புது வழித்தோன்றல்!

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

சி. ஜெயபாரதன், கனடா


மேருமலை சரிந்தது,
பூகம்ப மின்றி!
தேரோட்ட ஒரு கண்ணன்,
தேவைப் பட்டான்,
பாரதத்தில்!
யாரு மில்லை அப்பா!
தேரிழுக்கக் குதிரைக ளில்லை!
நேருவின் சாம்பலை எடுத்து,
ஊர்தியில்
பாரத மெங்கும் தூவினர்!
விஷக் காளான்கள்
தோன்றின!
மண்ணில் போட்ட விதைகள்
எண்ணியபடி முளைக்க வில்லை!
நீரில்லை நிலமிருந்தால்!
உரமில்லை நீரிருந்தால்!
எல்லாம் உள்ள போது,
ஆளில்லை!
ஊர்கள் தேய்ந்த போது,
வேர்வை சிந்தி,
ஏறு பூட்டி
உழைப்பா ரில்லை!
ஓங்கி வளர்ந்தன மூங்கில் மரங்கள்!
ஓவியர், உன்னத தேச பக்தர்,
காவிய ஞானிகள்,
நோபெல் பரிசு பெற்றோர்
உதித்தனர்,
அன்னியன் வேலி போட்ட
அடிமை நாட்டில்!
ஆனால்
காந்தி எங்கே? நேரு எங்கே?
தாகூர் எங்கே?
விவேகா நந்தர் எங்கே?
கவிக்குயில் சரோஜினி எங்கே?
ரவி வர்மா எங்கே?
சிவி ராமன் எங்கே?
குடிமக்கள் தோணி ஓட்டும்
விடுதலை நாட்டில்!

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan August 1, 2006]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா