சரித்திரப் பதிவுகள் – 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

வந்தியத்தேவன்


‘பல மாதங்களாகக் காத்திருந்த நீங்கள் தலைசிறந்த புனிதப் போரினை மேற்கொள்ளப் போகின்றீர்கள்…உங்கள் பணி எளிதானதல்ல. எதிரிகள் தக்க பயிற்சியுடனும், தேவையான தளவாடங்களுடனும், போர்களினால் விளைந்த திண்மையுடனும் எதிர்கொள்வார்கள். மிகுந்த மூர்க்கத்தனத்துடன் போரிடுவார்கள்… ‘

— ட்வைட்.டி.ஐஸ்சனோவர் (06 ஜீன் 1944, நேசப்படைகளின் தலைமைத் தளபதி)

பிரான்சை ஜெர்மனியின் நாஜிப்படை ஆக்ரமித்திருந்த காலம். உலகத்திலேயே மிகப்பெரிய ஆக்ரமிப்பு படை ‘ஓவர்லார்டு நடவடிக்கை (Operation Overlord) ‘ மூலம் ஜெர்மனியைத் துரத்த தயாரானபோது, நேசப்படைகளின் தலைமைத் தளபதி ஐஸ்சனோவர் வீரர்களிடம், உரை நிகழ்த்தினார். மேற்கோளிடப்பட்ட அவரது பேச்சிலிருந்தே இம்முயற்சி எத்தகைய அபாயகரமானதென்று உங்களுக்கு விளங்கியிருக்கும்.

‘ரேங்க் பேதமின்றி, அலையலையாக, 20 மைல்கள் பரந்து, ஐந்தாயிரம் போர்க்கப்பல்கள் புடைசூழ அவர்கள் (நேசப்படையினர்) வந்தார்கள். புதிய வேகம் பெற்ற வாகனாதிகள், துருப்பிடித்த சரக்குக் கப்பல்கள், நீராவிக் கப்பல்கள், மருத்துவக் கப்பல்கள், எரிபொருள் ஏந்திய டாங்கர்கள், கப்பலை இழுக்கும் சிறிய படகுகள் அவற்றுள் அடங்கும். 350 அடி நீளம் கொண்ட துருப்புகள்/தளவாடங்களை கரை சேர்க்கும் கலங்கள்… இவையனைதிற்கும் முன்னே கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள், கரையோரப் பாதுகாப்புக் கப்பல்கள், திசை காட்டும் கருவிகள் விதைக்கும் கலங்கள் சென்று கொண்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான போர்விமானங்கள் மேகத்திற்கு தாழப் பறந்தன. ‘ (Cornelius Ryan in his book ‘The Longest Day).

மேற்கூறிய பத்தி சுருக்கமாக யுத்ததிற்கு சென்ற நேசப் படைகளின் பரிமாணத்தை விளக்கும்.

கிழக்கு மற்றும் மேற்கே நாஜிப்படைகள்

1939-41 ‘ல் செய்த போர்களினால் மேற்கு ஐரோப்பாவும், 1942 சண்டையில் கிடைத்த ரஷ்யாவின் பெரும்பகுதிகளும் ஹிட்லரின் பிடியிலேயே தொடர்ந்தன. நடுநிலை நாடுகளான ஸ்வீடன், போர்ச்சுகல், ஸ்விட்ஜர்லாந்து மற்றும் ஸ்பெயின் தவிர ஏனைய ஐரோப்பா முழுதையும் நாஜிப்படைகள் ஆக்ரமித்திருந்தன. வட ஆப்பிரிக்காவும் அவர்கள் பிடியிலிருந்து தப்பவில்லை. கிழக்கே ரஷ்யாவின் ஸ்டாலின்கிராடு, குர்ஸ்க் போன்ற பகுதிகளில் நடந்த எதிர்ப்பு சண்டைகளால் சிறிதே ஜெர்மனி பின்வாங்கியது. இருப்பினும் மேற்கிலிருந்து அமெரிக்காவும் இணைந்து இரண்டாவது முனைத் தாக்குதல் தொடுத்தாலொழிய ஜெர்மனியைத் தோற்கடிக்க முடியாதென்று நேச நாடுகளுக்குப் புரிய ஆரம்பித்தது.

இரண்டாவது முனை

ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின், தனது சகாக்களான வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ப்ராங்க்ளின் ரூசோவெல்ட் இருவரிடமும் மேற்கிலிருந்து இரண்டாவது முனைத் தாக்குதலை ஆரம்பிக்கச் சொல்லி வலியுறுத்த ஆரம்பித்தார். ஹிட்லரும் 11 டிசம்பர் 1941 ‘ல் அமெரிக்கா மீது போர் பிகடனம் செய்தார். அமெரிக்க ஜனாதிபதியான ரூசோவெல்ட் தனது நம்பகமான தளபதியான ஐஸ்சனோவரை அழைத்து, நேசப் படைகளின் வெற்றிக்கான வழிமுறையைக் காண கட்டளை பிறப்பித்தார்.

1943 ‘ல் ஐஸ்சனோவர் இரு நடவடிக்கைகளை பிரஸ்தாபித்தார். அவையாவன: Operation Roundup மற்றும் Operation Sledgehammer. இவற்றுள் முதல் நடவடிக்கையை இங்கிலாந்து ஆதரித்தது. இருப்பினும் Operation Torch என்று வடஆப்பிரிக்காவிலுள்ள நாஜிப்படைகளை முதலில் அழித்தொழிக்க வேண்டுமென்று புதிய யோசனையையும் முன் வைத்தது. இக்குழப்பத்திலேயே காலம் கடப்பதைக் கண்டு பதறிய ரூசோவெல்ட்டும், ஸ்டாலினும் டெஹ்ரானில் நடந்த சந்திப்பில் மே 1944 ‘ல் ஜெர்மனிக்கெதிரான மேற்குமுனைத் தாக்குதல் தொடங்க வேண்டுமென்று கறாராக சர்ச்சிலிடம் தெரிவித்தனர். பதிலாக ஸ்டாலின் கிழக்கு முனைப் போரை மும்முரமாக செயல்படுத்துவதாகவும், ஜெர்மனியை வென்ற பிறகு ஜப்பானுக்கெதிரான போரில் நேசப்படைகளோடு பங்கு பெறுவதாகவும் வாக்குறுதியளித்தார்.

ஓவர்லார்டு நடவடிக்கை (Operation Overlord)

முதலில் லெப்டினென்ட் ஜெனரல் பிரட்டெரிக் மோர்கன் நேசப்படைகளின் தலைமைத் தளபதியாக அறிவிக்கப்பட்டார். அவர்தான் ஓவர்லார்டு நடவடிக்கையின் சூத்திரதாரி. ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்று தனது கருத்திற்கு செயல் வடிவமும் கொடுத்தார். பின்னர் ஐஸ்சனோவர் ஜனவரி 1944 ‘ல் நேசப்படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தன்னைத் தோற்கடிக்க நேசப்படைகள் இருமுனைத்தாக்குதல் தொடுக்கலாமென்று ஹிட்லரும் கணித்திருந்தார். அதனால் பிரான்ஸில் நாஜிப்படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு தனது தளபதியான எர்வின் ரொம்மலை ஏவினார். நேசப்படைகளும் ரொம்மலை எதிர்த்து ஆப்பிரிக்க பாலைவனங்களில் போரிட்ட பெர்னார்டு லா மாண்ட்கோமரியை, ஐஸ்சனோவர்க்கு உதவியாக நியமித்தது. மேலும் வால்டர் ஸ்மித் என்னும் அமெரிக்கர் பிரதானத் தளபதியாகவும், இங்கிலாந்து தரப்பில் ஏர் சீப் மார்ஷல் ஆர்தர் டெட்டர், அட்மிரல் பெர்ட்ராம் ராம்சே, ஏர் சீப் மார்ஷல் டிராப்போர்டு லே-மலோரி ஆகியோரும் ஐசனோவர்க்கு துணையாக உதவி புரிய அனுப்பப்பட்டார்கள்.

