தாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி !

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நள்ளிரவின் ஆழ்ந்த இருட்டில்
உலக இன்பத்தை
உதறிச் செல்வோன் உரைத்தான்:
“இல்லறத்தைத்
துறந்து விடுவேன்
இறைவனைத் தேடிக் காண !
சிறையிலிட்டு என்னை
எவன்
இங்கே அடைத்துள்ளான் ?”
“நான்தான்”
எனப் பதிலுரைத்தான் இறைவன்.
நம்ப வில்லை அதை மனிதன் !
தாயை மார்போடு
சேயும் அணைத்த வண்ணம்
பாயில் ஆழ்ந்துறங்க
பாமரன் பார்த்து அலறினான் :
“இவரெல்லாம் யார் ? என்னை
ஏமாற்ற வந்த
மாயைகளா ?” என்றான் !
“அவரும் நான்தான்” என்றான் இறைவன்
அதையும் நம்பவில்லை மனிதன் !

படுக்கை விட்டெழுந்து
துடுக்காய்க் கேட்டான் மனிதன் :
“இறைவா நீ
எங்கிருக்கிறாய் சொல் ?
“இங்குதான்” என்றான் இறைவன் !
இதுவும் விழவில்லை அவன்
செவியில் !
சேய் ஓவென அலறியது
தாயை
இறுகப் பற்றிக் கொண்டு !
“திரும்பிப் பாரடா” என்றுரைத்தான்
இறைவன் !
இதுவும் விழவில்லை அவன்
செவியில் !
ஈசன் பெருமூச்சு விட்டுக்
கேட்டான்:
“என்னைத் துறந்து விட்டு
எங்கே போகிறாய் பக்தனே
எனைத் தேடி ?

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 1, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா