டச்சு வானியலாளரான பால் க்ரூட் (Paul Groot) அவர்களை நோவா சந்தித்து பேசிய பேட்டி

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue


எப்போது பார்த்தாலும் வானத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? கருந்துளைகளையும், பலகோடி ஒளிவருட தூரங்களையும் எப்படி நம் மனத்தால் புரிந்துகொள்வது ? இந்தத் துறையில் எங்கே எதனால் திருப்தி கிடைக்கிறது ? ஹார்வர்ட் ஸ்மித்ஸோனியன் வானியல் பெளதீக மையத்தில் பணிபுரியும் டச்சு வானியலாளரான பால் க்ரூட் (Paul Groot) அவர்களை நோவா சந்தித்து பேசிய பேட்டி இங்கே. பால் க்ரூட் தன்னுடைய காரணங்களை இங்கே தருகிறார்

நோவா: எப்படி நீங்கள் காமா கதிரியக்கத்தை படிக்கப் புகுந்தீர்கள் ?

க்ரூட்: அப்படி அமைந்துபோய்விட்டது. நான் பிஹெச்டி பண்ணிக்கொண்டிருந்தேன். என்னுடைய அலுவலகத்திலிருந்த என் நண்பர் டிடஸ் கலாமா இந்த காமா கதிர் வீச்சுக்களை ரேடியோ தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து கொண்டிருந்தார். அவர் தன்னுடைய ஆராய்ச்சியை செய்து கொண்டிருந்தபோது, நானும் அங்கே இருந்தேன். காமா கதிர் வீச்சு நடந்து முடிந்தபின்னர், வானத்தில் அந்த இடம் மிகத்துல்லியமாக கணிக்க முடியும். அந்த இடத்தை ஒளி தொலைநோக்கி மூலமாகப் பார்க்கப் போவோம். ஒரு நாள், டிடஸ் அவர்களும், அவரது மேலாளரும் என்னிடம் வந்து, ‘உனக்கு ஒளி தொலைநோக்கி பற்றி நன்றாகத் தெரியும். அவைகள் எப்படி செய்தியைச் சேகரிக்கின்றன, சேகரித்த செய்தியை எப்படி ஆராய்வது என்று உனக்குத் தெரியும். நீ ஏன் எங்களுக்கு உதவக்கூடாது ? எங்களுக்கு ஒரு நீண்டகாலப் பிரச்னை இருக்கிறது. நீ அந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவலாம் ‘ என்று சொன்னார்கள். நான் ‘ஓகே ‘ என்று சொன்னேன்.

நோவா: அந்த முடிவு, உங்கள் வாழ்க்கையில் மிகவும் பரவசமான கட்டத்துக்கு உங்களை கொண்டுவந்தது, சரிதானே ?

க்ரூட்: ஆமாம், இது சம்பந்தமான நோவா செய்திப்படம் சொல்வது போல, காமா கதிர் வீச்சின் ஒளி தடயத்தை அப்போதுதான் முதன் முதலில் பார்த்தோம். கதிரியிக்கம் நடந்த பின்னர், மீதமிருக்கும் ஒளியை ஒளி தொலை நோக்கி மூலம் பிடிக்க முடியுமா என்று முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஆனால், இதுதான் நாங்கள் முதன் முறை இது போன்ற முயற்சியில் ஈடுபடுவது. எதை பார்க்கப்போகிறோம், எதைத் தேடுகிறோம் என்று கூட தெரியாது. காமா கதிர் வீச்சு நடந்த உடனே ஒரு படம் எடுத்து, அது நடந்து ஒரு வாரம் கழித்து இன்னொரு படம் எடுத்து அந்த படங்களை ஒப்பிட்டுக்கொண்டிருந்தோம்.

முதல் படத்தில் பிரகாசமாகவும், அடுத்த படத்தில் காணாமல் போன ஒரு ஒளி மூலத்தை பார்த்த அந்த கணம் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. முதல் படத்தில் பிரகாசமாக இருக்கிறது. அடுத்த படத்தில் சுத்தமாக இல்லை. டிடஸ் அவர்களும் நானும் இந்தப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இருவருமே சேர்ந்து சொன்னோம், ‘இதுதான் அது ‘. எங்களுக்கு உடனேதெரிந்தது, சுமார் 30 வருடங்களாக தீர்க்கமுடியாத புதிரை அப்போது விடுவிக்கிறோம் என்பதால் எங்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது.

