பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

வெங்கட் சாமிநாதன்


செடல் தன் கிராமத்து கோவிலுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட ஒரு தேவதாசிப் பெண். தலித் சமூகத்தைச் சேர்ந்தவள். தலித் சமூகத்தினுள்ளும் கூட, அவள் கூத்தாடிகள் என்றழைக்கப்படும், கோயில்களிலும், கிராமச் சந்தைகளிலும் திருவிழாக்காலங்களில் ஆடிப் பாடி ஜனங்களை மகிழ்விக்கும் பிரிவினரைச் சேர்ந்தவள். செடல் என்றாலே திருவிழாக்காலங்களில் கிராமத்துச் சந்தைகளிலும் விழாக்களிலும் வரும் குடை ராட்டினத்தைக் குறிக்கும்.

செடல் அவள் தாய்க்கு எட்டாவது குழந்தை. செடல் பிறப்பதை அவள் தாய் விரும்பவில்லை. ஆனால் கர்ப்பத்தைக் கலைக்க முயன்ற போதிலும் அவள் முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. அவள் தாய் ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருந்த போதே பிரசவ வேதனை தொடங்கிவிட்டது. ராட்டினத்தில் பிறந்தவளாதலால், அவளுக்கு செடல் என்றே பெயர் வைத்துவிட்டாள் அவள் தாய். கிராமத்து ஜோசியன் வேறு பயமுறுத்தியிருந்தான். செடல் பிறந்ததே கெட்ட சகுனம் தான் என்று. எனவே கிராமத்துப் பெரியவர்கள் எல்லாம் ஒன்று கூடி, செடலைக்கு பொட்டுக் கட்டி, அவர்கள் கிராமத்து செல்லியம்மன் கோவிலி விட்டுவ்¢ட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள். இதில் இன்னும் சிக்கல் என்னவென்றால், செடலை ஊர் செல்லியம்மன் கோவிலுக்காக என்று பொட்டுக் கட்டிவிட்டாலும், அவள் தேவதாசியாவது அந்த கிராமத்து தேவதைக்கு மாத்திரமில்லை. அந்த கிராமத்தைச் சுற்றி இருக்கும் பதினெட்டு கிராமங்களுக்கும் அவள் தேவதாசியாகிவிடுகிறாள்.

இந்தச் சின்னஞ்சிறிய பெண்ணை அவள் தாயிடமிருந்து பிரித்து விடுவார்கள். பின் அவள் கோவிலுக்கு வந்துவிட வேண்டும். அங்கு அவள் பெரியவளாகும் வரை ஒரு கிழவியின் பராமரிப்பில் இருப்பாள். சின்னப் பெண். அவளுக்கென்ன புரியும்? தாயை விட்டுப் பிரிந்து யாரோ ஒரு கிழவியின் அதிகாரத்தில் போவதென்றால்… என்ன அழுது என்ன! என்ன கதறி என்ன! யாரும் அதை லட்சியம் செய்வதாயில்லை. கிழவிக்குத் தெரியாமல் கோவிலை விட்டு வீட்டுக்கு ஓடி வந்துவிடுவாள். ஆனால் அவளை அங்கு யார் இருக்கவிடுவார்கள். பலவந்தமாக மறுபடியும் கோவிலுக்கு இழுத்துச் செல்வார்கள். இதிலிருந்து தப்புவதற்கு வழியில்லை என்று செடலின் புத்திக்குப் பட்டதும், ஒடுவதையும், கிழவியிடம் முரண்டு பிடிப்பதையும் நிறுத்தினாள். நாளாக ஆக, எல்லாம் பழக்கப் பட்டுப் போகிறது. இதற்கிடையில் அவளது பெற்றோர்களும் பிழைக்க வழிதேடி கண்டிக்குப் போய்விடுகிறார்கள். செடலுக்கு அது தெரியாது.

செடலை வளர்க்கும் பொறுப்பில் இருந்த கிழவி ஒரு நாள் செத்துப் போகிறாள். செடல் தனித்து விடப் பட்டு விட்டாள். நடராஜப் பிள்ளை என்னும் கிராமத்து மூத்தவர் ஒருவர். அவர் தான் ஜோஸ்யர் மூலம் செடலை கிராமத்துக் கோயிலுக்கு தானமாகக் கொடுக்க செடலையின் குடும்பத்தை நிர்பந்தப் படுத்தியவரும் கூட. செடல் எப்போ பெரியவளாவாள், கிழவி எப்போ சாவாள் என்று ஆசையோடு காத்திருந்தவருக்கு அந்த தருணம் வந்துவிட்டது. பலத்த மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாள், தான் பெரியவளாகிட்டதை செடல் உணர்கிறாள். கோவிலுக்குள் அவள் இனி தங்க முடியாது. கோவிலை விட்டால், அவளுக்கு அந்த கிராமத்தில் தஞ்சம் புக இடமும் இல்லை. கிராமத்தைவிட்டு வெளியேறத் தான் வேண்டும். வெளியேறுகிறாள்.

பொன்னன் என்னும் தெருக்கூத்து ஆடுபவனின் ஆதரவு கிடைக்கிறது. பொன்னன் தூரத்து உறவுக்காரன் கூட. பொன்னன் அவளுக்கு பள்ளு பாடவும் தெருக்கூத்து ஆடவும் பயிற்சி தருகிறான். நாளடைவில் செடல் ஒரு தெருக்கூத்து ஆடுபவளாக பெயர் பெற்று விடுகிறாள். அக்கம் பக்கத்து கிராமங்க்ளிலும் அவள் புகழ் பரவுகிறது. எல்லாவற்றுக்கும் அததற்கான விலை இருக்கத் தானே செய்கிறது. கூத்து பார்க்கவருபவர்களின் கேலியையும் கிண்டலையும் ஆபாசமான பேச்சுக்களையும் கேட்டு சகித்துக் கொள்ளவேண்டும். வெளிக்காவது ஒரு சிரிப்போடு நகர்ந்து விட வேண்டும். கோபிக்க முடியாது. சண்டை போட முடியாது. இதெல்லாம் காலம் காலமாக வந்து கொண்டிருக்கும் கிராமத்துப் பழக்கங்கள். ஆனால் அத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அவள் சிரிப்பதைப் பார்த்து தப்புக் கணக்கில் அதற்கு மேல் சென்றுவிடக்கூடாது.சிறு வயசு விளையாட்டும், கும்மாளமும் தான் அவள் இழந்தாயிற்று. ஆனால் இப்போது வயது வந்த பிறகு, தன் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும், என்பதை அவளே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரம் அவளது. அது காறும் பொன்னனின் பெயரில் அந்த சுத்து வட்டாரம் முழுதும் பெயர் பெற்றிருந்த தெருக்கூத்து குழு இப்போது செடலின் குழு என ஜனங்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர். இதனால் குழுவில் இருந்த மற்ற கூத்துக்காரர்களின் பொறாமையை செடல் சம்பாதித்துக் கொள்ளவேண்டி வந்தது செடலுக்கு கூத்தும் பாட்டும் சொல்லிக்கொடுத்து அவளுக்கு ஏதும் கஷ்டங்கள் வரும்போது அவளுக்கு ஆதரவாக இருந்த பொன்னனும் ஒரு நாள் செத்துப் போகிறான். செடல் இப்போது அவளது எதிரிகளை, தன்னந்தனியாக நின்று சமாளிக்க வேண்டி வருகிறது. இந்தக் கட்டங்களில் அவள் எதற்கும் துணிந்து எதிர்த்து நிற்கும் குணமும், சம்பாதித்த புகழும் தான் உதவுகின்றன. ஆனால், செடல் கோவிலுக்கு பொட்டுக்கட்டப்பட்ட வளாயிற்றே. பொட்டுக்கட்டியவளும் கூத்தாடியும் கேட்கிறவர்களுக்கெல்லாம் கிடைக்கிற பொருளாயிருப்பது தானே தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்? இனி கூத்தாடியாக ஊர் சுற்றியது போதும், கிராமத்துக்கே திரும்பலாம் என்று நிச்சயிக்கிறாள். ஆனால் இடையில் கிராமத்தில் எவ்வளவோ மாற்றங்கள். கோவில் இப்போது பாழடைந்து கிடக்கிறது. கிராமத்து பெரியவர்கள் அவளை திரும்ப எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். அது போக, கிராமத்திலிருக்கும் கீழ்சாதி ஜனங்களைக் கவர்ந்து அவர்களை கிறிஸ்துவர்களாக்குவது பாதிரிமார்களுக்கு சுலபமாகிக் கொண்டுவருகிறது.

செடலுக்கு தெருக்கூத்தில் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரக்யாதி பெற்ற பாஞ்சாலி என்னும் முதியவளைச் சந்தித்து அவள் ஆசி பெறவேண்டும் என்று தோன்றுகிறது. அவள் ஆசி பெற செடல் பாஞ்சாலியுடனான செடலின் சந்திப்பு, செடலின் வாழ்க்கையிலேயே ஒரு உச்ச கட்டம் என்று சொல்ல வேண்டும். அப்படித்தான் அவள் நினைக்கிறாள். இமையமும் இந்த நாவலை அந்த உச்ச கட்டத்தை நோக்கித்தான் நகர்த்துகிறார் என்றும் சொல்லவேண்டும்.

இன்றைய தமிழ் நாவலுக்கு செடல் ஒரு மிகவும் முக்கியமான பங்களிப்பு என்று சொல்லவேண்டும். தலித் சமூகத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளாத பல விஷயங்களை நமக்கு முதல் தடவையாகச் சொல்கிறது. செடல் மாதிரியான ஒரு பெண் தலித் சமூகத்திலும் காணப்படுவாள் என்பது நம் தெரிவுக்கும் நம்பிக்கைகளுக்கும் மாறானது. பொட்டுக் கட்டுவதும், கோவிலுக்கு அர்ப்பணிப்பதுமான தேவதாசி முறை தலித் சமூகத்திலும் காணப்படும் ஒன்று என்பது நமக்கு புதிதான, ஆச்சரியம் தரும் விஷயம். மற்ற உயர் ஜாதி ஹிந்து சமூகங்களிடையே காணப்படும் நாடக வடிவங்களும், கலைப் பண்புகளும், அவை சார்ந்த சடங்குகளும் தலித் சமூகங்களிடையேயும் கூட வழங்கும் ஒரு இணை நிகழ்வு என்பதும் நமக்கு இதுகாறும் தெரியவராது செய்தி. இது பற்றி யாரும் பேசியதில்லை. இப்படியான நிகழ்வுகள், சடங்குகள் இருக்குமா, பார்த்து அறிய வேண்டும் என்று நம் கற்பனையில் கூட இருந்ததில்லை. இருப்பதாக யாரும் வாய் மொழியாகச் சொன்னால் கூட அது நம் நம்பிக்கையைச் சோதித்திருக்கும். தலித் எழுத்தாளர்களிடமிருந்து தான் அவர்களுக்கென அரசியல் சார்ந்த சித்தாந்திகள் தயாரித்து வைத்திருக்கும் சித்திரம் தவறானது என்பது தெளிவாகிறது. தலித் சமூகத்தில் சிலர் சிறிய பெரிய அளவில் நிலச் சொந்தக் காரர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது சோ. தருமனிடமிருந்து. இது ஒரு உதாரணத்திற்கு மாத்திரமே. இது போன்று இன்னும் நிறைய செய்திகள் தலித் சமூகங்களைப் பற்றி நமக்குத் தரப்படும் சித்திரம் எவ்வளவு அரசியல் சார்பானதும் தவறானது என்பதையும் சொல்லும்.

