இவ்வாண்டு படைத்த கடற்பொங்கல்!

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

சி. ஜெயபாரதன்


மக்கள் மீது
அக்கறை மிக்க
முக்காலம் காக்கும் மூதாட்டி அன்னை
இவ்வாண்டு
சக்கரைப் பொங்கலை
ஏனிங்கு
சமைத்திட வில்லை ?
கொஞ்சு மொழி பேசி
இக்கரை வாழும்
பிஞ்சு
உடல்களை அள்ளி
கடல் அண்டாவில் கொட்டி,
துப்பிடும்
உப்புக் கரித்த பொங்கலை ஆக்கி
ஏனிங்கு தனது
தொப்பை வயிற்றை
நிரப்பினாள் ?
நெஞ்சங்கள்
துண்டாய் வெடித்தன ஐயா!

ஆயிரம் ஆயிரம் மாந்தரின்
ஆத்மாவை உறிஞ்சிப் பருகி
பிண்டச் சடலங்கள் ஆக்கி
குண்டாவின் குருதியில் புரட்டிச்
செந்நிறப் பொங்கலை
உண்டாள் எம் மூதாட்டி!
அருள்விழி அன்னை
எப்போது
மரக்கறி விட்டு
நரக்கறி சுட்டுத் தின்னும்
அரக்கர்
பரம்பரை சேர்ந்தாள் ?
நரபலி யிட்டது போதாமல் குடில்களை
தரைமட்ட மாக்கி,
ஏனிங்கு
நளினக் கடற்கரை எல்லாம்
அழித்துப்
போர்த்தள மாக்கினாள்
நர்த்தகி ?
பூதளப் பிறப்பின்
அர்த்தங்கள் மாறின ஐயா!

ஆண்டு தோறும் கோலாகலமாய்
வெண்பொங்கல் சமைக்கும்
வீடுகள் எல்லாம்
கண்ணிமைப் பொழுதில்
கடற்படை உடைத்துத் தூளாக்கி
மண்பொங்கல் ஆயின!
கூரைக் கம்புகள் முறிந்து
கூளங்கள் ஆகி
சூறைப் பொங்கலுக்கு
சூட்டு விறகுகள் ஆயின!
மிடுக்குடன் கடல்புகும் மீனவர் கூட்டம்
கரைமீது
படுத்துறங்கிட வைத்து
நடுத்தெருக் கோபுரத் தீயாய்
ஏனிங்கு
நெருப்பு வாயிக்குள் போயின ?
நெஞ்சங்கள்
பற்றி எரிந்திடும் ஐயா!

ஒழுங்கு முறையில் சுழலும் அண்டம்
குடல் வெடித்து
நழுவிப் போனதுவோ ?
அன்றிக்
கனலில் வெந்து கருவில் முட்டை
காலம் சென்று
அழுகிப் போனதுவோ ?
விறைப்பு வில்லும்
முறுக்கிவிட்ட நாண் இழுத்து
கரும்பு போல
முறிந்து விட்டதுவோ ?
ஒலிக் கவட்டை அடித்த அதிர்வில்
வலி பொறாமல் கடற் குமிழி
உப்பி விட்டதுவோ ?
தப்புத் தாளங்களில்
சுதிமாறி
தவறிய பாதங்களில்
தடுமாறி
சிவபெருமான்
நெறிமாறி
பிரளயக் கூத்தினை
அரங்கேற்றி விட்டானோ ?

எமப் பாதை மீது
விதி அரக்கன் தொங்கவிடும்
தூண்டியில்
ஆண்டு தோறும் சிக்கி
ஆயிரம் பேர்
மாண்டாலும் தாங்கிவிடும் இதயம்!
ஆனால்
வேண்டாம் கடற்பொங்கல்!
வேண்டாம் உடற்பொங்கல்!
வேண்டாம் மணற்பொங்கல்!
பிறந்த மண்ணிலே
நிரந்தர
அனாதைகள் ஆக்கிடும்
சுனாமி மட்டும்
நிச்சயம்
இப்பிறப்பில் வேண்டாம்!
நேற்று, இன்று, நாளை என்னும்
முப்பிறப்பிலும் வேண்டாம்!
இனி உதிக்கும்
எப்பிறப்பிலும் வேண்டவே வேண்டாம்!
ஆனால்
அளித்திடு மனிதர்க்கு மட்டும்,
ஆண்டு தோறும்
புத்தரிசி
சக்கரைப் பொங்கல்!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (Revised January 18, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா