காதல் நதியினிலே

This entry is part [part not set] of 16 in the series 20010602_Issue

கே ஆர் விஜய்


(எங்கோ இருந்து வந்து நம் ரயிலில் இடம் தேடி அலைந்து பின் இடமின்றி வெளியேறும் வண்ணத்துப்பூச்சி போலத் தான் என் காதலும்-ஒரு தலைக் காதல்.)

மாலையோர வேளையிலே

சாலையோரம் போகையிலே

ஒற்றைப் பார்வை ஒன்று

உலுக்கியது என்னை அன்று.

கண்களை நான் அலையவிட

உன் கண்களால்-என்

பார்வை தின்றாய்.

காதலெனும் பள்ளத்தில் மெல்ல

என்னை தள்ளிவிட்டாய்.

உன் நினைவு

என் சுவாசம்.

உன் பிம்பம்

என் பார்வை.

என் நாக்கு

உன் நாமம் தாங்கும் நாற்காலி.

நீ சிணுங்கும்

ஒற்றைச் சிணுங்களுக்காக

உன் உதட்டோரச் சிரிப்பிற்காக

ஒற்றைக் கால் தவமிருந்தேன்.

உன் வருகை தாமதித்தால்

விண்மீண்கள் எண்ணியதுண்டு.

அன்றெல்லாம்

இந்த பூகோளம்

எனக்கு பூக்கோளம்.

விண்மீண்கள் கதையைக் கேட்டு

வியந்து நானும் பார்த்ததுண்டு.

அசைந்தாடும் தென்றலின்

அழகினையும் ரசித்ததுண்டு.

முன்னூறு படிகள் ஏறி

முருகனிடம் சென்றதுண்டு.

எண்ணூறு வரங்கள் கேட்டு

என்னை நானும் மறந்ததுண்டு.

பூக்களை நான் காதலித்தேன்

வாடும் என்று தெரிந்தும் கூட.

நதியினை நான் காதலித்தேன்

வற்றும் என்று அறிந்தும் கூட.

அலையினை நான் காதலித்தேன்

ஓயும் என்று தெரிந்தும் கூட.

ஆனால் காதலே.

உன்னை நான் காதலித்தேன்.

வாடிவிடும் பூவாய் அல்ல-

வற்றிவிடும் நதியாய் அல்ல-

ஓய்ந்துவிடும் அலையாய் அல்ல

என் உடலின் உதிரமாய்.

Series Navigation

கே ஆர் விஜய்

கே ஆர் விஜய்