தளையறு மென்கலன் வரலாறு -ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – 5

This entry is part [part not set] of 11 in the series 20001008_Issue

வே. வெங்கடரமணன்.


{கடந்த வாரத்தில் வர்த்தக ரீதியிலான மென்கலன் நிறுவனங்களைக் கொடுங்கோலர்களென நான் குறித்திருந்தது பற்றி சிலர் எனக்குத் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பும் ஆச்சரியமும் காட்டியிருக்கின்றார்கள். அவர்களில் பலர் வணிக நிறுவனம் = மைக்ரோஸாப்ட் என மனதில் கொண்டு லினக்ஸ் பைத்தியங்கள் என அறியப்படுவர்களெல்லாம் மைக்ரோஸாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைக்காத கிறுக்கு நிரலர்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இதற்கெல்லாம் நான் தனிப்பட்ட முறையில் பதிலும் இணையத்தில் இருக்கும் பிற தகவல்களுக்கான சுட்டிகளையும் எழுதியிருக்கின்றேன். இந்தக் கட்டுரைத் தொடர் இறுதியில் வாசகர்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் என எழுதுவதாக உத்தேசம். எனவே, உங்கள் மதிப்புரைகளையும் சந்தேகங்களையும் தயங்காது திண்ணை ஆசிரியருக்கு முகவரியிட்டோ, எனக்குத் தனிப்பட்ட முறையிலோ எழுதவும்.}

இனி தொடருக்குச் செல்வோம். இவ்வாரம் தளையறு மென்கலன்/திறந்த மூலம் இவற்றின் வரலாறையும் இவற்றால் வணிக நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள மன மாற்றங்களையும் பற்றி அறிந்து கொள்வோம். நிரலர்கள் இடையே அவர்களின் ஆணைநிரல்களை மூடிவைப்பது எனும் வழக்கம் மிக மிகக் காலம் கடந்துதான் தோன்றியது. அதற்கான முக்கிய காரணம் மென்கலன் சந்தையில் அதிக விலைக்குப் போகத் தொடங்கியதுதான். அது மெதுவாக பேராசைகளுக்கு விதையிட்டு அவர்களின் கட்டுப்பாடுகளுக்கு ஒரு எல்லை இல்லாமல் போகத்தொடங்கியது. 1970களில், பொதுவில் எழுதப்பட்ட எல்லா நிரல்களுமே கட்டுப்பாடின்றி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொள்ளப்பட்டன. ஆனால் எண்பதுகளின் துவக்கத்தில் கிட்டத்தட்ட எல்லா முக்கியமான நிரல்களும் காப்புரிமை பெற்றவையாக மாறிவிட்டன. இது ஒரு விரைவான வளர்ச்சிதான்!!

மென்கலன்களை இலவசமாகத் தடையின்றி பகிர்ந்துகொள்ள்துதல் என்றைக்குத் தோன்றியது என்று வரையறுக்க இயலாது. முதன்முதலாக மென்கலன் காப்புரிமை பற்றிக் குரல்கொடுத்தவர் மாசாசூசெஸ்ட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரான ரிச்சர்ட் ஸ்டால்மான் என்பவர்தான். அவர் உலகப் பிரசித்தி பெற்ற எம்ஐடி-யின் செயற்கை ஒட்பம் எனும் துறையின் ஒரு தூணாக இருந்தவர். அறிவியல் அறிஞர்கள் பாடுபட்டு உருவாக்கிய கணினி நுட்பம் அவரது கண்களுக்கு முன்னாலேயே ஒரு சில வணிக நிறுவனங்களால் கொடுமையான முறையில் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு கோபம் கொண்ட அவர் 1983ல் தளையறு மென்கலன் நிறுவனம் (Free Software Foundation) எனும் அமைப்பைத் தொடங்கினார். அதன் கொள்கைகளை வரையறுக்கும் பொழுது அவர் எல்லா பயனர்களுக்கும் பயன்படும் வகையில் கணினிகளுக்கான அணைத்து மென்கலன்களையும் இலவசமாக வெளியிடல் அதன் ஆதாரக் கொள்கையாக இருக்கும் என்று அறிவித்தார். அவ்வாறு வெளியிடப்படும் நிரல்கள் இலவசமாகக் கிடைப்பதோடு இல்லாமல், அதன் அடிப்படை நுட்பங்களை அனைவரும் அறியும் வகையிலும், மாற்றியமைக்க ஏதுவாக்கவும் அதன் ஆணைக்குறியீடுகள் திறந்த வடிவில் கிடைக்கும் என்று அறிவித்தார். இயக்கு தளத்திற்கான முன்மாதிரியாக யுனிக்ஸ் அறியப்பட்டது. அதன் பல்பயனர் (multiuser), பல் செயலாக்க (multi tasking) வசதி மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், நிரலர்களும், பயனர்களும் ஒருவருக்கு ஒருவர் தகவல் பறிமாற வசதியானதாகவும் அமைந்தது. யுனிக்ஸ் அடிப்படையிலான அந்நிறுவனத்தின் இயக்கு தளத்திற்கு க்னூ (GNU) எனப் பெயரிடப்பட்டது. அப்பெயர் அமைந்த விதம் சுவாரசியமானது, ‘க்னூ யுனிக்ஸ் அல்ல ‘ (GNU is Not Unix) எனபதே க்னூவின் பெயருக்கான வரையறை.

கணினிகளின் செயல்பாட்டுக்கு ஆதரம் அதன் இயக்குதளம்; எனவே ஒரு இயக்குதளத்தை வெளியிடல் அந் நிறுவனத்தின் முதல் பணியாக வரையறுக்கப்பட்டது. இயக்குதளத்தின் கூட அதற்கான பதிப்பான் (editor), பல்வேறு கணினி மொழிகளுக்கான ஆணைத் தொகுப்பிகள் (compilers), மின்னஞ்சல் செயலிகள் என்பனவும் அவசியம் என்று அறியப்பட்டது. ஸ்டால்மான் அவர் எழுதிய ஈமாக்ஸ் (emacs) எனும் பதிப்பானை வெளியிட்டார். மிகவும் சக்தி வாய்ந்த க்னூ சி (GNU C) தொகுப்பியும் வெளியிடப்பட்டது. இவற்றின் திறந்த ஆணைத்தொடர்களைப் பலரும் திருத்தியமைத்து முன்னேற்றினார்கள். ஒரு இயக்குதளத்திற்கு வேண்டிய எல்லாம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டன, அதன் கருவான (kernel) அமைப்பைத் தவிர. இந்நிலையில்தான் லினக்ஸ் இயக்குதளமும் தன்னிச்சையாக உருவாகி வந்தது. ஒரே செயலை இருவர் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது தளையறு நிறுவனத்தின் அடிப்படைக் கொள்கையானதால், தயாராகிவரும் லினக்ஸின் அமைப்பு க்னூவின் இதயமாகக் கொள்ளப்பட்டது. க்னூ/லினக்ஸ் யுனிக்ஸ் எனும் சக்திவாய்ந்த, இலவச, கட்டுப்பாடற்ற இயக்குதளம் எண்பதுகளின் இறுதியில் சராசரி பயனர்களின் உபயோகத்திற்குத் தயார்.

மெதுவாகவும், அதே நேரத்தில் தொழில்நுட்பத்தில் சிறப்பாகவும் லினக்ஸ் வளர வளர அதைக் கணினிபற்றி அதிகம் அறியாத பயனர்களுக்கும் வரைவியல் அடிப்படையிலான இடைமுகத்தின் ஊடாட்ட வசதிகொண்டதாக மாறத் தொடங்கியது. பின்னர் அது பற்றி ஒரு பயங்கலந்த வியப்பைப் பலர் விட்டுவிட்டுத் தங்கள் கணினிகளில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். சில கணினி விற்பனையாளர்கள் லினக்ஸ் பொருந்திய கணினிகளை விற்கத் தொடங்கினார்கள். 1995 வாக்கில் வி.ஏ அசோசியேட்ஸ் எனும் நிறுவனம் முற்றிலும் லினக்ஸ் அடிப்படையிலான கணினிகளை விற்று கணினி விற்பனையாளர்களில் முக்கியமான ஒன்றாக உயரத் தொடங்கியது.

இந்நிலையில் தளையறு மென்கலன் நிறுவனத்தின் ஆங்கிலப் பெயரில் இருக்கும் free எனும் வார்த்தை, அதன் கோட்பாடுகளில் நம்பிக்கைக் கொண்டிருந்த பல வன்கலன் நிறுவனங்களுக்குத் தடையாகத் தோன்றியது. அவர்கள் தங்கள் ஆணைமூலங்களைத் திறக்கத் தயார்; ஆனால் தங்கள் செயலிகளை வணிக ரீதியிலாக விற்பது அவர்களின் சந்தைப் பங்குகள் சரியாமல் இருக்கத் தேவையானதாகப் பட்டது. ஸ்டால்மானுடன் ஆரம்பக் காலத்திலிருந்தே தொடர்புகொண்டு அவரது வலதுகரம் போல் செயல்பட்ட எரிக் ரேமாண்ட் என்பவரும் சிலரும் வணிக நிறுவனத்தில் இருக்கும் தங்கள் நண்பர்களின் தர்ம சங்கட நிலையை உணரத்தொடங்கினார்கள். 1998 ஜனவரி மாதம் ரேமண்டின் பேராலயமும் (தளையறு மென்கலன்) சந்தையும் (காப்புரிமை மென்கலன்) (The Cathedral and the Bazaar) எனும் கட்டுரையின் கருத்துக்களால் பாதிக்கப்பட நெட்ஸ்கேப் நிறுவனம் தனது ஆணைமுலங்களை வெளியிடத் தயார் என்று அறிவித்தது. அது தளையறு நிறுவனத்தின் ஆதாரத் தூண்களான சிலருக்கு ஆணைமூலங்களைத் திறப்பது (கருத்துக்குக் கட்டுப்பாட்டை நீக்குவது) வணிக சாத்தியங்களுக்கு ஊறுவிளைவிக்காது என்று எல்லோருக்கும் உணரவைக்க வேண்டிய தருணமாகத் தோன்றியது. free எனும் சொல்லை விட்டு விலகி வருவது நல்லது என்று நம்பினார்கள். பெப்ருவரி 3ம் தேதியன்று திறந்தமூலம் நிறுவனம் எனப் பெயரிபட்டு அவர்களின் செயற்பாட்டை விரிக்கத் தொடங்கினார்கள். அதன் கொள்கைகளை ஆய்ந்த ஸ்டால்மான் அது தனது ஆதாரக் கொள்கைகளுக்குச் சற்று எதிரானது என்று நம்பினார் (மென்கலன்களுக்குப் பணம் பெறுதல் அவருக்கு உடன்பாடானதல்ல). தன்னை அவர்களின் நடவடிக்கைகளிலிருந்து விலக்கிக் கொண்டு தனிவழியே தொடர்வதாக அறிவித்தார்.

பின்னர் வெள்ளம் போல் நிறுவனங்கள் தங்கள் இரகசியங்களைத் திறக்கத் தொடங்கின. குறிப்பாக

31 மார்ச்சு 1998 – நெட்ஸ்கேப் தனது குறியீடுகளை வெளியிட்டது. திறந்த சில மணிகளுக்குள்ளே அதன் குறைகளும் அதற்கான பரிந்துரைகளும் இணையத்தில் வரத்தொடங்கின. 7 மே 1998 – கோரல் நிறுவனம் லினக்ஸை ஆதரிப்பதாக அறிவிப்பு 28 மே 1998 – சன் கணினித் தயாரிப்பு நிறுவனமும் அடாப்டெக் எனும் வன்கலன் நிறுவனமும் லினக்ஸ் செயல்பாடுகளைத் துவக்கின.

22 சூன் 1998 – ஐ.பி..எம் தனது சக்திவாய்ந்த இணையச் சேவை வழங்கலுக்கு (web server) அப்பாசே தளையறு செயலியை முன்னிருத்தியது.

17 சூலை 1998 – ஆரக்கிள் தங்கள் தரவுத்தளச் (Database) செயலிகளை லினக்ஸில் வடிக்கத் தொடங்கியது

10. ஆக 1998. – சன் நிறுவனம் தனது சோலாரிஸ் இயக்குதளம் தனி நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாகத் தரப்படும் என அறிவித்தது.

24 ஆக. 1998. – தனிநபர் கணினிகளில் யுனிக்ஸை முதலில் வணிக ரீதியாக வெளியிட்ட ஸ்கோ நிறுவனம் தனது ஸ்கோ செயலிகளை லினக்சுக்கு ஏற்றதாக அமைக்க உறுதி பூண்டது.

26. ஆக. 1998. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைவரான ஸ்டாவ் பால்மர் லினக்ஸின் வளர்ச்சி தங்களுக்குக் கவலையளிப்பதாக ஒப்புக் கொண்டார். தொடர்ந்து அக்டோபரில் தனக்கெதிரான வழக்கில் மைக்ரோஸாப்ட் தனக்கு ஏகபோக உரிமையில்லை என நிறுவ லினக்ஸை முன்னிருத்தியது.

29 செப். 1998. லினக்ஸ் விற்பனை நிறுவனங்களில் முதன்மையான ரெட்ஹாட்டின் பங்குகளை இன்டெல் நிறுவனமும் நெட்ஸ்கேப்பும் வாங்கின. ஆரம்ப நாட்களிலிருந்தே நகமும் சதையுமாக இருந்து ஒருவருக்கு ஒருவர் உதவி வளர்ந்தவை மைக்ரோஸாப்டும் இன்டெலும். இப்பொழுது இன்டெல் மைக்ரோசாப்டின் முக்கிய எதிரியின் பங்காளியாக மாறிவிட்டது.

1 நவ. 1998. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இரகசிய ஆணவங்கள் வெளிவரத் தொடங்கின. அவை திறந்த ஆணைமூலத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுருத்துவதாக இருந்தன. அதன் அடிப்படையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வன்கலன் தோழர்களின் கைகளை எப்படிக் கட்டிப்போடுவது என விவாதித்த அசிங்கமான சில உண்மைகளும் வெளிவரத் தொடங்கின.

27. ஜன. 1999. ஹெச்.பி மற்றும் சிலிக்கன் கிராபிக்ஸ் நிறுவனங்களும் தங்கள் கணினிகளில் லினக்ஸ் செயலிகள் ஓடும் வகையில் அமைப்பதாக அறிவித்தன.

17. பெப். 1999. ஐ.பி.எம் தனது எல்லா வன்கலன்களுக்கும் லினக்ஸ் ஆதரவு உண்டு எனத் தெளிவாக அறிவித்தது.

15. மார்ச்சு 1999. இயக்குதளத்தில் இரண்டாமிடத்திலுள்ள ஆப்பிள் தனது ஆணைமூலங்களைத் திறந்தது.

கிட்டத்தட்ட ஒருசில நிறுவனங்களைத் தவிர எல்லாமே தற்பொழுது தங்கள் தகவல்களின் மீதிருக்கும் கட்டுபாடுகளை நீக்கிவிட்டன. இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையாக அவற்றின் பயன்பாடுகளின் மீதுள்ள கட்டுப்பாடுகளும் நீங்கும் நாட்கள் தொலைவில் இல்லை என்றுதான் தோன்றுகின்றது. இது இப்படியாக இருக்க அடிப்படை ஆணைக்குறியீடுகளைத் திறந்துவிட்டு, வேண்டுமானல் எங்களது தயாரிப்புகளை முற்றிலுமாக இலவசமாக எங்கள் இணையத் தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள் என்றும் அறிவித்து விட்டு ரெட் ஹாட் போன்ற நிறுவனங்கள் எப்படி தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றன என்றும் தெரிந்து கொள்வோம். அதன்பின்னர் நம் இந்தியாவிற்கு ஏன் லினக்ஸ் முக்கியம் என்பது பற்றி விவாதிப்போம்.

தோக்கியோ,
8 அக்டோபர் 2000

naadodi@hotmail.com
 
 

Series Navigation

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com