பாரி பூபாலன்
‘அப்பாடா! இன்றோடு பகல் நேர சேமிப்பு முடிந்து விட்டது. நாளைக் காலையில் இன்னும் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்கலாம். ‘ சந்தோஷமாகக் கூறினேன் நான்.
நள்ளிரவில் தூங்கப் போகுமுன் ஞாபகமாக, கடிகாரத்தில் ஒரு மணி நேரம் பின் தள்ளி வைத்துவிட்டு படுத்தேன்.
ஆரம்பத்தில் வினோதமாகத்தான் ருந்தது, ‘பகல் நேர சேமிப்பு ‘ என்பது. கோடை காலத்தில் சீக்கிரம் விடிந்து விடுவதால், ஒரு மணி நேரம் முன்னோக்கித் தள்ளிவைத்து, காலை மூன்று மணி என்பதை நான்காக்கி, ஒரு மணி நேரம் முன்னதாக எழுந்து, பின் குளிர்காலம் ஆரம்பிக்கையில், முன்னதாக தள்ளிவைத்த அந்த ஒரு மணி நேரத்தை பின்னோக்கி வைத்து சமம் செய்து விடலாகிறது.
‘அடடா, ஒரு மணி முன்னதாக வந்திருக்கலாமே! ரயில் கிளம்பிடுச்சே! ‘
‘என்னா, மணியைத் திருப்பி வைக்க மறந்துட்டாங்களா ? இப்படி லேட்டா வர்ரீங்க ! ‘
‘உங்களை 12 மணிக்கு மேலதான் எதிர்பார்த்தோம், சீக்கிரமாவே வந்து நிக்கிறீங்களே ! ‘
ஒவ்வொரு வருடமும், ஏப்ரல் முதல் (அல்லது மார்ச் கடைசி) ஞாயிறும் அக்டோபர் கடைசி ஞாயிறும் இப்படித்தான். ஏதாவது சின்னதாக ஒரு குழப்பம் நேர்ந்து விடும்.
இந்த ‘பகல் நேர சேமிப்பு ‘ என்கிற திட்டத்தின் வரலாறைப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.
பென்ஜமின் பிராங்க்ளின் தனது 78ஆவது வயதில் ( சுமார் 215 ஆண்டுகளுக்கு முன்னர்) எழுதிய ‘ஒரு பொருளாதார திட்டம் ‘ என்கிற திட்டத்தின் அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது இந்த ‘பகல் நேர சேமிப்பு ‘.
அவருடைய திட்டத்தின் வெளிப்பாடு விநோதமானது.
இரவில் நீண்ட நேரம், அதிகாலை மூன்று / நான்கு மணி வரையில் விழித்திருந்தும், அதனால் நண்பகல் வரை தூங்கியும் பழக்கப் பட்ட அவர் ஒருநாள் ஏதோ சத்தம் கேட்டு விழித்துப் பார்க்கையில், மணி காலை 6 இருக்கும் ஆனால் அறை முழுமையும் ஒரே வெளிச்சம். என்ன ஒரு வேளை ஏகப்பட்ட மெழுகுவர்த்திகள் எரிகின்றதோ என யோசித்து, பின் சன்னல் வழி வரும் சூரிய வெளிச்சமே காரணம் என்பதை அறிந்துணர்ந்தார்.
இந்த சம்பவம் அவரை மிகவும் யோசிக்க வைத்தது. பொருளாதாரத்தில் ஆர்வம் கொண்ட அவர், தான் இப்படி பாதி இரவு, பாதி பகல் என தூங்கி, பின் பாதி பகல், பாதி இரவு என விழித்திருப்பதால் ஆகும் செலவினைப் பற்றி என்ணிப் பார்த்தார்.
அவர் கணக்கிடலானார். பாரிஸ் நகரத்தில், சுமார் 100,000 குடும்பங்கள், மணிக்கு அரை பவுண்டு மெழுகுவர்த்தி என்று தினசரி ஏழு மணி நேரம் செலவிடுகிறது என வைத்துக்கொண்டார். அவரது கணக்கின் படி, மார்ச் 20 முதல் செப்டெம்பர் 20 வரை உள்ள 183 இரவுகளில் 7 மணி நேரம் சேமிக்க முடிந்தால், அது 1281 மணி நேரமாகிறது. அந்த நேரத்தில், 100,000 குடும்பங்கள் 128,100,000 மணி நேரம் மெழுகுவர்த்திகளை உபயோகித்தால், அது 64,050,000 பவுண்டு மெழுகுவர்த்தியாகிறது. இந்த அளவு மெழுகுவர்த்தியின் விலையைக் கணக்கெடுத்தால் அது எங்கோ போய் நிற்கிறது என்று அவர் வியந்து நோக்கினார்.
இந்த செலவினைப் கட்டுப்படுத்த, மக்கள் அனைவரும் இரவு 8 மணிக்குப் படுத்து, காலை 4 மணிக்கு எழுந்தால், இவ்வளவு மெழுகுவர்த்திகள் மிச்சப்படும் என கணக்கிட்டார். மக்களை ப்படி நடைமுறைப்படுத்துவதற்கு, அவர் கீழ்க்கண்ட வறையறைகளை நகைச்சுவையுடன் வகுத்துக் கொடுத்தார்.
சூரிய வெளிச்சத்தை தடுக்கும் வகையிலான திரைகளைக் கொண்ட சன்னல்கள் மீது வரி விதிக்கப் பட வேண்டும்.
ஒரு குடும்பத்துக்கு வாரம் ஒரு பவுண்டு மெழுகுவர்த்தி என்ற கட்டுப்பாட்டு விநியோகம் அமல் படுத்தப் பட வேண்டும், அதுவும் போலீஸின் மேற்பார்வையுடன்.
மருத்துவர்கள் தவிர வேறு யாரும் இரவு நேர வண்டிகளில் செல்வதைத் தடுக்க காவலர்கள் நியமிக்கப் பட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் காலையில் சூரியன் உதித்தவுடன், கோவில் மணியுடனும், தேவையானால் துப்பாக்கி வெடியோசையுடனும் மக்களை ‘விழிக்கவைத்தும், அவர்கள் கண்களைத் திறந்து வெளி உலகைப் பார்க்க வைக்கவும் ‘ செய்ய வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் பழக்கப்பட்டவுடன், சரியாகி விடும். காலையில் 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டியிருந்தால் தானாகவே இரவு 8 மணிக்கு படுக்கச் சென்று விடுவர்.
ஃ
இப்படி, வினோதமாகவும், நகைச்சுவையாகவும் ஏற்பட்ட அவரது வெளிப்பாடுதான், பின்னர் பல்வேறு நாடுகளில் அமுலாக்கப்பட்ட இந்த திட்டதிற்கு அடித்தளமாக அமைந்தது.
முதல் உலகப்போர் சமயம் முதல், அமெரிக்க நாட்டிலும் வேறு பல ஐரோப்பிய நாட்களிலும் மின்சக்தியை சேமிக்கும் பொருட்டு இந்தத் திட்டத்தை அமல் செய்தனர். சுமார் ஏழெட்டு மாதங்கள் அமலாக இருந்த இந்த திட்டம், பின் எதிர்ப்புகளால் கை விடப்பட்டது.
1973 ஆம் ஆண்டு, அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது தடவையாக, எண்ணைய் தட்டுப்பாட்டின் காரணமாகவும், பொருளாதார நோக்கத்துடனும், காங்கிரஸ் வருட முழுதுமான ‘பகல் நேர சேமிப்பினை ‘ உபயோகப் படுத்தினர்.
1986 ஆம் ஆண்டு, அன்றைய அமெரிக்க அதிபர் ரீகன் இது சம்பந்தமான சட்டத்தைக் கொண்டு வந்தார். சட்ட பூர்வமாக, பகல் நேர சேமிப்பு, ஏப்ரல் முதல் ஞாயிறு காலை 2 மணிக்குத் துவங்கி, அக்டோபர் கடைசி ஞாயிறு காலை 2 மணிக்கு முடிவதாக அறிவிக்கப் பட்டது. இதன் விளைவாய், அமெரிக்க நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் மட்டும் 300,000 பேரல் எண்ணை சேமிப்பதாய் கனக்கிடப்பட்டது.
இன்று சுமார் 70 நாடுகளில், இந்த திட்டம் அமலில் இருக்கிறது.
பகல் நேர சேமிப்பின் முக்கிய நோக்கம், இருளாயிருக்கும் போது தூங்கி, வெளிச்சம் வரும் போது எழுந்து அதன் விளைவாய் மின் சக்தியை சேமிப்பதாய் இருந்தாலும், இன்றைய நாட்களில், சூரியன் எப்ப உதித்தால் என்ன ? எப்ப மறைந்தால் என்ன ? என் வீட்டு விளக்குகள் எப்போதும் எரியும் என்று இருப்பவர்கள் ஏராளம். நடு ராத்திரி வரை டிவி பார்த்து விட்டு, நண்பகல் வரை தூங்கி எழும் போது, பகல் நேரத்தை சேமித்து நான் என்ன செய்யப் போகிறேன் ? ஒருவேளை பெஞ்சமின் கூறியது போல ஏதாவது சட்ட திட்டம் போட்டு அமல் செய்தால், சேமிப்பேனோ என்னவோ ?
***
- சேவல் கூவிய நாட்கள் – குறுநாவல் – இறுதிப்பகுதி
- வடிவ அமைதி
- நியதி
- பகல் நேர சேமிப்பு
- யூதர்களுக்கும் கிறுஸ்தவப் போராளிகளுக்கும் எதிரான ஜிகாத்
- இந்த வாரம் இப்படி – அக்டோபர் 27 , 2001
- நாகாிக மானுடமே!
- கலைமகளே!பதில் சொல்வாய்..!
- நிலவு
- கண்ணீர்
- கொலுசணிந்த பாதங்களுக்கு ஒரு முத்தம்
- எனக்கு மழை வேண்டாம்
- மறக்க முடியுமோ ?
- பகல் நேர சேமிப்பு
- மூலக்கூறு அளவில் கணினிக்கான டிரான்ஸிஸ்டர்
- கருவாட்டுக் குழம்பு