நெருப்பு நெருப்பு

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

டீன்கபூர்


இன்னும் சாம்பலாகவில்லை.
என் குழந்தைகள் அப்பம் சுட்டு விளையாட.
ஆயிரம் வீடுகள் எரிந்தபோதும்
சூரியன் அழுதான் மிஞ்சியதாக.
என் தலையில் உமிழ்ந்த நெருப்புத் தணல்.
என் கிராமத்தின் மூலையில்
பழுத்த ஒரு ஓலையையும்
அது முகர்ந்த கதை பேசும்.
இனியும்
ஹெலி இந்தப்பக்கம் வரக்கூடாது.
யுத்தம் மாவரைக்கத் தொடங்கினாலும்.

என்னை ஆறுதல் படுத்த எதுவும்
முன்வந்த செய்தியும் இல்லை.
இதுவரை அதை அணைத்து.
இந்த மனிதன்
யாருக்கும் புதிராக,
யாருக்கும் சுடராக இருந்தானா?
இல்லை.
கீச்சிடும் அணிலாக
சீறிடும் பூனையாகவே
எல்லாம் மாறிக்கிடக்க.
கவுண்ட உலக வடிவம்
துப்பாக்கியாலும்
குண்டுகளாலும் செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நெருப்பினால் மெழுகப்பட்ட பூச்சுக்கள.;
அது முட்டையையோ,
உமிழ் நீரையோ,
நெருப்புத் தணலையோ,
என்னில் வீசிச் செல்லவேண்டாம்.
நெருப்பு.
நெருப்பு.
இதயத்தில் அடுப்பு மூட்டி எரிக்கும் சூரியன்.
இவனுக்கு ஆறுதல் எல்லாம்
பூக்களும்
முகில்களும்
தென்றலும் தான்.

எந்த வடிவத்திலும் ஹெலி இந்தப்பக்கம்
வரவே கூடாது.
கண்டிப்பான உத்தரவு.
நெருப்புக்கும்
காற்றுக்கும்
கடலுக்கும்
அடையாளமிடப்பட்ட என் கிராமம்
ஹெலி என்றாலே துனுக்கிடுகிறது.
நரிவிரட்டிச் சிரிக்கிறது.

டீன்கபூர் – இலங்கை
deengaffoor7@yahoo.com

Series Navigation

டீன்கபூர் - இலங்கை

டீன்கபூர் - இலங்கை