நினைவுகளின் சுவட்டில் – (49)

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

வெங்கட் சாமிநாதன்/


அதிக தூரத்தில் இல்லை அந்த ஆர்ட் ஸ்கூல். கிட்டத்திலும் இல்லை. போனதும் மாமாவைப்பார்த்து வெளியே வந்தவர் கைகூப்பி “நமஸ்கார்” என்று சொல்லி வரவேற்றார். நீண்ட குர்த்தாவும் வங்காளிகள் போல பஞ்ச கச்சம் கட்டியிருந்தார் அவர். வங்காளிகள் கட்டும் அந்த குர்த்தாவுக்கு ‘பஞ்சாபி’ என்று வங்காளிகள் பெயர் வைத்திருக்கிறார்கள் எனபதை இரண்டு வருடங்கள் கழித்து நான் புர்லாவில் வேலை செய்யப் போனபோது என் அருமை வங்க நண்பன் ம்ருணால் காந்தி சக்கரவர்த்தி சொல்ல அறிந்துகொண்டேன். ஏன், பஞ்சாபி என்று பெயர்? இந்த ஸ்டைல் குர்த்தாவை பஞ்சாபிகள் அணிவதே கிடையாதே! அப்படியிருக்க, வங்காளிகளின் சுயகௌரவம் எங்கே போயிற்று என்று கேட்டதற்கு பலமாகச் சிரித்தானே தவிர பதில் இல்லை. அவனுக்கே தெரியாது போலும். போகட்டும். அந்த ஆசிரியர்/பொறுப்பாளர் வங்காளி தான். சாந்திநிகேதனில் படித்தவர் என்பதெல்லாம் மாமா சொல்லித் தெரிய வந்தது. மாமா என்னை அறிமுகப் படுத்தினார். நான் கைகூப்பி வணங்கினேன். பின் நான் வரைந்ததை அவருக்குக் காட்டச் சொன்னார் மாமா. அவர் அதை வாங்கி சூரிய ஒளிக்கு எதிரே பிடித்துப் பார்த்தார். பின் பக்கம் திருப்பிப் பார்த்தார். ஒன்றும் சொல்ல வில்லை. மாமாவும் அவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். “சரி நாளையிலிருந்து காலையில் எப்போ சௌகரியமோ வரச்சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டார்.

டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து காலையில் திரும்பியதும் ஆர்ட் ஸ்கூலுக்குப் போவதென்றும் அதன் பின் வீடு திரும்பி சாப்பிட்டுவிட்டு மாமாவின் அலுவலகத்திற்குப் போவதென்றும் தீர்மானமாயிற்று. மறு நாள் போனேன். ஒரு பெரிய அறை, ஹால் என்று சொல்லத்தக்க அளவு பெரிதல்ல. சுவற்றில் நிறைய சித்திரங்கள், வரைபடங்கள், பேஸ்டலில் வரைந்தவை, வாட்டர் கலரில் வரைந்தவை என. சில பெரிய வரைபடங்கள் தரையில் சுவற்றில் சாய்த்தவாறு வைக்கப்பட்டிருந்தன. ஐந்தாறு பேர் கீழே தரையில் உட்கார்ந்து அவற்றில் ஒன்றைப் பார்த்து பிரதி செய்துகொண்டிருந்தனர். முதலில் ஒரு பூனையின் சித்திரத்தைப் பார்த்து வரையத் தொடங்கலாம் என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்தார். நான் சுற்றிப் பார்த்தேன். பூனை நாய் என்று வரைவது ரொம்ப சின்னப் புள்ளை விவகாரமா இருக்கே என்று தோன்றிற்று. அப்படி ஒன்றும் அது சின்னப்புள்ளை விவகாரமில்லை. நிறைய மெல்லிய வளைந்த கோடுகள் கொண்ட சித்திரம். கோடுகளின் வளைவுகளும், மெல்லியதும், தடித்த கோடுகளும் பூணையின் சருமத்தின் வேறுபடும் மென்மையையும் குறிக்கும். நல்ல பயிற்சி தான். ஆனால் நான் தேர்ந்தெடுத்துக் கொண்டது குளித்துவிட்டு குளத்தினருகே ஒரு மரத்தடியின் கீழே இருக்கும் கரடுமுரடான பாறையின் மீது வந்து அமர்ந்திருக்கும் பெண். கரடு முரடானபாறை, மென்மையான சரீரம் என்ற நேரெதிர் தோற்றங்களை கோடுகள் சித்தரிக்கும். நான் வரைய ஆரம்பித்தேன் முதல் முயற்சியில் கால்களை வரைய இடமில்லாமல் போயிற்று. இன்னம் சிறிதாக முயன்றாலும் அப்போதும் முழு உருவமும் பேப்பருக்குள் அடங்கவில்லை. நான் என்னதான் செய்கிறேன் என்று பார்க்க வந்த ஆசிரியர், “முதலில் முழுசித்திரத்தின் அவுட்லைனை பேப்பருக்குள் அடங்கும்படி வரைந்து கொள்ளவேண்டும், பின்னர் விவரங்களுக்குப் போகலாம். என்று ஒரு அவுட்லைனை இரண்டு நிமிடங்களுக்குள் வரைந்து காண்பித்தார். ‘சரி இன்றைக்கு இது போதும்.” என்றார்.

இப்படி இரண்டு மூன்று நாட்கள் கடந்தபின் ஒரு நாள் நான் ஆர்ட் ஸ்கூலிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது யாரோ என் பெயர் சொல்லித் தமிழில் கூப்பிட்ட குரல் கேட்டது. இங்கு என்னை பெயர் சொல்லி தமிழில் கூப்பிடுகிறவர் என்று குரல் வந்த திசையில் பார்த்த போது, தன் வீட்டு வெளி நடையில் ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார், மாமா ஆ·பீஸைச் சேர்ந்த டைப்ரைட்டிங் செக்ஷன் இன்சார்ஜ். “இங்கே எங்கே போயிட்டு வரே?” என்று கேட்டார். சொன்னேன். உடனே, சந்தோஷத்தோடு, “அட உனக்கு அது கூட தெரியுமா? எங்கே நீ என்ன வரைஞ்சிருக்கே பாக்கலாம், காட்டு”, என்றார். என் டிராயிங் நோட்புக்கைக் காட்டினேன். அதைப் பிரித்துப் பார்த்த அவருக்கு அதிர்ச்சியில் முகம் கோணலாகி, “என்னடா இது, ஒரே ஆபாசமான்னா இருக்கு. இதைத்தான் உன்னை வரயச் சொன்னாளா, இல்லே நீயே வரஞ்சியா?” என்று கேட்டார். “இல்லை நானே தான் வரைஞ்சேன்.” என்றேன். அவருக்கு இன்னும் கோபம் அதிகமாயிற்று. ” ஏண்டா, உன் வயசுப் பையன் வரையறதா இது? படம் வரையரதுன்னா லக்ஷ்மி, சரஸ்வதி, முருகன், விஷ்ணு, இப்படி வரையப்படாதோ, இப்படியாடா உனக்கு புத்தி போகணும்? என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டார். கடைசியில், “சரி இந்தா, இதை நீயே வச்சுக்கோ, போ, நான் உன் மாமாகிட்டே பேசிக்கறேன்.” என்றார் வெறுப்போடு.

அன்று அவர் ஆ·பீசுக்கு வரவில்லை. மறு நாள்” எப்போதும் போல, முதலில் நான் டைப் செக்ஷனுக்குத் தான் போனேன். நான் உள்ளே நுழைவதைப் பார்த்ததும், அவர் சத்தம்போட்டு, “இதோ வரான் பாருங்கோ பிள்ளையாண்டான். ஊர்லே அப்பா அம்மா கஷ்டபடறாளேன்னு, இவனை மெனகெட்டு இங்கே வரவழைச்சு நாலு விஷயம் சொல்லிக்கொடுக்கலாம்னு அவர் பாவம் முனைஞ்சிண்டுருக்கார். இவன் என்னடான்னா, பொம்மனாட்டி படம் வரைஞ்சிண்டுருக்கான். பொட்டு துணி கிடையாது உடம்பிலே. எனக்குத் தான் தாங்கலே. விஷயத்தைச் சொல்லி, “சார், உங்க மருமானைக் கொஞ்சம் நன்னா கவனிச்சுக்கோங்கோன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.” என்று சொல்லி முடித்தார். எல்லாரும் என்னையும் அவரையும் மாறி மாறிப் பார்த்தார்கள். மாமா கூப்பிடுவார். கூப்பிட்டால் போகலாம் என்று என் பாட்டுக்கு இருந்தேன். மாமா கூப்பிடவில்லை. ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு செக்ஷனுக்கு. பின் வீட்டுக்குப் போனேன். மாமா இந்த விஷயம் பற்றி என்னை எதுவும் கேட்கவில்லை.

