அறிவியல் மேதைகள் – சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton)

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


சர் ஐசக் நியூட்டன் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த இயற்பியல் அறிஞர் மற்றும் கணித மேதை. அவருடைய ஈர்ப்பு விதிகள் (Laws of Gravitation), இயக்க விதிகள் (Laws of Motion), நியூட்டன் வண்ணத்தகடு (Newton’s color disc) மற்றும் அவரது கணித நூல்கள் ஆகியன உலகப் புகழ் பெற்றவை. நியூட்டனும், கோட்டிஃபிரைட் லெபிட்ஸ் (Gotifried Leibuitz) என்ற அறிஞரும் இணைந்து நுண்கணிதப் பிரிவைக் (Calculus) கண்டுபிடித்தனர்.

சர் ஐசக் நியூட்டன் 1642 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 25 ஆம் நாள் இங்கிலாந்தில் லங்காஷயர் என்னும் இடத்தில் தோன்றினார். இளம் வயதில் சாதாரணமாக விளங்கிய நியூட்டன் பின்னாளில் மாபெரும் அறிவியல் மேதையாக மாறினார். கணிதத்தில் மிகுந்த நுண்ணறிவு கொண்ட நியூட்டன் 1665இல் புகழ் பெற்ற டிரினிடி கல்லூரியில் (Trinity College) தன் பட்டப்படிப்பை முடித்தார்.

ஈர்ப்பு விசை மற்றும் இயந்திரவியல் (Mechanics) துறைகளில் நியூட்டனின் சாதனை மிகவும் போற்றத்தக்கதாகும். நியூட்டனின் கோட்பாடுகளைப் பின்வருமாறு விளக்கலாம்:

ஃ எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும்.

ஃ ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும்.

ஃ ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது.

சர் ஐசக் நியூட்டனின் மேற்கூறிய கோட்பாடுகளை அறியாத அறிவியல் மாணவர் எவரும் இருக்க முடியாது.

அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் நியூட்டன் மேற்கொண்ட ஆய்வுகள் பெரிதும் போற்றப்பட்டன. எண்ணற்ற விருதுகளும், பரிசுகளும் அவரைத் தேடி வந்தன; இவ்வாறு போற்றிப் புகழப்பட்ட முதல் அறிவியல் மேதை நியூடன் எனக்கூறினால் மிகையேதுமில்லை.

1667 ஆம் ஆண்டு தனது 25ஆம் அகவையில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1672 ஆம் ஆண்டு ராயல் கழகத்தின் உறுப்பினராகும் வாய்ப்பைப் பெற்றார். கேம்பிரிட்ஜ் பலகலைக்கழகத்தின் சார்பில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக 1689 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார். 1703 ஆம் ஆண்டில் பெருமை மிக்க ராயல் கழகத்தின் தலைவராகும் பேறு பெற்றார்; தனது இறுதி மூச்சு வரை அப்பதவியில் தொடர்ந்தார். 1765 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுப் பேரரசி ஆனி (Queen Anne) அவர்களால் வீரத்திருத்தகை (Knighthood) பட்டம் வழங்கிப் பாராட்டப்பெற்றார். அறிவியல் கல்விக்கும், கண்டுபிடிப்புகளுக்குமே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட நியூட்டன் திருமணமே செய்துகொள்ளவில்லை. அறிவியலே அவருக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டது.

1727 மார்ச்சு 20 ஆம் நாள் நியூட்டன் இவ்வுலக வாழ்வை நீத்தார். மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என அவர் கல்லறையில் பொறிக்கப்பட்ட சொற்றொடர் ஆழ்ந்த பொருளுடையது.

ஒருமுறை நியூட்டன் தன் சொந்த ஊரான ஊல்ஸ் தோர்ப் (Wools Thorpe) என்னுமிடத்திற்கு விடுமுறையைக் கழிக்க வந்திருந்தார். தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்தபோது, ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே தரையில் விழுவதை நியூட்டன் கண்டார். அவரது ஆராய்ச்சி மூளை உடனே சிந்திக்கத் தொடங்கியது. “பழம் ஏன் கிழே விழ வேண்டும் ? ஏன் மேலே போகக்கூடாது ? இஇடது புறமோ அல்லது வலது புறமோ ஏன் செல்லக்கூடாது ?” – இவ்வாறு அவர் சிந்தனை சென்றது. பழம் தரையை நோக்கிச் செல்வதற்குப் புவியின் கண் உள்ள ஏதோ ஒரு கவர்ச்சி விசை காரணமாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதன் விளைவாகத் தோன்றிய கோட்பாடே நியூட்டனின் புகழ்பெற்ற புவி ஈர்ப்பு விசை விதியாகும். இக்கொள்கையின் வாயிலாக இயற்பியலின் தந்தை (Father of Physics) என்று நியூட்டன் போற்றப்பட்டார்.

டிரினிடி கல்லூரியில் ஆசிரியராக இருந்த ஐசக் பர்ரோ (Isaac Barrow) அவர்கள், தமது மாணவர் நியூட்டனுக்கு இயந்திரவியல் துறையில் இருந்த நுண்ணிய அறிவுக்கூர்மையை வியந்து பாராட்டினார். இயற்கையின் பல புதிர்களை நியூட்டன் விடுவித்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வானியல் ஆய்வுக்குப் பெரிதும் பயன்படும் தொலைநோக்கியைக் (Telescope) கண்டுபிடித்தவரும் நியூடன் அவர்களே.

***************************************

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித்துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

Dr R VijayaraghavanBTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education (NCERT)

Mysore 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர