வானலைத் தொடர்பு வல்லுநர் மார்க்கோனி

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

சி. ஜெயபாரதன், கனடா


கம்பியிலாத் தந்தி கண்டுபிடிப்பு 1895 ஆம் ஆண்டு ஜெர்மன் விஞ்ஞானி வில்ஹெம் ராஞ்சன் [Wilhelm C. Roentgen] ஊடுருவிச் செல்லும் எக்ஸ்ரே கதிர்களைக் [X-Rays] கண்டு பிடித்துத் தன் கையின் எலும்புக் கூட்டைப் படமெடுத்துக் காட்டி ஓர் அற்புதம் செய்தார். ஓராண்டு கழிந்து இத்தாலிய மேதை மார்க்கோனி, பல மைல் தூரம் மாயமாய் ஊடுருவிப் பாயும் ‘விண்ணலைத் தொலைவரைவு ‘ [Wireless Telegraph] என்னும் ‘கம்பியிலாத் தந்தியை ‘ அனுப்பித் தொடர்பு மார்க்கத்தில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கினார். எக்ஸ்ரே கதிர்கள் சிறிது தடிமன் உள்ள மரப்பலகை, அல்லது அட்டையைத்தான் கடந்து சென்றன. ஆனால் மின்னலைத் [Electrical Waves] தொலைப் பதிவோ எப்பொருளையும் ஊடுருவி எந்த தூரத்தையும் கடந்து சென்றது! இதனை அனுப்ப மின்சாரக் கம்பிகள் எதுவும் தேவையில்லை! இப் புதிய நூதன மின்னலைகள் சுவரின் ஊடே, வீட்டின் ஊடே, நகரின் ஊடே, நாட்டின் ஊடே, கடல் கடந்து, மலை கடந்து, விண்வெளியில் பாய்ந்து, பூகோளத்தில் எந்த மூலைக் குள்ளும் புகுந்துவிடும்.

1997 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இயங்கும் ‘ஜெனரல் எலக்டிரிக் கம்பெனி ‘, மார்க்கோனி வானொலி மார்க்கத்திற்கு வழி திறந்த நூற்றாண்டு வெற்றி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. மார்க்கோனி தனது விண்ணலைத் தொடர்புச் சாதனத்தை வர்த்தகத் துறையில் முதன் முதல் பதிவு செய்த நாள் 1897 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி. பதிவு செய்த நிறுவனம், இங்கிலாந்தில் உள்ள ஜெனரல் எலக்டிரிக் கம்பெனி! மார்க்கோனி இங்கிலாந்தில் துவங்கிய முதல் ரேடியோ [Radio] நிறுவனத்துக்குத் தன் பெயரையும் சேர்த்து ‘GEC-Marconi Company ‘ எனப் பெயரிடவும் அனுமதியும் கொடுத்தார். தனது 22 ஆம் வயதில் விண்ணலைத் தொடர்பு ஆய்வுகளில் வெற்றி பெற்றதைக் காட்ட, இங்கிலாந்துக்கு வந்த மார்க்கோனி, அங்கே நிரூபித்து மின்னலை வர்த்தகத் துறையையும் துவக்கி வைத்தார். ஆனால், அவர் உருவாக்கிய ஒப்பற்ற விண்ணலைக் கருவியின் மேன்மை, அவரது இத்தாலிய நாட்டு மக்களின் குறுகிய பார்வைக்குத் தென்படவில்லை!

இத்தாலில் இருக்குமிடம் தெரியாமல் மூலையில் மறைந்திருந்த மார்க்கோனி, திடாரென உலக வல்லுநர் கண்களுக்கு ஓர் ஒளிவீசும் துருவ நட்சத்திரமாய்த் தோன்றினார்! எஞ்சினியர் பார்வைகளுக்கும், காற்படை, கப்பற்படை, விமானப்படை இயக்குநர்களுக்கும், யுத்தத் தளபதிகளுக்கும், பெளதிக விஞ்ஞானிகளுக்கும் மார்க்கோனி, ஓர் ஓங்கிய கலங்கரைத் தீபமாய்க் காட்சி அளித்தார். வானொலிக்கு வேண்டிய கருவிகள்: அனுப்பும் இடத்திலிருந்து தொடர்புச் செய்தியை மின்னலையாக ஆக்கிச் செலுத்திட ஓர் ‘அலையனுப்பி ‘ [Transmitter], செய்தியைப் பெறும் இடத்தில் மின்னலையை இழுத்து செய்தியாக மாற்ற ஓர் ‘அலை ஈர்ப்பி ‘ [Receiver] ஆகிய இரண்டும் தேவைப்படும். அமெரிக்கா வில் தாமஸ் ஆல்வா எடிசன் [1847-1931] தான் படைத்த ‘பறக்கும் ரயில்தொடரில் ‘ மார்க்கோனியின் தொலைப் பதிவுக் கருவியை இணைத்துச் சோதனை செய்தார். இப்போது உலகின் எல்லா முனைகளும் வானலைத் தொடர்புப் பிணைப்பால் ஒருங்கே இணைக்கப் பட்டுள்ளன. 1909 இல் மார்க்கோனிக்கும், ஜெர்மன் விஞ்ஞானி கார்ல் பிரெளனுக்கும் ‘விண்ணலைத் தொலைவரைவு ‘ பெளதிக விஞ்ஞானத்திற்கு, நோபல் பரிசு பங்கிடப்பட்டு அளிக்கப்பட்டது.

மார்க்கோனியின் வாழ்க்கை வரலாறு.

பெளதிக விஞ்ஞானத்திற்கு நோபெல் பரிசு பெற்ற, மார்க்கோனி ஓர் எலக்டிரிகல் எஞ்சினியர். 1874 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 இல் இத்தாலிய நாட்டில் பொலொனா நகரில் பிறந்தவர். தந்தை ஓர் இத்தாலியப் பெருமகன். தாய், பல ஆங்கிலப் பிரமுகர் நட்புடைய, ஓர் அயர்லாந்து மாது. அயர்லாந்து, இங்கிலாந்து தேசங்களுக்கு, அடிக்கடி உறவினர்களை, மற்றும் நண்பர்களைக் காண, மார்க்கோனி இள வயதில் தாயுடன் கூடச் செல்வார். அன்னிய மொழி ஆங்கிலம் மார்க்கோனிக்குத் தாய்மொழி போல் பழக்கம் ஆனதற்கு இதுதான் காரணம். மார்க்கோனிக்கு இத்தாலிய மொழி, ஆங்கில மொழி இரண்டிலுமே இணையான பேச்சு, எழுத்துத் திறமைச் சிறு வயதிலிருந்தே உண்டு. இத்தாலில் பொலொனா பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். மார்க்கோனிக்கு உயர்ந்து வளர்ந்த ஒல்லியான தோற்றம். 23 வாலிப வயதில் 30 வயது முதிர்ச்சி முகம்! அமைதியான முகக்களை இருந்தாலும், சற்று கடுப்பான முகம்! உரையாடும் போது அழுத்தமுள்ள உறுதியான பேச்சு! விஞ்ஞான நிபுணருக்குரிய மிடுக்கில்லாத மென்மையான தன்மை! ‘எப்படி ரேடியோவைக் கண்டு பிடித்தாய் ‘, என்று யாராவது வினாவினால், ‘சோதனையில் சில மெய்ப்பாடுகளைக் கண்டேன்; அவற்றை நிறைவேற்றக் கருவிகளை அமைத்தேன். அவ்வளவுதான்! ‘ என்று சில வார்த்தைகளில் முடித்து விடுவார்!

பதினாறு வயதிலேயே, [1890] மார்க்கோனிக்குக் கம்பியிலாத் தொலைத் தொடர்பில் ஆர்வம் ஏற்பட்டு ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம் வயதில் [1895] முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில் ‘திசைதிரும்பும் மின்கம்பம் ‘ [Directional Antenna] மூலம் தொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார். 1897 இல் கரையிலிருந்து கப்பலுக்கு 18 மைல் தூரம் தொடர்பு அமைத்துக் காட்டினார். 1899 இல் இங்கிலிஷ் சிறுகடலைத் தாண்டி இங்கிலாந்திற்கும் ஃபிரான்சுக்கும், எந்தவிதக் கால நிலையிலும் இயங்கும், கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கினார்.

ஜெர்மன் விஞ்ஞான மேதை, ஹெர்ட்ஸ் [Hertz] ‘மின்காந்த அலைகளை ‘ [Electro Magnetic Waves] எழுப்பி தொலைப்பதிவு செய்ய முயன்றார். மின்காந்த அலைகள் மரம், செங்கல் சுவர் ஆகியவற்றை ஊடுருவினாலும், உலோகத்தைக் கடக்க முடியவில்லை. ஹெர்ட்ஸ் பயன்படுத்திய மின்காந்த அலைச் சாதனத்தில் அசையும் பாகங்கள் இருந்தன. மார்க்கோனி சாதனத்திலோ அசையா மின்னிலைப் [Electro Static] பாகங்கள் அமைந்திருந்தன. விண்ணலையின் ஊடுருவுச் சக்தி, மின்காந்த அலையின் நுழைவுச் சக்தியை விட, எண்ணற்ற அளவுச் சக்தி உடையது!

இத்தாலியர் ஆரம்பத்தில் மார்க்கோனியின் அரிய ரேடியோக் கருவியின் பெரு மையைக் கண்டு கொள்ள வில்லை! மார்க்கோனியின் அதிசயக் கருவியின் மகிமையைக் கண்டவர்கள், முதலில் ஆங்கிலேயர்! அதிலும் குறிப்பாக, பிரிட்டாஷ் தபால் துறை அதிபர், வில்லியம் பிரீஸ் [W.H. Preece]. பிரீஷ் ஓர் மின்சார எஞ்சினியர். அவர் பல வருடங்களாகக் கம்பியிலாத் தந்திக்குச் சோதனைகள் செய்து வந்தார். ஒரு சமயம் இங்கிலாந் திற்கும் முல் [Mull] தீவிற்கும் இடையே தந்திக் கம்பி அறுந்து விட்டது. கடற் கரையின் துண்டான இரு கம்பிகளைத் தனியாகவே விட்டு வைத்து 4 மைல் தூரம், மின்தூண்டல் [Electrical Induction] மூலம் அலை எழுப்பித் தொடர்பு உண்டாக்கினார்! அதன்பின் ‘மோர்ஸ் குறி ‘ [Morse Code] ஆணையில் 156 செய்திகளை முதன் முதலில் அனுப்பி வெற்றி பெற்றார். அதில் ஒரு செய்தி 120 சொற்களைக் கொண்டது. அவர் முயன்ற முறை, மின்காந்த [Electro-Magnetic] அலைகளை எழுப்பித் தொடர்பை உண்டாக்கிச் செய்திகளை அனுப்பியது. மார்க்கோனியின் ரேடியோ சாதனம், சக்தி மிக்க மின்னியல் [Electro Static] அலைகளை எழுப்பி, செய்தி அதிக தூரம் சென்றதால், பிரீஸ் தன் முயற்சியைக் கைவிட்டு அவருக்கு ஊக்கம் அளித்தார். இங்கிலாந்தில் பல கப்பல் வர்த்தகர்கள் ஆதரிக்கவும், மார்க்கோனியின் கருவி பன்மடங்கு வளர்ச்சி அடையவும், பிரீஸ் பல வழிகளில் உதவி செய்தார்.

கனடாவின் வடகிழக்குக் கடல்கரையில் மார்க்கோனி.

1901 இல் முதன் முதலாக 3000 மைல் தூரத்தில் அட்லண்டிக் பெருங்கடலைத் தாண்டி விண்ணலைத் தொடர்பை இணைத்து, தொலைத் தொடர்பில் ஒரு புரட்சியை உண்டாக்கினார். இங்கிலாந்தின் தென்மேற்கு முனையிலிருந்து [Poldhu in Cornwall] கனடாவின் வடகிழக்கு வாசலுக்கு [St. John in Newfoundland] ரேடியோத் தொடர்பை இணைத்துக் காட்டினார். 1902 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி கனடாவின், கேப் பிரடன் [Cape Breton in Nova Scotia] தீவின் ‘கிலேஸ் வளைகுடாக் ‘ [Glace Bay] கரை ஓரத்திலிருந்து இங்கிலாந்தில் உள்ள நகர்களுக்கு மார்க்கோனி செய்தி அனுப்பினார். பதினொரு வருடங்கள், கனடாவின் கேப் பிரடன் தீவுக் கரையோரத்தில் தங்கி, மார்க்கோனி ரேடியோச் சாதனங்களை விருத்தி செய்தார். அங்கே மூன்று ‘அட்லாண்டிக் மார்க்க விண்ணலைத் தொடர்பு நிலையங்களை ‘ [Transatlantic Wireless Stations] நிறுவினார். ஒன்று ‘மேஜைத்தலை ‘ [Table Head] என்னும் இடம். மார்க்கோனி ஒரு காலத்தில் தன் இல்லமாக வாழ்ந்து சரித்திரப் புகழ் பெற்ற ஒரு தேசீயத் தளம்! மார்க்கோனி பயன்படுத்திய ரேடியோ அலையனுப்பி [Radio Transmitter], ஓங்கி நிற்கும் 210 அடி உயர மின்கம்பம் [Aerial Towers] இப்போதும் அவரது நினவுச் சின்னங்களாக ஆங்கே வைக்கப் பட்டுள்ளன. இரண்டாவது நிலையம் 1907 இல் ‘மார்க்கோனி கம்பத்தில் ‘ [Marconi Towers] விண்ணலை அனுப்ப [Transmitting Station] நிர்மாணிக்கப் பட்டது. மூன்றாவது நிலையம் 1913 இல் லூயிஸ்பர்க் ஊரில் விண்ணலை ஈர்க்கும் நிலையமாக [Receiving Station] அமைக்கப் பட்டது.

முதல் உலக மகா யுத்தத்தின் போது மார்க்கோனி இத்தாலிய கம்பியிலாத் தொடர்புப் பணியின் பொறுப்பாளராக இருந்து, ரகசிய ராணுவக்குறி ஆணைகளைச் ‘சிற்றலைத் தொடர்பு ‘ [Shortwaves Transmission] மூலம் அனுப்பினார். பிறகு அவர் வாழ்நாள் முழுவதும் சிற்றலை [Shortwaves], மற்றும் நுண்ணலைத் [Microwaves] தொடர்புகளில் மிகுந்த நாட்டம் செலுத்தி புதுச் சாதனங்களைப் படைத்துச் சோதனை செய்து கொண்டிருந்தார்.

விண்வெளி யுகத்தில் மார்க்கோனியின் கருவிகள்

1905 இல் வர்த்தகக் கப்பல்கள், யுத்தப்படைக் கப்பல்கள் பல மார்க்கோனியின் கம்பியிலாத் தந்திக் கருவியை நிறுவி, கரை நிலையங்களுடன் தொடர்பு கொண்டன. மார்க்கோனியின் அரிய சாதனங்கள் அடுத்து பிரிட்டாஷ், இத்தாலிய கடற்படைக்கு அதிகமாகப் பயன் பட்டன. 1907 இல் அவை இன்னும் சீர்ப்படுத்தப் பட்டு அட்லண்டிக் தொலைத் தொடர்பு மார்க்கம் எல்லோரது பொதுப் பழக்கத்திற்கும் உபயோக மானது. 1912 இல் பனிப் பாறையில் மோதி விபத்துக் குள்ளான டைட்டானிக் [Titanic] கப்பலில் கூட, மார்க்கோனியின் கம்பியிலாத் தந்தி பயன் பட்டு, கப்பல் மூழ்கிப் போவதை தொலைத் தொடர்பு மூலம் வெளியாக்கிக் கனடா, அமெரிக்க நாடுகளை விளித்ததாக அறியப்படுகிறது! இரண்டு உலக மகா யுத்தங்களிலும் ரேடியோத் தொலைத் தொடர்புக் கருவிகள் பலவிதங்களில் மிகவும் பயன்பட்டிருக் கின்றன.

வான வீதியில் 1957 அக்டோபர் 4 ஆம் நாள், ரஷ்யா முதன் முதல் ‘ஸ்புட்னிக் ‘ [Sputnik-1] விண்குமிழ்க் கோளத்தை பூகோள நீள்வட்டத்தில் [Orbits] சுயமாகச் சுற்றவைத்து உலகைப் பிரமிப்பில் ஆழ்த்தி, புது விண்வெளி யுகத்தைத் [Space Age] துவக்கி விட்டது! 1958 ஜனவரி 31 ஆம் தேதி அமெரிக்கா தன் முதல் விண்குமிழ் ‘விண்ணோக்கியை ‘ [Explorer-1] வான்வெளியில் ஏவியது. 1961 இல் அரசினர் அல்லாதார் ஏவப்பட்ட ஆஸ்கர் [Oscar-1] என்னும் ‘சுற்றிவரும் விண்சிமிழ் ‘ [Orbiting Satellite] முதன் முதல் அமெச்சூர் ரேடியோ சாதனத்தை ஏற்றிக் கொண்டு, அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்சிமிழ் மூலம் நேரடித் தொடர்பு [Direct-Satellite Communications] கொள்ள வசதி உண்டானது. 1980 இன் கணக்குப்படி 1.5 மில்லியன் அமெச்சூர் ரேடியோ இயக்குநர்கள் உலகமெங்கும் லைசென்ஸ் பெற்று மார்க்கோனியின் விருத்தி செய்யப்பட்ட ரேடியோக் கருவியை உபயோகித்து வந்தார்கள்.

முதலில் கம்பியிலாத் தந்தியைக் கண்டு பிடித்தவர் யார் ?

மார்க்கோனியின் காலத்திலேயே இப்படி ஒரு வினா எழுந்தது. அவர் ரேடியோ ஆராய்ச்சிகள் நடத்தி வந்த சமயத்தில், ஈரோப்பில் வேறு சில விஞ்ஞானிகளும் ரேடியோ அலைகளில் ஆய்வுகள் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் குறிப்பாக, ஜெர்மன் எஞ்சினியர், கார்ல் பிரெளன் [Carl F. Braun] [1850-1918]. 1899 இல் மார்க்கோனியின் கருவியைச் சீர்ப்படித்தி ஒருதிசை அலை யனுப்பியைப் படைத்தார். அதுவே பின்னால், வானொலி, குடைநோக்கி, தொலைக்காட்சி [Radio, Radar, Television] சாதனங்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நேர்முனைக் கதிர்க் குமிழி [Cathode Ray Tube] மூலம், முதன் முதல் ‘அலைமானியைப் ‘ [Oscilloscope] படைத்தவர். பின்னால் மார்க்கோனியின் தொலைத் தொடர்பைச் செப்பனிட்டவர். பிரெளன் இச்சாதனைகளைக் காட்டி, 1909 இல் மார்க்கோனியின் பாதி நோபெல் பரிசைப் பிடுங்கிக் கொண்டார்!

ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் போபாவ் [Alexander Popov] [1859-1905] செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் படித்து, அதன் ஆசிரியராகிப் பின்பு பெளதிகத் துறையின் தலைமைப் பொறுப் பேற்றவர். 1895 இல் மார்க்கோனி, போபாவ் இருவருமே, ‘கொஹெரர் ‘ [Coherer] கண்காணியைப் [Detector] பயன் படுத்தி ரேடியோ சாதனத்தை உருவாக்கினர். போபாவின் கருவி வெளிச்சுற்றுக் கால நிலையைக் கண்காணித்துப் பதிவு செய்ய மட்டும் தயாரிக்கப் பட்டது. தொலைத் தொடர்புப் பணிகள் செய்வதற்காக அல்ல!

ரஷ்யா, இத்தாலி இரு நாடுகளும் தம்தம் விஞ்ஞானிதான் ரேடியோவை முதன் முதல் கண்டு பிடித்தவர், என்று உரிமை கொண்டாடி பறைசாற்றினர்! ஆனால் ரஷ்யாவோ அதை நிரூபிக்க, அச்சடிக்கப்பட்ட எந்த ஆதாரமும் காட்ட முடியவில்லை! மேலும், 1896 மார்ச் 24 ஆம் தேதி, போபாவின் கருவி முழுமையாய் வேலை செய்யாது முடங்கி விட்டதாகப் பின்னால் அறியப்பட்டது! பின்னால், இரண்டாம் உலகப் போர் முடிந்தபின், 1945 இல் தளபதி ஸ்டாலின் வெற்றி வீராப்பில், ரஷ்ய விஞ்ஞானிகளின் பெருமைகளைப் பீற்றிக் கொள்ளச் செய்தது போல் தெரிகிறது.

மார்க்கோனியின் யோகம், இங்கிலாந்து பக்க பலமாக இருந்து எல்லாவித வெளியீடு, நிரூபணங்களைக் காட்டி, ‘கம்பியிலாத் தந்தியின் தந்தை ‘ மார்க்கோனியே என்று உலகச் சரித்திரத்தில் பதிவு செய்யச் சான்று நாடாக இருந்தது! 1937 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி தனது 63 ஆவது வயதில் மார்க்கோனி இத்தாலில் காலமானார். அவரது உடல் கிரிஃப்போன் புதைமாளிகையில் [Villa Griffone Mausoleum] அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம்: General Electric Company, U.K.

Journal of Technology. 1997 Vol 12. No.2

*************************************

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா