தமிழும் மென்கலனும் – ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது-8

This entry is part [part not set] of 10 in the series 20001104_Issue

வே. வெங்கடரமணன்


venkat@tamillinux.org

கடந்த சில வாரங்களில் தளையறு மென்கலன்களின் சிறப்பையும் அதனால் கணினி மென்கலன் தொழில்நுட்ப வளர்ச்சி விரைவடைதலையும் பார்த்தோம். தளையறு நிரலிகளைப் பற்றி விவாதிக்கையில் தமிழர்கள் (பொதுவில் இந்தியர்) யாரும் இதுவரை சிறப்பான தளையறு மென்கலன்களை வடித்து உலகிற்கு வழங்கவில்லை எனும் ஆதங்கத்தையும் கண்டோம். இதற்கு அடிப்படையில் தமிழர்கள் யாரும் தன்னலம் கருதாது தங்கள் உழைப்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்பவர்கள் அல்லர் என்று அர்த்தமல்ல. பல இலவசச் நிரலிகள் தமிழில் கிடைக்கின்றன. சொல்லப்போனால் உங்கள் கணினியின் அடிப்படைச் செயலாக்கங்களை இலவசமாகக் கிடைக்கும் தமிழ் நிரலிகளைக் கொண்டே நிகழ்த்திக்காட்டவியலும். உதாரணமாக தமிழ் தஸ்கி விசைப்பலகை மேலாண்மைச் நிரலியையும், இலவசமாகக் கிடைக்கும் பிற ஆங்கில இடைமுகம் கொண்ட நிரலிகளையும் பயன்படுத்தி எந்த ஒரு நிரலியிலும் தமிழை வடிக்கவியலும். ஆனால், இலவச மற்றும் தளையறு மென்கலன்களுக்கும் அடிப்படையில் வித்தியாசங்கள் உண்டு. இலவச நிரலிகள் வடிப்பவர் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையையும் அவரது சேவை மனப்பான்மையையும் காட்டும். ஆனால் பயனர்களை எப்பொழுதும் தங்கள் தேவைக்குப் பிறரை நம்பியிருக்கச் செய்யும். தளையறு நிரலிகள் தேவைக்கேற்ப மாற்றியமைக்க ஏதுவானவை – எனவே உண்மையில் தங்கள் சமூகம் முன்னேற வேண்டும் எனக் கருதுவோர் அந்த முன்னேற்றம் தன்னைச் சாரமலும் நடக்கலாம் என அறிதல் வேண்டும். பொதுவில் இதுவரை அதிக தளையறு கலன்கள் தமிழில் கிடைக்காதிருப்பதற்குக் காரணம் அவற்றின் சிறப்புகள் பற்றிய அறியாமையே. என்னுடைய இந்தக் கட்டுரைத் தொடர் அந்த வகையில் ஒரு நிரலரையாவது இவ்வழியில் சிந்திக்கத் தூண்டினால் என்னுடைய முயற்சிகளுக்குப் பலன் கிட்டியதாக அறிவேன்.

இனி இதுவரை தமிழில் கிடைக்கும் நிரலிகளைப் பற்றி அறிவோம்; அதற்கு முன் தமிழில் கணினி சார்ந்த பொது நிலையைத் தெரிந்து கொள்ள முயற்சிப்போம். தமிழுக்கென்று நிரலிகளை வடிக்கும் பழக்கம் எப்பொழுது தோன்றியது என்று அறுதியிட்டுக் கூறவியலாது. எனக்குத் தெரிந்த வகையில் 1988 சமயத்தில் ‘பாரதி ‘ என்று கணினியில் தமிழை எழுதிக்காட்டவல்ல ஒரு நிரலி 1988ல் பெங்களூரில் கிடைத்து வந்தது. அதுதான் என் முதல் அறிமுகம். பின்னர் 1990 துவக்கத்தில் ஆதமி எனும் நிரலி கனடாவைச் சேர்ந்த திரு. சீனிவாசன் என்பவரால் வடிக்கப்பட்டு சிறு பயனர்களுக்கு இலவசம் எனும் குறிப்புடன் வெளிவந்தது. இது ஒரு மைல்கல், அவரே தொடர்ந்து இதை விண்டோஸ் நிரலியாக பயனர் இடைமுகத்துடன் மாற்றியமைத்து சிலகாலம்வரை முன்னேற்றங்கள் செய்து வெளியிட்டு வந்தார். பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் முனைவர். கல்யாணசுந்தரம் மயிலை எனும் எழுத்துருவையும், பின்னர் அதுகொண்டு மைக்ரோஸாப்ட் வேர்ட் நிரலியில் தமிழ் தொகுக்கத் தேவையான கூறுகளையும் இலவசமாக வெளியிட்டார். பின்னர் இதுபோன்ற சிறு முயற்சிகள் ஆங்காங்கே தோன்றின; பல உடனே மறைந்தும் போயின. அடுத்த முக்கிய நிகழ்வாக முரசு அஞ்சல் எனும் நிரலி திரு நெடுமாறன் என்பவரால் வடிக்கப்பட்டு இலவசமாகக் கிடைக்கத் தொடங்கியது. இதன்மூலம் தமிழில் மின்னஞ்சல் தொகுப்பதும் படிப்பதும் எளிதானது. இது கிழக்காசிய நாடுகளில் மிகவும் பரபரப்பாகப் பிரபலம் அடையத் தொடங்கியது. இது இன்னொரு முக்கிய நிகழ்வாகும். இந்நிலையில் இலவசமாகக் கிடைத்து வந்த அது முன்னேற்றப்பட்டு விலைக்கு விற்கப்படத் தொடங்கியது. அது பகிர்கலமாக மாற்றப்பட்டது – அதனை நீங்கள் இலவசமாக முயன்று பார்க்கலாம், ஆனால் நெடுநாள் புழக்கத்திற்கு அதன் சக்திவாய்ந்த முழுவடிவத்தையும் நீங்கள் விலைக்கு வாங்கியாக வேண்டும். இதே வழியில் அமெரிக்காவிலிருந்து கல்வி எனும் நிறுவனம், ஆஸ்திரேலியாவிலிருந்து கம்பன் மென்னியம் நிறுவனம், மற்றும் மலேசியாவிலிருந்து துணைவன் நிறுவனம் போன்றவை சில எழுத்துருக்களையும் பதிப்பியையும் வெளியிட்டன இவற்றில் பெரும்பாலானவை பகிர்கலன்கள். இன்றைக்குத் தமிழில் கிடைக்கும் முக்கிய நிரலிகளை எல்லாம் ஒட்டு மொத்தமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால் முற்றிலும் வணிக வகையிலான நிரலிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. தாய்நாடு விட்டு அயல்நாடுகளில் வசிக்கும் எங்களில் பலர் ஏதாவது ஒரு வகையில் தங்களாலான சிறு பங்களிப்பைத் தமிழுக்கு ஆற்றியிருக்கின்றார்கள். இதில் தமிழ் நாட்டிலேயே வசிப்பவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவு என்பது ஒரு வருந்தத் தக்க விஷயம்.

இந்நிலையில் ஒரு முக்கியமான புரட்சி சத்தமின்றி அரங்கேறத் தொடங்கியது. அதன் பெயர் மதுரைத் திட்டம். மயிலை எழுத்துருவை அளித்த முனைவர் கல்யாணசுந்தரம் தமிழின் பலநூற்றாண்டுகால இலக்கியங்களை மின் வடிவில் மாற்றிப் பலரும் பயனடையும் வகையில் இலவசமாகக் கிடைக்கச் செய்யத் தொடங்கினார். ஆங்கிலத்தில் Project Gutenberg என்று மிகப் பிரபலாமனதை முன்மாதிரியாகக் கொண்டது அது. பல தன்னார்வலர்களும் தங்கள் ஓய்வு நேரங்களில் இலவசமாகக் கிடைக்கும் நிரலிகளைக் கொண்டு தங்களுக்குப் பிடித்த தமிழ் இலக்கியங்களை மின்வடிவில் மாற்றி மதுரைத் திட்டத்தில் சேமிக்கத் தொடங்கினார்கள். இதுபோன்ற முயற்சிகளில் பலரும் ஈடுபட்டு வந்தது உண்மை (அடியேனும் எனது நண்பர் முனைவர் ரெங்கராஜன் என்பவரும் 1991ல் திருக்குறளின் பெரும்பகுதியை ஆதமி வடிவில் வடித்து பெங்களூரில் எங்கள் நண்பர்கள் பலருடன் பகிர்ந்து கொண்டோம் – ஆனால் அதை முழுமையடையச் செய்யவில்லை). நண்பர் கல்யாணுக்கு எங்களுக்கு இல்லாத அந்த மனத் திட்பம் இருந்தது – அவர் தான் முழுமையாக மின்வடிவில் மாற்றியவற்றைப் பலருடன் பகிர்ந்து கொண்டார். பலரிடம் மின்வடிவில் இருந்தனவற்றையும் தொகுத்தார். இன்றைக்கு உலக மொழிகளின் மின்வடிவ இலக்கியத் தொகுப்புகளில் மதுரைத் திட்டம் ஒரு முந்தைய இடத்தில் இருப்பது அசைக்க முடியாத உண்மை. அங்கு சங்க இலக்கியங்கள் தொடங்கி பாரதி, பாரதிதாசன், ஏன் – இன்றைய வைரமுத்துவரை காப்புரிமையற்ற பல இலக்கியங்கள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கின்றன.

நிரலிகள் வடிப்பதற்குச் சற்று சம்பந்தமில்லாத மின்னுரைத் தொகுப்பு திட்டத்தைப் பற்றி இங்கு குறிப்பிட ஒரு தொடர்பு இருக்கின்றது. இவை எல்லாம் நிகழ்ந்த காலங்கள் இணையத்தின் துவக்க நாட்கள் ஒத்த எண்ணங்கள் கொண்ட பலர் ஒன்றிணையாத காலங்கள். இந்த முயற்சிகள் எல்லாம் கிட்டத்தட்ட பல வடிவங்களில் இருந்தன. உதாரணமாக ஆதவின் நிரலிகொண்டு நீங்கள் எழுதியதை மயிலை எழுத்துரு கொண்டோ, முரசு அஞ்சலிலோ படிக்கவியலாது. மதுரைத் திட்ட ஆரம்பகால வெளியீடுகள் அப்படித்தான்; ஒவ்வொன்றையும் படிக்க உங்களுக்கு ஒரு நிரலியோ எழுத்துருவோ தேவை. ஆனால் ஆங்கிலத்தில் அப்படியல்ல லினக்ஸ் இயக்குதளத்தின் மூலம் நான் வடிக்கும் ஒரு மின்னஞ்சலை ஆப்பிள் மக்கின்டோஷ் கணினியிலோ, மைக்ரோஸாப்ட் விண்டோஸ் இயக்குதளத்திலோ நீங்கள் தடையின்றை படிக்கலாம். இதற்குக் காரணம் உள்ளிடும் நிரலிகள் வேறாக இருப்பினும் அவற்றின் குறியமைப்பு ஒன்றாக இருப்பதே. இன்றைக்கு நாம் இருக்கும் முறையற்ற நிலை பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலத்தில் இருந்தது உண்மை; ஆனால் விரைவில் அவர்கள் அதன் பயனின்மையை உணர்ந்து தகுதரம் ஒன்றுக்கு மாறினர். American Standard for Information Interchange, (ASCII) – எனப்படும் குறியீட்டுத் தகுதரம் அது.

மதுரைத் திட்டமும், தமிழில் பல்கிப் பெருகிவந்த இணையத் தளங்களும் பயனர்களிடையே அத்தகைய தகுதரத்தின் தேவையை மெல்ல வலியுறுத்தத் தொடங்கின. அதன் விளைவாக தஸ்கி (TSCII) என்று அழைக்கப்படும் தமிழ்த் தகுதரக் குறியீடு உருவானது. இது ஒரு முக்கிய நிகழ்வு. இதைத் தொடர்ந்து புதிய தமிழ் உள்ளடக்கங்கள் தகுதரத்தில் வெளியாகத் தொடங்கின. ஏற்கனவே இருந்தவைகளும் தகுதரத்திற்கு மாற்றப்பட்டன. முற்றிலும் தகுதர அடிப்படையிலான சுவடி போன்ற புதிய நிரலிகள் உருவாகத் தொடங்கின. சுவடியில் பழைய அஞ்சல் மற்றும் மயிலை வடிவக் கோப்புகளை எளிதில் தகுதரத்திற்கு மாற்றிப் படிக்கவியலும். சில மாதங்களுக்குள்ளாக இணையத்தின் தமிழ் உள்ளடக்கங்கள் பெரிதும் தமிழ்த் தகுதரத்திற்கு மாறத்தொடங்கின. இந்நிலையில் தமிழக அரசும் முறைப்படுத்தலை அரசு பூர்வமாக மேற்கொண்டது எங்களில் பலருக்கு மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் தரத்தொடங்கியது. ஆனால், விரைவில் தமிழக அரசு ஏற்கனவே இணையத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டு திருத்தங்களும் முன்னேற்றங்களும் கொண்டு புழங்கிவந்த தஸ்கியை முற்றிலுமாகப் புறக்கணித்து தாப் (TAB – TAmil Bilingual encoding) எனும் புதிய தகுதரத்தைப் பரிந்துரைத்தது. இதன் முழுமையற்ற தன்மை பலருக்கும் ஏமாற்றம் அளித்தது. இன்றுவரை இது பரிந்துரைப்பாகவே இருந்துவருகின்றது, அதிகார பூர்வமானதாகவில்லை. இதை நெறிப்படுதுவது கணினியில் தமிழ் பயன்பாட்டை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

மீண்டும், தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் இணையப் பக்கங்கள் இதற்கு மாறகவே இருந்தன; உதாரணமாக ஆனந்த விகடன், தினகரன், தினமணி, தினத்தந்தி, கல்கி, குமுதம், மின்னம்பலம், சத்தியம் ஆன்லைன், ரீடிப்.காம் போன்ற பல இந்தியா அடிப்படையிலான இணையப் பக்கங்கள் இன்றுவரை தன்னிச்சையான நிலையை மேற்கொண்டு வருகின்றன. மனம்போனபடி, தஸ்கி மற்றும் தாப் இரண்டில் எதனுடனும் இணையாமல் இவை தங்கள் உள்ளடக்கங்களை வெளியிட்டு வருகின்றன. மீண்டும் இந்நிலையை எளிதாக்க தஸ்கி ஆர்வலர்களே முயன்று வருகின்றனர். உதாரணமாக, அமெரிக்காவில் வசிக்கும் திரு. மணிவண்ணன் அவர்கள் பதிப்பித்துள்ள நிரலியின் மூலம் இந்த அராஜகப் பக்கங்களின் உள்ளடக்கங்களை தஸ்கி வடிவிலோ, தாப் வடிவிலோ மாற்றிப் படிக்கவியலும். ஆனால் தனிநபர் மற்றும் குழு முயற்சியால் இதனை காலங்களுக்கும் தொடர்முடியாது. அப்படி முடிந்தாலும் நாம் அதை மட்டுமே செய்துகொண்டிருப்போம். அதை விட்டு சக்திவாய்ந்த கணினி பயன்பாடுகளுக்கு மாறவியலாது.

தகுதரம் ஏன் தேவை ? இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிறிய உதாரணங்களாக இரண்டை எடுத்துக் கொள்வோம் – ஒன்று இணையத்தில் தேடல். இன்றைக்கு இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அளவு அளவிட முடியாதது. இது தமிழுக்கும் பொருந்தும். இந்நிலையில் உங்களுக்குத் தேவையான விஷயத்தைப் பெற நீங்கள் இணையத்தில் தேடல் இயந்திரங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அவை கிடைக்கும் பக்கங்களின் உள்ளடக்கங்களை அட்டவணையிட்டுச் சேமித்து உங்களுக்கு வழங்குகின்றன. இம்மாதிரி அட்டவணையிட அவைகளுக்கு கிடைக்கும் உள்ளடக்கங்களெல்லாம் ஒரே குறியீட்டில் இருப்பது அவசியம். வடிக்கப்படும் தகுதரக் குறியீடும் இத்தகைய தேடல்களுக்கு ஏற்றவாறு அமைதல் அவசியம். தஸ்கிக்கு என்று எழுதப்பட்ட தேடல் இயந்திரத்தின் மூலம் விகடனில் உள்ள பக்கத்தை அறியமுடியாது. துவக்கத்திலிருந்து இன்றுவரையான விகடன் இதழ்களை மின்வடிவில் மாற்றி வழங்குவதாக வாக்கு அளிக்கும் விகடனின் நோக்கம் உயர்வானதாக இருந்தாலும், அதை அடைய தகுதரம் ஒன்றை நாடாத அவர்களின் செயல்முறை ஏமாற்றமளிக்கின்றது.

இன்னொன்று கணினியை பிற காரியங்களைச் செய்யப் பணித்தல், உதாரணமாக கண்பார்வையற்ற ஒருவருக்கு இணையப் பக்கம் ஒன்றைப் படித்துக் காட்டல். தகுதரம் இல்லாத நிலையில் அந்த படிக்கும் நிரலி ஊனமுற்ற நம் சகோதரருக்கு எந்தவகையில் உதவ முடியும். இதை எல்லாம் கேட்டால் தமிழுக்கு இணையத்தில் விடிவுகாலமே கிடையாதா ? என்ற ஆதங்கம் தோன்றுகின்றதா ? மாறாகத் தமிழில் நிலை மற்ற இந்திய மொழிகளைவிட எவ்வளவோ மேல், அவர்களில் பலர் இன்னும் தகுதரம் என்ற முயற்சியையே மேற்கொள்ளவில்லை. தமிழில் தஸ்கி, தாப் என்ற இரண்டு தகுதரங்களுக்குள் இணையத்தின் பெரும்பாண்மை தமிழ்ப் பக்கங்கள் அடங்கிவிடும் (தமிழகத்திலிருந்து வெளியாகும் இதழ்களைத் தவிர). இவர்களில் பலர் தகுதரத்தின் தேவையை உணர்ந்து இருக்கின்றார்கள். தமிழக அரசும் தாப், தஸ்கி இரண்டின் உயர்வு மற்றும் குறைபாடுகளை உணர்ந்து இருக்கின்றது. இன்றைக்கு நாம் உலகின் பொதுத்தரமாக உருவாகிவரும் யுனிகோடை நோக்கி அடியெடுத்துவருகின்றோம். எவ்வளவு விரைவில் ஒரு திறமைவாய்ந்த தகுதரத்தை உருவாக்குகின்றோமோ அது நம் வளர்ச்சியை உறுதிப்படுத்தும்.

எல்லாம் சரிதான், லினக்ஸ் பற்றி எழுதுவதாகச் சொன்ன கட்டுரைத்தொடரின் ஒரு அத்தியாயத்தில் லினக்ஸ் பற்றி பேசவே இல்லையே என்று புருவம் உயர்த்துவோர்களுக்கு. நாம் தொடரின் இறுதி அத்தியாயங்களை நெருங்கிவிட்டோம். தமிழில் லினக்ஸ் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளைப் பற்றிச் சொல்ல ஒரு தனி அத்தியாயம் தேவை – உங்கள் இருக்கைகளிலிருந்து நிமிர்ந்து உட்காருங்கள். அடுத்த வாரம் சாதனைகள், சாதனைகள், சாதனைகள்….

தோக்கியோ

5. நவம்பர் 2000

பின் குறிப்பு: பொதுவில் இந்தக் கட்டுரைத் தொடரில் இணைய இணைப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. முக்கிய இணைப்புகள் இறுதியில் வழங்கப்படும். எனினும் இவ்வாரக் கட்டுரைக்கு இன்றியமையாத இரண்டு முக்கிய தளங்கள்.

மதுரைத் திட்டம் : http://www.projectmadurai.net

தஸ்கி தகுதரத் திட்டம்: http://www.tamil.net/tscii

Series Navigation

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com