என் வீடு

This entry is part of 44 in the series 20080403_Issue

புதிய மாதவி


அப்படித்தான்
அரசு முத்திரைத்தாள்களில்
எழுதப்பட்டிருக்கிறது.

இடப்பக்கமும்
வலப்பக்கமும்
பின்பக்கமும்
இருக்கும் வீடுகளின்
சுவர்களால்
கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது
என் அறைகளின் வடிவம்.
மாடி வீட்டுக்காரனின்
ஒவ்வொரு அறைகளையும்
தாங்கி நிற்கும்
என் வீட்டுக்குள்
கிராமத்து வீட்டை
விற்ற ஏக்கத்தில்
செத்துப்போன
அம்மாவின் நிழற்படம்.
நுழைவாசலில்
தொங்கிக்கொண்டிருக்கிறது
அந்நியன் மொழியில்
என் பெயரின் எழுத்துகள்.
இவைதவிர
இது என் வீடு
என்பதற்கான
எந்த அடையாளமும்
என் வீட்டில் இல்லை.


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation