விளையாட்டும் விபரீதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 19 – சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘)

This entry is part [part not set] of 22 in the series 20020714_Issue

பாவண்ணன்


‘நம்ம ராமர் தண்ணி வேணும்ன்னு கேட்டப்போ இந்த ஓணான் ஒன்னுக்கு இருந்து கொடுத்துச்சாம். இதுக்குப் போயி நாம் பாவம் பாக்கலாமா ? அத உயிரோடயே விடக் கூடாது ‘ என்று ஆளுக்கொரு தென்னை மிளார் சுருக்கை எடுத்துக் கொண்டு ஆறேழு பேர் கிளம்பி விடுவோம். வரலாற்றில் நிரந்தரமாகத் தங்கி விட்ட ஒரு பெரிய கறையை அழிக்கப் போவதாக நாங்கள் எண்ணிக் கொள்வோம். எங்கள் மனம் தளர்ந்து விடாதபடி ஊக்கம் ஊட்டிக் கொண்டே வருவான் ஜெயபாலன். வேலியோரங்களிலும் மரப் பொந்துகளிலும் தலையை நீட்டிக் கொண்டிருக்கும் ஓணான்களை எப்போதும் அவன் கண்களே முதலில் பார்க்கும். உடனே எச்சரிக்கை அடைந்து எங்களைப் பின்வாங்கச் செய்வான். ஓணானுக்குத் தெரியாமல் சுருக்கு மிளாரை அதன் கழுத்தருகே கொண்டு செல்வான். எல்லாமே அவன் கணக்குப்படி துல்லியமாக நடக்கும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்தச் சுருக்குக்குள் ஓணான் அகப்பட்டுத் துடிக்கும். உடனே அதைப் பார்த்துக் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவான் ஜெயபாலன். எங்களையும் திட்டுமாறு துாண்டுவான். எங்கள் கைகளில் இருக்கும் சுருக்குகளுக்கு எப்போதும் வேலை இருந்ததில்லை. ஆனாலும் அது இல்லாமல் அந்தப் படையுடன் செல்வதும் முடியாத காரியம்.

ஓணான் பிடிக்கச் சென்றிருந்த ஒரு நாள் எங்கள் கவனம் பெரிய துாங்கு மூஞ்சி மரத்தில் இருந்த காக்கைக் கூட்டைப் பார்த்ததும் திசை மாறியது. ‘கூட்டுல என்ன இருக்குது பாக்கலாமா ? ‘ என்று ஆசை மூட்டினான் ஜெயபாலன். அவன் முடிவெடுத்து விட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. நாங்கள் உடனே தலையசைத்துச் சம்மதத்தைத் தெரிவித்தோம். சரசரவென்று மரத்திலேறினான் ஜெயபாலன். கீழே நின்றிருந்த பரசுராமனையும் வருமாறு சொன்னான். காக்கைக் கூட்டின் அருகில் சென்றதும் அவர்கள் வேகம் குறைந்தது. மிகுந்த கவனமுடன் அடிஅடியாய் ஊர்ந்து சென்று கூட்டைத் தொட்டார்கள். காகம் இல்லை என்பது போல அங்கிருந்து சைகைகளில் எங்களுக்குத் தெரிவித்தார்கள். சுள்ளிகளாலும் செத்தைகளாலும் ஆன அந்தக் கூட்டில் காகம் இட்ட முட்டைகள் இருந்தன போலும். துணிச்சலாக அதை எடுத்து எங்களுக்கு காட்டினார்கள். பிறகு, சிரித்தபடி ஆளுக்கு இரண்டை எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டு கீழே இறங்கி வந்தார்கள். எங்களிடம் காட்டப்பட்ட காக்கை முட்டைகளை நாங்கள் அச்சத்துடன் தொட்டுப் பார்த்தோம்.

காக்கை தன் முட்டைகளைத் தெரியாமல் எடுத்து உண்டு வந்த பாம்பைப் பழிவாங்கிய கதை என் நினைவில் மிதக்கத் தொடங்கியது. மெல்ல அந்தக் கதையை ஜெயபாலனுக்கு நினைவூட்டினேன். கூட்டுக்குத் திரும்பிய காக்கை தன் முட்டைகளைக் காணவில்லை என்றதும் ஏதாவது உபாயம் செய்து எங்களைப் பழி வாங்கப் போகிறது என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. பாம்புக்கு நேர்ந்த கதி எங்களுக்கும் நேரப் போகிறது என்று உண்மையிலேயே அச்சம் கொண்டேன். இவர்களோடு சேரக் கூடாது என்று தீர்க்க தரிசனம் சொன்ன என் ஆயாவை நினைத்துக் கொண்டேன். ஜெயபாலன்தான் முட்டையை எடுத்து வந்தான், நான் முட்டையைத் தொட்டுப் பார்த்ததோடு சரி என்று எனக்குள் சொல்லிக் கொண்ட சமாதானங்கள் எதுவுமே எனக்கு மனநிறைவைத் தரவில்லை. அதற்குள் என் முகம் வெளுத்து விட்டதைக் கண்டு ‘இங்க பாருடா, பயந்தாங்கொள்ளிய, இந்த மாரி தொடநடுங்கிய எங்கயும் கூப்டாரக் கூடாதுடா ‘ என்று கிண்டல் செய்தான் ஜெயபாலன்.

வழியில் எங்களை மடக்கி நிறுத்தினார் வேலுப் பெரியப்பா. ‘எங்கடா இந்த வெயில்ல போய்ட்டு வரீங்க ? ‘ என்று அதட்டினார். எங்களுக்கு நிற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. மூடியிருந்த ஜெயபாலனின் கைகளைப் பார்த்து ‘என்னடா அது ? ‘ என்றார். அவன் ஏதேதோ பொய் சொல்லித் தப்பிக்க முயற்சி செய்தான் அவன். விடாத அவர் கேள்விகளால் அவன் உண்மை சொல்லும்படி ஆயிற்று. பெரியப்பா பதறிப் போனார். அவர் குரலே மாறி விட்டது. தணிவான குரலில் கெஞ்சுகிற மாதிரி பேசத் தொடங்கினார். ‘நீங்க தொலைஞ்சிட்டிங்கன்னா, ஒங்க அம்மா அப்பா தேடுவாங்க இல்ல, அது மாதிரிதான்டா காக்காவும் வந்த ஒடனே முட்டயத் தேடும். ஓடு ஓடு போயி எடுத்த எடத்துல வச்சிட்டு வந்துடுங்கடா, வாயில்லாத ஜீவனுடைய பாவம் பொல்லாதது ‘ என்று எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தார். நம்ப மறுத்து விறைப்பாய் நின்று முறைத்துப் பார்த்த ஜெயபாலனின் தோளில் தட்டித் திரும்பி நடக்குமாறு செய்தார். முணுமுணுவென்று பெரியப்பாவைத் திட்டிக் கொண்டே வந்தான். அவனது ஆத்திரத்திலோ பதற்றத்திலோ அவன் கை அழுத்தம் அதிகமாகி, கைக்குள்ளேயே ஒரு முட்டை உடைந்து விட்டது. முட்டையின் கூழ் கையில் வழிவதைச் சகித்துக் கொள்ளாமல் உதறும் போது அவன் கையில் எஞ்சியிருந்த முட்டைகளும் கீழே உடைந்து நொறுங்கின. பாவம் சுமந்தவர்களாகவே அன்று வீட்டுக்குத் திரும்பினோம்.

பறவைகளின் முட்டைகளைப் பார்த்தாலும் சரி, குஞ்சுகளைப் பார்த்தாலும் சரி, மனத்தில் தோன்றும் கதை சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக் குஞ்சு ‘. அந்தக் கதையிலும் ஓர் இளைஞன் வருகிறான். தன் தங்கைக்காக கூட்டிலிருந்த குருவிக் குஞ்சைக் கொண்டு வந்து தருகிறான். குழந்தை அத்துடன் ஆடி மகிழ்கிறாள். தனக்கு காப்பி கொடுக்க வந்த அம்மாவிடம் குருவிக் குஞ்சுவுக்கும் தருமாறு கெஞ்சுகிறாள். சிறிது நேரத்துக்குப் பிறகு, அவள் கவனம் வேறு விளையாட்டில் திசை மாறி விடுகிறது. குஞ்சை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறான் இளைஞன். எடுத்த இடத்தில் வைத்து விடுமாறு சொல்கிறாள் தாய். அதுதான் பிரச்சனை. கூட்டுக்குத் திரும்பிய குருவிகள் குஞ்சைக் காணாமல் பதறுகின்றன. இவன் கையில் இருப்பதையும் பார்த்து விடுகின்றன. தன்னிடமிருந்து குருவிக்குஞ்சைக் குருவிகள் மனமார ஏற்றுக் கொள்ளவேண்டுமே என்கிற பயம் வந்து விட்டது இளைஞனுக்கு. அவற்றின் பார்வை படும் இடத்தில் குஞ்சை விட்டு விட்டு ஒதுங்கி நின்று பெற்றோர்க் குருவிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கிறான். அவை தன் குஞ்சை ஏற்றுக் கொண்டன என்பதைப் பார்த்த பிறகுதான் அவனுக்கு நிம்மதி பிறக்கிறது.

செல்லப்பாவின் சிறந்த கதைகளுள் இதுவும் ஒன்று. வடிவப் பிசகு என்பதே இல்லாமல் கச்சிதமாக வந்துள்ள கதை. குஞ்சு பார்க்க அழகாக இருக்கிறது. கூட வைத்து ஆடலாம் என்று தோன்றுகிறது. எடுத்தாயிற்று. ஆடியுமாயிற்று. பிறகு என்ன செய்ய ? அதை அதனுடைய இடத்தில் சேர்ப்பது சாத்தியம்தானா ? தன் கதையில் செல்லப்பா அதைச் சாத்தியமாக்கிக் காட்டுகிறார். ஆனால் வாழ்வில், பொறுமையுடன் மனித குலம் இப்படிச் செய்கிறதா ? குஞ்சுவை இயற்கையின் படிமமாக்கிப் பார்க்கலாம். நம் சந்தோஷத்துக்காக இயற்கையிடமிருந்து எதைஎதையோ எடுத்துக் கொள்கிறோம். ஆனால் எதையும் திருப்பியளிப்பதில்லை. திருப்பி அளிப்பது நம் கடமை என்பது கூட நம் மனத்தில் உறைப்பதில்லை. எல்லாருடைய மனத்திலும் சுரண்டும் எண்ணம் மறைவாக ஒளிந்திருக்கிறது. வாயில்லாத இயற்கையைத் தன்னால் முடிகிற மட்டும் சுரண்டிக் கொண்டாடவே எல்லாரும் நினைக்கிறோம். ஒன்றின் இருப்பே இல்லாமல் போனாலும் அதைப் பற்றிய கவலையோ குற்ற உணர்ச்சியோ இல்லாமல் தொடர்ந்து சுரண்டும் வேலைகளில் ஈடுபடுகிறோம். இயற்கையின் இருப்பே நாம் நினைக்கிற நேரத்தில் எல்லாம் வெட்டி எடுத்துக் கொள்ள தன் செல்வத்தைக் குறைவற்ற வகையில் வழங்கிக் கொண்டே இருக்க வேண்டிய ஒன்றாக இயற்இகயை மனிதர்கள் நினைத்து விட்டார்கள். ‘வெதநெல்ல எடுத்துச் சோறாக்காதடி ‘ என்று கிராமத்தில் சொல்வதுண்டு. கரும்பை வெட்டும் போது கூட ‘வேரோட புடுங்கிச் சாப்படக் கூடாது ‘ என்பார்கள். ஆனால் முழுக்கச் சுயநலவாதிகளாகி விட்ட நமக்கு நம் ருசியே முக்கியமாகி விட்டது. வேரோடு விழுங்குவது என்பது நம் நாகரிகத்தின் அடையாளமாகி விட்டது. இயற்கையைப் பாதுகாக்கவும் தெரியவில்லை நமக்கு. சிதைக்காமல் இருக்கவும் தெரியவில்லை. குருவிக் கூட்டைக் கலைத்துப் போடுகிற குரங்குகள் போல எல்லாவற்றையும் கலைத்துக்கலைத்துப் போடுவதில் மன்னாதி மன்னர்களாக இருக்கிறோம். செல்லப்பா எழுதிய ‘குருவிக் குஞ்சு ‘ சிறுகதை, அது எழுதப்பட்ட காலத்தை விட இன்று மிகவும் அர்த்தம் செறிந்ததாகவும் வெளிச்சம் கூடிய ஒன்றாகவும் விளங்குகிறது.

*****

தமிழில் விமரிசனத்துக்கும் புதுக்கவிதையின் தோற்றத்துக்கும் வழிவகுத்த மூத்த படைப்பாளி சி.சு.செல்லப்பா. நல்ல கதையாசிரியரும் கூட. அவரது வாடிவாசல் என்னும் நாவல் தமிழின்

முக்கியமான் படைப்பு. மூன்று பாகங்களில் அமைந்த இவரது சுதந்தர தாகம் என்னும்

நாவல் சாகித்திய அகாதெமியின் விருது பெற்ற ஒன்றாகும். எழுத்து வெளியீடாக வெளிவந்த

செல்லப்பாவின் சிறுகதைகள் என்னும் தொகுதியில் இக்கதை இடம்பெற்றுள்ளது.

***

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்