நோவா: அறிவியலின் முன்னணிப் பரப்புகளில் வேலை செய்வது எப்படி இருக்கிறது ? அதாவது, எல்லாமே ஒரே குழப்பமாகவும், புதிராகவும், புதுப்புது தேற்றங்கள் வந்த வண்ணமும் , வந்த வேகத்திலேயே அவை கழிந்து போவதும் பற்றிக் கேட்கிறேன். இது களைப்படையச் செய்வதாக இருக்கிறதா அல்லது சுவாரஸ்யமாக இருக்கிறதா ?

க்ரூட்: நிச்சயமாக உணர்வைத்தூண்டும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. நாம் விளிம்பில் இருக்கிறோம். அதற்கு அப்புறம் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை.. யாருக்கும் தெரியாது. இதிலே சந்தோஷமே, எப்படி அகிலத்தில் விஷயங்கள் இருக்கின்றன என்பதன் சரியான படத்தைப் பார்க்க முனைவதில் தான் இருக்கிறது. எப்படி இவை வேலை செய்கின்றன. இவை எப்படி ஆரம்பித்தன. இவை எப்படி பரிணமித்தன. இவை எப்படி முடியும். இது மாதிரியான விஷயங்கள். எப்படி பேரண்டம் வேலை செய்கிறது என்பதைப் பற்றிய அறிவுக்கு நாம் தொடர்ந்து பங்களித்துக்கொண்டே இருப்பது போன்ற சவால் இல்லை. அறியவேண்டியதெல்லாம் அறியப்பட்டு விட்டது என்றால் மிகவும் போரடிக்கும் என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் ஏற்கெனவே தெரிந்த விஷயங்களை வேறொரு கோணத்தில் வேறொரு பொருளில் பார்ப்பதும் வித்தியாசமானது.

நோவா: ஆக, வானியலில் இப்போதைக்கு முக்கியமான பிரச்னை என்ன ?

க்ரூட்: இரண்டு பெரிய விஷயங்கள் இருக்கின்றன. முதலாவது, பேரண்டம் எப்படி முடியும் என்பது. இது பேரண்டம் எதைக்கொண்டு கட்டப்பட்டிருக்கிறது என்பதோடு இறுக்கமாகப் பிணைந்தது. நம் பேரண்டத்தில் ஒளி வீசும் பொருள்களால் அல்லது கதிரியக்கம் செய்யும் பொருட்களால் கணக்கிடப்படும் பங்கு பேரண்டத்தின் எடையில் மிகச்சிறிய அளவுதான் என்பது ஒரு பெரிய பிரச்னை. அங்கே இருப்பதில் சுமார் 5 அல்லது 10 சதவீதத்தையே நம்மால் பார்க்க முடியும்.

அங்கே இருட்டாக எதோ இருக்க வேண்டும். அதைத்தான் இருட்டுப்பொருள் (dark matter) என்று கூறுகிறோம். இதனைப் பார்க்க முடியாது. ஆனால் இதன் பாதிப்பை நமக்கு வரும் ஒளியில் பார்க்கலாம். புவியீர்ப்பு விசையால் வளைக்கப்படும் ஒளியைக் கொண்டு இதனை கணக்கிடலாம். ஆனால், இந்த இருட்டுப்பொருள் என்னவென்று நமக்குத் தெரியவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில், நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா விஷயங்களோடும் நமக்குப் பரிச்சயம் இருக்கிறது. இருப்பினும், நாம் 95 சதவீத பேரண்டம் முழுக்க முழுக்க வேறுவிதமான விஷயத்தால் கட்டப்பட்டிருக்கிறது என்பதையும் அறிகிறோம். இன்றைய தேதிக்கு, இதுதான் வானவியலின் மிக மிகப் பெரிய பிரச்னை. இருட்டுப்பொருளின் குணம் என்ன ? இந்த பிரசினையைத் தீர்த்து விட்டால், பேரண்டத்துக்கு புத்தம் புது ஜன்னலைத் திறந்த மாதிரி.

நோவா: காமா கதிர் வெடிப்பைப் பற்றிய ஆய்வு என்னவாயிற்று ? அடுத்த பெரும் கண்டுபிடிப்பு எதில் இருக்கும் ?

க்ரூட்: காமா கதிரியக்கத்தின் குணம் என்ன என்பதுதான் அடுத்தக் கேள்வியாக இருக்கும். எதனால் இவை வெடிக்கின்றன ? கடந்த சில வருடங்களாகச் செய்கின்ற ஆராய்ச்சியினால், இந்தக் கதிரியக்க வெடிப்புகள் பல கோடி கோடி ஒளிவருடங்களுக்கு அப்பாலிருந்து வருகின்றன என்பதை நாம் இப்போது அறிகிறோம். ஆனால், இன்னமும், எது வெடிக்கிறது என்பது தெரியாது. என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மறைமுக தடயங்கள் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் வானவியலாளர்கள் சொன்னது மாதிரி எதுவும் நடக்கவில்லை.

இந்த காமா கதிரியக்கத்தில் இருக்கும் சக்தியின் மதிப்பு மிகமிகமிக அதிகம். இதனைக் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் புத்தம் புது தேற்றத்துக்குத் தான் போக வேண்டும். ஏதோ நமக்குப் புரிபடாதது நடந்து கொண்டிருக்கிறது. நம் அகிலத்தில் (galaxy) இல்லாதது ஏதோ ஒன்று அங்கு இருக்கிறது. அதுதான் வெடிக்கிறது. நம் அகிலத்தின் பெளதீகத்துக்குள் வராத ஏதோ ஒரு வேறு ஒரு வகை பெளதீகம் வேலை செய்யலாம். இது மிகவும் சுவாரஸ்யமானது.

நோவா: காமா கதிரியக்க வெடிப்பு நம் அகிலத்தின் அருகாமையில் நடந்தால், கடலுக்கடியிலோ அல்லது மிக அடி ஆழத்திலோ இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட சில உயிரினங்களைத்தவிர, பூமியில் இருக்கும் மற்ற உயிர்கள் அனைத்தும் இறந்துவிடும்தான் என்று நோவா எடுத்த திரைப்படம் குறிப்பிடுகிறது. இது நடக்க முடியுமா ?

க்ரூட்: அப்படி நடக்கலாம் என்றுதான் நினைக்கிறேன். அது மிகமிக அருகாமையில் நடக்க வேண்டும். அதாவது சுமார் 100 ஒளிவருடங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு வெடிப்பு நடந்தால், நீங்கள் சொல்வது போல அனைத்தும் பஸ்மமாகிவிடலாம். ஆனால், நாம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கவேண்டும். காமா கதிரியக்க வெடிப்பு நடக்கக் காரணமென்ன ? இது இன்னும் புரிபடாத புதிர். சில மகா பெரிய நட்சத்திரங்கள் வெடிப்பதால் காமா கதிரியக்கம் நடப்பதாக சில தடயங்கள் இருக்கின்றன. 100 ஒளிவருடங்களுக்குள் இப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் இருந்தால், அது வானத்திலேயெ மிகவும் பிரகாசமான நட்சத்திரமாக நமக்குத் தெரிய வேண்டும். அப்படி ஒன்றும் இல்லை. ஆகவே, காமா கதிரியக்க வெடிப்பு நடந்தால், நம் பூமிக்கு பாதிப்பு அதிகம் இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

நோவா: அது ஆறுதலான விஷயம்.

க்ரூட்: ஆனால், இன்னொரு தேற்றம் இருக்கிறது. ஒன்றை ஒன்று சுற்றும் இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதால் காமா கதிரியக்க வெடிப்பு வருகிறது என்று இந்த தேற்றம் சொல்கிறது. அது உண்மையாக இருந்தால், நம் அருகாமையில் சுமார் 100 பார்செக்குகளுக்கு உள்ளேயே (1 பார்செக் = 3.26 ஒளிவருடங்கள்) நிறைய இப்படிப்பட்ட நியூட்ரான் நட்சத்திர அமைப்புகள் இருக்கின்றன.

இரண்டு நட்சத்திரங்கள் இப்படி இணைந்தால், அது நடக்கும் வரைக்கும் நம்மால் ஏதும் செய்யமுடியாது. ‘சரி நடந்து விட்டது ‘ என்றுதான் சொல்லலாம். அப்படி நடப்பதற்கும் வாய்ப்புகள் குறைவு என்றுதான் நான் நினைக்கிறேன். நம் அகிலத்தில் நடந்தால், நிச்சயம் நம்மை பாதிக்கும். ஆனால் உயிர்கள் எல்லாம் அழிந்து போய்விடும் அளவுக்கு இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

நோவா: உயிர்களைப்பற்றி பேசுவதால் கேட்கிறேன்.. நம் பூமியை தாண்டி மற்ற இடங்களில் உயிர்கள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா ? பெரும்பான்மையான வானவியலாளர்கள் நீங்கள் சொல்வது போலத்தான் சொல்கிறார்களா ?

க்ரூட்: என்னுடைய தனிப்பட்ட உணர்வு- நாம் தனியாக இல்லை என்பது. பூமிக்கு அப்புறமும் பல இடங்களில் உயிர்கள் இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். பெரும்பான்மையான வானவியலாளர்கள் நான் சொல்வதைத்தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

அவ்வளவு ஏன் ? நம்முடைய சூரியனையே எடுத்துக்கொள்ளுங்கள். இதைப் பார்த்தால் எவ்வளவு சாதாரணமான நட்சத்திரம் என்று நமக்குத் தெரியும். இது ஒன்றும் ஸ்பெஷலான நட்சத்திரம் இல்லை. இதைச் சுற்றி நம் சாதாரணமான கிரகம் சுற்றிக்கொண்டிருக்கிறது. தினந்தோறும் வானத்தில் நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 80 கிரகங்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். குறுகிய காலத்திலேயே இன்னும் ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டுவிடும். இதுவரை நாம் கண்டறிந்ததெல்லாம், சனி, வியாழன் போன்ற மாபெரும் வாயு கிரகங்கள். வெகுவிரைவிலேயே நம் பூமி போன்ற சிறிய கிரகங்கள் தன் சூரியனுக்கு பூமி போன்றே அருகாமையில் சுழல்வதை கண்டறிய முடியும். இந்த கிரகங்களில் உயிர்கள் இருக்கலாம்.

இப்போது கேள்விகள் எல்லாம், எங்கே இவை இருக்கின்றன, எந்த வடிவத்தில், எப்படி இவைகளைக் கண்டறிவது, இந்த உயிர்களோடு எப்படி தொடர்பு கொள்வது ஆகியவை தான்.

நோவா: வானவியலின் பொற்காலத்தில் நாம் இப்போது இருக்கிறோம் என்று பலர் கூறுகிறார்கள். நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா ?

க்ரூட்: நிச்சயமாக. இது இன்னும் பொன் மயமாகலாம். எலக்ட்ரோ மேக்னடிக் நிறப்பிரிகையை அறியத் திறந்தது, கடந்த 50 வருட வானவியல் ஆராய்ச்சி வரலாற்றில் முக்கியமான படிக்கல். அதற்கு முன்பு வரை நாம் கண்ணுக்குத் தெரியும் ஒளியை மட்டுமே வைத்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். பிறகு ரேடியோ தொலைநோக்கிகள் வந்தன. இவை நாம் வானத்தை ரேடியோ அலைவரிசையில் பார்க்க உதவின. அதன் பின்னர் எக்ஸ்-ரே கதிரியக்கம் மூலம் பார்க்க ஆரம்பித்தோம். மில்லிமீட்டருக்கு குறைவான அலைகள், சிவப்புக்கீழ் உள்ள அலைகள் (submillimeter and infrared) ஆகியவற்றின் தொலைநோக்கிகள் வந்தன. வெகு விரைவிலேயே நம்மால் புவியீர்ப்பு அலைகளைக் கொண்டு வேலை செய்ய இயலலாம். அது இன்றுவரை நாம் செய்த அனைத்து வேலைகளை விட வித்தியாசமானதாக இருக்கும்.

இது போன்ற முன்னேற்றங்கள் மூலம் ஏராளமான வளமையான விஷயங்களை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். மானிகளின் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இது மிகச்சிறிய தொலைநோக்கிகள் கூட மிகவும் சிறப்பாகப் பார்க்க உதவுகின்றன.

நோவா: புதிய தொழில்நுட்பம் மூலமாக இந்த வானவியல் துறை வளர்வது அதிகமா, புதிய கருத்துக்கள் மூலம் இந்தத்துறை வளர்வது அதிகமா ?

க்ரூட்: இரண்டும் ஒன்றை ஒன்று தழுவியுள்ளது. நிச்சயமாக புதிய கருவிகளும் புதிய தொழில்நுட்பமும் மிக மிக முக்கியமானவை. புதிய தொலைநோக்கி துணைக்கோளாலும், புதிய தொலைநோக்கி தொழில்நுட்பத்தாலும் நிறைய விஷயங்களை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் புதிய தொழில்நுட்பம் புதிய கருத்துக்களோடு இணைக்கப்பட வேண்டும். இல்லையென்றால், ‘ஓகே. இது போன்ற ஆச்சரியமான விஷயங்களை எல்லாம் நாம் பார்க்கிறோம். ஆனால் இவை எல்லாம் என்ன, ஏன் நடக்கிறது என்று நமக்குத் தெரியாது ‘ என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.

***

Series Navigation

செய்தி

செய்தி