‘கன்யாகுமரி ‘.ஏன் நம்மை சீண்டவேண்டும் ?

This entry is part [part not set] of 17 in the series 20010715_Issue

புதிய ஜீவா


கிரிதரன் அவர்களின் கன்னியாகுமரி குறித்த விமரிசனம் நூலைவிட விமரிசகரின் பலவீனங்களை காட்டுவதாக இருந்தது என்று சொல்லலாம். ஒரு நவீன இலக்கிய வாசகன் கேட்கும் முதல் கேள்வியானது இந்நூலை ஆபாச இலக்கிீயம் என்று கூறும் கட்டுப்பெட்டி மனநிலை குறித்ததாகவே இருக்க முடியும் .இடக்கரடக்கலின் மொழியில், எல்லாருக்கும் தெரிந்த விசயங்களையும் நல்லுபதேசங்களையும் சொல்லுவதல்ல இலக்கிய படைப்பின் பணி என்று நவீன இலக்கியபடைப்புகளுடன் அறிமுகம் உள்ள எவருக்கும் தெரிந்திருக்கும்.மனதின் ஆழங்களையும் அகப்பிரக்ஞையின் இயக்கங்களையும் தொட்டு காட்டும்போது தான் இலக்கியப் படைப்பு முக்கியமானதாக ஆகிறது என்பதே உண்மையாகும் . அப்போது அதற்கு இடக்கரடக்கல்கள் மற்றும் சம்பிரதாயங்கள் ஒரு பொருட்டாவது இல்லை .ஆகவே எப்போதுமே மேலான இலக்கிய படைப்புகளை அப்போதிருந்த ஒழுக்கவாதிகள் எதிர்ப்பது வாடிக்கை.

புதுமைப்பித்தனின் எழுத்துக்களை படித்த பிற்பாடு ‘ ‘இவனுக்கு இப்படியெல்லாம் எழுத யார் அனுமதி கொடுத்தது ? ‘ ‘ ‘ என்று ராஜாஜி கேட்டார் என்று ஒரு தகவலை எங்கோ படித்தது உண்டு. தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் கீழ்த்தர உணர்ச்சிகளைத் தூண்டிவிடுபவை என்று அக்காலங்களில் கடுமையாக விமரிசிக்கப்பட்டன. டி எச் லாரன்ஸின் நாவல்கள் தடை செய்யப்பட்டன.அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.சமீபகாலம் வரை ‘லேடி சாட்டர்லியின் லவ்வர் ‘க்கு இந்தியாவில் தடை இருந்தது.ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிஸஸும் ‘ விளாடிமிர் நபக்கோவின் ‘லோலிதா ‘வும் ,ஹென்றி மில்லரின் நாவல்களும் ஆபாச எழுத்தாக வசைபாடப்பட்டதுண்டு. உண்மையில் இந்த குற்றச் சாட்டுகள் இலக்கிய வாசகனுடைய கருத்துக்கள் அல்ல. இவை இலக்கியத்தைக் கண்காணிக்கும் மதவாதிகளும் ஒழுக்கவாதிகளும் முன்வைப்பவையாகும். திருதக்க தேவரை காய்ச்சிய இரும்பை கையால் பற்றச் சொன்னவர்கள் இவர்களே.[திருதக்க தேவரை விட அதிகமாக காமத்தை ஜெயமோகன் எழுதிவிடவுமில்லை]

தமிழ் இலக்கியத்தை பொறுத்தவரை எழுதும் பொருட்டு பேனா எடுத்த உடனேயே எழுத்தாளனுக்கு சமூக பயம் வந்து கையைப் பிடிக்க ஆரம்பித்து விடுகிறது.பிறகு அவன் உபன்னியாசம் செய்ய ஆரம்பித்து விடுகிறான்.இந்தப் பிடியை உதறி எழுதுபவர்களே எப்போதும் மேலான படைப்பாளிகள்.புதுமைப்ப்பித்தனின் கதைகளில் அந்த சுதந்திரம் உண்டு.அவரது பல கதைகளில் காணப்படும் சுதந்திர சித்தரிப்பை இன்று கூட எழுத்தாளர்கள் எழுதுவார்களா என்பது ஐயமே.பிரமிள் ,ஜி நாகராஜன் ஆகியாரின் ஆக்கங்களில் படைப்பின் சுதந்திரம் உண்டு.ஜெயகாந்தன் சரஸ்வதியில் எழுதிய காலத்தில் [1950 களில் ]அவரது எழுத்து ஆபாச எழுத்து என்று கடுமையாக எதிர்க்கப்படது என்பது பழைய இதழ்களை பார்த்தால் தெரியவரும். எப்போதுமே பெரியமனிதத் தோரணையை கைவிடாமல் எழுதியவர் சுந்தர ராமசாமி மட்டுமே . சரிகை துப்பட்டா நலுங்காத எழுத்து என்று அதை பற்றி பிரமிள் சொன்னார்.

தமிழ் இலக்கியத்தில் தளுக்குகள் நாசூக்குகள் ஆகியவை தான் பெரும்பாலும் நிரம்பியுள்ளன. மனத்தடைகள் இல்லாமல் எழுதுவதற்கு நம் எழுத்தாளர்கள் இனிமேல் தான் முயலவேண்டும்.அந்த வகையில் எல்லா விஷயங்களையும் மனத்தடைகள் இல்லாமல் எழுதும் ஜெயமோகனின் எழுத்துக்கள் முக்கியமான முன்னோடி முயற்சிகள் என்று சொல்லலாம் .[அவர் இந்த திசையில் போக வேண்டிய தூரம் மிகவும் அதிகம்]அவை நமது போலி ஒழுக்கப் பாவனைகளைச் சீண்டுவதனால்தான் அவை இம்மாதிரி அதிர்ச்சிகளை உருவாக்குகின்றன.

கன்யாகுமரி நாவலின் கதாநாயகனை ‘ பெர்வர்ட் ‘ என்று சொல்லி குற்றம் சாட்ட அசாதாரணமான ஆஷாடபூதித்தனம் இருக்கவேண்டும் .ஒரு தமிழ் வார இதழை எடுத்து புரட்டிப் பார்த்தால் தெரியும் நமது மனம் எத்தகைய வக்கிரங்களில் சாதாரணமாக திளைத்துக்கொண்டிருக்கிறது என்று.இங்கு ‘பிட் ‘ போடும் சினிமாக்களை பார்க்க வரும் ‘பெரிசுக ‘ளை பார்த்தால் போதும் .ரவி ஒரு சராசரி தமிழ் ஆண்மகன்.அவனது எல்லா அற்பத்தனங்களும் ,குணக்கோணல்களும் , குரூரங்களும் ஒரு சராசரி தமிழ் ஆண்மகனின் இயல்புகளேயாகும். அவனது பயம் தான் இங்குள்ள பெண்கள் மீது நடத்தை நெறிகளாக மாறி அழுந்திக்கிடக்கிறது என்பதே உண்மை. நான் வேலை செய்யும் கல்வி நிறுவனத்தில் முதுகலை பயிலும் பெண் மீது ஒரு புகார் வந்தது. அவள் எல்லா பேருந்திலும் எப்போதும் சன்னலோரம் அமர்ந்து பயணம் செய்கிறாள் ; அதனால் அவள் ‘சரியில்லை ‘. இங்கே ஒரு பெண் அதிகாரியாக வந்து விட்டால் உடனே அவளது கற்பு பற்றிய கதைகள் உருவாகிவிடும் .இதற்கு தப்பிய எந்தப் பெண்அதிகாரியும் இங்கு இல்லை.வெற்றி பெற்ற எந்த பெண் மீதும் ஒழுக்க குற்றச்சாட்டு வீசும் சமூகம் இது.எந்த அலலுவலகத்திலும் ‘காண்டான் பேச்சு ‘களில் எப்போதும் இந்த விஷயம்தான்.

கன்யாகுமரி நாவலில் அப்பெண் மானபங்கப்படுத்தப் படும்போது ரவி நடந்துகொண்டது போல நடந்து கொள்ளாத எத்தனை ஆண்கள் நமது சமூகத்தில் உண்டு ?அவனது அற்பத்தனங்களை மனதளவிலேனும் பங்கிடாத எத்தனை ஆண்கள் உண்டு ?அவனை வில்லனாக மாற்றி விடுவதன் மூலம் நாவல் நம்மை நோக்கி நீட்டும் சுட்டுவிரலை தவிர்க்கத்தான் நம் முயல்கிறோம்.இந்த அற்பத்தனம் ரவியின் அற்பத்தனத்துக்கு சற்றும் குறைந்தது அல்ல.

கன்யாகுமரி நாவல் ஒரு மகத்தான கலைப்படைப்பு அல்ல. ஆனால் கண்டிப்பாக அது ஒரு முக்கியமான நாவல்.அதன் முக்கியத்துவம் இரண்டு வகைகளில் உள்ளது.அது ஆண்மனத்தின் சலனங்களை மிக மிக நுட்பமாக பின்தொடர்ந்து சென்று காட்டுகிறது.இத்தனை நுட்பமான மனசித்தரிப்பு தமிழில் மிக அபூர்வமாகும்.டி எச் லாரன்ஸ் ,நபக்கோவ் ஆகியோருடந்தான் அதை ஒப்பிட முடியும்.ஆணின் உடைமை மனோபாவம் , தன் பாலியல் அடையாளத்தை சார்ந்து தன் அகங்காரத்தை அவன் உருவாக்க ி வைத்திருக்கும் விதம் ,அது சீண்டப்படும்போது அவன் கொள்ளும் குரூரம் ,இதற்கெல்லாம் அடியில் உள்ள கோழைத்தனம் எல்லாமே மிக சூட்சுமமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.இரண்டாவது விசயம் . குறியீட்டுதளத்தில் அது ஆண்பெண் உறவு குறித்து முன்வைக்கும் விரிவான பார்வை.அந்த சினிமா விவாதம் முழுக்க அக்குறியீட்டை விரிவு செய்யவே பயன்படுத்தப்படுகிறது. இறுதியில் ரவி இழப்பது எதை ?அவனது கன்யாகுமரியில் இருந்து தேவி சென்றுவிடுகிறாள்.ஒவ்வொரு ஆணின் மனதிலும் உள்ள தூய்மையான பெண்மையைத்தான் அவன் இழக்கிறான்.அதன் பிறகு தன் வாழ்நாள் முழுக்க அவன்முற்றிலும் தனியானவன்தான்.

ஆணின் தாழ்வுணர்ச்சியாலும் பயத்தாலும் உருவாக்கப்பட்ட ஒழுக்கபயத்தால் கட்டிப்போடப்பட்டிருந்த பெண் தன் அறிவுத்திறன் மூலமும் ,தன் கருணை மூலமும் அவனை முழுமையாக வெற்றிகொள்ளுவதை காட்டும் முக்கியமான நாவல் இது. விமலா , பிரவீணா இருவருமே இருவகையில் ஆண்களை வெற்றி கொள்ளும் பெண்கள்தான் . ஆணின் ஒழுக்கம் சார்ந்த பிளாக் மெயிலில் இருந்து அவர்கள் விடுதலை பெற்ற பிறகு அவர்களை அவனால் ஏதுமே செய்யமுடியவில்லை. பிரவீணாவை சினிமா மூலம் கடவுள் வந்து சந்திப்பது உறுதி!

இந்நாவலின் முக்கியமான குறை இது ஒழுக்க பிரச்சினையை மட்டுமே ஆண் பெண் உறவில் எடுத்துப் பேசுகிகிறது என்பதுதான்.அதன் பல்வேறு தளங்களையும் தொட்டுப் பேசாமல் ஒரே பாதையில் போய்முடிகிறது பாகவே நாவல் முடியும் போது ஒரு ஏமாற்றம் ஏற்படுகிறது!ஜெயமோகன் நாவல்கள் எப்போதும் சென்று தொடும் ஆன்மிகமான கவித்துவமும் இந்நாவலில் இல்லை.

ஒருவகையில் கிரிதரனை இந்நாவல் சீண்டியிருப்பதும் இயல்புதான்.அவரது பார்வையை பார்த்தால் அவரைபோன்றவர்களை சீண்டுவதே இந்நாவலின் வெற்றி என்று தோன்றுகிறது.

Series Navigation

புதிய ஜீவா

புதிய ஜீவா

1 Comment

Comments are closed.