சாித்திரம்

This entry is part [part not set] of 17 in the series 20010401_Issue

கல்யாணராமன்


இங்கிருந்த பூங்காவை நான் பார்த்திருக்கிறேன் பலமுறை.
மாதக் கடைசிகளில் எங்களை இங்கேதான் அழைத்து வருவார் அப்பா.

மாலை வேளைகளில் ரேடியோவில் கிராமநிகழ்ச்சி நாடகங்களைக்

கேட்டிருக்கிறோம்.

தொலைக்காட்சி அப்போது தோன்றியிருக்கவில்லை

பூக்களைக் கொய்யாதீர்கள் என்று பலகை எச்சாிக்கும்.
திருட்டுத்தனமாகப் பறித்திருக்கிறேன்.
காவல்காரர் குரல் உயர்த்தி துரத்தியிருக்கிறார்
அத்தனை பொிய பூங்காவுக்கு ஒரேயொரு காவலர்.

செடிகளின் மறைப்பில் கிசுகிசுப்புகள் கேட்கும்.
‘அங்கே போகாதே ‘என்று அப்பா அதட்டுவார்.
சறுக்கு மரமேறி சறுக்கியதில் முட்டி உடைந்ததும் உண்டு.
அப்பா பட்டாணி கொறித்துக்கொண்டு பார்த்திருப்பார்.
பட்டாணி பூங்கா வாசலில் கூடைக்காராிடம் வாங்கியது.
மண்ணில் விழுந்த பட்டாணியை எடுத்து ஊதித் தின்பார் அப்பா.
வீட்டுக்குப் போனபின்தான் முட்டிக்கு மஞ்சள்.

தூங்குமூஞ்சி மரங்களின்கீழ் பெஞ்சுகளில் துணி விாித்துத்
தூங்கிக்கிடப்பார் சிலர்;
நாளெல்லாம் உழைத்துக் களைத்தவர் என்று நான் நினைப்பேன்,
பக்கா சோம்பேறிகள் என்பார் அப்பா.

விளக்குக் கம்பத்தினடியில் சீட்டாடுவர் சிலர்
முகங்களில் கலவரத்தோடும் தரை விாிப்பினடியில் சில்லறைகளோடும்.
சுற்றுப் பாதைகளில் ஓட்டம் பயில்வார்கள் பலர்.
பூங்கா பூட்டப்படும் வரை தொடரும் ஓட்டங்கள்.
இரவு பத்தடிக்க தூங்கிப் போகும் பூங்கா.

பற்றாக்குறை மாநகராட்சியை வருத்த
பூங்கா இருந்த இடம் வணிக வளாகமாகிப் போனது.

வணிக வளாகத்துள் மாத முதலிலேயே போனாலும்
திரும்பி வரும்போது மாதக் கடைசி முகங்கள்தான்
பகல் இரவு என்றில்லாமல்
மாடிகள்தோறும் ஏறிப்பாயும் ‘சர்ரவுண்டு ‘ சங்கீதம்

மூலைமுடுக்கெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகள்
பிளாஸ்டிக் பூக்கள் முதல் பிளேடு பாக்கட்வரை
எதில் கை வைத்தாலும் காட்டிக்கொடுத்துவிடும்
அண்மைச் சுற்றுக்காவலராய்.

பேக்காி,ஐஸ்கிாீம் கடைகளில் நிறைய கிசுகிசுக்கள்
யார் பார்த்துவிட்டாலும் யாரும் கவலைப் படுவதில்லை,
பார்த்தவர் பெற்றோராக இல்லாதவரை.

சறுக்க மரங்கள் இல்லையென்றாலும்
சலவைக்கல் தளங்கள் உண்டு

முட்டிகளை உடைத்துக்கொள்ள.
கூடவே மருத்துவ மனையும் உள்ளே உண்டு.

சோளப்பொாி, குளிர்பானம், காப்பி இயந்திரங்கள்
தானியங்கிகளாக அங்கங்கே.
கீழே சிந்தியவைகளைப் பொறுக்கவும்
தானியங்கித் துடைப்பான்கள்.
அப்பா இப்போது இல்லை.

வளாகமெங்கும் பிளாஸ்டிக் செடி கொடிகள், பல வண்ணங்களில்,
பல உயர அகலங்களில், சிறிய பொிய பூக்களுடன் –
ஆனால் கீழே பென்ச்சுகளின்றி, படுப்பாாின்றி..
கூசும் வெளிச்சத்தில் வீடியோ விளையாட்டுகள்,
அரசு அனுமதியுடன்,காசை வீசி இழக்க,கைகால் கடுக்க,
மண்டை வலிக்க.

வளாகம் தூங்குவதேயில்லை எப்போதும்.

* * * * * *

அப்பாவோடு நான் போய்ப் பார்த்த பூங்காவைப் பற்றிச்
சொல்வதுண்டு என் பிள்ளையிடம், முன்னாட்களில்.
என்னோடு வந்து பார்த்த வணிக வளாகத்தைப் பற்றிச்
சொல்வான் என் பிள்ளை தன் பிள்ளையிடம்
பின்னாட்களில்.

அன்றைக்கும் பற்றாக்குறை வருத்தும் மாநகராட்சியை.

Series Navigation

கல்யாணராமன்

கல்யாணராமன்