சரித்திரப் பதிவுகள் – 2 : U – படகுகள்

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

வந்தியத்தேவன்


இங்கிலாந்தின் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், ‘இந்த யுத்தத்தில் (இரண்டாம் உலக யுத்தம்) என்னை மிகவும் கலவரப்படுத்தியது U – படகுகள் ஏற்படுத்திய அபாயம்தான் ‘ என்றார். ஆமாம்…சுருட்டு சு(சூ)ப்பராயனையே ஆட்டிப்படைத்த U – படகுகள் என்ன பெரிய கொம்பர்களா ? பார்ப்போம்.

எவ்வகைக் கப்பலுக்கும் எமனாய் ஆகக்கூடிய சர்வ வல்லமை படைத்தது நீர்மூழ்கி. சோனார் அலைகள் (கேளா ஒலி அலைகள்…அதாங்க வெளவால் பயன்படுத்துமே) மூலம்தான் நீர்மூழ்கிகளை, தளக் கப்பல்கள் (Surface Ships) மற்றும் சிலவகை விமானங்கள் கண்டு பிடிக்கும். கடலுக்குள் நீர்மூழ்கியைக் கண்டுபிடிப்பதென்பது ‘ஒரு பெண்ணின் மனதைத் தொட்டு ‘ காதலைக் கண்டுபிடிப்பதற்கு ஒப்பாகும். சோனார் அலைகளும் இவ்விஷயத்தில் சோடை போய்விடும். கடலடியில் இருந்து பிரதிபலிக்கப்படும் சோனார் அலைகளில் நீர்மூழ்கியெது, பாறைகளெது என்ற குழப்பங்கள் இன்னுமுண்டு. அறிவியல் வளர்ச்சியில் இன்று பல்வேறு வகைப்பட்ட நீர்மூழ்கிகளின் குறிப்பிட்ட அதிர்வுகள் ஒரு கணிணியில் சேமிக்கப்பட்டு, கடலடி பிரதிபலிப்புகளை அதனுள் உள்ளீடு செய்து ஆராய்ந்து அறிந்தாலும், விடை என்னவோ ‘குத்து மதிப்பாகவே ‘ இருக்கும். அதாவது அறுதியிட்டு இது இந்நீர்மூழ்கிதான் என்று கூறுவது கடினம். மேலும் நீர்மூழ்கிகளிலும் சோனார் அலை உணர்வான்கள் (SONAR Detectors) உண்டு. ஒரு கப்பல் தனது சோனார் அலைகளைப் பாய்ச்சினால் அது தனது இருப்பிடத்தை நீர்மூழ்கிக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது போலாகிவிடும். பின்னர் என்ன ? பழம் நழுவி பாலில் விழுந்தது போல், கடலிலே பதுங்கி வந்து ஒரே ஒரு நீரேவுகணையை (Tarpedo) குறி பார்த்து அடித்து விட்டால் போதும். டைட்டானிக்கையும் தரை காணச் செய்யலாம். அடித்தபின் விடு ஜூட். இதுவே U – படகுகளின் பயங்கரத் தனித்தன்மை.

நீர்மூழ்கிகள் பற்றிய பயத்தை ஒரு எளிய உலக விதியால் விளக்கிவிடலாம். கடலிலும் எல்லைக்கோடுகள் உண்டு. ஒவ்வொரு நாட்டிற்கும் தனது பிராந்திய கடல்கோட்டுக்குள்ளே (Territorial Waters) பொதுவாக முழு சுதந்திரம் உண்டு. பிராந்திய எல்லைக்கோட்டினைத் தாண்டினால் சர்வதேச எல்லைக்கோடு (International Waters) ஆரம்பமாகும். அங்கே எந்த ஒரு நாடும் கலப் போக்குவரத்திலிருந்து எதிலும் குறுக்கிட முடியாது. எந்நாட்டு நீர்மூழ்கியானயும் தண்ணீர் மட்டத்தில் மேலே பயணம் செய்தால் எவ்வித இடையூறுமின்றி செல்லலாம். ஆனால் தனது பிராந்திய எல்லைக்கோட்டுக்குள்ளே ‘டைவ் ‘ செய்தாலும் அது ‘போரில் ‘ இருப்பதாகவே விதி சொல்கிறது. அதாவது போரில் இருக்கும் நீர்மூழ்கியை பிற நாட்டு கலங்கள் தாக்கியழிக்கலாம். கேள்வியேதுமில்லை.

