சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

ஸ்ரீஷிவ்



இந்தக்கட்டுரையில் சினைமுட்டைப்பை (ovary)மாற்று சிகிச்சை பற்றி பார்ப்போம்,
குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளாகக்கருதப்படும் இந்தியா, சீனா, சப்பான் போன்ற நாடுகளில் இந்த விஞ்ஞான முன்னேற்றம் மிக மெதுவாகவே இருக்கின்றது.சீனாவில் சென்ற 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதியில் இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியதைத்தொடர்ந்து, அடுத்த மாதமே நம் இந்தியாவின் தொழில் நகரங்களுள் சிறந்த நகரமான மும்பையில் நடந்தேறியது. மருத்துவர். திரு. பிரவீன் ம்ஹாத்ரே என்பவரின் சீரிய முயற்சியால், டி.எஸ்.கோத்தாரி மருத்துவமணை , மும்பையில் சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை நல்லமுறையில் நடந்தேறியது. இந்த சினைமுட்டைப்பையினை டர்னரின் நோய் (Turner’s Syndrome)(இது பெண்களிடம் உள்ள ஒரு குரோமோசோம் குறைபாடு, ஒரே ஒரு x குரோமோசோம் மட்டுமே இருத்தல், இதன் விளைவுகள், குள்ளமாகப்பிறத்தல், இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் குறைபாடுள்ள அல்லது அளவு குறைந்த வளர்ச்சியுடைய பாலுறுப்புக்களுடன் பிறக்கும் குழந்தை)(இந்த நோய் 2000 குழந்தைகளுள் 1 குழந்தைக்கு வரும் வாய்ப்புள்ளது)தாக்கியிருந்த ஒரு 17 வயது பெண்ணிற்கு மாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இந்த டர்னரின் நோய் தாக்கிய குழந்தைகள் தங்கள் ஆயுளுக்கும் ஹார்மோன் தெரபி என்று கூறப்படும் ஒருவகை மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவேண்டியிருக்கும் , இந்த சிகிச்சை புற்றுநோயினை தோற்றுவிக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த சினைமுட்டைப்பையினை தானமாகக்கொடுத்தவர் அந்த பெண்ணின் 26 வயது உறவுப்பெண் ஒருவர், அவர் இரண்டு குழந்தைக்குத்தாயானவரும் கூட.

அரசாங்க விதிமுறைகளின் படியும், சட்டத்தின் படியும், இந்த மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், யார்வேண்டுமானாலும் இந்த சிகிச்சையினை இப்பொழுது செய்துகொள்ளலாம், இதன் மூலம், மாதவிடாய் சுழற்சியின் பிரச்சனைகள், மாதவிடாயே இல்லாதவர்களுக்கும் ஏற்படுத்துதல், கருமுட்டை உற்பத்தி மற்றும் அதன்மூலம் கரு உற்பத்தி, போன்ற பல பிரச்சனைகளைத்தீர்க்கமுடியும். மேலும், சட்டப்படி நம் மூன்றாம் உலக நாடுகளில் உயிரோடு இருக்கும் ஒருவரின் இருதயம் மற்றும் ஈரல் போன்ற உறுப்புகளை வேறொருவருக்கு மாற்றம் செய்யமுடியாது, முதல் உலகநாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளில் வேண்டுமானால் பகுதி ஈரல் மாற்று சிகிச்சை என்பது இப்போது சாத்தியத்தில் இருக்கும் ஒன்று. ஆனால், இந்த சினைமுட்டைப்பை மாற்று என்பதில் எந்த ஒரு சட்டச்சிக்கலும் இல்லை, மேலும், ஆரோக்கியமாக 35 வயதிற்குள்ளிருக்கும், ஒன்றிரண்டு குழந்தை பெற்ற எந்த பெண்ணும் தன் இரண்டு சினைமுட்டைப்பைகளுள் ஒன்றினை தாராளமாக தானமாக அளிக்கலாம். அது உறவினராகவோ அல்லது வேற்று ஆட்களாகவோ கூட இருக்கலாம் , இந்த 35 வயது அதிகபட்சமாக ஏன் நிர்ணயிக்கப்படுகின்றது எனில் , 35 வயதிற்கு மேல் பெண்களுக்கு அறுவை சிகிச்சையிலிருந்து ரணம் ஆறி குணம் பெற சற்று தாமதமாகலாம் என்பதாலே இந்த அதிகபட்ச வயது வரம்பு, தானம் பெறுவோருக்கு வயது வரம்பு இல்லை என்றே கூறியிருக்கின்றார் மருத்துவர்.

இன்றைய தேதியில் , விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும், இன்றும் நம் நாட்டுப்புறங்களில் மாதவிடாய் வராத பெண்களினை இரண்டாம் தரமாக நடத்தும் கொடுமையினை இந்த மாற்று சிகிச்சை மாற்றிக்காட்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை,

மேலும் இதன்மூலம், மெனோபாஸ் என்று கூறப்படும் மாதவிடாய் நிற்றல் (வயது முதுமை அடையும்கால்) போன்ற நிகழ்வுகளிலிருந்தும் பெண்கள் விடுபெறலாம், இந்த மாற்று சிகிச்சை மூலம் எந்த வயதிலும் ஒரு பெண் குழந்தை பெறலாம், இது இந்த நூற்றாண்டின் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என்று கூறினால் அது மிகையாகாது. மாற்று அறுவை சிகிச்சை செயத மருத்துவர் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் தன் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில் சிறப்புப்படிப்பாக இந்த டர்னரின் குறைபாட்டினை தன் ஆய்வுக்கட்டுரைக்காக எடுத்துக்கொண்டு தன் இறுதி முடிவாக சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சையினை சிபாரிசு செய்தபோது அவரின் ஆசிரியர்கள் அனைவரும் சிரித்தது நம் மருத்துவரின் அறிவியல் ஆர்வத்தினை தூண்டிவிட அனைத்து சிறப்புக்கல்விகளையும் இதற்காகப்பயின்று இறுதியில் இன்று இந்தியாவிலும் ஒரு மாற்று சிகிச்சைக்கு அடிகோலமுடியும் என்று நிரூபித்து சரித்திரத்தில் நீங்காப்புகழ் பெற்றுவிட்டார் மருத்துவர் பிரவீன் ம்ஹாத்ரே. இவரினைத்தொடர்புகொள்ள :
pravinmhatre@hotmail.com
pravinmhatre@indiatimes.com

இந்த ஆராய்ச்சி பற்றி மேலும் அறிய ஆங்கிலச்சுட்டி :
http://www.scienceinafrica.co.za/2003/february/ovary.htm

மேலும் சூன் மாதம் 2005ஆம் ஆண்டில் ஆரோக்கியமான ஒரு பெண் குழந்தையினை தன் இரட்டை சகோதரியிடமிருந்து பெற்ற சினைமுட்டைப்பையின் மூலம் பெற்றெடுத்த ஒரு தாயின் விவரங்களையும் கீழ்காணும் இணைப்பில் காணலாம்.
http://www.nature.com/news/2005/050606/pf/050606-7_pf.html

மேலும் உலகின் முதல் சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை பற்றி அறிய கீழ் காணும் சுட்டியினை சுட்டவும்,
http://www.exn.ca/Stories/1999/09/23/55.asp

ஸ்ரீஷிவ்…இந்திய தொழில்நுட்பக்கழகம் – குவஹாத்தி
ஆராய்ச்சி மாணவர், உயிர் இயந்திரவியல் துறை,
அஸ்ஸாம், இந்தியா.

Series Navigation

ஸ்ரீஷிவ்

ஸ்ரீஷிவ்