நீள்கவிதை – மொழிப் பயன்பாட்டின் கொள்கலங்களும், கொள்ளளவுகளும்

This entry is part of 26 in the series 20050722_Issue

ரிக்ஷி


அ/ குடுகுடுப்பைகள்

‘கெட்ட காலம் பொறக்குது, கெட்ட காலம் பொறக்குது,
கவிதையில் பாலுறுப்புப் பெயரெல்லாம் வருகுது..
புணர்ச்சி வர்ணணைகளும் இடம்பெறுகிறது.
சினிமா, ‘சன் ‘ சானல்களிலெல்லாம் அவை
கட்டாயம் அத்தியாவசியம்.
அம்மாக்களும் பேச மாட்டாங்க, அய்யாக்களும்
கேட்க மாட்டாங்க.
கவிதையில் மட்டும் கண்டாலோ, போச்சு-
குய்யோ முறையோ கூப்பாடாச்சு.
‘நானூறு கவிதைகளில் நாலே நாலை மட்டும்
நல்லா கீற்ல் விழுந்த ‘ரிக்கார்டா ‘ ஏன்
கூவிக் காட்ட்றீங்க ‘ன்னு
யாராச்சும் கேட்டாங்க-
‘அய்யோ ‘ன்னு போயிடுவாங்க.

ஆ/அரைகுறைப் புறா

அரைகுறைப் புறா என்று தான் அதைச்
சொல்ல வேண்டும்.
இறக்கைகளுக்கு பதில் வெறும் இரண்டு
சிறகுப் பிரிகள் மட்டுமே முளைத்திருந்தன.
ஆனாலும், தலையை சிலுப்பிக் கொண்டு
அரையடி பறந்ததில்
பெருமை தாங்க முடியவில்லை அதற்கு.
தன்னை வளர்த்து வருபவர் தோளில் அமர்ந்து கொண்டு
முன்னிலும் உயரமாய் பறக்க முடிவதாய்
நம்ப ஆரம்பித்தது.
கூடவே, நாமாடம் தாண்டி உயரப்
பறந்து கொண்டிருந்த
சிட்டுக்குருவிகளையும், குயில்களையும்
‘வேடதாரிகள் ‘ என்று இகழத் தொடங்கியது.

இ/சமூகப்பிணி

‘செல்,வா,நில்.உட்கார், நீர், மண் ‘…
சொல்லித் தரப்படும் சில வார்தைகள்.
சுலபமாய் கற்றுக் கொண்டு விடலாம்
சால மொழிகளையும்.
சுலபமாய் தயாரித்து விடலாம்
உப்புமா, ‘நூடுல்ஸ் ‘, இத்தியாதி…
சுலபமாய் சமூகப்பணி யாற்றி விடலாம்_
சில கவிதைகளை எழுதியும்,
சில கவிதைகளை பழித்தும்.

ஈ/விளக்கக் குறிப்பேடும், வெங்காயமும்

ஆளுக்கொரு அரிவாள்மணை அல்லது கத்தி
அரங்கின் நுழைவாயிலிலேயே தரப்பட்டிருந்தது.
அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற
விளக்கக் குறிப்பேடும்,
ஒரு பை நிறைய வெங்காயங்களும்.
இருக்கைகளில் அமர்ந்து கொண்டவர்கள்
பரபரவென்று அவற்றை எழுதுமேசையில் பரப்பி
உரித்து நறுக்கிக் காட்டி
வெறுமையே எல்லாம் என்று
வித்தாம் பேசி முடித்தனர்.
சத்தம் அதிகமாய் ஒலித்த குரலுக்கு
சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது.
பிரிவுபச்சாரமெல்லாம் முடிந்து வீடு
திரும்பும்போது
வெட்டிக் கொட்டிய வெங்காயங்களை
மறவாமல்
திரட்டியெடுத்துச் சென்றனர்
இரவு உணவுக்கு.

உ/மொழிப் ப்ரக்ஞை

அகற்றியாக வேண்டும்-
மூளையின் அடுக்குகளிலிருந்தும், நுகர்வுச்
சுரப்பிகளிலிருந்தும், மற்ற
புலனுணர்வுகளிலிருந்தும் சில
விளிச் சொற்களை,
உரிச் சொற்களை,
பெயரின் வினைகளை,
வினையின் பெயர்களை…
இன்னும் நிறுத்தற்புள்ளிகள், தொனி,
‘பாவம் ‘….
நனவோடை நீரின் கலங்கலில்
நலுங்கி நிலைமாறும் சில காட்சிகளையும்.

_புதிதா யொரு ‘சொற்களஞ்சியம் ‘ தயாரித்துக்
கொள்ள வேண்டும்,
பழகிய மொழி மறந்து போக.

****

‘ரிக்ஷி ‘

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation