இலை போட்டாச்சு ! (31) திடீர் அடை – ஐந்தாம் வகை

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

பாரதி மகேந்திரன்


திடீர் அடை – ஐந்தாம் வகை

தேவைப்படும் பொருள்கள் யாவுமே முன்னர் விவரித்த நான்கு வகை அடைகளுக்குத் தேவையானவைதான். ஆனால் இப்போது சொல்லப் போவது இந்த நான்கு வகை அடைகளையும் மிக எளிய முறையில் செய்ய உதவுவதாகும். உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகிய இரண்டு பருப்புகளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் மிளகாய் வற்றலுடன் சேர்த்து ரவைப் பக்குவத்தில் அரவை மில்லில் கொடுத்துத் திரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது இவ் விரண்டு பருப்புகளையும் கூட மற்றவற்றுடன் சேர்த்தும் திரிக்கலாம். ஊற வைத்துக் கடைசியில் மாவுடன் இவற்றைக் கலக்கும் வேலை மிச்சமாகும்.

இவ்வாறு திரித்து வைத்துள்ள பருப்புகளின் ரவையைத் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். அத்துடன் தேவையான உப்பு, பெருங்காயப்பொடி, கறிவேப்பிலை,கொத்துமல்லித் தழை ஆகியவற்றையும் சேர்த்து இந்த மாவு நன்றாக ஊறிய பிறகு அடைக்கல்லில் எண்ணெய் வார்த்து அடைகளாய்த் தட்டி எடுக்கலாம்.

மிளகாய் வற்றலைப் பருப்புகளுடன் சேர்த்துத் திரிக்கலாம்; அல்லது மாவைத் தண்ணீர் ஊற்றித் தயாரிக்கும் போது மிளகாய்த் தூளையும் அதில் போட்டுச் செய்யலாம்.

பருப்புகளை ஊஊற வைத்தல், களைதல், பிறகு மின் அம்மியில் அரைத்தல் போன்ற வேலைகள் இதனால் மிச்சப்படும். எனினும் பருப்புகளைக் களையாமல் திரித்து வாங்குவதால் தூசு, தும்புகளும் சேர்ந்து அரைபடும் சாத்தியம் இதில் உள்ளது. இது உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடியது. சில பெண்மணிகள் பருப்புகளைக் களைந்து வடிகட்டி நல்ல வெயில் காலத்தில் உலர்த்தி எடுத்துப் பிறகு திரிக்க அனுப்புவார்கள். இதுவே சிறந்தது.

உளுத்தம் பருப்பையும் பாசிப் பருப்பையும் மட்டும் தண்ணீரில் ஊற வைத்துக் களைந்து மாவுடன் சேர்த்து அடை தட்டினால் கரகரப்பு அதிகமாகி, அடையின் சுவையும் கூடும். அதற்கும் சோம்பல் படுபவர்கள் -அல்லது நேரம் இல்லாதவர்கள்- இவற்றையும் திரித்து வாங்கி வைத்துக்கொண்டு தேவைப் படும் போது திடீர் அடை தட்டலாம்.

இவ்வாறு செய்யப்படும் திரித்த பருப்பு அடைக்கு வெங்காயம் சேர்ப்பது நல்லது. அதிலும், பருப்புகளைக் களையாமல் திரிக்கக் கொடுப்பவர்கள் வெங்காயம் சேர்ப்பதன் மூலம் நலம் பெறலாம். ஏனெனில் வெங்காயம் கிருமி நாசினியாகும்.

mahendranbhaarathi@yahoo.com பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்