நீ யார் ?

This entry is part [part not set] of 13 in the series 20010101_Issue


பசுவய்யா


நீ யார் ?
மனிதன் தானா ?
அப்படியென்றால் எந்த ஊர் ?
என்ன மொழி ?
என்ன ஜாதி ?
ஜாதியின் உட்பிரிவென்ன ?
மதத்தின் உட்பிரிவென்ன ?
உட்பிரிவின் உட்பிரிவுகள் என்னென்ன ?
சரி உயரம் எத்தனை செ.மீ ?
நிறம் என்ன ?
கண்மணிகளின் நிறம் ?
சிவப்பா மஞ்சளா கறுப்பா
வறுத்த காப்பிக்கொட்டையா ?
சொல்லு ஒவ்வொன்றையும்
துல்லியமாய்ச் சொல்லு.
உன் ஆசாரங்கள் என்ன ?
அனுஷ்டானங்கள் என்ன ?
மரக்கறியா ? மிலிட்டெரியா ?
உன் கடவுள் யார் ?
உன் கடவுளுக்கும் என் கடவுளுக்குமுள்ள
வேற்றுமைகள் என்ன ?
சொல்லு ஒவ்வொன்றையும்
துல்லியமாய்ச் சொல்லு
இறந்தால் புதைப்பீர்களா ?
அல்லது எரிப்பீர்களா ?
சரி குற்றவுணர்ச்சி உண்டா ?
ஆற்றும் பணிகளில்
உயர்வு தாழ்வுண்டா ?
பாவவுணர்ச்சி உண்டா ?
தாழ்வு மனப்பான்மை எத்தனை வண்டி ?
உன் கைவிலங்குகளை நான் பார்க்கலாமா ?
உன் கால் விலங்குகளைக் காட்டுவாயா ?
உன் கண்பட்டைகளை
உன் வாய்க்கூடைகளை
நான் பார்க்கலாமா ?
உன்னை நட்டுவைத்திருக்கும் இந்தக் குழியின்
ஆழத்தை நான் பார்க்கலாமா ?
நீ யார்
மனிதன் தானே ?
அல்லது மனிதன் மாதிரித்தானே ?
அப்படியென்றால் எந்த ஊர் ?
என்ன ஜாதி ?
சொல்லு ஓவ்வொன்றையும்
துல்லியமாய்ச் சொல்லு.

**
சிலேட், பிப்ரவரி,1994

Series Navigation