புதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

பாவண்ணன்


எங்கள் ஊர் திருக்குறள் கழகம் நடத்திய பல நிகழ்ச்சிகள் என் மனத்தில் பலவண்ணப் படிமங்களாக உறைந்து கிடக்கின்றன. அக்கழகம் நடத்திய பாட்டரங்குகள், சொற்பொழிவுகள், பட்டி மன்றங்கள், விவாதங்கள் எல்லாம் அறிவுக்கு விருந்தாக அமைந்திருந்தன. ஒருபுறம் அர.ராசாராமன். மறுபுறம் சு.கணேசனார். ஆளுக்கு ஓர் அணி. அ.ப.சுப்பரமணியன், பொன்னம்பலன், துரை.சுந்தர்முர்த்தி, ராச.துரைக்கண்ணு, தி.பழனிச்சாமி, தா.மு.கிருட்டிணன் என்று பலரும் அணிக்கொருவராகப் பிரிந்து வழக்காடுவார்கள். அடுக்கடுக்காகத் தம் வாதங்களை முன்வைத்துப் பேசியதை ஆவலுடன் கேட்டிருப்பேன். எல்லாப் பாடல்களையும் கதைகளையும் மனப்பாடமாக எப்படி இவர்கள் அசால்கிறார்கள் என்பது என் இளம் மனத்துக்குப் புரியாத புதிராக இருக்கும்.

கழகத்தின் முக்கியப் பேச்சாளர் சு.கணேசனார். தங்கு தடையற்ற பேச்சு. தேவையான இடங்களில் ஏற்ற இறக்கம். முழக்கம் போன்ற பேச்சல்ல அவருடையது. நயமான தொனியில் லயிப்போடு தன் மனத்துக்குப் பிடித்ததைப் பகிர்ந்து கொள்கிற பேச்சு. பாடல்களில் ஐந்தாறு வரிகளைப் பாடிக் காட்டுவார். எந்தப் பாத்திரத்தைப் பற்றிப் பேசுகிறாரோ, அந்தப் பாத்திரத்தின் சித்திரத்தைத் தன் சுருக்கமான சொற்களாலேயே தீட்டிக் காட்டிவிடுவார். அவையில் உட்கார்ந்திருப்பவர்களைச் சிரிக்க வைப்பார். எதிர்பாராத தருணத்தில் சட்டென்று வாதங்களை குவித்து எதிரணிக்காரர்களைத் திணறடிப்பார். நடுவரையோ எதிரணித் தலைவரையோ அவர் பார்க்கும் பார்வை ‘இதுக்கு என்ன சொல்றீங்க ? ‘ என்று அப்பாவித்தனமாகக் கேட்பது போல இருக்கும்.

அன்று ஏதோ ஒரு ராமாயணத் தலைப்பு. கணேசனார் பேச வந்தார். யுத்தத்தில் கலந்து கொள்ள கும்பகர்ணனைத் துயிலிலிருந்து எழுப்பும் கட்டத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். கும்பகர்ணன் ஒரு மலை போலப் படுத்துக் கிடப்பதையும் அவனை எழுப்ப ஆட்கள் திரண்டு பாடுபடுவதையும் ஏற்றஇறக்கம் மிகுந்த கம்பரின் பாடலுடன் எடுத்துரைத்தார். கும்பகர்ணனைப் பற்றிய சித்திரத்தை வாய்மொழியாலேயே தீட்டிக் காட்டினார். அந்தச் சித்திரம். அந்தக் குரல். அந்தப் பாடல். எல்லாம் பசுமரத்தாணிகள் போல என் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டன. என்னைப் போன்ற பல சிறுவர்கள் முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டு அக்காட்சியின் விவரிப்பைக் கேட்டுக் கைதட்டிச் சிரித்து ஆரவாரம் செய்தோம்.

கும்பகர்ணன் ராவணனின் தம்பி. உறக்கத்திலிருக்கும் தம்பியை எழுப்புவது உணவுக்காகவோ, களியாட்டத்தில் பங்கேற்கவோ அல்ல. போர் செய்ய. உயிரை அர்ப்பணிக்க. கும்பகர்ணனுக்கும் இது தெரியும். தெரிந்தும் சகோதரனுக்குத் துணைநிற்றல் தன் கடமை என்று மனமார நம்புகிறான் அவன். அதன்படியே தன் கடமையை ஆற்றி உயிர்துறக்கவும் செய்கிறான். கும்பகர்ணனை மிகப்பெரிய தியாகி என்னும் அளவுக்கு அழகான வாதங்களால் நிலைநாட்டினார் கணேசனார். கைவசம் இருந்த குறிப்புகளைப் புரட்டியும் பார்க்காமல் மனப்பாடமாக உணர்ச்சி ததும்ப அவர் பேசிய காட்சி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றிருக்கிறது.

எங்கள் ஊரை நினைக்கும் போதெல்லாம் திருக்குறள் கழகம் நினைவுக்கு வருவது வழக்கமாகி விட்டது. அதைத் தொடர்ந்து சு.கணேசனாரும் அவர் தீட்டிக் காட்டிய கும்பகர்ணன் சித்திரமும் நினைவில் வந்து விடும். உறக்கத்திலிருக்கும் கும்பகர்ணன் சித்திரத்தைப் பிற்காலத்தில் மற்றொரு சித்திரத்துடன் இணைத்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ சிறுகதையைப் படித்த போது நேர்ந்தது.

‘அழைக்கிறவர்கள் ‘ சிறுகதையில் ஒரு குடும்பம் இடம்பெறுகிறது. சராசரியான இந்தியக் குடும்பம். வருமானத்துக்கு குடும்பத் தலைவனே ஆதாரம். குடும்பத் தலைவன் உறங்குகிறான். வியாதியால் நேர்ந்த உறக்கம். மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து ஆளுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி அழைத்து எழுப்பித் தயார்ப்படுத்தி வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். கதை என்கிற அளவில் மிகச்சிறிய கதை. ஆனால் அது எழுப்பக்கூடிய மன அலைகள் வலிமையானவை.

இந்தியக் குடும்ப அமைப்பில் குடும்பத் தலைவன் என்னும் ஆணின் பொறுப்புகள் மிகவிரிந்த அளவில் வரையறுக்கப்பட்டுள்ளன. தன் மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் உழைத்துப் பொருளீட்டித் தர வேண்டியவன். கண்ணியமான முறையில் மனைவியையும் பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டியவன். குடும்ப அமைப்பில் சலுகைகளும் உரிமைகளும் எவ்வளவோ மாற்றம் ஏற்பட்டிருக்கின்றன. பழைய இறுக்கங்கள் தளர்ந்து உறவில் லகுத்தன்மை உருவாகியிருக்கிறது. ஆனாலும் அடிப்படையில் பொருள் தேடும் அவசியமோ அதில் தலைவனின் பங்கோ மாறி விடவில்லை என்றே தோன்றுகிறது.

வண்ணநிலவன் காட்டும் குடும்பத்தில் இடம்பெறும் ஆண் தன் உழைப்பால் குடும்பத்தைத் தாங்குகிறான். தன் வியாதியிகளுக்கு நடுவிலும் தன் குடும்பத்தைக் காப்பது தன் கடமை என்ற எண்ணம் ஆழமாக அவனுக்குள் இருக்கிறது. குடும்பத்துடன் அளவு கடந்த பற்றுதல் இருக்கிறது. தன் கடமையை நிறைவேற்றும் பொறுப்புணர்ச்சியில் தன் வியாதியையும் வலிகளையும் பொறுத்துக் கொள்கிறான். இது ஒரு கோணம். மற்றொரு கோணத்தில் குடும்பத்தினரும் இவனைச் சகித்துக் கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். கஸ்துாரி என்கிற பெண்ணுடன் இவனுக்கு இருந்த உறவைச் சகித்துக் கொள்கிறவர்கள் இவர்கள். அந்தப் பெண்ணுக்காக தோட்டத்தையும் வீட்டையும் எழுதிக் கொடுத்ததையும் சகித்துக் கொள்கிறவர்கள். கோவலனை மாடல மறையோன் சந்தித்து மாதவியின் சங்கதியைச் சொன்னதைப் போல, ஏஇடிந்து விழும் வீட்டில் உங்கள் எச்சிற்கரை அப்படியே இருக்கிறதுஏ என்று சொல்வதைத் துாக்க மயக்கத்திலும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து மனத்துக்குள்ளேயே அசை போட்டு மகிழ்வதையும் சகித்துக் கொள்கிறவர்கள். வியாதிக்காரனாகி விடிந்தது தெரியாமல் துாங்குவதையும் சகித்துக் கொள்கிறவர்கள். இந்தச் சகித்தல்களுக்கு என்ன பொருள் ? தியாகமா ? அன்பா ? ஈடுபாடா ? காதலா ? பாசமா ? சகிப்புத்தன்மைக்கு நடுவில் இன்பம் சுரக்குமா ? அப்படிச் சுரக்கும் இன்பம் சுகம் தருமா ? குடும்பம் என்கிற அமைப்பின் புதிரையும் மனத்தின் புதிரையும் நோக்கி வண்ணநிலவனின் கதை நம்மை அழைத்துச் செல்கிறது.

ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் பொழிந்து கொள்ளும் அன்பால் இன்பம் தவழும் நிறுவனமாக மாற வேண்டிய ஒன்றே குடும்பம் என்கிற அமைப்பு. அங்கே கிடைக்கிற பாதுகாப்பு என்பது அன்பால் விளைகிற அரவணைப்பு. பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் அன்பே பற்றுக் கோடாக மாறுவதால் கிட்டும் தெம்பு. இதை ஒரு அடிப்படைக் கருதுகோள் என்று வைத்துக் கொள்வோம். அங்கே கிட்டும் அன்பில் நிறைவை உணராத மனம் ஏன் வேறொரு இடத்தின் அன்புக்காக எதிர்நோக்கிக் காத்திருக்கிறது ? துாக்க மயக்கத்தில் இருக்கும் போது கூட கட்டிய மனைவியின் மடியில் இருந்தததை விட கஸ்துாரியின் மடியில் படுத்திருந்த காலம் சுகமானதாக எண்ணும் அளவுக்கு மனம் ஏன் அலைபாய்கிறது ? பாஸ் அத்தானை மனத்துக்குள் நினைத்தபடி கையாலாகாத கணவனுடன் வாழும் மனைவியின் சித்திரத்தைத்(அயோத்தி சிறுகதை) தீட்டிய வண்ணநிலவன் கஸ்துாரியின் நினைவில் திளைத்தபடி லெட்சுமியுடன் வாழும் கணவனின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டி மனத்தின் புதிர்களை நமக்குக் காட்டுகிறார். மாற்று உறவுகளால் விளைந்த சுகத்தையோ காயத்தையோ சுமந்தபடி நடப்பு உறவுகளில் திளைப்பதும் இயங்குவதும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதும் தர்க்கத்துக்கு அடங்காத புதிர் போலவே தோன்றுகிறது.

வாழ்க்கை எப்போதுமே எந்தத் தருக்கத்துக்கும் உட்பட்டதல்ல, தருக்கத்துக்கு வெளியேயே அது எப்போதும் இருக்கிறது. அதே சமயத்தில் தருக்கத்துக்கு வெளியே இருக்கிறது என்பதால் புரிந்து கொள்ளும் முயற்சிகளை மனிதன் கைவிட்டு விடுவதுமில்லை. காலந்தோறும் தருக்கங்களை விரிவு படுத்தியபடியே அவற்றினுாடக வாழ்வைப் புரிந்து கொள்ளும் முயற்சிகளையும் மேற்கொண்டபடியே உள்ளான். ஏதோ ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தருக்கத்துக்குக் கட்டுப்பட்டு உருவானதுதான் குடும்ப அமைப்பு. தருக்கங்கள் விரிவடைந்தபடியே உள்ளன என்பதற்காக ஆதாரமான அமைப்பை உலகம் குலைக்க விரும்பவதில்லை. மாறாக, அது மையத்தில் இருந்தபடியும் விரிந்து செல்லும் உலகின் விளிம்பைப் பற்றிக் கொள்ள முயற்சி செய்தவாறும் உள்ளது என்றே தோன்றகிறது. எவ்வளவு தொலைவு மனத்தின் புதிர்கள் சிக்கலாகிக் கொண்டு போகின்றன என்பதை அறியவும் எவ்வளவு தொலைவு அவற்றை நம்மால் விடுவிக்க முடிகிறது என்பதை உணரவும் மனத்தின் இருமை நிலையைப் பற்றிய இலக்கியப் பதிவுகள் உதவுகின்றன. மனத்தின் புதிரை நோக்கி நம்மைச் செலுத்துகிற வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ சிறுகதையை அப்படிப்பட்ட ஒரு பதிவு என்று சொல்லலாம்.

*

எழுபதுகளில் உருவான சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர் வண்ணநிலவன். மனத்தின் அறைகளில் உறைந்திருக்கும் பலவித முரண்உணர்வுகளைக் கச்சிதமான சொல்லாட்சிகளால் பதிவு செய்தவர். கடல்புரத்தில், கம்பாநதி, ரெய்னீஸ் ஐயர் தெரு போன்ற நாவல்களால் தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான எஸ்தர் 1976 ஆம் ஆண்டில் கவிதாலயா பதிப்பகத்தின் வழியாக வெளியானது. ‘அழைக்கிறவர்கள் ‘ என்னும் கதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் அவரது சிறுகதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ‘வண்ணநிலவன் கதைகள் ‘ என்னும் பெயரில் புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்