அலைகளை மன்னிக்கலாம்

This entry is part of 47 in the series 20050120_Issue

நாகூர் ரூமி


====
ஊருக்குள்ளே அவசரமாய்
வந்து கடல் போனபோது
நொந்து போயின உடல்கள்
வெந்து போயின உயிர்கள்.

அடையாளங்கள் அனைத்தும்
அழிந்து போனபின்
சேர்ந்து கொண்டன சடலங்கள்
ஒரே குழிக்குள்
சகோதரத்துவத்துடன்.

மரங்களும் மனங்களும்
வீடும் வாழ்வும்
கவலையும் கனவும்
மூழ்கிப் போயின ஒன்றாய்.

துடைக்கப்பட்ட பல லட்சம் சிலேட்டுகளில்
எஞ்சியிருப்பது
சமுத்திர எச்சில் மட்டுமே.

‘அ ‘ போட்டுத்தான் இனி
ஆரம்பிக்க வேண்டும்.

நெருப்பை மீறிவிட்டது நீர்
எனினும்
வெறுப்பை மீறுவது எப்போது ?

கண்ணெதிரே —
கண்ணியம் களையப்படும்போது
கணவன் கொல்லப்படும்போது
பிள்ளைகள் பறிக்கப்படும்போது
பெண்கள் எரிக்கப்படும்போது

கறுப்புத் தோல் கிழிக்கப்படும்போது
உறுப்புகள் அறுக்கப்படும்போது
பொறுப்புகள் மறுக்கப்படும்போது

அணுக்கள் தோறும் அவஸ்தைகளை
அனுபவிக்கும்போது

வார்த்தைகளால் விளக்க முடியுமா
வேதனைப் பாடத்தை ?

சிதைந்த முகங்களுடன்
சிரிக்கின்றன குழந்தைகள்
செத்துப்போனததன்
அம்மா என்று அறியாமல்.

காயங்களிலிருந்து
வடிந்துகொண்டே இருக்கின்றன
வல்லரசுகளின் வெறியும் வெறுப்பும்.

வானத்தை ரசிப்பதும்
கானத்தை ருசிப்பதும்
மானம் இருக்கும் வரைதான்.

அலைகள் எல்லை மீறுவது
வெறும் ஆசையினால் அல்ல
அதிகாரம் எல்லை மீறுவது
வெறும் ஓசையினால் அல்ல.

அலைகளை மன்னிக்கலாம்
ஆனால் கொலைகளை ?

10:34 AM 1/19/05

Series Navigation