தீக்குளித்தல் பற்றிய குறிப்பு!

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

மப்றூக், இலங்கை


நேற்றும் நீ நினைக்கப்பட்டாய்.
பாற்கடலாகினாய், பொங்கினாய்,
பூனையாகி நான் தவிக்க!

பாடல்களில் நீ உயிர்தாய்.
மொழியிலும், இசையிலும்,
இரண்டும் புணரும்
கேள்தகவற்ற மீடிறன்களின்
மர்மப் புள்ளிகளிலும்
தோன்றா எழுவாய் போல
நீ இருந்தாய்,
இல்லாமலுமானாய்!

என் கனவுகளெல்லாம் நீ தீப்பிடித்தாய்!
உனக்குப் பிறகான
இரவுகளில் எரிவதைப்போல்
நேற்றும் எரிந்தேன்.
அன்பே
நினைவுகளின் வெம்மை
எத்தனை விசித்திரமானது!

காதல் கடிதங்களில் விடப்பட்ட
உன் எழுத்துப் பிழைகள்
நட்சத்திரங்களுக்கப்பால் நின்று
நடனம் புரிந்தன!
உனது தவறுகள்
ஈரம் துவட்டாக் கூந்தலுடன்
குளித்துவரும் உன்போல்
எத்தனை அழகானவை!

நினைவுகள் இருளில்
உன்னைப் பூசின!
உயிரின் அந்தப்புரக்கரைகளிலே
பெயர் தெரியாப் ப+வாகி
நீ மணத்தாய்!

காதல் – நாம் செய்த பாவம்!
பாவம்,
நாம் செய்த காதல்!!


ulmabrook@gmail.com

Series Navigation

மப்றூக், இலங்கை

மப்றூக், இலங்கை