(இருவருக்கு தேவையான அளவு)
முதல் வகை
[ பெங்களூர்க் கத்தரிக்காய் (செளசெள), பூசனிக்காய், வாழைத்தண்டு, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளைக் கொண்டு இந்த வகை கூட்டு செய்யலாம்.]
சிறிய பெங்களூர்க் கத்தரிக்காய் – 1 அல்லது
கத்தரிக்காய் – 2
பூசனிக்காய் – 1 பத்தை அல்லது
வாழைத்தண்டு 1 சிறிய துண்டு
துவரம் பருப்பு – 1/4 ஆழாக்கு
புளி – 2 கொட்டைப்பாக்கு அளவு
தனியா -1 ஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
வற்றல் மிளகாய் – 3
பெருங்காயம் – 1 துண்டு
கடலைப்பருப்பு – 1 1/2ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2ஸ்பூன்
உப்பு – 1 1/2ஸ்பூன்
நறுக்கிய கறிகாய்களைச் சிறிது உப்பு போட்டு வேகவைத்து ஜலத்தை விடவும். தனியா, மிளகு, மிளகாய், 3/4ஸ்பூன் உளுத்தம்பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து அம்மியில் தேங்காயோடு அரைத்து எடுத்து விழுதைப் புளிஜலத்தோடு போடவும். அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கும் போது கடுகு, கடலைப்பருப்பு, 1/4ஸ்பூன் உளுத்தம்பருப்பு இவற்றை எண்ணெயில் வறுத்துத் தாளித்துக் கொட்டி உப்பு சேர்த்து வெந்த துவரம்பருப்பையும் குழைத்து அதோடு சேர்க்கவும். எல்லாம் நன்கு சேர்ந்து சிறிது நேரம் கொதிக்கும் போது மாவு கரைத்துவிட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவைக்கவும்.
இரண்டாம் வகை
சாமான்களை வறுத்து அரைத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியைத் தான்கள் சேர்த்த புளிஜலத்தில் போட்டு, தேங்காயும் துருவிப் போட்டு நன்கு கொதிக்கும்போது கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி மாவு கரைத்துவிட்டு இறக்கி வைக்கவேண்டும்.
மூன்றாம் வகை
இதில் துவரம்பருப்புக்குப் பதிலாக, கடலைப்பருப்பை வேகவைத்துக் கூட்டோடு சேர்க்கவேண்டும். முதல் வகையில் சொன்ன சாமான்களை அரைத்துச் சேர்த்தல் வேண்டும். இதற்குக் கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் தாளித்தால் போதும்.(மேற்படி எல்லாவகைகளுக்கும் வாசனைக்குக் கொத்துமல்லி, கருவேப்பிலை சேர்க்கலாம். தவிர காய்ந்த பட்டாணி அல்லது கொத்துக்கடலை முதல் நாளிரவே நீரில் ஊறவைத்து, மறுநாள் நன்கு வேகவைத்துக் கூட்டோடு சேர்த்தால் ருசியாக இருக்கும். பச்சை வேர்க்கடலைப் பருப்பை வேகவைத்துச் சேர்க்கலாம்.)
திண்ணை
|