நார்மண்டி பகுதி மொத்தம் 5 கடற்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. உடா, ஓமகா, கோல்டு, ஜுனோ மற்றும் ஸ்வார்டு போன்ற கடற்கரைகளில், மொத்தம் ஐந்து தரைப்படை ஸ்குவார்டன்கள் (2 அமெரிக்கா, 2 இங்கிலாந்து மற்றும் 1 கனடா) மூலம் தாக்குதல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. D Day (தாக்குதலின் முதல் நாள்) நார்மண்டியின் மேற்கு முனையில் 2 அமெரிக்க விமானப்படைப் பிரிவுகளும், இங்கிலாந்தின் ஒரு விமானப்படைப் பிரிவு அதன் கிழக்கு முனையிலும் தாக்குதல் தொடுக்கமாறு முடிவாகியது. எதிரிக்கு வியப்பைத் தரும் வண்ணம் ‘நீந்தும் டாங்குகள் ‘ பயன்படுத்தவும் முடிவானது. இந்நடவடிக்கைக்கு முதல் மூன்று வாரத் தேவையாக 2,00,000 ஊர்திகளும், 6,00,000 டன் சரக்குகளும் மொத்தம் 6,500 கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்ல பெரிய திட்டம் தீட்டப்பட்டது.

வான்வெளித் தாக்குதல்

தாக்குதலின் முதல் கட்டமாக 13,000 போர்விமானங்கள் ஜெர்மனிப்படை மீது குண்டு பொழியத் தயாராக இருந்தன. நாஜிப்படையோ பதில் தாக்குதலுக்கு வெறும் 400 போர்விமானங்களே தயாரான நிலையில் கொண்டிருந்தது. நேசப் படை விமானங்களின் குண்டு மழையில் பிரான்ஸின் புகைவண்டி நிலையங்கள், சாலைகள், நாஜிப் படைகள் பயன்படுத்தும் விமான நிலையங்கள், ரேடார் கண்காணிப்பு நிலையங்கள், கரையோர பீரங்கிகள் மற்றும் பாலங்கள் அனைத்தும் கடுமையாக சேதமுற்றன. இவ்வான்வெளி தாக்குதலே நேசப்படைகளின் வெற்றிக்கு அடிகோலியதெனலாம்.

மேலும் இத்தாக்குதல் நார்மண்டி பகுதியை குறிவைத்து நடக்காமல் ஏனைய இடங்களில் பரவியிருந்தமையால், நேசப்படைகளின் கடல்வழி தாக்குதல் இடம் பற்றி ஜெர்மனி குழம்பியது. இது போதாதென்று கடல் தாக்குதல் நார்மண்டியிலில்லை என்று வேண்டுமென்றே ஜெர்மன் உளவு ஸ்தாபனத்திற்கு நேசப்ப்படை தவறான துப்பு கொடுத்தும் குழப்பியது. ஜெர்மனியின் சங்கேத செய்திகளை துல்லியமாக இனங்கண்டதால், நாஜிக்களின் எதிர்தாக்குதல் பற்றிய அனைத்து தகவல்களும் முன்கூட்டியே நேசப்படைக்கு தெரிந்தும் விட்டிருந்தது.