இந்த மாதிரியான அனுபவங்களும், மனிதர்களும், அவர்கள் கொண்டுள்ள மதிப்புகளும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரசினைகளும் தமிழ் நாவலில் வெளிவருவது ஒரு நம் சூழலுக்கு, சிந்தனைக்கு, ஆரோக்கியமான விஷயம். பொட்டுக் கட்டுதல், தலித் என்று சொன்ன மாத்திரத்திலேயே அச் சொற்கள் நம்மில் எழுப்பும் பிம்பம், பின் ஒரு செடல் அச்சமூகத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து தானே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வாள் என்னும் சாத்தியங்கள் பற்றியெல்லாம் நமக்கு முன் தீர்மானமான சித்திரங்கள் உண்டு. அதை உடைக்கிறது இமையத்தின் செடல் நாவல். அதை இமையம் குரல் எழுப்பாமல், நாடகமாக்காமல், அடங்கிய குரலில், ஆவணப் படுத்தப்பட்ட ஒரு சமூக நிகழ்வு என்று சொல்லத்தக்க நம்பகத் தன்மை கொண்ட, ஒரு கலைஞனுக்கே சாத்தியமாகும் ஒதுங்கி நின்று சொல்லும் குரல் இது. தலித் அரசியலும் சொல்ல விரும்பாத, சொல்வதைத் தவிர்க்கும் குரல் இது.

நாவலுக்குள் நாம் நுழைந்தது, இதன் மனிதர்களும் அவர்கள் பேசும் மொழியும் நம்மை இதுகாறும் அறிந்திராத அனுபவங்களுக்கும் உலகிற்கும் இட்டுச் செல்கின்றன. இவர்கள் தலித்துகள். அவர்களது அன்றாட பேச்சின் மொழியும் அதன் கொச்சையும், பேச்சு கையாளும் சொற்களும் நம்மை திகைப்பில் ஆழ்த்தும். ஒரு இடத்தில் செடல் அவளுக்குச் சொல்லப்படும் யோசனையை நிராகரிக்கிறாள். யாகத்திற்கு எருமைச் சாணியா? என்று கேட்கிறாள். செடலின் வார்த்தைகளில், “எருமைக் கோமியம் எக்கியத்துக்கு ஆவுமா?” யாகமும் அதற்கு பயன்படும் பொருட்களும் ஒரு கிராமத்தின் தலித் பெண்ணின் சிந்தையில், பேச்சில் எப்படி புகுந்து கொண்டுள்ளது? கிராமத்துப் தலைவன் நடராஜ பிள்ளையால், ஏதோ விவசாயக் கூலியாக நடத்தப்படும் கிராமத்து ஜோஸ்யன், யார்? ஒரு ராமலிங்க அய்யர். “எங்கேடா அந்த பண்டாரப் பய?” என்று நடராஜ பிள்ளை சத்தமிட்டதும், அடங்கி ஒடுங்கி, ராமலிங்க அய்யர் தன் முன்னே நிற்பதைப் பார்த்து, “என்னடா?” என்று நடராஜ பிள்ளை அதட்ட, ராமலிங்க அய்யர் அந்த கிராமத்து ஸ்தல புராணத்தையும் அதில் பொட்டுக்கட்டும் வழக்கம் தோன்றிய கதையையும், ஏதோ சமஸ்கிருத பாண்டித்யம் மிகுந்த ஒரு பௌராணிகர் நகரத்துப் பெரிய கோவிலில் உபன்யாசம் செய்யும் பாணியில், “தேவர், மூவர், திக்கு பாலர்கள், நாற்பத்தியெண்ணாயிரம் ரிஷி மார்கள், கெச்சர், கென்னர், கெருட காந்தவர், அஷ்ட திக்கு பிரம்மன் முதல் யாவருமாகக் கூட் ஆதி சேஷன் என்னும் பாம்பை வடமாகவும்….” என்று பொட்டுக்கட்டுமுன் புராணக்கதை சொல்லி நியாயப் படுத்த, அதைக் கேட்க அந்த கிராமத்து தலித்துகள் கூடி யிருக்கிறார்கள் ஆச்சரியப் பட மாடோமா? இம்மாதிரியான ஆச்சரியமான மனிதர்களும், சம்பவங்களும் இந்நாவலில் நிறையக் காணலாம். நாம் நிறைய அரசியல் பிரசாரத்திற்கு ஏற்ப தீட்டப்பட்ட சித்திரத்தையே கேட்கப் பழகியிருக்கிறோம்.

இங்கு ஆதிக்க சக்தி யார்? ஒரு நடராஜ பிள்ளை. அவர் தன் இஷடத்திற்கு ஆட்டி வைப்பது யாரை? அந்த கிராமத்து தலித் மக்களை. ஜோஸ்யன் ராமலிங்க அய்யரை. செடலுக்கு பொட்டுக் கட்டி கோவிலுக்குக் கொடுக்கும் பாரம்பரிய பழக்கத்தை நிர்ப்பந்தப் படுத்துவது எதற்காக? யாரால்?

இதை எப்படி தலித் எழுத்துக்கு சட்டம் இயற்றித் தரும் சித்தாந்திகள் ஒப்புக்கொள்ள முடியும்?.

இவையெல்லாம் கற்பனையோ என்று எண்ணத் தோன்றும். இமையம் சொல்கிறார். செடலும் பாஞ்சாலியும் அவர் வாழ்க்கையில் சந்தித்த பெண்களின் எழுத்துருவங்கள் தான் என்கிறார்.

இது இமையத்தின் மூன்றாவது நாவல். அவரது முதல் நாவல், கோவேறு கழுதைகளும் சம்பிரதாய தலித் உலகத்தை, மனித சித்திரங்களை மீறிய நாவல். தலித் சித்தாந்திகள் இம்மாதிரியான, அவர்கள் கட்டமைத்துக்கொடுத்துள்ள வரம்பிற்குப் புறம்பான, அவர்கள் சித்தாந்தங்களை முற்றிலும் மறுக்கும் இமையத்தின் எழுத்துக்களை ஏற்க மறுத்தார்கள். கிறிஸ்துவ மத போதகர்களும் ஜாதி பிரக்ஞை கொண்டவர்கள் தான். அவர்கள் பார்வையிலும் சாதி உணர்வும் அதனுடன் வரும் ஏற்றத் தாழ்வு கொண்ட நடைமுறைகளும் உண்டு என்பதையும், கல்வியிலும் பொருளாதாரத்திலும் மற்ற தலித்துகளிடமிருந்து ஒரு படி உயர்ந்து விட்டாலும் கூட, அந்த தலித் மற்ற தலித்துகளிடமிருந்து தன்னை வேறு படுத்திக்கொண்டு ஒரு புதிய ஜாதியை தனக்கு உருவாக்கிக்கொள்கிறான் போன்ற உண்மை நிலையையெல்லாம் அந்த நாவல் வெளிப்படுத்தியது அந்த புதிய ஜாதிக்கும் ஜாதி உணர்வு அவனுக்கு சாதகமெனில் பிடித்துத் தான் இருக்கிறது.

தலித் சமூகங்களின் சடங்குகள், அன்றாட வாழ்க்கை, நடைமுறைகள் எல்லாம் பற்றி நமக்குச் சொல்லப்பட்டது பெரும்பாலானவற்றின் பிரசார பொய்மையை இமையத்தின் நாவல்கள், சிறுகதைகள் மிகைப் படுத்தல் இன்றி, அலங்காரமின்றி முன் வைக்கின்றன.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்