அறிவியல் மேதைகள் – சலீம் அலி (Salim Ali)

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


சலீம் அலி உலகப்புகழ் பெற்ற இயற்கையியல் அறிஞர், பறவையியல் வல்லுநர் மற்றும் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.

சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும். “இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan)” மற்றும் தனது வாழ்க்கை வரலாற்று நூலான “சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow)” ஆகிய நூல்களை இயற்றிய பின்னர் சலீம் அலி என்ற பெயரில் உலகப்புகழ் பெற்றார்.

1876 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 12 ஆம் நாள் பம்பாய் மாநிலத்தில் கேத்வாடி (Khethwadi) என்ற ஊரில் சலீம் அலி பிறந்தார். கல்லூரிப் படிப்பை மேற்கொண்டபோதிலும் பட்டம் ஏதும் பெறவில்லை. தன் தமையனுக்கு உதவும் பொருட்டு இடையில் பர்மா சென்றுவிட்டார். அங்கு சென்ற பின் தமையனுக்கு உதவுவதைவிடப் பறவைகளைக் கவனிப்பதிலேயே பெரும் கவனம் செலுத்தினார். பின்னர் 1920இல் மீண்டும் சலீம் அலி பம்பாய் திரும்பினார்.

பறவைகள் மீது சலீம் அலியின் ஆர்வம் திரும்பியதற்கு, அவரது இளமையில் நடைபெற்ற ஒரு சிறு நிகழ்ச்சியே காரணம். இளம் வயதில் அவர் ஒரு சின்னஞ்சிறு சிட்டுக்குருவியை சுட, அது இறந்து வீழ்ந்தது; இறந்துபோன அக்குருவியின் கழுத்தில் திட்டாக மஞ்சள் நிறக் கறை படிந்திருப்பதைக் கண்டார் சலீம் அலி. இதற்கான காரணத்தைத் தன் சிற்றப்பாவிடம் கேட்க, அவரோ அப்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் கெளரவச் செயலராக இருந்த டபள்யூ.எஸ்.மில்லர்ட் (W S Millard) என்பவரிடம் சலீம் அலியை அறிமுகப்படுத்தினார். மில்லர்டின் உதவியுடன் பறவைகளை எவ்வாறு அறிந்துகொள்வது, எப்படிப் பாதுகாப்பது போன்ற விவரங்களை சலீம் அலி தெரிந்துகொள்ள முடிந்தது.

பர்மாவிலிருந்து திரும்பியவுடன் சலீம் அலிக்கு விலங்கியல் துறையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது; இக்கல்வி பெற்றதன் காரணமாக பம்பாய் தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில், அவருக்கு வழிகாட்டி (guide) வேலை கிடைத்தது. ஏற்கனவே பறவைகளின் வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டிருந்த சலீம் அலிக்கு இவ்வேலை மென்மேலும் அத்துறையில் ஆர்வத்தை ஊட்டியது. பறவையியலில் தன் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள சலீம் அலி ஜெர்மனி சென்று அங்கு டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மன் (Dr Irwin Strassman) என்பவரிடம் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து இந்தியா திரும்பியவுடன், தன் வாழ்க்கைச் செலவுக்குப் போதிய வருமானமின்றி சலீம் அலி வாட நேர்ந்தது. அவர் ஏற்கனவே பார்த்துவந்த வழிகாட்டி வேலையும் பண நெருக்கடி காரணமாக நிரப்பப்படவில்லை.

திருமணமாகி குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட சலீம் அலி வேலையின்றி வாடினார்; ஆனால் அவரது மனைவி பணியில் இருந்தமையால் வறுமைத் துன்பம் பெருமளவுக்கு அவரைத் தாக்கவில்லை. வேலையின்றி இருந்த நாட்களில் சலீம் அலி தனது வீட்டுத்தோட்டத்திலிருந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பறவைகளை நோட்டம் விடுவது வழக்கம்; அங்கிருந்த தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து, அதைப்பற்றிய எல்லா விவரங்களையும் குறித்துக்கொண்டார். 1930 ஆம் ஆண்டு தான் திரட்டிய குறிப்புகளைக்கொண்டு, தூக்கணாங்குருவியின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார்; இது முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆய்வேடு போல விளங்கியது. இக்கட்டுரை, பறவையியலில் சலீம் அலிக்குப் பெரும்புகழையும், பெயரையும் ஈட்டித்தந்தது. இதன் பின்னர் பறவைகளைப்பற்றிய ஆய்வு மேற்கொள்ள பல்வேறு பகுதிகளுக்கும் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வதே அவரது பணியாக இருந்தது. பறவைகளைப்பற்றி மற்றவர் கூறுவதை அவ்வாறே ஏற்றுக்கொள்ளாமல், அவற்றின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனித்து, ஆய்வு செய்து பின்னரே தகுதியான முடிவுக்கு வருவது சலீம் அலியின் வழக்கம். இத்தகைய சிறந்த ஆய்வு முறைகளை மேற்கொண்டு சலீம் அலி தனது புகழ் பெற்ற “இந்தியப் பறவைகளைப் பற்றிய நூல் (The Book on Indian Birds)” என்பதனை இயற்றி வெளியிட்டார்.

சலீம் அலியின் உலகமே இந்திய நாட்டுப் பறவைகளோடு பின்னிப் பிணைந்ததாக விளங்கியது; இந்நிலையில் அவர் உலகப்புகழ் வாய்ந்த பறவையியல் அறிஞரான எஸ்.தில்லான் ரிப்ளே (S.Dillon Ripley) என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அப்போது இந்தியத் துணைக்கண்டத்துப் பறவைகளைப்பற்றி 10 தொகுதிகளைக்கொண்ட தொகுப்பு நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது; இத்தொகுப்பில் பறவைகளைப் பற்றிய பல்வேறு விவரங்களும், அதாவது அவற்றின் தோற்றம், உணவுப் பழக்கவழக்கம், இனப்பெருக்க முறை, இடம் பெயர்ந்து செல்லுதல் போன்ற பல்வேறு செய்திகளும் அடங்கியிருந்தன.

பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதை தனது பொழுதுபோக்காக மட்டுமன்றி, வாழ்க்கைப் பணியாகவே சலீம் அலி மேற்கொண்டிருந்தார். மக்கள் அவரை, “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்றே அழைத்தனர். ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் பெரும் சாதனைகளைப் புரிந்த சலீம் அலிக்கு அப்பட்டம் மிகவும் பொருத்தமே.

அவரது பணிக்காக, பன்னாட்டு நிறுவனம் ஒன்று ரூ.5 லட்சம் பரிசு கொடுத்துப் பாராட்டியது; இந்திய அரசு ‘பத்ம பூஷண்’ விருது கொடுத்து மகிழ்ந்தது. பறவைகளின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்வதிலேயே மகிழ்ச்சியடைந்த சலீம் அலி 1987 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாள் இயற்கையின் கூட்டுக்குள் நுழைந்து விட்டார். பறவையியல் துறையில் அவரது அயராத உழைப்பும், தளராத ஊக்கமும், வருங்கால ஆய்வாளர்களுக்குப் புதுத் தெம்பையும், ஆர்வத்தையும் ஊட்டும் என்பதில் ஐயமில்லை.

@@@

டாக்டர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan

பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD

மொழிக் கல்வித்துறை (தமிழ்) Dept. of Language Education (Tamil)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம் Regional Institute of Education (NCERT)

மைசூர் 570006 Mysore 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர