புத்தாண்டில் நான் வேண்டுகிறேன்

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

கவிஞர் புகாரி


எல்லைக் கோடுகள் அழிந்திடணும் – அதையென்
எழுத்துக் சிறகால் அழித்திடணும் – உலகை
ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும்

காற்றில் அலையும் பறவைகளாய் – மனிதன்
காலடி உலவும் நிலைவேண்டும் – சிறுமை
கட்டுகள் அறுந்து விழவேண்டும்

தலைவன் ஒருவன் வரவேண்டும் – வெற்றித்
தகுதி கருணை எனவேண்டும் – நின்று
தங்கும் நேர்மை பெறவேண்டும்

அழியும் அகிலம் தொடவேண்டும் – எங்கும்
அன்புப் பயிர்கள் நடவேண்டும் – வஞ்சம்
அற்றுத் தழைக்கும் நிலம்வேண்டும்

காலை எழுந்து பறந்திடணும் – பத்துக்
கோள்கள் கண்டு திரும்பிடணும் – அந்தி
கவிதை ஒன்று எழுதிடணும்

காணும் உயிரைத் தழுவிடணும் – அன்புக்
கவியால் கைகள் குலுக்கிடணும் – உள்ளக்
கனவைக் கேட்டு களித்திடணும்

மதங்கள் யாவும் இணைந்திடணும் – செல்லும்
மார்க்கம் ஒன்றாய் மலர்ந்திடணும் – தெய்வம்
மனிதம் கண்டு தொழுதிடணும்

உதவும் உள்ளம் எழவேண்டும் – இந்த
வரங்கள் அருளும் வலுவேண்டும் – என்றன்
வார்த்தை விண்ணை உழவேண்டும்

*
buhari@gmail.com

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி