கூத்தாடி அப்பா

This entry is part [part not set] of 6 in the series 20001015_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


தபதப வென மத்தளத்துடன்
தாளமும் சுருதியும் சேர்ந்து கொள்ள
திரையின் கதவுகள் திறக்கப் படுகின்றன
பட்டுக்கோட்டைச் சந்தையிலே
பாட்டுடன் அப்பா பவனி வருகிறார்

கன்னக் கதுப்பில் வண்ணப் பூச்சு
கண்களைச் சுற்றி கருவளையங்கள்
அாிதாரத்தின் அவதாரமாய்
காலின் சலங்கை கலீரென்றிட
அப்பா அங்கே ‘அடவு ‘ பிடித்திட
தப்பாதங்கே தாள வாத்தியம்

வெற்றிலைச் சீவல் மெல்லும் கூட்டமும்
‘கள்ளு ‘ தண்ணியில் கலந்த கூட்டமும்
இருட்டுக் கும்பலில் திருட்டுக் காதலியை
இனம் கண்டிட இயலாமல் போக
கண்ணில் காமமும் கையில் பீடியும்
நினைவைச் சுட்டிட நிமிரும் கூட்டமும்

கடைவாய் கரையில் எச்சிலொழுக
கண்களில் உறக்கம் உச்சிமோர்ந்திட
கோரைப்பாயில் தாரைவார்த்த
கோவணம், சராயில்
குவியல் குவியலாய் பையன்கள் கூட்டமும்

அப்பா வருகையால்
ஆனத்தப்பட்டிடும்

அர்ச்சுனன் முதல் துாியோதனன் வரை
அத்துணைபேருக்கும் தோழன்
சுபத்திரைமுதல் இந்திராணிவரை
அத்துணைபேருக்கும் தோழி
மாதம் மும்மாாி மழை பெய்வதாய்
சாதித்திடும் மந்திாி… என
அப்பா ஒரு அவதாரப் புருஷன்

ஆயகலைகள் அறுபத்து நான்கும்
அப்பாவிற்கு அத்துப்படியாம்..

முடமாய், ஊமையாய்,
மடையனாய், பேடியாய்
அப்பா செய்யும் சேட்டைகண்டு
கூட்டத்திருக்குக் கொண்டாட்டம்
ஆனால்

எனக்குள் மட்டும் இதயம் அழுதிடும்

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா