நிலவும், மலையும், நிரந்தர தெய்வீகமும்

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

B.R. ஹரன்


தர்மமும் சேவையும் கூடிய வேத நாகரீகம்

சிந்து சரஸ்வதி நதி தீரங்களை ஒட்டி வளர்ந்ததே வேத நாகரீகம். அது ‘தர்மம்’ என்கிற சிறந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே வளர்ந்தது. பின்நாளில் ‘ஹிந்து மதம்’ எனப் பெயர் பெற்றாலும், அது ‘ஸனாதன தர்மம்’ என்று வழங்கப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சில சமயங்களில் அதர்மம் ஆட்சி புரிய முயன்றாலும், அதன் கை ஓங்குகிற போதெல்லாம் ஆண்டவன் இப்பூவுலகில் அவதரித்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவது இதிஹாஸங்களிலும் புராணங்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது. கலியுகத்தில் ஆண்டவன் அவதரிக்காவிடினும், அவதார புருஷர்களை அவதரிக்கச் செய்து அவர்கள் மூலமாக தர்மத்தை நிலைநாட்டுகிறார். ஆதி சங்கரர், ராமானுஜர், ரமண மஹரிஷி, ராகவேந்திரர் போன்ற பலர் அம்மாதிரி அவதரித்த மகான்களே. இந்த மகான்களும் ஆசாரியர்களும் தர்ம உபதேசங்களைச் செய்து மக்களை நல்வழிப்படுத்திப் பாதுகாத்து வருகின்றனர்.

கலியுகத்தின் தன்மைக்கேற்ப அத்ர்மத்தின் கைகள் அடிக்கடி ஓங்குகின்ற இக்காலக்கட்டத்தில், தர்மாசாரியார்களின் உபதேசங்களை உள்வாங்கி நம்மால் முடிந்த அளவு தர்மத்தின் வழியில் சென்றோமானால் நாம் நம் பூமியையும், நம்மையும் காப்பாற்றிக் கொள்ளமுடியும். “தர்மத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்” என்கிற கூற்று உண்மையாக வேண்டுமென்றால் நாம் தர்மத்தின் படி நடக்க வேண்டுவது இன்றியமையாததாகின்றது. நாம் தர்மத்தைப் பாதுகாத்தால் தர்மம் நம்மைக் காத்து நிற்கும் என்பது விதி.

தர்ம பூமியாகவும், புண்ணிய பூமியாகவும் விளங்கும் பாரத தேசம் தற்போது அதர்மமே உருக்கொண்ட அன்னிய சக்திகளால் சூழப்பட்டுப் பேராபத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஆபத்துக்களை அழித்து நம் தாய் மண்ணைக் காப்பாற்ற வேண்டுமானால் நாம் தர்மத்தின் வழிப்படி நடப்பது தேவையாகிறது. நம் வேத மதத்தில் பல தர்மங்கள் கூறப்பட்டிருந்தாலும், இரண்டு முக்கியமான தர்மங்களாவன மக்கள் சேவையும், மஹேஸ்வரன் சேவையும் தான்.

மஹேஸ்வரன் சேவை என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும், கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும், பல ஊர்களில் சிதிலமடைந்து கிடக்கும் கோவில்களை புன்ருத்தாரணம் செய்து நின்றுபோன வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும். மக்கள் சேவை என்பது, ஏழை மக்களுக்கும், இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்.

மஹேஸ்வரன் சேவை செய்வதற்காகவென்றே நம் வேத மதத்தில் பல புண்ணிய தினங்கள் குறிப்பிடப்பட்டு, அத்தினங்களில் எந்த எந்த தெய்வத்திற்கு என்ன மாதிரியான சேவைகள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. தினப்படி செய்யக்கூடிய வழிபாடுகள் தவிர புண்ணிய தினங்களில், திருவிழாக்காலங்களில், உற்சவங்களில் சிறப்பாகச் செய்யக்கூடிய வழிபாடுகளில் தான் ஊர்மக்கள் ஒன்று திரண்டு ஒற்றுமையாக இயங்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நிரந்தர ஒற்றுமை மக்களிடையே நிலவ வேண்டுமென்றாலும், மக்களைப் பிரித்தாளும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சிகள் தோல்வியுறவேண்டுமென்றாலும், ஊர்கூடி நடத்தும் திருவிழாக்களும், உற்சவங்களும், வழிபாடுகளும் எவ்விதக் குறைபாடும் இன்றி அடிக்கடி நிகழவேண்டுவது இன்றியமையாதது.

அம்மாதிரியான ஊர் கூடும் சமயங்களில், இல்லாத, இயலாத, ஏழை மக்களுக்கு, இயன்றவர்களும் இருக்கப்பட்டவர்களும் அனைத்து வித உதவிகள் செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தொடர்ந்து பயனடையுமாறு ஒரு வழிமுறையையும், அமைப்பையும் ஏற்படுத்திக் கொள்வது சாலச் சிறந்தது. நம்மிடையே உள்ள ஏழை மக்களுக்கு நாமே உதவிகள் செய்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டால், அவர்கள் அன்னிய சக்திகளின் மதமாற்றச் சதிகளில் சிக்காமல் காப்பாற்றலாம்.

மக்கள் சேவையும், மஹேஸ்வரன் சேவையும் சேர்ந்து இருக்கும் இடம் மஹாத்மாக்கள் நிரந்தரமாகக் குடியிருக்கும் இடமாக இருக்கும் என்பதற்குத் திருவண்ணாமலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. சென்ற சித்ரா பௌர்ணமியன்று நான் அடைந்த அற்புத அனுபவமானது, மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாவிட்டால் பயனற்றுப் போகும் என்கிற எண்ணமே என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டியது.

மஹேஸ்வரனே மலையாக

அடி முடி காணா அதிசயமாக, ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதிஸ்வரூபமாக சிவபெருமான் காட்சியளித்த, பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றான தேயு(அக்னி)ஸ்தலம் திருவண்ணாமலை. விண்ணுக்கும் மண்ணுக்கும் அப்பால் ஜோதிஸ்வரூபமெடுத்து லிங்கோத்பவராக பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் காட்சியளித்த சிவபெருமான் பின்னர் தன் அக்னிஸ்வருப்பத்தை பூவுலகு தாங்காது என்கிற காரணத்தால் அதனைச் சுறுக்கி ஒரு மலையாக மாற்றியமைத்து நின்றதே அண்ணாமலை என்கிற திருவண்ணாமலையாகும். அந்த ஜோதிஸ்வரூபத்தைத் தான் கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்று பல காத தூரம் தெரியுமளவிற்குத் தீபமாக ஏற்றித் திருவிழா கொண்டாடுகின்றனர் மக்கள். சிவபெருமான் பார்வதி தேவிக்குத் தன் இடப்பாகத்தை அளித்து அர்தநாரீஸ்வரராகக் காட்சியளித்ததும் இத்தலத்தில் தான். கார்த்திகைத் தீபம் மலை மேல் ஏற்றப்படும்போது கீழே கோவிலில் சிவபெருமான் அர்தநாரீஸ்வரராகக் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். பஞ்ச பூதங்களில் ஒரு ஸ்தலமாக மட்டுமல்லாமல், பஞ்ச பூதங்களையும் தன்னுள்ளே அடக்கிய சிவபெருமானே அண்ணாமலையாக இருப்பதால், இம்மலை ஐந்து சிகரங்களுடன் அற்புதமாகக் காட்சியளிக்கிறது.

சேவைகள் பல நடக்கும் சித்தர் பூமி

திருவண்ணாமலை சிறந்த சித்தர் பூமியாகப் போற்றப்படுகிறது. கௌதமர், அருணகிரி யோகி, நமச்சிவாயர், நமச்சிவாயம் (அண்ணாமலை வெண்பா எழுதியவர்), விரூபாட்ச தேவர், அருணகிரிநாதர் (திருப்புகழ் இயற்றியவர்), கொண்டப்ப தேசிகர், ஜடினி ஷண்முக யோகினி அம்மாள், அம்மணி அம்மாள்,
சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மஹரிஷி, யோகி ராம்சுரத்குமார், போன்ற பல மாஹான்கள் வாழ்ந்து சித்தியடைந்த ஸ்தலமாகும் அண்ணாமலை. (1)

ரமண மஹரிஷி ஆஸ்ரமம், சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமம், யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம், நமச்சிவாயரின் சீடர்கள் நிறுவிய மடங்கள் ஆகியவைப் பலவிதமான சேவைகளைப் பல ஆண்டுகளாகப் புரிந்து வருகின்றன. சமீப காலங்களில் விஷ நரிகளான மிஷனரிகளின் மதமாற்ற நடவடிக்கைகளைத் தடுக்கவும், மேலும் மக்கள் சேவை புரியவும், பல ஹிந்து அமைப்புகள் தங்கள் கிளைகளைத் திறந்து செயலாற்றி வருகின்றன. காஞ்சி சங்கர மடமும் தன் கிளை ஒன்றை நிறுவியுள்ளது.

சரித்திர வரலாறு (1)

கோவில்கள் கருங்கல் திருப்பணிகளாகச் செய்யப்பட்டது பல்லவர்கள் காலத்தில் தான். பல்லவர்களால் ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் முதன்மையானது திருவண்ணாமலைக் கோவில் என்று கூறப்படுகிறது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில் பின்நாட்களில் சோழர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்கர்கள் என்று பலராலும் கருவறைகள், சன்னிதிகள், மண்டபங்கள், கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. துளுவ நாட்டு அரசர்கள் பணி கூட உள்ளது.

இக்கோவிலில் இருக்கும் சாஸனங்கள் முதற் சோழர் காலத்தைச் சேர்ந்த விஜயாலயச் சோழனின் (கி.பி.849) 8-ஆம் நூற்றாண்டு சாஸனங்களில் ஆரம்பித்து, ஆதித்த சோழன் மற்றும் பல சோழ மன்னர்களின் சாஸனங்களுடன் 400 ஆண்டுகளுக்கு (சோழர்கள் ஆட்சி) கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரையில் பல வரலாற்றுத் தகவல்களை நமக்குத் தருகின்றன.

பின்னர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.16-ஆம் நூற்றாண்டு (கி.பி.1582) வரை காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கன், போசளர் மன்னன் வீர வல்லாளன், விஜயநகர மன்னர்கள் (கிருஷ்ண தேவராயர் முதலானோர்), தஞ்சாவூர் நாயக்க அரசர்கள் (சேவப்ப நாயக்கன் முதலானோர்) ஆகியோரின் சாஸனங்கள் இடம்பெற்றுள்ளன. இங்குள்ள சாஸனங்கள் தமிழ், ஸம்ஸ்க்ருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

சிவஞான போதம் என்கிற அற்புத சைவ சித்தாந்த சாத்திர நூலை அருளிய மெய்கண்டார், கி.பி.22-5-1232 அன்று இக்கோவிலுக்குக் கொடை அளித்திருக்கிறார். வெகு தொலைவில் உள்ள கங்க அரசர் கூட இக்கோவிலுக்குக் கொடை அளித்துள்ளனர்.

இலக்கியத்தில் அண்ணாமலை (1)

புராணங்கள், அந்தாதிகள், வெண்பாக்கள், பிரபந்தம், பதிகங்கள், வண்ணம், சதகம், கோவை, மாலை, விருத்தம், கீர்த்தனைகள், தோத்திரங்கள், கும்மி மற்றும் நாடகம் என்று அனைத்து வகையான இலக்கியங்களிலும் அண்ணாமலை பாடப் பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை ஆகிய நூல்களிலும் திருவண்ணாமலை இடம் பெற்றுள்ளது. திருஞான சம்பந்தர் (தேவாரம்), திருநாவுக்கரசர் (தேவாரம்), சேக்கிழார் (பெரியபுராணம்), மற்றும் ராமலிங்க ஸ்வாமிகள் (திருவருட்பா) ஆகியோரால் பாடப் பெற்ற ஸ்தலமாகவும் திருவண்ணாமலை விளங்குகின்றது. அறுபதுக்கும் மேற்பட்ட தல நூல்களும், அருணாசல ஸ்தோத்திரங்கள், அருணாசலாஷ்டகம் ஆகிய ஸம்ஸ்க்ருத நூல்கள் மட்டுமல்லாமல் கேனோபனிஷத்திலும் திருவண்ணாமலை இடம் பெற்றுள்ளது.