அன்றோ அல்லது ஒன்றிரண்டு நாள் கழித்து ஒரு நாள் மாமா ஆ·பீசிலிருந்து திரும்பியதும், மாமா சொன்னார், “இங்கெல்லாம் ஒண்ணும் பிரயோஜனமில்லை. உனக்கும் என்ன கேக்கணும்னு தெரியாது, அவாளும் தானே உனக்கு ஒண்ணும் சொல்லமாட்டா. நீ ஒண்ணு செய், கோல்மூரிலே ஒரு கண்டிராக்டர் கிட்டே சொல்லியிருக்கேன். மத்தியானமா சாப்டப்பறம் அங்கே அஞ்சு மணி வரை அவன் ஆ·பீஸிலே ஒரு க்ளர்க் இருக்கான் அவனுக்கு உதவியா இரு. சம்பளம் ஒண்ணும் கிடையாது. ஆனால் வேலை தருவான். கத்துக்கலாம்.” என்று சொல்லி போகும் வழியையும் சொன்னார். அதுவும் நடக்கும் தூரம் தான். 40-45 நிமிஷத்தில் நடந்து போய்விடலாம் என்பது தெரிந்தது.

அந்த புதிய இடமும் எனக்கு சுவாரஸ்யமாகத் தான் இருந்தது. ஒன்று நடந்தே ஜெம்ஷெட்பூரின் புதிய இடங்களுக்கு தினமும் போய்வரலாம். புதிதாக ஏதோ கற்றுக்கொள்ளலாம். புதிய அனுபவங்கள்.அந்த கண்டிராக்டரின் அலுவலகத்தில் எப்போதாவது வந்து போகும் கண்டிராக்டரைத் தவிர ஒரு க்ளார்க் தான் இருந்தான். அவன் தான் எல்லா வேலைகளையும் செய்பவன். அங்கு இருக்கும் ·பைல்கள் என்னென்ன ஒவ்வொரு புதிய ·பைலும் எப்படி திறக்கப்படுகின்றன என்றெல்லாம் அவ்வப்போது சொல்லி வருவான். டைப் இப்போது தான் கற்று வருவதால் அந்த வேலை கூட எனக்குக் கொடுக்க முடியாது. ஆக, தினம் அங்கு போவேன். அந்த க்ளார்க்கோடு பேசிக்கொண்டிருப்பேன். பாதி ஆங்கிலமும், பாதி ஹிந்தியும். கும்பகோணம் பள்ளியில் படித்த ஹிந்தி அல்ல. அங்கு மற்றவர் பேசக் கேட்டுக் கற்றுக் கொண்ட ஹிந்தி. திரும்பி வரும்போது பழகிய ஒரே பாதையில் நடக்க மாட்டேன். இப்படி போய் பார்க்கலாமே என்று அடிக்கடி புதிய பாதைகளைத் தேடுவேன். இப்படியான தேடல் ஒரு நாளைக்கு ஒரு மைதானத்தில் ஜெயபிரகாஷ் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அங்கேயே அந்தக் கூட்டம் முடியும் வரை இருந்து விட்டேன். இன்னொரு நாள் எங்கேயே சுற்றிச் சுற்றி புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய மாதிரியும் இருந்தது. ஆனால் என்னவானாலும் நேரே ஷார்ட் ஹாண்டு க்ளாஸ¤க்கு கொஞ்சம் முன்னே பின்னே போய்ச் சேர்ந்து விடுவேன். ஆகவே நான் ஊர் சுற்றியது மாமாவுக்குத் தெரியவராது.

