விடிவெள்ளியோடு ஓர் விடியல்

This entry is part [part not set] of 18 in the series 20010211_Issue

திலகபாமா


வாசலிலே வாழைத்தோரணம் கட்டி

மாரியாத்தா கோவிலிலே

மங்களத் தாலி முடிஞ்சு

சீர் செனத்தி நகை செஞ்சு

ஊர் உறவு வாழ்த்து சொல்லி

பிணக்கும் மணக்கும்

போலிச் சண்டைகளூடே

எங்களது திருமணமும்

மூவேழு வருடமாயென்னிலிருந்த

நெற்றிவான் திலகம்

ஒரேழு திங்களாய்

ஓருடலாகி கலந்தவன்

நெருப்பில் வெந்து புகையாக

என் வானம் அமாவாசையானது

வீழ்ந்த கொழுகொம்பு என்னுள்

விரிந்த மலரையுமா

உதிர்க்கச் சொன்னது

மின்னும் விடி வெள்ளி யென்

மேனிக்குள்

உடலில் கலந்தவனால்

உயிர் பெற்ற உதிரம்

விடியலுக்காசைப்பட்டு

விடிவெள்ளி அழிக்க போதனை

புது

உறவுக்கசைப்பட்டு என்

உதிரம் கலந்த உயிர்

உருக்குலைக்க யோசனை

புதுப்பூசாரிக்காய் என்

கர்ப்பகிரகத்துளவதரித்த

குலதெய்வத்தை விரட்டவா ?

தொலைந்த விக்கிரகங்களுக்காக

என்னுள் ஒளிவீசும் ஜோதியை

ஊதி அணைத்திடவா ?

தொப்பூழ் கொடி உயிரழித்து

நான் படர கொடி தேடவா ?

நிலம் கை மாற்றும் கதையாய்

கழுத்தின் உரிமை

தந்தையால் தரப்பெற்று

தாலி கட்டியவனால் பெறப்பட்டது

கர்ப்பப்பையின் உரிமையை

குந்தியைப்பொல்

அடுத்தவர் தீர்மானிக்கவும்

ஆற்றில் விடவும்

அநுமதிக்கப்போவதில்லை

விடிவெள்ளியோடுஎன் வானம்

விடியச் செய்யும் கதிரவனுக்கென

காத்திருப்பு……..

Series Navigation

திலகபாமா

திலகபாமா