பௌர்ணமியின் புனிதத்துவம்

மாதந்தோறும் பல திருவிழாக்கள் திருவண்ணாமலையில் கொண்டாடப்பட்டாலும், கார்த்திகை தீபத் திருவிழாவும், சித்திரைத் திருவிழாவும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இரண்டுமே பௌர்ணமி தினத்தன்று விசேஷமாக முடிவுறும். ஹிந்து மதத்தின் வழிபாடுகளில் பௌர்ணமி தினமானது ஒரு முக்கிய தினமாக கடைப்பிடிக்கப் பட்டு வ்ருகிறது. கார்த்திகை தீபம், சித்திரா பௌர்ணமி மட்டுமல்லாமல், தைப்பூசம், வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், மாசி மகம் (பிரயாகையில் கங்கா ஸ்நானம்), பங்குனி உத்திரம் (வட தேசத்தில் ஹோலி பண்டிகை) என பல முக்கிய விசேஷமான தினங்களும் பௌர்ணமி அன்றே இருப்பதால் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. பௌர்ணமியன்று செய்யப்படும் சத்தியநாராயண பூஜை மிகவும் விசேஷமானது. பௌர்ணமி விரதம் அனுசரிப்பது தொன்று தொட்டு நடந்து வரும் பழக்கம். அன்று காலை முதல் அன்ன ஆகாரமின்றி மாலை பௌர்ணமி நிலவை தரிசித்து விட்டுப் பூஜை செய்து விட்டுத்தான் உணவு உட்கொள்ளுவர்.

தலையான தர்மம் – தானம் (2)

தான தர்மம் செய்யவேண்டும் என்ற பேச்சு வழக்கு இருக்கின்றது. இதில் “தானம்” என்பது அன்னதானத்தையே குறிப்பதாகும். “தர்ம சாலை” என்றால் அது அன்னசத்திரத்தைத் தான் குறிக்கும். தன் உயிரைக் கொடுத்தாவது மற்றொறு ஜீவனைக் காப்பாற்ற வேண்டும். ஒருவர் கஷ்டத்தில் இருக்கின்றபோது அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் நம்மால் ஆன உதவியைச் செய்யவேண்டும். குறிப்பாக அன்னதானத்தைப் பற்றி சொல்லும்போது திருமந்திரத்தில், “யார்க்கும் இடுமின்; அவர் இவர் என்னன்மின்” என்று சொல்லப்பட்டுள்ளது. அன்னதானத்தின் விசேஷமே பெற்றுக் கொள்பவர் வெகு சுலபமாக திருப்தி அடைவது தான். இதில் மட்டும் தான் பெற்றுக் கொள்பவர் “போதும்” இனி வேண்டாம் என்று மறுதலிப்பார். மற்ற எந்த பொருளைத் தானம் செய்தாலும் போதும் என்கிற வார்த்தை வராது.

“பூர்த்த தர்மம்” – பலர் கூடிப் பொதுப்பணி (2)

நம் வேத நாகரீகத்தில் தர்மத்துக்கு ஸாரமாக இருப்பது “பஞ்ச மஹா யக்ஞம்” என்று சொல்லப்படுகிற ‘பிரம்ம யக்ஞம்’ (வேதம் ஓதுதல், ஓதுவித்தல்), ‘பித்ரு யக்ஞம்’ (மூதாதையருக்குச் செய்யும் தர்ப்பணம் ஆகிய காரியங்கள்), ‘தேவ யக்ஞம்’ (ஈஸ்வரனுக்குச் செய்யும் ஆராதனைகள்), ‘பூத யக்ஞம்’ (அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிப்பது) மற்றும் ‘ந்ரு யக்ஞம்’ (அதிதியை உபசாரம் செய்வது) ஆகியவையாகும். ஸ்ருஷ்டியில் ஒரு பிரிவைக் கூட விடாமல் உபகாரம் பண்ணி வைக்கும் பஞ்ச மஹா யக்ஞம் என்பது நம் வேத மதத்தில் மட்டும் தான் விதித்திருக்கிறது.

இது தவிர “பூர்த்த தர்மம்” என்ற பெயரில் சமூக சேவைகள் நம் தர்ம சாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. பலர் கூடிச் செய்யும் பொதுப்பணிகள் இவ்வகைத் தர்மத்தை குறிக்கும். உதாரணமாக, கோவில் சுத்தம் செய்வது, கோவிலுக்குச் செல்லும் பாதையை நிர்மாணிப்பது, கிணறு, குளங்கள் வெட்டுவது, சொந்த ஊர் திருவிழாக்களுக்கு வரும் அயலூர் மக்களுக்கு அன்னதானம் அளிப்பது, ஆகியவை பூர்த்த தர்ம காரியங்களாகும்.

பிரதக்ஷண நமஸ்காரம்

மக்கள் சேவையும் மஹேஸ்வர சேவையும் சேர்ந்து விளங்குவது மிகவும் விசேஷம் என்று பார்த்தோம். மஹேஸ்வர சேவையில் மிக முக்கியமான ஒரு காரியம் “பிரதக்ஷண நமஸ்காரம்”. அதாவது “வலம் வந்து நமஸ்கரிப்பது”. இறைவன் ஸன்னிதியை வலம் வந்து நமஸ்கரிக்கலாம்; ஆலயம் முழுவதையும் வலம் வந்து நமஸ்கரிக்கலாம்; ஆலயம் மலை மேல் இருக்கும் பட்சத்தில் அம்மலையையே வலம் வருவது தான் ‘கிரிவலம்’ அல்லது ‘கிரி பிரதக்ஷணம்’ என்று கூறப்படுகிறது.

யாக்கை எனப்படும் நம் உடம்பு முழுவதும் இந்தப் பிரதக்ஷண நமஸ்காரத்தில் ஈடுபடுகின்றது. வாய் ஸ்லோகங்கள், நாமாவளிகள், பஜனைகள் சொல்கின்றது; கை அர்ச்சனை செய்கின்றது, மணியடிக்கின்றது, இசை வாத்தியங்கள் வாசிக்கின்றது, பஜனைக்கு ஏற்றவாறு தாளம் போடுகின்றது, கடவுளை நோக்கி கூப்புகின்றது; கால் வலம் வருகின்றது; தலை வணங்குகின்றது; நமஸ்காரம் செய்யும்போது தலை முதல் கால் வரை உடல் முழுவதும் சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வழிபடுகின்றது. அங்கப் பிரதக்ஷணம் பற்றிக் கேட்கவே வேண்டாம். நமஸ்கரித்தவாறே பிரதக்ஷணம் செய்வதல்லவா அது!

திருவண்ணாமலையைப் பொறுத்தவரை, மஹேஸ்வரனே மலையாக, அண்ணாமலையாக, இருக்கின்றான். எனவே தான் அண்ணாமலைக் கிரிவலம் லட்சக்கணக்கான மக்களை பௌர்ணமி தோறும் தன் பால் காந்தமெனக் கவர்ந்து இழுக்கின்றது.

மக்கள் சேவையும் மஹேஸ்வர சேவையும்

தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி என்கிற ஊரில் ஸ்ரீ சச்சிதானந்த ஆஸ்ரமம் இருக்கின்றது. இந்த ஆஸ்ரமத்தை நிறுவிய பரஞ்சோதி ஸ்வாமிகள் என்கிற அஷ்டமா சித்திகளையும் வென்ற சித்தர் பெருமான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் சித்தியடைந்தார். இவர் இருக்கின்ற வரை அன்னதானத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துத் தான் செல்லும் இடங்களில் எல்லாம் அதைச் சிறப்புறச் செய்தவர். இவரின் ஆஸ்ரமத்தில் இன்றும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு தினமும் அன்னதானம் நடத்தப்படுகின்றது.

