ஜனவரி 22ல் ஒரிசா வில் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட அவுஸ்திரேலியர்களின் நினைவாக அஞ்சலி

This entry is part [part not set] of 14 in the series 20010115_Issue

வ.ஐ.ச. ஜெயபாலன்


கூதிர்.
நாடெரித்து
முகமெரித்து
குளிர்காய்ந்தார் ஒரிசாவில்.

தர்மம் சரணமென
மன்னன் அசோகனையே
மதம் மாறச் செய்தவளே.
அந்தப் பெளத்தன் தன்
சக்கரம் உருண்ட மண்ணிலெல்லாம்
இந்தியாவைப் பயிர்செய்ய
காவியமாய் வாழும் கலிங்கமே.
உனது மண்ணின் லிங்கம்கூட
கரி கரஎன்று

இருசமய பாவத்தில் அல்லவா தாயே.

உலக மதங்களின் ஓடக்கரையான
மகாநதியின் தீரம்
காடான மூங்கில்களில்
யுகம் யுகமாய்
பாடுகிற காற்றிலும் பல மதத்து தோத்திரங்கள்.

நெஞ்சுருகிப் பாடி
நினைவுருகி அபிநயித்து
பெண்ணுருகி அலைபாயும்
ஒடிசி நடனமகள்
தானுருகிப் பெற்றவனா
இமயம் தலைகுனிய
இந்துக் கடல் வாயடைக்க
மறு சமயம் என்பதற்காய்
பிள்ளைகளோடு ஒரு
பெருமகனைத் தீயிட்டான்.

இன்றுக்காய்
மாட்டோடு மாடாய் வயல் உழுது
மண்திருத்திப் பயிர்நட்டு
நாளைக்காய்
காய்ந்த கூழ் பசியாறிக் கட்டாந்தரை புணர்ந்து
கந்தலிலே தங்கள் செல்வங்களை ஈன்று
ஓட்டைக் குடிலில் ஒடுங்கி உயிர் காக்கும்
ஏழைத் தலித்தர் மலையரை இழிசனராய்
செப்புகிற சாத்திரங்கள் இன்னும் எரிக்கவில்லை.
செய்கின்ற பாதகரை யாரும் கொளுத்தவில்லை

பிறப்பொக்கும் என்னும் நெறி தேடல்
உழைக்கின்ற பாரதத்தின்
ஆயிரம் கால வாழ்வின் மறுபக்கம்.

**

Series Navigation