம்நாத் அவர்களின் நினைவுநாள் விழா நடைபெற்றது. திரு.அசோகமித்திரன் அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்தினார். சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்த்த சிறுகதைகளின் தொகுப்பான ‘இனி வீடு திரும்ப வேண்டும் ‘ என்கிற நுாலைக் காவ்யா பதிப்பகம் தயாரித்து வெளியிட்டது. காவ்யா பதிப்பகமும் தமிழ்ச்சங்கமும் சரஸ்வதி ராம்நாத் அவர்களின் குடும்பத்தாரும் இணைந்து நடத்திய அந்நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட உரையின் சுருக்கமே கட்டுரை வடிவில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்