கிராமத்து அதிகாலை

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

அபு மர்வான்


இரவினைப் பகல்
ஆட்கொள்ளும் நல்ல
அதிகாலை வேளை.

காக்கைகளின் குதூகலம்
வரவேற்புக் கூறுதலில்
எதையோ சாதிக்கக்
கதிரவன் வந்ததுவும்,

காளைகளைக் காயமாக்கும்
சாட்டைகளின் சப்தங்கள்
கண்விழித்த கணங்களிலே
நீர் சுரக்க வைத்ததுவும்,

சந்தை செல்லும் வண்டிகளின்
சக்கரப் பட்டைகள்
கற்களை நசுக்கிஅரைத்துப்
பற்கள் மிகக் கூசியதும்,

அசலூர்க் கல்யாணத்திற்காய்
முகூர்த்ததில் சேர்ந்திட
முதல் பஸ் பிடித்து
முண்டியடித்து ஏறியதும்,

இஞ்சர காளே என விளித்து
தோளில் ஏர் தூக்கி
உடல் மனசு அயராமல்
வயல் நோக்கி விரைந்ததுவும்,

என்று,
நான் சுகித்து மகிழ்ந்த
கிராமத்து அதிகாலைகள்.

அந்த
நனவுகளின் நினைவுகள்- இனி
கனவுகளில் மட்டுமே சாத்தியம்.

***
அபு மர்வான் nizams@hotmail.com

Series Navigation

அபு மர்வான்

அபு மர்வான்