விக்ரமாதித்யன்
யோசித்துப்பார்க்கையில், நான் எப்படி கவிஞன் ஆனேன் என்று எனக்கே இன்னமும் விளங்கவில்லை. தற்செயல் என்று சொல்லிவிடமுடியாது. அதே சமயம், திட்டமிட்டு வளர்த்துக்கொண்டது என்றும் கூற முடியாது. அடிநாள்களிலிருந்து அலசி ஆராய்ந்தால், ஏதாவது கிடைக்கும் என்று தோன்றுகிறது.
வார்த்தைகள் என்னை எப்போதுமே மயக்கிக்கொண்டுதான் இருக்கின்றன. சிறு வயதில் இந்த மயக்கம் அதிகமாகவே இருந்திருக்கிறது. இந்த வார்த்தைக்காதலே தொடக்கம் என்று சொல்ல வேண்டும்.
சின்னஞ்சிறு கண்மலர்
செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ணத்தமிழ்ச் சோலையில்
மாணிக்கமாலையில் ஆரிரோ
அன்பே ஆராரோ…
என்று தொடங்கும் தாலாட்டுப்பாடல். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘பதிபக்தி ‘ படம். சாவித்ரி தன் குழந்தையைத் தொட்டிலிட்டுத் தாலாட்டுவதாகக் கட்டம்(காட்சி).
‘பாப்பா உன் அப்பாவைப்
பார்க்காத ஏக்கமோ
பாய்ந்தே மடிதனில்
சாய்ந்தால்தான் தூக்கமோ
தட்டாமல் வந்துனை
அள்ளியே அணைப்பார்
தாமரைக்கன்னத்தில்
முத்தங்கள் விதைப்பார்
குப்பைதனில் பிறந்த குண்டுமணியே
கண்ணே ஆராரோ அன்பே ஆராரோ
ஏழை என் நிலையை
எண்ணி வந்தாயோ
எதிர்கால வாழ்வில்
கவனம் கொண்டாயோ
நாளை உலகம்
நல்லோர்கள் கையில்
நாமும் அதிலே
உயர்வோம் பின்னாலே
மாடிமனை வேண்டாம்
கோடிச்செல்வம் வேண்டாம்
வளரும் நிலவே நீ போதும்… ‘
என்றெல்லாம் பாடல் வரிகள் வரும்.
(நினைவிலிருந்து எழுதியது: சரியான வரிகளுக்கு ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் ‘ புஸ்தகத்தைப் பார்க்கவும்)
எங்கள் வீட்டில், எனக்குப்பின்னால் உள்ள தம்பிகளைக் கவனிக்கிற பொறுப்பு அக்காவுக்கு இருந்து வந்தது. சின்னத்தம்பியைத் தூங்கப் பண்ணுவதற்கு அக்கா பாடுகிற தாலாட்டுப்பாட்டு இதுதான். அடிக்கடி இந்தப்பாட்டை படித்துக்கேட்டிருக்கிறேன். என் மனசில் ஆழப்பதிந்து விட்ட வரிகள் இவை. பட்டுக்கோட்டையின் பாடல் இது என்பது எனக்குப் பின்நாட்களில்தான் தெரியும்.
‘நெஞ்சம் அலைமோதவே
கண்கள் குளமாகவே
கொஞ்சும் ராதை
கண்ணனைப் பிரிந்தே போகிறாள்… ‘
என்று தொடங்கும் ஒரு பாடல். ‘இரு சகோதரிகள் ‘ படம் என்று ஞாபகம்.
தாங்கள் வசித்துவந்த ஊரிலிருந்து கதாநாயகியின் குடும்பம் வீட்டை காலிசெய்துவிட்டு வேறு ஊருக்குப் போகிற கட்டம். கதாநாயகியும் அவள் அம்மாவும் குதிரை வண்டியில் ரயில் நிலையத்துக்குப் போவார்கள். கதாநாயகனுக்கு இவளின் பிரிவு தெரியாது. இவளுக்கு அவனிடம் சொல்லிக்கொள்ளக்கூட அவகாசம் கிடைத்திருக்காது. இவளுடைய காதலும் வீட்டுக்குத் தெரியாது. மனசுக்குள் மறுகியபடியே இருப்பாள் தலைவி. பின்னணியில் பிச்சைக்காரன் ஒருவன் பாடுவான்.
அநேகநேரம் அக்கா படிப்பதிலிருந்தே (பாடுவதைப் ‘படிப்பது ‘ என்று சொல்வதே நெல்லை மாவட்ட வழக்கு) இந்தப் பாடல் என் மனசிலாயிற்று என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இது யாருடைய பாடல் என்று எனக்கு நிச்சயமில்லை.
முதன்முதலில், சிறுவனாக இருக்கையில் எனக்கு கவிதை பரிச்சயமானது இந்த வரிகளிலிருந்துதான் என்பதே உண்மை.
‘கல்யாண ஊர்வலம் வரும்
உல்லாசமே தரும்
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்… ‘
‘கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில்
இருள் சூழலாச்சே… ‘ என்ற பாடல்.
‘பெண் ‘ படம் என்று நினைவு. வைஜயந்திமாலா கதாநாயகியாக நடித்தது. அபோது எனக்கு எட்டு ஒன்பது வயது இருக்கும்.
எங்கள் சொந்த ஊர் திருநெல்வேலி. டவுனில் கல்லத்திமுடுக்குத் தெரு வீட்டில் இருந்தோம் நாங்கள். பக்கத்தில் உள்ள ராயல் டாக்கீஸிலும் பாப்புலர் தியேட்டரிலும்தான் சினிமா பார்ப்பது. எப்போதாவதுதான் ஜங்ஷன் பாலஸ்-டி-வேல்ஸ்க்குப் போவோம். ரத்னா டாக்கீஸெல்லாம் பிறகுதான் வந்தது. பாப்புலர் தியேட்டரில்தான் ‘பெண் ‘ படம் நடந்தது என்று ஞாபகம். அந்த நாளில் ‘பெண் ‘ படப்பாடல்கள் மிகவும் பிரபலம். இதெல்லாம் கவிஞர் கம்பதாசன் பாடல்கள் என்று விவரம் தெரிந்தபிறகு தெரிந்து கொண்டேன்.
(கவிஞர் கம்பதாசன் பாடல்களை சிலோன் விஜயேந்திரன் தொகுத்து, மணிவாசகர் நூலகம் வெளியிட்டது. பிரதிகள் இப்போது கிடைப்பதில்லை)
எங்கள் வீட்டில் நான் இரண்டாவது பையன். அக்காதான் பெரியவள். அக்காவுக்கும் எனக்கும் நாலு வயது வித்தியாசம். அதனால் படிப்பிலும் சரி, பாட்டு, சினிமா இதுமாதிரி ரசனையிலும் சரி அக்காதான் ஒருவகையில் முன்னோடி என்று சொல்லவேண்டும்.
எங்கள் ஊரில் சிலோன் ரேடியோதான் செல்வாக்கு. அது தமிழுக்கு நிறையச் செய்திருக்கிறது. இன்றைக்கும் நான் வேலையில்லாமல் தென்காசியில் இருக்கிற காலங்களில் எனக்குத் துணை சிலோன் ரேடியோதான்.
எட்டு ஒன்பது வயதுகளில் குழந்தை மனசாக இருக்கும்போது, நெஞ்சில் இடம்பிடித்துக்கொண்ட இந்த ஈரமான உணர்வு வரிகள்தான் கவிதை என்பதை எனக்குக் காண்பித்துத் தந்தன. இப்போதும்கூட இந்தப்பாடல்களைக் கேட்க வாய்க்கும்போது எனக்குள் ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டுவிடும்.
கவிஞர் கம்பதாசன் வரிகளுக்கு நிகராக இன்னும் நான் எழுதவில்லை, அல்லது என்னால் எழுத முடியவில்லை என்ற ஒரு ஆற்றாமைகூட எனக்கு உண்டு.
‘ராஜாமகள் ராணி-புது
ரோஜாமலர் மேனி
பேஷாக ஒரு மாமி-வரப்
போறாள் பாரு நாளை… ‘
என்ற உடுமலை நாராயணக்கவியின் பாடல்; கே.ஆர்.ராமசாமி நடித்தப்படம். அவரே பாடுவார். ராஜாவின் மகளுக்குப் பாடிக் காட்டுகிற கட்டம்; தாயில்லாப்பெண் அது.
‘நீலவண்ணக் கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான அன்பில்… ‘
‘அமுதைப்பொழியும் நிலவே-நீ
அருகில் வராததேனோ… ‘
என்ற கவிஞர் மருதகாசியின் பாடல்கள்.
இப்படி நிறையத் திரைப்படப் பாடல்கள்தான் என் ஆரம்பகாலக் கவிதை ஆறிமுகம்.
பிறகு கொஞ்சகாலம் கழித்து நான் வீட்டை விட்டு ஓடிப்போய் நாடோடிச் சிறுவனாகச் சுற்றிக்கொண்டிருந்த சமயம்.
‘விந்தியம் குமரியிடை
விளங்கும் திருநாடே
வேலேந்தும் மூவேந்தர்
ஆண்டிருந்த தென்னாடே..
எங்கள் திராவிடப் பொன்னாடே.. ‘
என்று தொடங்கும் ‘மாலையிட்ட மங்கை ‘ படப்பாடல். எல்லாமே கவிஞர் கண்ணதாசன் பாடல்கள். ‘பாட்டுக்கு ஒரு படம் ‘ என்று விளம்பரம் செய்து வந்த முதல் தமிழ்ப்படம்; இதிலிருந்துதான் கண்ணதாசனின் ரசிகன் ஆனேன் நான்.
முக்கூடல் த.பி. சொக்கலால் ராம்சேட் பீடி கம்பெனியார் அந்த ஊரில் நாராயணசாமி கோவில் பரம்பரை தர்மகர்த்தா. வருஷாவருஷம் அங்கே பத்து நாள் திருவிழா நடக்கும். தினம் ஒரு கலைநிகழ்ச்சி உண்டு.
லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள், என்.எஸ்.கே, டி.ஏ.மதுரம், டி.கே.ராமச்சந்திரன், கே.ஏ.தங்கவேலு இப்படி அந்தகாலத்தில் பிரபலமான நடிகர் நடிகையர் வருவார்கள்.
ஒரு முறை டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ‘ஸ்ரீவள்ளி நாடகம்; இடைவேளையில், ‘மாலையிட்ட மங்கை ‘ படப்பாடல்களை அவர் பாடுவார் என்பதற்காக எட்டு மைல் நடந்து போய் கேட்டுவிட்டு வந்திருக்கிறேன்.
இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிற்பாடு, கவிஞர் மாயவநாதனைத் தெரிந்து கொண்டேன். குறிப்பாக ‘பூம்புகார் ‘ படப்பாடல்கள்.
இப்படி திரைப்படப்பாடல்கள் வாயிலாகத்தான் எனக்குத் தமிழ்க்கவிதையைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அந்நாளைய பாடலாசிரியர்கள் எல்லோருமே நல்ல கவிஞர்களாக இருந்தார்கள். கவிஞனை உருவாக்கிய கவிஞர்கள்.
என் கவிதைகள் ‘lyrical ‘ தன்மை கொண்டவையாக இருப்பதையும், நான் ‘lyric poet ‘ ஆகத் துலங்குவதையும் இவ்விதமாகத்தான் எனக்கு விளங்கிக் கொள்ள முடிகிறது இப்போது.
ஐந்து வருஷத்துக்குமுன் ஒரு நாள், ‘மிதிலா அச்சகத்தில் ‘, ஒரு சந்தர்ப்பத்தில் என் கவிதைகளைப் பற்றி பேச்சு வந்தபோது, நண்பர் மோகன் சொன்னதை இங்கே நினைவுகூர வேண்டியதிருக்கிறது.
‘நம்பி, நீங்க ஒரு ‘லிரிக் பொயட் ‘, உங்க கவிதைகளை அப்படித்தான் பார்க்க முடியுது ‘
மோகன் சரியாகவே கணித்திருக்கிறார் என்றுதான் படுகிறது.
***
கிரகயுத்தம், கவிதைத்தொகுப்பு, விக்ரமாதித்யன், 1993
***
- கன்னட தலித் இலக்கியம் – சில முன்னோடிகள் பற்றிய குறிப்புகள்
- பூட்டுகள்
- இந்த வாரம் இப்படி
- மறுப்புவாதமும் இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளும்
- மதம்
- 12. மின்வாணிபம் – ஒரு அறிமுகம்
- இரகசியங்களை வெளியில் காட்டி விற்கமுடியுமா ? ஒருபெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – 6
- கவிதை கவிஞன் நான்
- கன்னட தலித் இலக்கியம் – சில முன்னோடிகள் பற்றிய குறிப்புகள்