அறிவியல் மேதைகள் கலிலியோ (Galileo)

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


கலிலியோ இத்தாலிய நாட்டில் தோன்றிய அறிவியல் மேதை; இளமையிலிருந்தே இயற்கை மீதும் அறிவியல் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே ஒவ்வொரு இயற்கை நிகழ்ச்சியையும் அவர் அறிவியல் கண்கொண்டே நோக்கினார். கலிலியோ 1564 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 15 ஆம் நாள் இத்தாலி நாட்டிலுள்ள பிஸ்கோ (Pisco) நகரில் தோன்றினார். போதுமான பண வசதி இன்மையால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, படித்துப் பட்டம் பெற அவரால் இயலவில்லை. பட்டம் ஏதும் பெறவில்லை எனினும், கூர்த்த அறிவு மற்றும் ஆராய்ச்சித் திறமைக்காக, 27 ஆம் வயதில் பிசா பலகலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு கலிலியோவுக்கு வழங்கப்பட்டது. தனது தந்தையாரிடம் ஓய்வு நேரத்தில் இசைப் பயிற்சியும் பெற்றார். துவக்கத்தில் மருத்துவப் படிப்பை மேற்கொண்ட கலிலியோ, தொடர்ந்து அப்படிப்பை மேற்கொள்ள இயலாமையால் கணக்கு மற்றும் அறிவியலில் தனது ஆர்வத்தைச் செலுத்தினார்.

தனது 17 ஆவது வயதில் ஒரு நாள் மாலை நேரம் கலிலியோ வழக்கம்போல் மாதா கோவிலுக்கு வழிபடச் சென்றார். கோவிலின் மேற்கூரையிலிருந்து தொங்கும் சங்கிலியில் அமைந்திருந்த விளக்குகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, காற்றில் அவ்விளக்குகள் அசைந்தாடின. எதையும் கூர்ந்து நோக்கிக் காரணத்தை அறிய விரும்பும் இயல்பையுடைய கலிலியோ விளக்குகளின் உசலாட்டத்தையும் உற்றுப் பார்த்தார். தனது நாடித்துடிப்பை அளவாகக் கொண்டு ஊசலின் அலைவு மிகுந்தோ, குறைந்தோ இருப்பினும் அவ்வலைவு ஒரே ஒழுங்கில் அமைந்திருப்பதைக் கண்டறிந்தார். இக்கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டே பின்னாளில் கலிலியோவின் மகன்களான வின்சோன், கிறிஸ்டியன் ஹைஜன் ஆகிய இருவரும் ஊசல் கடிகாரத்தைக் கண்டுபிடித்தனர்.

பிசா பல்கலைக்கழகத்தில் கணக்குத் துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது அரிஸ்டாட்டில் அவர்களின் கண்டுபிடிப்பு ஒன்றை கலிலியோ வாசிக்க நேர்ந்தது; அதன்படி உயரத்திலிருந்து எறியப்படும் பொருள்கள் அவற்றின் எடைக்கு ஏற்ப விரைந்தோ, தாமதமாகவோ அதாவது எடை கூடிய பொருள்கள் விரைந்தும், எடை குறைந்த பொருள்கள் தாமதமாகவும் தரையை வந்தடையும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்கருத்தைக் கலிலியோ ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அரிஸ்டாட்டிலால் கூறப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தினை கலிலியோ மறுப்பதை பொதுமக்கள் விரும்பவில்லை. இருப்பினும் கலிலியோ பொதுமக்கள் முன்னிலையில் பிசா கோபுரத்தில் தானே ஏறி நூறு பவுண்டு மற்றும் ஒரு பவுண்டு எடையுடைய இரு இரும்புக் குண்டுகளை ஒரே நேரத்தில் மேலிருந்து கிழே விழச்செய்தார்; அவை இரண்டும் ஒரே நேரத்தில் தரையை வந்தடைந்ததைக் கண்ட பொதுமக்கள், அரிஸ்டாட்டிலின் கருத்து தவறானது என்று கலிலியோ கூறியதை வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள நேர்ந்தது.

அடுத்து உலகின்முதலாவது தொலைநோக்கியைக் (telescope) கண்டுபிடித்தவர் கலிலியோ அவர்களே. இக்கருவியின் துணைகொண்டு வியாழனின் துணைக்கோள்களை (satellites) அனைவர்க்கும் காட்டினார். பால் வீதி (milk way) என்பது பலகோடி விண்மீன்களின் கூட்டம் என்பதை அவர் நிரூபித்தார். மேலும் “காற்றுக்கும் எடையுண்டு” என்ற கோட்பாட்டை ஐயந்திரிபற நிரூபித்துக்காட்டிய பெருமையும் கலிலியோவைச் சார்ந்ததே.

கலிலியோ தனது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் “உரையாடல் (Dialogue)” என்ற நூலில் எழுதி வெளியிட்டார். இப்பிரபஞ்சத்தின் மையத்தில் கதிரவன் இருக்கிறது, புவி அதனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையை 1616 ஆம் ஆண்டு கலிலியோ வெளியிட்டார். உண்மையில் இக்கோட்பாட்டை முதலில் கண்டறிந்தவர் கோபர்னிகஸ் (Copernicus) என்பவரே; ஆனால் பழமையில் ஊறிய மதவாதிகளூக்கு அஞ்சி அவர் அதனை வெளியிடவில்லை. கலிலியோ இவ்வுண்மையை வெளியிட்டதும் மதவெறியர்கள் பெரும் சினம் கொண்டனர். அக்கோட்பாடு தவறானது என்று ஒப்புக்கொள்ளுமாறு கலிலியோவை வற்புறுத்தினர். உண்மையை மறுக்க இயலாத கலிலியோ மெல்லிய குரலில் புவி மண்டலம் ஞாயிற்றைச் சுற்றி வருகிறது என்றே மீண்டும் கூறினார். உண்மையை அறிந்து கொள்ளும் விருப்பம் இல்லாத மூடத்தனம் மிக்க மதவாதிகள் கலிலியோவைச் சிறையில் அடைத்தனர். சிறையில் கண்பார்வையை இழந்த கலிலியோ1642 ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் இவ்வுலக வாழ்வை நீத்தார். ஆனால் இன்று கலிலியோவை புகழ் மிக்க வானியல் வல்லுநர் என்று உலகம் போற்றிப் புகழ்கிறது.

**

Dr R Vijayaraghavan BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education (NCERT)

Mysore 570006

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர