காதல் எனும் ஒரு தொல்காப்பியம்.

This entry is part [part not set] of 18 in the series 20010513_Issue

ருத்ரா.


அன்று
உன்னிடம் கேட்டேன்.
உன்
இதழ் அவிழ்ந்ததும்
கண்டேன்.
என்ன சொன்னாய் ?
மின்னலாய்
மறைந்து விட்டாய்.
உதிர்ந்து விழுந்த
அந்த சொல்லைத்தேடுகிறேன்.

சினிமாக்காரர்கள்
காமிரா சுழற்றுவது போல்
என் கழுத்தை
சுழற்றி சுழற்றித்
தேடுகிறேன்.
அந்த சொல்
அந்த சொல்லுக்குள் சொல்.
அதன் பொருள்
அதன் பொருளுக்குள் பொருள்.
என்ன அது என்று தேடுகிறேன்.

அந்த பூக்களின்
மகரந்தங்களுக்குள்
புகுந்து பார்க்கின்றேன்.
அருவியின்
துளிகளுக்குள்
சூாியனாய்
நுழைந்து பார்க்கின்றேன்.
பாறையில் காயம்பட்டு
ஏழுவர்ண ரத்தமாய்
அந்த வனம் முழுவதும்
விரவிக் கலந்து தேடுகின்றேன்.
அப்போதும்
உன் வார்த்தை புாியவில்லை.

உன் உதடு வழியே
அந்த வார்த்தையின்
அடி-நுனி தொியாமல்
ஏன் இந்த
குகை வழிப்பயணம். ?
உன் உள்ளம்
எனக்கு
திறந்து கொண்டதா ?
இல்லையா ?
காதல் எனும்
அந்த
மறு பக்கத்து வெளிச்சம்
எப்போது சுவடு காட்டும் ?

எழுத்தாணியையும்
ஓலைச்சுவடியையும்
தாண்டிய
சொல் இலக்கணம் இது.
சட்டை உாித்து
சட்டை உாித்து
நழுவிக் கொண்டு ஓடும்
புதுக்கவிதைப் பாம்பு இது.
‘மரபு ‘ முட்டைகளுக்குள்
குஞ்சு பொறிக்கும்
அற்புதப் பிரளயம் இது.
உடைப்பெடுத்து
பெருகியதில்
சொல்லாத
சொல்லுக்குள்
ஆயிரம் சமுத்திரங்களாய்
அலை யடிக்கும்
காதலின் முகம் இது.

அகத்துள்
அகழ்வாராய்ச்சி
செய்து பார்த்த
அகத்தியனுக்கும்
அகப்படாத இலக்கணம் இது.
அன்பே!
அன்றொரு நாள்..
கல்லூாிவகுப்பில்..உன்
தூரத்துப்பார்வையில்
என்மீது
தூண்டில் போட்டாய்.
மீன்களைக் கொண்டு
தூண்டில் போடும்
வித்தை எங்கு கற்றாய் ?

தொல்காப்பியன்
சொல்லைத்
தோலுாித்து
சுளையுாித்து
அதனுள்
சுவையுாித்துத்
தந்ததை
சூடேற்றித் தந்தார்
பேராசிாியர்.
உன் கண்கள் காட்டும்
கருப்பொருளும்
உாிப்பொருளும்
எனக்கு மட்டுமே தொிந்தது.

ஏதோ பேச வருகிறாய்.
நீ உதடு குவித்தபோது
புாிந்தது
அது ‘குற்றியிலுகரம் ‘ என்று.
காற்று வழியாய்
இனித்து வரும்
அதை ஏந்திக்கொள்ள
முகம் துடைத்துக்
காத்திருந்தபோது
இல்லை..இல்லை என்று
இதழ் விாித்து
குற்றியலிகரம் ஆக்கிவிட்டாய்.
என்னை
குற்றுயிராக்கி
குலை துடிக்க வைக்கும்
காதல் இலக்கணம்
எங்கு கற்றாய் ?
மனம் புண்ணாக்கி விட்டு
மயிலிறகு கொண்டு வந்து
வருடுவதற்கும்
வலம் வருவாய்.
ஐந்திணைக்கும்
அப்பால் இனிக்கும்
ஆறாத திணை இது.

நிலம் நோக்கி
உன் முகம்
கவிழ்ந்தபோது
தலைகுப்புற வீழ்ந்தது
நான் அல்லவா ?
சட்டையே செய்யாமல்
நீ எங்கோ திரும்பியபோது
நிகழ்ந்த அந்த பூகம்பத்தில்
பிக்காசோ ஒவியமாய்
கைவேறு கால்வேறாய்
நசுங்கிக் கிடந்தபோதும்
என் இதயம் மட்டும்
பத்திரம்
உன்புத்தக மடிப்புக்குள்.
நீ வாசித்துக்கொண்டிருந்தது
அந்த எழுத்துக்களை அல்ல.
என்னைத்தானே!
நீ வாசித்துக்கொண்டிருந்தாய்.

Series Navigation

ருத்ரா

ருத்ரா