ஆறு கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

பாவண்ணன்



1. புன்னகையின் வெளிச்சம்

இறவாணத்து மூலையில்
ஒரு கையுடைந்த மரப்பாச்சி கிடைத்தது
அவளுக்கு

கழுவித் துடைத்த தருணத்தில்
கருமையின் அடர்த்தி கரைந்து
ஒட்டியிருந்த பிள்ளைக் கனவுகள்
உதிர்ந்தன

ஆனந்தச் சிரிப்புகளும்
அளவற்ற ஆசைகளும்
பாட்டுத் துணுக்குகளும்
பரிகாசப் பேச்சுகளுமாக
ஓர் ஊஞ்சல் அசைந்தது

ஆதிநாள் தொடங்கி
சூரியனைப் பற்றும் விருப்போடும்
விண்ணைத் தொட்டு
காற்றில் பறக்கும் கனவோடும்
குழலாட குழையாட
குட்டைப் பாவாடை சரசரக்க
ஆடிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி

அவள் உருவம் பிளந்து
ஆடவந்தாள் இன்னொரு சிறுமி
அவள் சிரிப்பில் தோன்றி
அசையத் தொடங்கினாள் மற்றொரு சிறுமி
அடுத்தடுத்துப் பெருகினார்கள்
ஆயிரக்கணக்கான சிறுமிகள்
ஆச்சரியத்தில் உறைந்து நின்றவளிடம்
ஒரு புன்னகையை
பரிசளித்தார்கள்

பழசும் புதுசுமாக
ஏராளமான பொருட்கள் குவிந்து
அடைந்து கிடக்கும்
இருண்ட சமையலறையின் மூலையில்
தன் வெளிச்சத்தைப் படரவிட்டது
அந்தப் புன்னகை


2. பூ

கனவில் பூ விழுந்ததாக
சொன்னது குழந்தை
அதன் முகத்தில் அபூர்வமான மின்னல்
அதன் கண்களில் பரவசம்
சூரியனாகச் சுடர்விட்டு ஒளிர்ந்தது

பூவின் நிறம்பற்றியும்
இதழ்களின் மென்மைபற்றியும்
மேலும்மேலும் விவரித்தது குழந்தை
கைவிட்டு நீங்காத மணத்தை
முகர்ந்து பார்க்க நீட்டியது
பிறகு
பூவைப்பற்றிய விதம்விதமான செய்திகளை
ஒவ்வொரு நாளும் சொல்லத் தொடங்கியது

ஒரு நாள் தற்செயலாக
என் கனவிலும் விழுந்தது ஒரு பூ

செய்தியைச் சொன்னதும்
நம்ப மறுத்தது குழந்தை
அதன் கருவிழியில்
ஆயிரமாயிரம் சந்தேகங்கள்
பூதானா? நிறமென்ன?
கொடுத்த கைகளைப் பார்த்தாயா?
விழுந்த நேரமென்ன?
முகம் தெரிந்ததா?
குறுக்குக் கேள்விகளை
அடுக்கிக்கொண்டே போனது
முடிவில்
அது கனவாகவே இருக்காது
ஏதாவது கதையின் நினைவாக இருக்கலாமென்று
கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஓடிச்சென்றது

***

3. பயணம்

அதிகாலைச் சுற்றுலாவுடன் தொடங்கியது
அவர்கள் விடுமுறை தினம்
புழுக்கத்தில் வெந்துவெந்து
நெருப்புத் துண்டான நகர்துறந்து
கடற்கரையை ஒட்டி
கோயில்கள் நிறைந்த
ஊருக்குப் போனார்கள்

இளமை நினைவுகளைப் பகிர்ந்தபடி
கடலோரம் கதைபேசினார்கள்
பெண் சிற்பங்களின்
தோள்தொட்டும் முலைதொட்டும்
முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்கள்
நூற்றாண்டு பழகிய பெயர்களை
எதிரொலிக்கும்படி கூவிச் சிரித்தார்கள்
கட்டுமரங்களில் ஏறி
அலைகளை எதிர்த்து
துடுப்பு வீசி கடலில் மிதந்தார்கள்
மாலை வேளையில்
மிதமாக மதுவருந்தினார்கள்
பெளர்ணமி நிலவில்
கடலாடித் திளைத்தார்கள்

விடாமல் ஒலித்தது சிரிப்பு
வெகுகாலத்துக்குப் பிறகு
நெஞ்சும் நினைவுகளும் வழியவழிய
சுழித்தோடியது ஆனந்த வெள்ளம்
இருட்டிய பிறகு
நகருக்குத் திரும்பியது பயணம்