ஹிட்லருக்கு மட்டும் ஏனோ நார்மண்டிப் பகுதி தாக்கப்படலாமென்று கடைசி நிமிடத்தில் தோன்றியது. ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டிருந்தது. ரொம்மலோ தேவையில்லாத கடற்கரைப் பகுதிகளிளெல்லாம் 40 லட்சம் கண்ணி வெடிகளைப் புதைத்து, நேசப்படைகளை எதிர்காண ஆவலாயிருந்தார். இதற்கு நடுவே ரொம்மலுக்கும் அவரது மூத்த அதிகாரியான Rundstedt ‘க்கும் டாங்க்குள் நிறுத்துமிடங்களில் கருத்துப் பேதமேற்பட, ஹிட்லரே தலையிட்டு பிரச்ச்சினையை சீர் செய்ய வேண்டியதாயிற்று. நேசப்படைகளின் தாக்குதல் ஆரம்பித்த போது ரொம்மல் விடுப்பில் இருந்ததுதான் பெரிய வேடிக்கை.

ஹோபார்ட்டின் பீரங்கிகள்

பாதுகாப்பு அரண் கொண்ட கடற்கரையில் மொத்தம் இரு வழிகளில் துருப்புகளை இறக்கலாம். கடற்கரையில் தொடர் குண்டுமழை பொழிந்து, அதே நேரத்தில் தாக்குதல் படையினை கரைக்கு அருகே எவ்வளவு தூரம் உள்ளே வர முடியுமோ அவ்வளவு தூரம் வந்து துருப்புகளை இறங்கச் செய்யலாம். இச்செய்கையினால் உயிர்ச் சேதம் மட்டுப்படும். இம்முறையினைத்தான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கடற் கமாண்டோக்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

கடல் வற்றுதலின் போது (low tide) துருப்புகளை கடற்கரையில் துருப்புகளை இறக்குவது இரண்டாவது முறையாகும். கரையில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு இம்முறை உகந்ததென்றாலும், உயிர்ச் சேதம் அதிகமாக வாய்ப்புண்டு. கரையினருகே வரவேண்டிய தேவையில்லாததால் கலங்களுக்கு அதிக ஆபத்தில்லை.

ஜெர்மனியின் பாதுகாப்பு அரண் மிகப் பலமாக இருந்த காரணத்தால் நேசப் படைகள் இரண்டாவது முறையினையே தேர்ந்தெடுத்தது. முதல் முறைப்படி கடல் ஏற்றத்தின் (high tide) போது தாக்குதல் தொடுத்திருந்தால் அரணிலிருந்த நாஜிக்கள் குருவியைச் சுடுவது போல் நேசப்படையினரையும், கலங்களையும் அழித்திருப்பார்கள். கரையிறங்கும் காலாட்படையோடு (infantry) அதிக டாங்குகளையும் அனுப்பினால் ஜெர்மனியின் பாதுகாப்பு அரணைத் தகர்க்கமுடியுமென்று திண்ணமாக நேசப் படை நம்பியது.

இத்தாக்குதலுக்கு முன்னர் இங்கிலாந்தின் தரைப்படைக்கு நவீன குண்டுதுளைக்கா கவச டாங்க்குகள் பிரிவினை உண்டாக்கும் பணியில் மேஜர் ஜெனரல் பெர்சி ஹோபார்ட் ஈடுபட்டிருந்தார். இவரது கொள்கைகளை ‘கொமாளித்தனமென்று ‘ சிலரும், ‘மிகப்புதுமையானதென்று ‘ சிலரும் தீவிர கருத்து பேதங்களோடு விவாதித்த காலத்தில், இனம்புரியாத காரணங்களுக்காக ஹோபார்ட்டுக்கு படையிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டது. ஆனால் ஹோபார்ட்டின் திறமை குறித்து சர்ச்சிலுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. D Day நடவடிக்கைக்காக மீண்டும் ஹோபார்ட் அழைக்கப்பட்டார். 79 ‘தாவது கவசவண்டிகள் பிரிவின் தலைவராய் ஹோபார்ட் ஆற்றிய பணி அளவிடமுடியாதது. இவர் உருவாக்கிய கவச டாங்குகள் பல நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இவரது கண்டுபிடிப்புகளில் ‘ஆர்க்ஸ் ‘ எனப்படும் பாலமைக்கும் டாங்குகள், ‘ஷெர்மன் DD [Duplex Drive] ‘ எனப்படும் நீந்தும் டாங்குகள், ‘கிராப் ‘ எனப்படும் கண்ணிவெடியகற்றும் டாங்குகள், ‘பாப்பின்ஸ் ‘ எனப்படும் பாதையமைக்கும் டாங்குகள், சர்ச்சில் எனப்படும் தீ உமிழும் டாங்குகள், ‘பேசைன்ஸ் ‘ எனப்படும் மதகமைக்கும் டாங்குகள் போன்றவை அடங்கும்.

ஓவர்லார்டு நடவடிக்கையில் நீந்தும் டாங்குகளின் பணி மகத்தானது. ஷெர்மன் வகை டாங்குகளுக்கு தண்ணீர் புகா கேன்வாஸ் அரண் கொடுத்து, இரு முன் தள்ளிகளும் (propellars) பொருத்தப்பட்டன. கரையிறக்கும் கலங்கள் (Landing craft) மூலம் இவ்வகை டாங்குகள் கரைக்கருகே எடுத்துச் செல்லப்பட்டன. 4-5 கீமீ தூரமிருக்கையில் டாங்குகள் கலத்திலிருந்து கடலில் இறக்கப்பட, அவை நீந்தி கரையினை அடைந்தன. பின்னர் கான்வாஸ் உறையின் காற்று நீக்கப்பட்டு போர்முனையில் சீறிப்பாய்ந்தன. கடற்கரையில் துருப்புகளை மட்டுமே எதிர்பார்த்த ஜென்மானியர்க்கு DD டாங்குகள் ‘அதிர்ச்சி வைத்தியம் ‘ அளித்தன.

ஓமகா கடற்கரை

D Day ‘ல் இங்குதான் உக்கிரமான போர் நிகழ்ந்தது. மற்ற நான்கு கடற்கரைகளைவிட ஓமகா பெரியது. மேலும் கடற்கரையில் சிறிய மலைக்குன்றுகள் அமெரிக்கப் படைகளின் தாக்குதலை கடினமாக்கியது. ரொம்மலும் தன் பங்கிற்கு ‘டிராகன் பற்கள் ‘ என்று பெயரிட்டு பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியிருந்தர். மலைக்குன்றுகளில் ‘எதிர்ப்புக் கூடுகளை ‘ ஏற்படுத்தியதோடு, படைகளின் இலகுவான நடமாட்டத்திற்காக பதுங்கு குழிகளையும் வெட்டி வைக்க ஆணைகள் பிறப்பித்தார். அமெரிக்கப் படைகளை எதிர்நோக்கி ஜெர்மனியின் பீரங்கிகள் ஓமகா கடற்கரையில் வெறியுடன் காத்திருந்தன.

ஓமர் பிராட்லி தலைமையில் அமெரிக்காவின் முதலாம் தரைப்படை ஓமகா கடற்கரையை வந்தடைந்தது. துரதிருஷ்டவசமாக ஏவப்பட்ட 32 DD டாங்குகளில் 29 மூழ்கிப்போனது (27 தான் மூழ்கியதென்று சொல்வோருமுண்டு). எதிர்பாராமல் வீசிய ஆறடி உயர அலைகள், துருப்புகளோடு டாங்குகளை மூழ்கடிக்கச் செய்துவிட்டன. மேலும் கவச டாங்குகளின் துணையில்லாமல் கரையேறிய அமெரிக்க வீரர்களின் நிலை இன்னும் மோசமானது. இது பற்றாதென்று பலமாக வீசிய காற்று கரையிரக்கும் கலங்களை அலைக்கழித்தது. இதனால் குறித்த இடத்தில் துருப்புகள் வந்தடைய முடியவில்லை. கரையை எட்டிய பின்னர் எப்பிரிவு எங்கே செல்ல வேண்டுமென்ற குழப்பம் அதிகரித்தது. ஜெர்மனியின் தானியங்கி துப்பாக்கி ரவைகள் சந்தோஷமாக அமெரிக்கர்களை துளைத்தெடுத்தன. கடற்கரையினருகே ஏற்பட்டிருந்த மணற்மேடுகள் அமெரிக்கர்களுக்கு சிறிதே பாதுகாப்பளித்தாலும், கடலிலிருந்து அவற்றை சென்றடையுமுன் பலர் குண்டுகளுக்கு மரித்துப் போனார்கள். நமது கார்கில் யுத்தத்தில் நடந்தது போல் அமெரிக்க வீரர்கள் உயிரை பணயம் வைத்து மலைகுன்றுகளில் ஏறி வீரமாகப் போரிட்டனர். மேலும் சிறிய கப்பல்களை கரைக்கு மிக அருகே வர வைத்து ஜெர்மனியின் பீரங்கிகளை பதம் பார்த்தார்கள். ஒரே நாளில் இங்கே பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை சுமார் 2,400. காலை 6:30 மணிக்கு ஆரம்பித்த யுத்தத்தில் நண்பகல் தாண்டியவுடன் அமெரிக்கர்களின் கை ஓங்க ஆரம்பித்தது. இருள் சூழும் நேரத்தில் கிட்டத்தட்ட ஓமகாவை அமெ

ரிக்கா பிடித்து விட்டது.

உடா கடற்கரையில் ஏவப்பட்ட 32 DD டாங்குகளில் 28 கரை சேர்ந்தது. மற்ற கடற்கரைகளிலும் DD டாங்குகளின் பங்களிப்பு மகத்தானது.

கோப்ரா நடவடிக்கை (Operation Cobra)

25 ஜூலை அன்று அனைத்து கவச டாங்க்குகளையும் மேற்குப் பகுதியில் இங்கிலாந்தின் தரைப்படையை சமாளிக்க ஜெர்மனி அனுப்பியது. இது போதாதா ? நேசநாடுகளின் துரிதப்படை (Expeditionary Force) கோப்ரா நடவடிக்கை என்னும் வான்வெளித்தாக்குதலைத் தொடுத்தது. இத்தாக்குதலால் இங்கிலாந்தை சமாளிக்கச் சென்ற நாஜிப்படை பிளவுபட்டது. சந்து முனையில் சிந்து பாட அமெரிக்காவின் தரைப்படை கிடைத்த இடைவெளியில் புகுந்து கொண்டது. இப்போது நார்மண்டியில் எஞ்சியிருந்த நாஜிக்களை இப்படைபின்னாலிலிருந்து தாக்கி சின்னாபின்னமாக்கியது. ஹிட்லரின் ஆணைகள் சுத்தமாக மொழி பெயர்க்கப்பட்டதால் ஜெர்மனியின் பதில் தாக்குதலும் விலைவுகள் ஏதுமின்றி பிசுபிசுத்துப் போனது.

நாஜிப்படை தலைமையின் கதி

ஜெர்மனியின் ஏழாவது தரைப்படையின் கமாண்டர் டால்மேன் 28 ஜூன் அன்று இறந்துபோனார். மாரடைப்பென்று காரணம் சொன்னாலும் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென்று ஊகம் நிலவியது. யுத்தத்தில் ஜெர்மனி தோற்றுவிடுமாகையால் நேசப்படைகளுடன் அமைதிப் பேச்சு நடத்துங்கள் என்று ஹிட்லருக்கு அறிவுரை கூறியமையால் Rundstedt ‘தற்கொலை ‘ செய்து கொள்ள நேரிட்டது. இதற்கு நடுவே நாஜிப்படை அதிகாரிகள் சிலர் 20 ஜூலையன்று கிழக்கு பெர்ஷ்யியன் தலைமையகத்தில் ஹிட்லரைக் கொல்ல செய்த சதி தோல்வியில் முடிந்தது. Rundstedt இடத்தில் வந்த Gunther Von Kluge என்பவரும் இதே கருத்தைக் கூற 18 ஆகஸ்ட் அன்று தற்கொலை செய்து கொள்ள நேரிட்டது. இங்கிலாந்து வீரரின் தாக்குதலில் சிக்கி காயமுற்ற ரொம்மல் அக்டோபரில் தற்கொலை செய்துகொண்டார்.

இன்றைய நார்மண்டி

ஏறத்தாழ இரண்டு லட்சம் கட்டிடங்கள் சண்டையில் சிதிலமாகின. கேன் பகுதி ஒரு கற்குவியலாகவே காட்சியளித்தது. மொத்தம் 15,000 வீடுகளில் 9,000 வீடுகள் குண்டுவீச்சினில் தரைமட்டமானது. போருக்குப் பின்னர் வந்த அரசுகள் ‘வெற்று அரசியலிலேயே ‘ காலம் கழிக்க, பிரான்ஸின் அதிகார வர்க்கம் விழித்துக் கொண்டது. அமெரிக்க நிதியுதவியோடு உள்ளூர் மக்களின் உழப்பினையும் ஒருங்கிணைத்து, 1951 ‘ல் கிட்டத்தட்ட நார்மண்டியை பழைய நிலைமைக்கு கொண்டுவந்தனர். 1954 ‘ல் கேன் நகரமும் புனரமைக்கப்பட்டது.

நினைவுச் சின்னங்கள்

இந்தியருக்குத்தான் நாட்டுப்பற்று என்பது தவணை முறையில் வரும். இலங்கை சென்ற இந்திய அமைதி காக்கும் படையில் இறந்தவரை சுலபமாக மக்களும், அரசாங்கமும் மறந்து விட்டது. கார்கில் போரிலே காயம்பட்டவரையும் ஞாபகம் வைத்துள்ளார்கள். ஆனால் பிரான்ஸு தேச மக்கள் அவ்வாறில்லை. ‘தனது பழமையினை மறந்த எந்த தேசத்திற்கும் எதிர்காலமில்லை ‘ என்று முழங்கிய சர்ச்சிலின் தேசமான இங்கிலாந்து மக்களும் தேசப்பற்றிற்கு பேர் போனவர்கள். அமெரிக்காவைப் பற்றி கேட்கவே வேண்டாம். அமெரிக்க மக்கள் வியட்நாம் யுத்தத்தை மிகவும் எதிர்த்தனர். இருப்பினும் அமெரிக்கர் பலர் இப்போரில் பங்குகொண்டு இறந்து போன மற்றும் காயம்பட்ட வீரர்களை மறந்துவிடவில்லை.

நார்மண்டி படையெடுப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் இறந்தனர். பிணக்குவியலாயிருந்த 9,000 அமெரிக்க வீரர்களின் உடல்களை பிரித்தெடுத்து ஓமகா கடற்கரைக்கு அருகே செயிண்ட் லெளரண்ட் என்னுமிடத்தில் அடக்கம் செய்தனர். லா காம்பே என்னுமிடத்தில் சுமார் 20,000 ஜெர்மனி வீரர்கள் அவ்வாறே அடக்கம் செய்யப்பட்டனர். ரான்வில் என்னுமிடத்தில் சுமார் 2,000 இங்கிலாந்து வீரர்களுக்கு சமாதிகள் உருவானது. நேச நாடுகளைத்தும் ஒவ்வொரு வருடமும் உயிர்த்தியாகம் புரிந்த இவ்வீரர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றன.

இப்போது நார்மண்டியில் பல தரப்பட்ட மக்கள் விஜயம் செய்கின்றனர். இறந்த தோழர்களின் நினைவாகவும், உயிரோடு மீண்டவர் ஒன்று கூடவும், வரலாற்று சிறப்புமிக்க இடத்தை காணும் ஆவலிலும் என்று பார்வையாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

t_sambandam@yahoo.com

http://www.vanthiyathevan.blogspot.com

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்