நீர்மூழ்கிகள் பகலிலே பெரும்பாலும் நீரடியிலேயே ஆழ்ந்து தனது பேட்டரிகளால் இயங்கும். பேட்டரிகளில் சார்ஜ் குறையும் போது நள்ளிரவு நேரத்தில் ‘பெரிஸ்கோப் ஆழத்தில் ‘ (அதாவது மூக்கை மட்டும் மேலே நீட்டியவாறு) எதிரிகள் இருக்கின்றார்களா என்று எட்டிப்பார்க்கும். பின்னர் விரைவில் கடல் பரப்பிற்கு வந்து, தனது டாசல் ஜெனெரேட்டர்கள் மூலம் பாட்ட்டரிகளை சார்ஜ் செய்த பின்னர் மீண்டும் ‘டைவ் ‘ அடிக்கும். (நீர்மூழ்கி தண்ணீரில் சீறிப் பாய்ந்ததாக, அதாவது ‘டைவ் ‘ அடித்ததாகவே கூறவேண்டும். மூழ்கியதாகக் கூறக்கூடாது. மூழ்கியதென்றால் ‘sink ‘ ஆனதாகப்படும்).

அணுசக்தி நீர்மூழ்கிகள் வந்து காலம் பல ஆகிவிட்டது. டாசல் ஜெனரேட்டர்கள் மூலம் கடல் பரப்பில் நீர்மூழ்கிகள் மணிக்கு 25-30 கடல்மைல்கள் (நாட்) வரை வேகமெடுக்கும். ஆனால் அதே நீர்மூழ்கி, தண்ணீருக்கடியில் பேட்டரிகளைப் பயன்படுத்தி மணிக்கு 5 நாட்தான் செல்லமுடியும். பேட்ட்டரிகளால் கொடுக்க முடிந்த உந்து சக்தி அவ்வளவுதான். மேலும் டாசல் ஜெனரேட்டர்களால் பேட்டரிகள் சார்ஜ் செய்யப்படும்போது, கரும் புகையும், வேறு பல வாயுக்களும் வெளிப்பட்டு நீர்மூழ்கி எதிரிகளால் இனம் கண்டுகொள்ளப்படும் அபாயம் என்றுமுண்டு.

இதற்கு நேர்மாறாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கியானது, நீரினடியிலும், கடல் பரப்பிலும் அதி வேகத்தில் செல்லக்கூடியது. அணுசக்தி உலைகலன்களின் கழிவு என்றால் அது கரும்புகையில்லை. அதிகபட்ச ‘நீராவி ‘ வேண்டுமானால் கலனின் குழாய்களிலிருந்து கசியலாம். அதனால் நீருக்கு மேலேயும், அடியிலும் இவ்வுலைகலன்களை இயக்கி அணுசக்தி பெற முடியும். இக்காரணத்தால் மாதக்கணக்கில் கடலுக்குள் அமைதியாய் காத்திருக்கும்/விரைந்து செல்லும் வல்லமை அணுசக்தி நீர்மூழ்கிக்கு உண்டு.

டாசல் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிகளின் முன்னோடிதான் இந்த ‘U – படகுகள் ‘.

போர்க்காலத்தில் இங்கிலாந்துக்கு உணவு, போர்த் தளவாடங்கள் மற்ற அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், வட அமெரிக்காவிலிருந்து அட்லான்டிக் பெருங்கடல் வழியே, வர்த்தகக் கப்பல்கள் மூலமே வந்தடைய வேண்டும். அதைத் தடுக்கச் சென்றுதான் ஜெர்மனியின் கப்பலான பிஸ்மார்க் பலியானது. 1917 ‘ல் முதலாம் உலகப்போரின் போதே இதே தடுக்கும் முயற்சியில் ஜெர்மனி ஈடுபட்டு, இங்கிலாந்தை ஏறத்தாழ வெற்றி கண்டதெனலாம்.

இங்கிலாந்தின் சோனாரைக் குழப்பம் செய்ய U – படகுகள் ‘ஓநாய்க் கூட்டம் ‘ என்ற யுத்த யுக்தியைப் பயன்படுத்தின. ‘இரவிலே கூட்டமாக வெளியே வா…இரக்கமின்றி தாக்கு ‘ இதுவே ‘ஓநாய்க் கூட்டம் ‘ யுக்தியின் இலட்சியம். இதற்கு மற்றொரு பெயர்தான் ‘மகிழ்ச்சி நேரம் ‘ (அடக் கடவுளே!). இதற்கு பதிலடி தரும் விதமாக இங்கிலாந்து ஆரம்பித்தது ‘வேட்டைக்காரன் வேட்டையாடி ‘ (Hunter-Killer). அப்படியென்றால் சந்தடியில்லாமல் ஒரு விமானந்தாங்கி போர்க் கப்பலை வர்த்தகக் கப்பல்களுக்கு நடுவே அனுப்பி விட வேண்டியது. U – படகுகள் (ஓநாய்க் கூட்டம்) வந்தால் பல விமானங்கள் சீறிச் சென்று அவற்றை அதகளம் செய்ய வேண்டியது.

3 செப்டெம்பர் 1939 அன்று விடாக்கண்டன் விக்கிரமாதித்தன் போல் ஜெர்மனியின் U – படகுகள் (குறிப்பாக U – 9), இங்கிலாந்து கப்பல்களான ஏதெனியா மற்றும் கரேஜியஸை நீரேவுகணைகளால் மூழ்கடித்தன். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி ‘இரண்டாம் அட்லான்டிக் யுத்தத்திற்கு ‘ அச்சாரம் போட்டது. பின்னர் 13 அக்டோபர் ஹெச்.எம்.எஸ். ஆர்க் ராயலை U – 81 மூழ்கடித்தது. இது நிகழ்ந்தது ஜிப்ரால்டரில். ஹெச்.எம்.எஸ். ஆர்க் ராயல்தான் பிஸ்மார்க்கைப் போட்டுப் பார்த்தது. இவற்றில் இங்கிலாந்தை முற்றிலும் கலவரப்படுத்திய செய்தி என்னவெனில் கரேஜியஸ் மற்றும் ஆர்க் ராயல் இரண்டுமே விமானந்தாங்கிக் கப்பல்கள்.

இக்காலகட்டத்தில் நார்வே மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஜெர்மனியின் வசம் வந்தன. அப்புறமென்ன ? U – படகுகளுக்கு பல முன்னேறு கடற் தளங்கள். எங்கிருந்து வேண்டுமானாலும் தாக்கலாமென்ற நிலையில் ‘பூந்து விளையாடு ராஜா ‘ என்னும் கடைசிக் கட்டளைக்காக U – படகுகள் காத்திருந்தன.

அத்தகைய உத்தரவு வந்த ஜூன் 1940 முதல், வருடக் கடைசிவரை U – படகுகள் மூழ்கடித்த சரக்கின் அளவைச் சொன்னால் உங்களுக்கு தலை சுற்றும் (சுமார் 3,00,00,00,000 கிலோ கிராம்). அதற்கு முன்னர் 1 அக்டோபர் 1939 வரை மூழ்கடித்த சரக்கோ 15,30,00,000 கிலோ கிராம். சுருக்கமாகச் சொன்னால் 41 வர்த்தகக் கப்பல்களை ஜெர்மானிய U படகுகள் மூழ்கடித்தன. இத்தனைக்கும் ஜெர்மனி தனது நூற்றுக்கணக்கான நீர்மூழ்கிகளில் மாசத்திற்கு வெறும் 21 U -படகுகள் வீதம் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தியது. அஃதாவது முழு வீச்சு தாக்குதல்களில் ஜெர்மனி இறங்கியிருந்தால், நேசப் படைகளின் நிலையை நினைத்தால் குலை நடுங்குகின்றது.

அதுவரை போரில் நடுநிலை(!) வகித்த அமெரிக்கா பின்னூட்டமாய் (இது ஒன்றும் புதிதில்லையே சாமி) மே 1941 ‘லிருந்து இங்கிலாந்திற்கு பாதுகாப்பு கப்பல்கள் அனுப்பி உதவி செய்ய ஆரம்பித்தது. ஜெர்மனி அவட்டிக்கொள்ளவில்லை. செப்டம்பர் மாதம் 1941 ‘ல் அமெரிக்கக் கப்பலான ரூபன் ஜேம்ஸ் U-562 நீர்மூழ்கியால் ஜலசமாதி கட்டப்பட்டது.

தான் ஆடியது திருப்திப்படாமல் இத்தாலியை வேறு ஜெர்மனி துணைச்சண்டைக்கு இழுத்துவந்தது. செப்டம்பர் 1940 ‘திலிருந்து ஜூலை 1943 வரை சுமார் 30 இத்தாலிய நீர்மூழ்கிகள், 105 நேசப்படையின் வர்த்தகக் கப்பல்ஆகளை மூழ்கடித்தன. இச்சண்டையில் தனது 16 நீர்மூழ்கிகள் டுபுக்கு ஆனது வேறு விசயம். (ஆமாம் டுபுக்கு என்றால் என்ன ?)

1942 ‘ல் ஜெர்மனி ‘பேரிகை ஒலி ‘ என்னும் புதிய பிரவர்த்தனத்தைத் (Operation Drum Beat) தொடங்கியது. இதுதான் ஜெர்மனின் ‘மகிழ்ச்சி நேரம் ‘ (Operation Happy Hour) பிரவர்த்தனம் முடிந்து ஆரம்பிக்கப்பட்டது. பேரிகை ஒலி மூழ்கடித்தது குறைந்தபட்சம் 500 நேசக் கப்பல்கள் (Allied Ships). 225 கோடி கிலோ சரக்கு நாசமானது. வடக்கு ஆப்பிரிக்கா சென்ற நேசக்கப்பல்களின் பாதையை U – படகுகள் சரியாக கணிக்காததால் பல கப்பல்+சரக்கு+மனித உயிர் சேதாரமாகாமல் தப்பியது நேசப்படைகளின் நல்ல நேரம் என்றுதான் சொல்லவேண்டும்.