வந்த புதிதில் ஒரு நாள் மாமா கேட்டார். “ஆமாம், இப்படி அலுக்காமல் சலிக்காமல் நடக்கறியே, சைக்கிளில் போகலாமே. சைக்கிள் விடத் தெரியுமில்லியா?” என்றார். “தெரியாது” என்றேன். பின், நான் தினமும் 11 மைல் கும்பகோணம் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போய் பழக்கம். அது போக, வயல்களைத் தாண்டி போக வேண்டியிருப்பதால், அங்கேயும் சைக்கிளில் போகமுடியாது. கிராமத்திலிருந்து யாரும் எங்கேயும் சைக்கிளில் போகமுடியாது.” என்றேன். மாமா கொஞ்சம் யோசித்தார். “சரி, நீ சைக்கிள் ஓட்டக் கத்துக்கப் போறே. சனி, ஞாயிறு, வாரத்துக்கு ரண்டு நாள் காலம்பற சாக்சி போறே. அங்கே உன் அத்தை இருக்கா தெரியுமோல்யோ. அங்கே போ. சீனு (எனக்கு பெயர் மறந்து விட்டது. அத்தையின் மச்சினனைச் சொல்கிறார் மாமா) உனக்கு கத்துத் தருவான். என்ன, போறியா?” என்றார்.

ஒரு சனிக்கிழமை அவர் சாக்ஸிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் தங்கை, தங்கையின் புருஷன், மச்சினன் எல்லோரும் இருந்தனர். தங்கையின் புருஷன் டாடாவின் டின் ப்ளேட் தயாரிக்கும் பிரிவில் இருந்தார் என்று நினைவு. சனி ஞாயிறுகளில் காலை நேரத்தில் எனக்கு சைக்கிள் கற்றுத் தரச் சொல்லி ஏற்பாடு செய்தார். சீனுவும் நானும் சினேகமாகிவிட்டோம். எனக்கு சில வருஷங்கள் மூத்தவன். சைக்கிள் கற்றுக்கொண்டேன். இடையில் ஒரு நாள் ஒரு நீண்ட சரிவான பாதையில் என்னை மீறி சைக்கிள் வேகம் அதிகரித்து சரிவின் கடைசியில் குறுக்கே வரும் ரோடில் திருப்பத் தெரியாமல் ஒரு வேலியின் மீது மோதி விழுந்ததில் முள் கம்பி இடது கையில் நிறைய கீறிவிட்டது. சைக்கிள் பாரும் வளைந்து விட்டது. மாமா சொன்னது ” அடி படாமல் யாரும் சைக்கிள் கத்துண்டது கிடையாது. டிங்சர் அயோடின் போட்டுக்கோ சரியாப் போயிடும். நீ நாளைக்கு மறுபடியும் சைக்கிள் ஒட்ட அங்கே போறே. என்ன போறியா?” என்றார். போனேன். ஒரு நாளைக்கு மச்சினன் சொன்னான். “சாமா, நீயும் நானும் இரண்டு சைக்கிள் எடுத்துண்டு சைக்கிளை ஓட்டீண்டே பிஸ்டுபூர் போறோம். மாமா கிட்டே நீ கத்துண்டாச்சுன்னு காமிக்கணும்.” என்றான்.

மாமாவின் வீட்டின் முன் இருவரும் சைக்கிளிலிருந்து இறங்கினோம். மாமா சத்தம் கேட்டு வெளியே வந்தார். “உங்க மருமானுக்கு சைக்கிள் ஒட்டத் தெரிஞ்சுடுத்து. இனிமேல் கோல்மூரிக்கு அவன் சைக்கிளிலேயே போகலாம்.” என்று சொல்லிக்கொண்டே வந்தான் சீனு. சாக்சியிலிருந்து பிஸ்டுபூர் வரை சைக்கிளில் சென்றது தான் எனக்கு சீனு நடத்திய அரங்கேற்றம். “அவனுக்கு தெரியாததையெல்லாம் சொல்லிக் கொடுக்கறது தான்பா என் வேலை. இனிமே போற இடத்திலே கஷ்டப்படமாட்டானோல்யோ? அது போறும் கத்துக் கொடுத்துட்டியே, ரொம்ப தாங்க்ஸ்.” என்றார் மாமா. சீனுவுக்கு என்னிடம் ஒரு பற்றுதல். அது பின்னர் தெரிந்தது.

வெங்கட் சாமிநாதன்/9.11.09

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்