புத்தர் இயல்பு (மூலம் ZEN)

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

தமிழாக்கம் : புதுவை ஞானம்.


அனைத்து உயிரிகளும்
இயல்பில் புத்தர்தான்.
பனிக்கட்டியானது
இயல்பில் தண்ணீர்
என்பதைப் போல.
தண்ணீருக்கு அப்பால்
பனிக்கட்டி இல்லை.
உயிரிகளுக்கு அப்பால்
புத்தர் எனத் தனியாக
ஏதொன்றும் இல்லை.

அருகில் இருப்பதை
அலட்சியப்படுத்தி
தொலைவில் உள்ளதை
உண்மையெனத் தேடும்
உன்மந்த மக்களின்
சோகத்தை
என்னென உரைப்பது ?

தண்ணீருக்குள்ளிருந்து
தாகத்தால் தவிப்பதா ?
சீமான் வீட்டு
செல்லக் குழந்தை

ஏதுமற்ற ஏழைச்சிறாறுடன்
எங்கெங்கோ சுற்றியலைவதா ?

அறியாமையின் பாதையில்
அலமந்து வழிதவறி
ஆறுலகமும்
அலைந்து திரிகிறோம்….

அறியாமையிலிருந்து மேலும்
கரிய அறியாமைக்கு.
சாவு வாழ்வென்ற
சக்கரச் சுழற்சியினின்று
எப்போது விடுபடுவோம் ?

ஓ….மகாயான தியானமே
எல்லாப்புகழும் உந்தனுக்கே ‘
இறையுணர்வும்
தீவினைக்கு வருந்துவதும்
தீவிரப் பயிற்சியும்
அகண்ட பரமிதங்கள்
அத்தனைக்கும்
ஆணி வேர்
தியானம்.

ஒரு முறையேனும்
தியானிக்க முயல்பவர்கள்
ஆதியற்ற பாவங்கள்
அனைத்தையும்
கழுவுவார்கள்/தொலைப்பர்.

இருண்ட பாதைகள்
இட்டுச் செல்வதெங்கே ?
புனித பூமியே
அருகில் இருக்கையிலே.
இதய சுத்தியுடன் ஒரு முறையேனும்
இவ்வுண்மையைச்
செவிமடுப்போர்
பொதிந்து போற்றுபவர்
பேறாகப் பெறுவார்கள்
அநாதி ஆசிகளை.

மேலதிகமாக…
மனந்திருந்தி
சுய இயல்புக்கு
சாட்சியமாய் நிற்பவர்கள்…

சுய இயல்பென்பது
இயற்கை அல்ல எனும்
வெற்றுத் தத்துவத்துக்கு
அப்பாலும் செல்வார்கள்.
இங்கே…
காரணமும் காரியமும் ஒன்று
பாதை என்பதோ
இரண்டும் மூன்றுமல்ல.
வடிவற்ற வடிவத்தில்
சென்றும் திரும்பியும்
செத்தலைவதில்லை அவர்கள்.
சிந்தனையற்ற சிந்தனையில்
ஆடுவதும் பாடுவதும் கூட
தெய்வத்தின் குரலே.

விளிம்பற்று விரிந்திருக்கிறது
சமாதியின் ஆகாயம்.
எப்படிப் பொழிகிறது
ஞானமெனும் முழுநிலவு
இனியென்ன வேண்டும்
உண்மையில்
இதனைவிட.

நம் கண்ணெதிரே
நிலவுகிறது நிர்வாணம்
இந்த இடமன்றோ…
கமல மலர்த் தடாகம்
இந்த உடலன்றோ…
புத்தரின் வெளிப்பாடு.


****

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்