உச்சகட்டம்

ஜெர்மன் அட்மிரல் டோனிட்ஸ் தனக்கென ஒரு புனிதமான இலக்கை வத்திருந்தார். அதாவது மாதம் 7,50,000,000 கிலோ சரக்கையாவது நாசம் செய்ய வேண்டும். மேலே சொன்ன கணக்குகளைக் கூர்ந்து கவனித்தால் ஏறத்தாழ டோனிட்ஸ் தனது இலக்கை அடைந்துவிட்டதாகவே சொல்லலாம். நேசப்படைகளும் தமது பங்கிற்கு வாளாவிருக்கவில்லை. U – படகுகுகளை கண்டுபிடிக்க புதிய ரக போர்விமானங்கள், நீர்மூழ்கியெதிர்ப்பு கண்ணி வெடிகள், அதிக பாதுகாப்பு கப்பல்கள் உற்பத்தி, ஓநாய்க்கூட்டம் தவிர்த்து ‘புதிய பாதை ‘யென்று சளைக்காமல் ஈடுகொடுத்தது.

பிப்ரவரியில் 7 நேசக் கப்பல்களுக்கு ஒரு U – படகு வீதம் இரண்டாம் அட்லான்டிக் யுத்தம் காவு வங்கிக்கொண்டிருந்தது. மார்ச்சில் நேசப்படைகளின் கை மெல்ல மெல்ல உயர ஆரம்பித்தது. மே மாதத்தில் நடந்த கடைசிச் சண்டையில் 41 சரக்கு மற்றும் அதே கணக்கில் U – படகுகள் மூழ்க போதுமடா சாமியென மிச்சமிருந்த U – படகுகளுடன் ஓட்டம் விட்டது ஜெர்மனி. அதுவரை உலகின் கண்களுக்கு ஜெர்மனி இரண்டாம் அட்லான்டிக் யுத்தத்தில் வெற்றி பெற்றதாகவேத் தோன்றியது. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னரே இப்போரிலும் ஜெர்மனி மண்ணைக் கவ்வியதென்று உலகுக்குப் புரிந்தது.

ஜெர்மனியின் நகரங்களை நேசப் படைகள் குண்டு வீசி நாசம் பண்ணிக்கொண்டிருக்க, டோனிட்ஸ் சிலிர்த்தெழுந்தார். ‘ (ஜெர்மனி) பெண்களும், குழந்தைகளும் அவஸ்தை படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பீர்களா ? U – படகுகளின் பயணம் தியாகம் நிறைந்தது. எனக்கு வேறு வழி தெரியவில்லை. U – படகுகள் தமது யுத்தத்தைத் தொடரும் ‘, என்று மறு போர்ப்பிரகடனம் செய்தார்.

1943 ‘ல் ஜூனிலிருந்து செப்டம்பர் வரை U – படகுகளுக்கு சனி திசை. போன இடத்திலெல்லாம் மரண அடி. மூழ்கிய கணக்கோ 107 நேசக்கப்பல்களுக்கு 136 U – படகுகள். நேசப்படைகளின் இழப்பிற்கும், ஜெர்மனியின் இழப்பிற்குமான இடைவெளி மிகவும் பெரிதாக, U – படகுகள் நொண்டியடிக்க ஆரம்பித்தன.

U – படகுகளால் இரண்டாம் உலகப்போரில் விளைந்த உயிர்ச் சேதம் அளவிட முடியாதது. 30,000 நேசப்படையினர் பலியாகியிருக்கலாமென்று கருதப்படுகின்றது. தன்பங்கிற்கு சுமார் 28,000 ஜெர்மனியினரை பலி கொடுத்தது. இறந்தவர்களில் முக்கியமானவர் அட்மிரல் டோனிட்ஸின் மகன். போரின் இறுதியில் 154 U – படகுகள் நேசப்படையிடம் சரணாகதியடைய, 232 U – படகுகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டதுதான் (Scuttle) பரிதாபம்.

1944 ‘ல் ஜெர்மானிய மாலுமிகள் U – படகுகளை ‘இரும்புக் கல்லறைகள் ‘ என்று வர்ணித்தார்கள். ஐந்து வருடங்களில் ஜெர்மானியர்களுக்கு ‘கடவுள் ‘ ஸ்தானத்திலிருந்து ‘கல்லறை ‘களான U – படகுகளை என்னெவென்று சொல்ல ?

‘ஓ ‘ போடுவோமா ?

====

t_sambandam@yahoo.com

Series Navigation

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்