இவருடைய அன்னதானச் சேவைக்கு ஒரு சிறந்த உதாரணம் சொல்லவேண்டுமென்றால் சென்ற கும்பகோணம் மகாமகத்தில் இவர் ஆஸ்ரமம் செய்த அன்னதானச் சேவையைச் சொல்லலாம். Round the clock service என்று சொல்வது போல 24 மணிநேரமும் பத்து நாட்களும் அடுப்பு அணைக்கப்படவில்லை. ஆஸ்ரமத்தினர் இருந்த இடத்திற்கு வருபவர்களுக்கு மட்டுமல்லாமல், ஊர் முழுவதும் உள்ள கோவில்கள் பக்கமெல்லமெல்லாம் உணவும் குடிநீரும் எடுத்துச் சென்று அனைத்து மக்கள் தரப்பினருக்கும் தானம் செய்தது மாபெரும் சேவையாகும். பக்தர்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்பிற்காக கும்பகோணம் ஊரில் குவிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான காவல் துறையினரும் மிகவும் பயன் பெற்றனர் பரஞ்சோதி ஸ்வாமிகளின் அன்னதானத்தினால். ஆஸ்ரமத்தின் சேவையைப் பாராட்டும் விதமாக ஆஸ்ரமத்தின் பெயர் தாங்கிய குறிப்பிட்ட வாகனங்களைக் காவல் துறையினர் எந்தவிதத் தடையும் செய்யாமல் அனைத்து கோவில்களுக்கும் செல்ல அனுமதியளித்து மக்கள் பசி போக்குவதில் பெரிதும் உதவி புரிந்தனர். மஹாமகத் திருவிழா முடிந்ததும், காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள், மஹாமகத்திலேயே மிகவும் சிறப்பாக அன்னதானம் செய்த ஆஸ்ரமம் பரஞ்சோதி ஸ்வாமிகளின் ஸ்ரீ சச்சிதானந்த ஆஸ்ரமம் தான் என்று மனமாரப் பாராட்டினார்கள். அந்தச் சேவையில் பங்கு கொண்டது எனக்கு என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

அத்தகைய மகானான பரஞ்சோதி சுவாமிகள், ஒவ்வொரு சித்திரா பௌர்ணமியன்றும் திருவண்ணாமலையில் மாபெரும் அன்னதானம் செய்ய வேண்டும் என்று மிகவும் பிரியப்பட்டுக் கொண்டிருந்தார். அன்னதானத்தோடு மஹேஸ்வரன் சேவையிலும் மிகவும் கவனம் செலுத்தி வந்தவர் பரஞ்சோதி ஸ்வாமிகள். வேத முறைப்படி, வைதீக பிராம்மணர்களை வைத்து ஸகலவிதமான ஹோமங்களையும் யாகங்களையும் செய்து கூடவே அன்னதானமும் செய்து வந்தவர்.

ஆதலால், அதைப்போலவே அவருடைய சீடர்கள் சிலரும் (என் நண்பர்கள் சிலரும் அடக்கம்) கடந்த நான்கு ஆண்டுகளாக, ஒரு பக்கம் ஸகலவிதமான யாகங்கள் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் பலவகையான அன்னப் பிரசாதங்கள் தயார் செய்து அவற்றை நைவேத்யம் செய்த கையோடு யாக சாலைக்கு வெளியே கிரிவலம் பாதையில் சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு தானம் செய்வது வழக்கம். இம்முறை தான் அதில் பங்கு பெறும் வாய்ப்பும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. என்ன ஒரு அற்புத அனுபவம்!

யாகம், தானம், வலம், இறையனுபவம்

கிரிவலம் பாதையில் அமைந்துள்ள ஒரு கல்யாண மண்டபத்தின் (மண்டபம் நாங்கள் தங்குவதற்கு மட்டும் தான்) அருகே பெரிய யாகசாலை அமைத்து அதற்குச் சற்றுத் தள்ளி கூடாரம் அமைத்து சமையல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. யாகசாலைக்கும் கிரிவலப் பாதைக்கும் இடையே மூங்கில் தடுப்புகள் அமைத்து மக்களுக்கு வரிசையாக வந்து செல்லப் பாதையமைத்து, மேஜைகளின் மேல் அன்ன வகைகள், உதிரிப்பண்டங்கள், ஊறுகாய், குடிநீர் பாக்கெட் ஆகியவற்றை வைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாகசாலைக்கும் சமையல் சாலைக்கும் பின் பக்கம் ஒரு தண்ணீர் லாரி எப்போதும் தயார் நிலையில் இருந்தது.

செய்யப்பட்ட யாகங்கள், காலை கணபதி ஹோமத்தில் ஆரம்பித்து, நவரத்தின ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமம், மஹாருத்ர யாகம், சண்டி ஹோமம், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஹோமம் என்று விமரிசையாக நடத்தப்பட்டன. சமையலைப் பொறுத்தவரை, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், குறுமா (கூட்டு), ஊறுகாய், குடிநீர் பாக்கெட் என்று ஏற்பாடு செய்து, எந்த நேரமும் ஏதாவது இரண்டு அன்னங்களும் மற்ற உதிரிப்பண்டங்களும் தானம் செய்யுமாறு ஏற்பாடு செய்து அங்ஙனமே நடந்தேறியது. பெரிய அளவிலான காகிதத் தட்டுகளில் அன்னங்கள் அளிக்கப்பட்டன. ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த அன்னதானம் தங்கு தடையின்றி 28-ஆம் தேதி காலை 6 மணி வரையில் இனிதே நடந்தேறியது.

27-ஆம் தேதி மாலை 7.30 மணியிலிருந்து 28-ஆம் தேதி மாலை வரை பௌர்ணமி திதி இருந்ததால், 28 இரவு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் மலையைச் சுற்றி கிரிவலம் போய்க்கொண்டிருந்த காட்சியை அந்தப் பூரண நிலவொளியில் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கவெண்டும். மஞ்சள் நிலவொளியில் கருநீல மலையைச் சுற்றி கடலலையென மக்கள் “ஓம் நமச்சிவாய” என்றும் “அருணாச்சலத்துக்கு அரோஹரா” என்றும் கோஷங்கள் செய்தவாறு நகர்ந்து சென்றது நமக்குப் பெரும் புத்துணர்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. யாகங்களைக் கண்டு இறைவனைத் தியானித்து
அன்று இரவே அடியேனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்தபடி கிரிவலம் செய்து இறைவனைத் தரிசித்து, பின்னர் அன்னதானத்தில் ஈடுபட்டது மறக்க முடியாத அனுபவம்.

சென்னையை விட்டுப் புறப்பட்டதிலிருந்து மீண்டும் திரும்பி வரும் வரை கிட்டத்தட்ட 36 மணிநேரங்கள் உறக்கம் இன்றி இருந்தாலும், இறையருளால் உடலும் மனமும் அடைந்த புத்துணர்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும் பரவச நிலை அது! அந்தப் பரவச நிலையை அனுபவித்த எவரும் லட்சக்கணக்கான மக்கள் அண்ணாமலை நோக்கிப் படையெடுப்பதை எண்ணி வியக்கமாட்டார்கள்.

முடிவுரை

மஹேஸ்வர சேவையும் மக்கள் சேவையும் இணையும் இடத்தில் ஹிந்து தர்மத்தின் எழுச்சி ஏற்படும் என்பது நிதர்ஸனம் என்பதை சித்ரா பௌர்ணமியன்று நான் நேரில் அனுபவித்தறிந்தேன். எனவே இந்த மாதிரியான தர்மம் மிகு சேவைகளை நாடு முழுவதும் பரப்பிச் செய்வோமானால், நம் தேசத்தில் தர்மம் தழைத்தோங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சேவைகள் இல்லாத இடங்களில் தேவைகள் அதிகரிக்கும்; தேவைகள் அதிகரிக்கும்போது பார்வைகள் மாறும்; மாறுகின்ற பார்வைகள் அணுகுமுறையை வேறுபடுத்தும்; அணுகுமுறை வேறானால் அன்னிய சக்திகள் மனதில் இடம் பிடிக்கும்; மனம் குழப்பத்தில் ஆழ்ந்து கடைசியில் “மாற்றம்” அடையும்; ஏற்றம் போல் தோன்றிய மாற்றம் இறுதியில் பள்ளத்தில் தள்ளி விடும். எனவே அடிப்படையில், இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், செயற்கைத் தேவைகளைத் தவிர்ப்பதற்கும், சேவைகள் பெருக வேண்டும். சேவைகள் பெருக தர்மம் நிலைக்கும், நிலைத்த தர்மம் தலை காக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும்; தாய் மதம் காக்கும்; தாய் நாடு காக்கும். நாம் தர்மத்தைக் காக்க தர்மம் நம்மைக் காக்கும்.

(1) “திருவண்ணாமலை” – மணிவாசகர் பதிப்பகம், 1996 பதிப்பு. ஆசிரியர் – வெ.நாராயணசுவாமி
(2) “தெய்வத்தின் குரல்” பாகம்-2 மற்றும் பாகம்-3. வானதி பதிப்பகம், சென்னை. தொகுப்பு: ரா.கணபதி.

Series Navigation