தன் அமைதியில் மூழ்கிய
புறநகர் வீட்டுக்கு அருகில்
நண்பர்களுக்கு விடையளித்துவிட்டு
இறங்கிக்கொண்டான் அவன்

இனிமையான ஒரு புன்னகையுடன்
இப்போது மகிழ்ச்சிதானே உனக்கு
என
ஒரு குழந்தையிடம் கேட்பதைப்போல
மனத்திடம் கேட்டான்

குளித்து உடைமாற்றி
சமைத்து உணவுண்டபிறகு
களைப்புடன் படுக்கையில் சாயும்போது
அந்த அறையின் மின்விசிறியில்
தூக்கிட்டுத் தொங்கும்
மனைவியின் சித்திரம்
பளிச்சிடக் கண்டான்

நிதானமாக
ஒரு புத்தகத்தைத் தேடியெடுப்பதைப்போல
மனைவியின் புடவையொன்றை எடுத்துவந்து
அதே மின்விசிறியில்
தூக்கிட்டுக்கொண்டு தொங்கினான்

***

4. முடித்தல்

தொலைபேசிப் பேச்சை முடிக்கும்போதெல்லாம்
என் குரலில் வருத்தம் படிந்துவிடுகிறது

மெதுமெதுவாக இறகையசைத்து
வானைநோக்கி எழுகிற ஆனந்தம்
ஏன் பறந்தபடியே இருப்பதில்லை?

இன்னும் நீட்டிக்கும் வாய்ப்புக்காக
உன்னுடன் சொல்லிப் பகிர்ந்துகொள்ள
நினைவுகளைச் சீய்க்கிறது மனக்காகம்

இந்த முறையாவது
சிரித்தபடியே விடைதரவேண்டும் என
எடுத்த முடிவு
பனித்துளியாக விழுந்து கரைந்துபோகிறது

சரி, வைக்கட்டுமா என்று
கேட்டே தீரவேண்டியிருக்கிறது
திசையெங்கும் திரும்பித் துள்ளிப் பறக்கும்
பட்டத்தின் கயிற்றை அறுப்பதைப்போல

வைத்தபிறகுதான்
சொல்லமறந்த கதையொன்று உதிக்கிறது

அடுத்தமுறையாவது
வருத்தம் படியாமல் முடிக்கவேண்டுமென
மனசுக்கு
மீண்டும்மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்

***
5. நினைவுச் சாரல்

இன்றைய அதிகாலை நடையுடன்
ஒட்டிக்கொண்டது உன் நினைவு

வழக்கமான பறவைகளின் குரல்களுடன்
பாதையோரத்தில் நிற்கின்றன மரங்கள்
இன்னும் பிரியாத இருள்நடுவே

ஏதேனும் மாயத்தால் உன்குரலாய் மாறியது
அவற்றின் குரல்கள்

நீ இசைக்கும் ஒவ்வொரு வரியையும்
என் நெஞ்சு திருப்பிப் பாடுகிறது

அந்த ராகத்தின் துல்லியம் பிசகாமலிருக்க
ஒவ்வொரு நரம்பும் ஒத்துழைக்கிறது

என் கண்களிலிருந்து கசியும் நீரை
தொட்டுத் துடைப்பது உன்விரலா?

உச்சத்துக்கு மேலும் உச்சத்துக்கு என
எழுச்சியுறுகிறது இசையின் வெள்ளம்

என் மீதான உன் ஈடுபாடுபற்றி
எந்தக் கேள்விக்கும் இனிஇடமில்லை

நான் வீடு திரும்பத்தான் வேண்டுமா
இந்த இனிய சாரலிலிருந்து

***

6. மறைந்த ரோஜா

ஆசையுடன்
முகம்பார்த்துச் சிரிப்பதைப்போல
ஒரு வேலிக்கு வெளியே
தலைநீட்டிச் சிரிக்கிறது ரோஜாப்பூ

அடுத்தடுத்த நாட்களில்
அதன் சிரிப்பில்
மினுமினுப்பு கூடிக்கொண்டே போனது
சுண்டி இழுப்பதாய் மாறியது அதன் நிறம்
முத்தமிடத் துடித்தன அந்த இதழ்கள்

அத்துமீறிக் கைவைப்பது
அநாகரிகம் என்கிற எண்ணத்தால்
வசீகரத்தின் அழைப்பில்
தத்தளிக்கும் மனத்தைத் தடுத்துவிட்டேன்

இன்று
ரோஜா இல்லாத
வேலியின் வெறுமையில் தடுமாறுகின்றன கண்கள்

துயரத்தின்கண்ணீர் ததும்ப
எங்கே போனதோ என் ரோஜா?

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்